Advertisement

அத்தியாயம் – 12
கான்ஃப்ரென்ஸ் அறையின் கதவு ஒரு முறை நாசூக்காக தட்டப்பட்டு திறந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட சில்க் காட்டன் புடவை, மேக்கப் என்று சென்ட் மணம் கமழ, அழகாக வாசலருகே நின்றிருந்தாள் வானதி.
“வணக்கம் சர். உள்ள வரலாமா?”, வாசலில் அவளைக் கண்டதும் வினோத்திற்கு முகம் இருண்டது. யார் இவளுக்கு சொன்னது? இப்போது இங்கே எதற்கு வந்தாள்? அவன் இருக்கும் நிலையை வானதி பார்ப்பதில் துளியும் இஷ்டமில்லை அவனுக்கு.
“வானதி….இங்க ஏன் வந்த?”, கேட்கும் வினோத்தைப் பார்த்து ஒரு புன்னகை வீசியவள்,
“சர்… கீதாவுக்கு ஆதரவா அவ அம்மா அப்பா இருக்க மாதிரி, என் புருஷனுக்கு ஆதரவா நான் வந்தேன். “, என்று ஜெகன்னாதனைப் பார்த்து பேசினாள்.
“அடேயப்பா… இவங்களா வினோத் மனைவி? “, எல்லார் மனதிலும் ஓடியது கேள்வி, கூடவே, “வீட்ல இவ்வளவு அழகா ஒரு பொண்டாட்டி இருக்கும்போது, இவர் ஏன் இந்த பொண்ணுகிட்ட வம்பு செய்யணும்?” என்றும் ஓடியது.
“வாங்க வானதி. நீங்க எதுவும் இதைப் பத்தி சொல்ல விரும்பறீங்களா?”, ஜெகன்னாதன் மட்டுமே அதிர்ச்சியின்றி சாதாரணமாக இருந்தார்.
“எனக்கு வினோத் மேல முழு நம்பிக்கை இருக்கு. அவர் மாணவிங்ககிட்ட எவ்வளவு ஜாக்கிரதையா நடந்துக்குவார்ன்னு நான் நேர்லயே பார்த்திருக்கேன். அவர் கிட்ட படிக்கற மாணவிங்களை விசாரிச்சாலும் தெரியும்.”, வானதி பேச ஆரம்பிக்க,
“நீங்க …”, தனஞ்செயன் இடைபுக… கை அமர்த்தி அவரை நிறுத்தியவள்,
“ இதெல்லாம் ஒரு பேச்சா. உன் புருஷனை நீ விட்டுக் குடுப்பியாமான்னுதான கேட்கப் போறீங்க. கரெக்ட், அதனால இந்த விஷயத்துல எனக்கிருக்க சந்தேகத்தை மட்டும் கேட்டு தெளிவு படுத்திக்கறேன்.”
மேலும் பேச இடம் கொடாமல், அவளிடம் இருந்த பென் ட்ரைவை அங்கே இருந்த லாப்டாப்பில் பொறுத்தியவள், அருகிலிருந்த ஆப்பரேட்டரை, “தம்பி… நீ கொஞ்சம் நகருப்பா. நானே ஆப்பரேட் பண்ணிக்கறேன். அப்பத்தான் அம்புக் குறி போட்டு காட்ட முடியும்.”, கொஞ்சம் நக்கல் தொனியில் பேசியவள், அமர்ந்து,
“கீதா… நீ காமிச்சது வெறும் முப்பது செகண்ட் வீடியோ. ஆனா என் கேள்வி, நீ எப்ப அந்த ரூமுக்குப் போன?”, வானதியைக் கேட்க, கீதா முழித்து, “அது தெரியலை…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.”
“ஓ… பார்த்துட்டா போச்சு… அதான் எவிடென்ஸ் இருக்கே.”,  எவிடென்ஸ் என்ற வார்த்தையில் ஒரு அழுத்தம் கொடுத்தபடியே, தன் வீடியோவை ஓட விட்டாள்.
காட்சியில், சற்று பரபரப்பாக கீதா நடந்து வருவது தெரிந்தது. கையில் ஒரு புத்தகத்தை மார்போடு அணைத்துக்கொண்டு வந்தாள். அதை நிறுத்தி வானதி, ஹைலைட் ஆப்ஷன் எடுத்து, நிஜமாகவே அந்த வீடியோ படத்தின் மீது அம்பு குறி போட்டு, 
“நேரம் மதியம் 2:40 pm காமிக்குது. சரிதானே?”, என்று கேட்க, கீதா ஆமாம் என்று தலையாட்டினாள்.
மீண்டும் வீடியோவை வேகமாக ஓட்டி, வினோத் நடந்து வரும்பொழுது நிறுத்தி, “அவர் வரும் போது 2:48. “
“எட்டு நிமிஷம் அந்த ரூம்ல என்ன செய்துகிட்டு இருந்த கீதா? உனக்கு கிளார்க் ரூம்ல என்ன வேலை?”
“அது… எனக்கு ஜெராக்ஸ் எடுக்க வேண்டியிருந்தது. அதனால போனேன்.”, கீதாவின் பதில் மெதுவாக வந்தது.
“ஓஹ்… லைப்ரரி பக்கத்துலதான ஸ்டூடெண்ட்ஸ் வசதிக்கு ஜெராக்ஸ் எடுக்க மெஷின் இருக்குது? அதை விட்டுட்டு, இங்க எதுக்கு வந்த? அந்த புக் லைப்ரரி புக்குதான்னு மேல இருக்க லோகோ பாக்கும்போதே தெரியுதே.”, வானதி கேட்கவும், வினோத்துமே இப்போது யோசனையாக அவளைப் பார்த்தான்.
“இப்ப எதுக்குமா என் பொண்ணை இத்தனை கேள்வி கேட்கற?”, தனஞ்செயன் பொங்கினார்.
“பசங்க அந்த ரூமுக்கு போக வேண்டிய வேலையே கிடையாதே சார். அப்ப இவ அங்க போகலைன்னா இப்படி ஒரு விஷயம் நடக்கவே வாய்ப்பில்லை. அதான் ஏன் போனான்னு கேட்கறேன். தப்பில்லையே?”, அவள் கூர்மையாகக் கேட்க, மனிதர் அடங்கினார்.
“சரி…அந்த ரூம்ல க்ளார்க் இருந்தாரா?”, வானதியின் கேள்விக்கு கீதாவால் பொய் சொல்ல முடியாது என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.
“ம்ம்.. இருந்தார்.”, என்று நிறுத்தினாள்.
வீடியோவை மீண்டும் பின்னோக்கி ஓடவிட்ட வானதி, ஓரிடத்தில் நிறுத்தி மீண்டும் ஒரு அம்பை வரைந்து,
“ம்ம்… 2:42க்கு கிளார்க் கோபால் வெளிய போறார். ஆக அந்த ரூம்ல நீ மட்டும் தனியா இருந்திருக்க? உன்னை ஜெராக்ஸ் எடுக்க விட்டுட்டு அவர் வெளிய போயிட்டார். அப்படித்தான?”
கீதாவுக்கு சற்று வியர்த்தது. ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“சார்..கோபால் சாரை கூப்பிட்டு கேட்கணுமே… ஸ்டூடெண்ட்ஸ் இங்க ஏன் ஜெராக்ஸ் எடுக்க விட்டார்? அதுவும், தனியா விட்டுட்டு போனார், அப்படி போக என்ன அவசரம்னு? அவர் இருந்தார்னா, இப்படி நடக்க வாய்ப்பில்லை பாருங்க?”, என்று ஜெகன்னாதனை கேட்கவும்,
“ம்ம்… நீ சொல்ல ஆரம்பிக்கும்போதே இது தோணுச்சு…ராஜா கூப்பிட போயிருக்கான். இப்ப வருவார்.”
ஒரு நிமிடம் அறை அமைதியாக இருந்தது. கீதா அங்கிருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து ஒரு மிடறு குடித்தாள்.
ஐம்பதைத் தாண்டிய , தடித்த கண்ணாடி அணிந்து கோபால் உள்ளே வரவும், “கோபால்… முந்தா நாள் இந்த பொண்ணு மதியம் வந்துச்சா?”, என்று ஜெகன்னாதன் கேட்டார்.
கீதாவைப் பார்த்தவர், “ஆமா சார். ‘சபரி சார் அவசரமாய் உங்களை வர சொன்னார்.’ சொல்லுச்சு. எப்பவாவது ப்யூன் வேலு இல்லாட்டி, பசங்க வந்து சொல்லுவாங்க.”
“சரி… நீ போம்மா. நான் போறேன்னு சொன்னேன். அது செருப்புல எதுவோன்னு பார்த்து, நீங்க போங்க, பக்கிள் அவிழ்ந்துடுச்சு, நான் போட்டுகிட்டு போறேன்னு அங்க நாற்காலியில உட்கார்ந்துச்சு. நான் அவசரம்னு சொல்லவும் போயிட்டேன்.”, கோபால் விவரித்தார்.
“சபரி சார் எதுக்கு வர சொன்னார் உங்களை?”. வானதியிடமிருந்து கேள்வி வந்தது.
“அதான் மேடம்… அவர் கூப்பிடவேயில்லை. நான் இங்கிருந்து பக்கத்து ப்ளாக் நடந்து போய் வந்ததுதான் மிச்சம். வெய்யில் வேற. ஏன்மா தேவையில்லாம என்னை அலைய வெச்ச?”, கீதாவைப் பார்த்துக் கேட்டார் கோபால்.
இப்போது முழித்த கீதா….” அது… எனக்கு ஜெராக்ஸ் எடுக்க வேண்டியிருந்துச்சு. அதான் உங்களை அனுப்பிட்டு, நான் எடுத்துக்கலாம்னு …”
“பொய் சொல்லி ஒரு பெரியவரை இடத்தைவிட்டு கிளப்ப, வெய்யில்ல அலைய வெச்சிருக்க? ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதையே வேற மாதிரி எங்ககிட்ட சொன்ன. கோபாலும் பொய் சொல்றார்ன்னு சொல்லாத வரைக்கும் சந்தோஷம்.”, வானதி நக்கலாய் கேட்டு அவள் பெற்றோரை ஒரு பார்வை பார்த்தாள்.
“ ஏம்மா நீ லாயராட்டம் வளைச்சு வளைச்சு கேட்கற? நடந்ததை விட்டு கதையை வேற பக்கம் திருப்பற?”, தனஞ்சயன் பாய்ந்தார்.
“அஹான்… கரெக்ட்.. கீதா சின்ன விஷயத்துக்கு தாராளமா பொய் சொல்லுறா. ஆனால் இந்த பெரிய விஷயத்துல என்னனு பார்க்கலாம்.”
வீடியோவை அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக அருகருகே இருக்கும்போது நிறுத்தியவள், மீண்டும் அம்புக்குறியிட்டு,
“வினோத் சர் இரண்டு கையும் சைட்லதான் தொங்கவிட்டுகிட்டு இருக்கார். தெரியுதுங்களா?”, வானதி பொதுவாக கேட்டுவிட்டு,
ஸ்லோ மோஷனில் மீண்டும் ஓடவிட்டவள், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டும் வரை ஓடவிட்டு,
“ஆக, மொத்த நேரமும் அவர் கை பார்வையில் படுற மாதிரிதான் இருக்கு. அப்ப, அவர் உன்னை தொட்டு, இழுத்து முத்தம் குடுக்கலை. உன் கை இரண்டுமே புத்தகத்தை நெஞ்சோட பிடிச்சிகிட்டு இருக்கு. உன் முகம் மட்டும் நிமிர்ந்து இருக்கு, இதோ இங்க பக்க வாட்ல பார்க்கும்போது தெரியுது பாருங்க? ஆக அவர் உனக்கு முத்தம் குடுக்கணும்னா, வெறும் முகத்தை உரசினாத்தான் குடுத்திருக்க முடியும்.”, மீண்டும் அம்பு போட்டு காட்டினாள்.
அந்த அறையில் வானதியின் குரல் மட்டுமே ஒலித்தது. அனைவரையும் கட்டிப்போட்டிருந்தாள் அவள் காட்டும் படங்களில்.
“கீதா…எனக்கு ஒரு டவுட்டு.  ஒரு வாத்தியார் எதிர்க்க வரார்னு தெரியுது. அதுவும் ஆம்பள வாத்தியார். அப்ப பொதுவா கேர்ள் ஸ்டூடென்ட் ஒதுங்கி வழி விடுவாங்க. இதுல வினோத் உங்கிட்ட தப்பா பேசின வாத்தியார் வேற.  அது எப்படி நீ அவர் எதிர்க்க போன? அதுவும் வாட்டமா, முகத்தை நிமிர்த்தினபடி?”, யோசனையாக கீதாவைப் பார்த்தாள். ஓரக் கண்ணால், கீதாவின் தாயும் மகளை கேள்வியாக நோக்குவதைப் பார்த்தாள்.
முகம் வெலவெலத்துப் போனது கீதாவிற்கு. “இல்லை… அது… நான் பார்க்கலை அவர் வரதை.”
“ம்ம்… காமெராவில பார்க்கும்போது, வாசல்லர்ந்து இரண்டடி வரைக்கும் ரூம் உள்ள தெரியுது. சோ..  நீ எதிர்க்க நின்னிருந்தா, வினோத் பார்த்துட்டு கண்டிப்பா வெளிய நின்னிருப்பார். அவர் ஸ்பீட் குறையாமத்தான் கிட்ட வரார்… இல்லையா?”, மீண்டும் அந்த இடத்தை ஓடவிட்டாள்…
“ஆக… நீ சைட்ல நின்னிருக்கணும். அப்பத்தான் அவருக்குத் தெரியாம இருக்கணும். என்ன கோபால்… இது உங்க ரூம்… நீங்க சொல்லுங்க.”
“ம்ம்… ஆமாம் மா, அங்க ஒரு பீரோ இருக்கு, அதுக்கு பக்கத்துல ஒரு ஆள் நிக்க இடம் இருக்கு. அங்க இருந்தா, வாசல்ல வரவங்க கண்ணுக்குத் தெரியாது.”
“ஜெராக்ஸ் மெஷின் அங்கயா இருக்கு?”, வானதி கேட்டாள்.
“இல்லை… வாசலுக்கு எதிர இருக்கு. அந்த பொண்ணால ஜெராக்ஸ் எடுத்திருக்க முடியாது. அதுல பாஸ்வோர்ட் போட்டாத்தான் அலோவ் செய்யும்மா.”
“ஹ்ம்ம்… இப்ப நான் சொல்றேன். வினோத் சார் வரது உனக்கு தெரியும். அவர் உன்னை கைட் செய்ய மறுத்ததுல உனக்கு கோவம். அவர் பேரைக் கெடுக்க, நீ வேணும்னு ப்ளான் பண்ணி கோபால் சாரை பொய் சொல்லி வெளிய அனுப்பிட்டு ஒளிஞ்சிருந்த. வினோத் உள்ளே வரவும், நீயே மோதற மாதிரி வந்த. வினோத் கோவப்படுவார்ன்னு உனக்குத் தெரியும். அவர் அப்படி மிரட்டினதும், அழற மாதிரி முகத்தை வெச்சிகிட்டு, அவர் திரும்பினதும், உன் உதட்டை துடைக்கற, அதுவும் காமெராவுக்கு நல்லா தெரியற மாதிரி. இதுதான் நடந்துச்சு. ஆனா கதையை உன் வசதிக்கு மாத்தி சொல்ற.“ , வானதி எழுந்து அவள் எதிரே, வினோத்தின் அருகில் நின்றபடி கை நீட்டி குற்றம் சாற்றினாள்.
கண்ணில் கண்ணீர் பொல பொலவென சிந்த… “இல்ல… இல்ல… அப்பா…”, என்று அவர் தோள் பிடித்தாள் கீதா. அதைப் பார்த்து பொங்கிய மனிதர்.
“என்ன சார்… அந்தம்மா வந்து என்னனென்னவோ படம் காட்டி என் பொண்ணை குத்தம் சொல்லுது. நீங்க எல்லாரும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க? தன் மேல தானே சேத்தை வாரி பூசிக்க என் பொண்ணுக்கென்ன கிறுக்கா?”, தனஞ்சயன் தன் பிடியில் உறுதியாக இருந்தார்.

Advertisement