Advertisement

“அதெல்லாம் ஒன்னுமில்லை. ப்ரியாக்குதான் இன்ஸ்டா, பேஸ்புக் எல்லா கான்டாக்ட்ஸ் இருக்கு. அவளை விட்டு தேட சொல்றேன். நான் ராக்கியோட போய் அந்த கிளார்க்கைப் பார்க்கறேன். அவ க்ளாஸ்ல ஒருத்தனுக்கு நம்ம கீதா மேல ஒரு கண்ணு, அவங்கிட்ட இவளை பேச சொல்லி எதாவது கறக்க முடியுமான்னு பார்க்கறேங்க்கா. காலேஜ் முடியற டைம்… இப்பவே போனாதான் சரியா இருக்கும். நான் மெசேஜ் பண்றேங்க்கா….”, என்று வைத்துவிட்டான்.
இத்தனை அக்கா போட்டு, இவ்வளவும் இழுத்துப்போட்டு செய்யும் இந்தப் பிள்ளைகள் மேல் பிரியம் பொங்கியது வானதிக்கு. பசங்க அவங்க வாத்திக்கு இத்தனை செய்யறாங்க. நீ என்ன செய்யப் போற வானதி? வீடியோவை முறைத்துக்கொண்டிருந்தவளுக்கு எதுவும் ஓடவில்லை. அதனால் மீண்டும் வீடியோவை முழுதுமாக ஓடவிட்டுப் பார்த்தாள்.
வானதியின் கைபேசிக்கு ‘வர லேட்டாகும்.’, என்ற மெசேஜ் மட்டுமே ஏழு மணி போல வந்தது வினோத்திடமிருந்து.
அவார்ட் விஷயத்தை அவளிடம் சொன்னவன், இப்படி ஒரு ப்ரச்சனை வந்ததை தன்னிடம் மறப்பது கண்டு மனம் துவண்டாள். ‘இது நீ எதிர்பார்த்ததுதான?’, என்று அவளே தன்னைத் தேற்றிக்கொண்டு, தனியாக இரவு உணவை கொரித்தாள். மலர் கிளம்பிருந்தார்.
இரவு, பதினோரு மணிக்கு மேல் வினோத் அவன் அறைக்கு செல்லும் சத்தம் கேட்டது. இவளிடம் பகிர விருப்பப்படவில்லை எனும்போது, இவளாகவே சென்று கேட்க பிரியப்படவில்லை.
மறுனாள் காலை இவள் வெளியே வர, அவன் அறை திறந்திருந்தது. ஆளைக் காணவில்லை. கீழே வர, மலர் சமையலறையில் இருந்தவர்,
“என்னம்மா…தம்பி இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிடுச்சு? வெறும் கஞ்சி மட்டும் போறும்னு அதைக் குடிச்சிட்டு போயிருச்சு?”, மலர் விவரம் தந்து விசாரித்தார். ‘ம்க்கும்… உங்களுக்குத் தெரிஞ்சது கூட எனக்குத் தெரியாது.’, என்று உள்ளுக்குள் நொடித்தாலும்,
“ஆமா..இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங்ன்னு சொல்லியிருந்தார்.”, என்று மேலும் அவர் எதுவும் கேட்கும் முன், அவர் கொடுத்த காபியுடன் தன் காய்கறித் தோட்டத்திற்கு கைபேசியுடன் சென்றுவிட்டாள்.
மதியம் கல்லூரித் தாளாளர் ஜெகன்னாதன் கான்ஃப்ரென்ஸ் அறையின் உள்ளே நுழையவும், அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்றனர்.
“வணக்கம்.”, என்று பொதுவாகச் சொன்னவரிடம் கல்லூரியின் முதல்வர்,
‘சர், இவங்க தான் கீதவர்ஷினியோட பேரண்ட்ஸ், மிஸ்டர். தனஞ்சயன், இவர் எங்க கல்லூரி கரஸ்பாண்டென்ட் மிஸ்டர். ஜெகன்னாதன்.”
பெற்றவர்கள் வணக்கம் சொல்லி கைகூப்ப, “இந்த மாதிரி ஒரு விஷயத்துல உங்களுக்கு அறிமுகமாகறதுல வருத்தம். ஆனாலும், இங்க உங்க பெண் ஒரு குற்றச்சாட்டை வெச்சிருக்காங்க. நிஜமா அவங்க பாதிக்கப்பட்டிருந்தா, கண்டிப்பா அவங்களுக்கு தக்க நியாயம் கிடைக்கும். அதுக்கு நான் உறுதி தரேன் மிஸ்டர். தனஞ்சயன். “
தனஞ்சயனின் கைபிடித்து வாக்கு கொடுத்துவிட்டு, எதிரே இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த வினோத்தைப் பார்த்தவர், “ உங்க உழைப்பும் நேர்மையும் நீங்க இங்க சேர்ந்த இரண்டு வருஷமா, இந்த காலேஜ் பார்த்திருக்கு வினோத். உங்க தரப்பு நியாயத்தை நீங்க சொல்ல எந்த தடையும் இல்லை.”
“சரி… கீதா எவிடென்சா குடுத்திருக்கற வீடியோவை போடுங்க. அதுக்கப்பறம் கீதா அவங்க பக்கத்தை சொல்லட்டும். வினோத் அதற்கு பதில் சொல்லட்டும். கேட்டுட்டு அடுத்து முடிவு செய்யலாம். சரியா? ”
வயதில் மூத்த இரு துறைத் தலைவர்கள் திரு. குமரேசன், திருமதி. சாரதாவைப் பார்த்தார். சம்மதமாக அவர்கள் தலையசைத்ததும், ஆபரேட்டர், தன் லாப்டாப்பிலிருந்து வீடியோவை ஓட விட, அது எதிரில் இருந்த பெரிய திரை டீவியில் தெரிந்தது.
வினோத்தை தவிர அனைவரும் பார்த்தனர். கை முஷ்டி மடக்கி, இறுகிப் போய் அமர்ந்திருந்தான். அவன் தரப்பு நியாயமாக தாளாளர் சொன்ன அவனது நேர்மை மட்டும்தான் இருந்தது. ஆனால் புனையப்பட்ட இந்த ஆதாரம் முன் அது செல்லும் என்று தோணவில்லை.  எப்படியும் கல்லூரியை விட்டு போக வேண்டும். குறைந்த பட்சம், அவனது நேர்மைக்காக இந்தக் கறை அவன் ரெகார்டில் இல்லாத மாதிரி பார்த்துக்கொள்வார்கள். அவ்வளவே. ஜெர்மனிக்கே போய் அவனது பேராசிரியருடன் சேர்ந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். அவன் அம்மாவிடம் இதை எப்படி சொல்லிப் புரிய வைப்பது? வானதி… அவள் முடிவு என்னவாக இருக்குமோ? கேள்விகள் நேற்றிலிருந்து சுற்றிக்கொண்டிருந்தது.
விசும்பல் ஒலி அவன் கவனத்தைக் கலைத்தது. “ சர்… என்னை விரும்பினதா சொன்னார். அவருக்கு ஒத்துப்போனா, என் தீசீஸ்ல கைட் பண்றதா சொன்னார். நான் முடியாதுன்னு சொன்னதும், எனக்கு கைட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனாலும்….அன்னிக்கு திடீர்ன்னு முத்தம் … குடுத்துட்டார். யார்கிட்டயாவது சொன்னா உன்னை காலேஜ்விட்டே தூக்கிடுவேன்னு சொல்லி மிரட்டினார் சர்….”, கண்ணில் கண்ணீர் பொங்கி வர, திக்கி தன் கதையைக் கூறும் கீதவர்ஷிணியைப் பார்த்து அனைவருக்குமே பரிதாபமாகப் போயிற்று.
“வினோத்… கீதவர்ஷிணிக்கு நீங்க கைட் பண்ண முடியாதுன்னு சொன்னீங்களா?”, ஜெகன்னாதன் கேட்கவும்,
“ஆமாம். ஆனால் அவங்க சொன்ன காரணம் இல்லை. அவங்க தீசீஸ் பண்றதுல அக்கறை காட்டலை. அவங்க குடுத்த ட்ராஃப்ட்ல க்வாலிடியில்லை. அதை சரி பண்ணிக்கவும் அவங்களுக்கு இஷ்டமில்லை. அவங்களோட ஒத்துழைப்பு இல்லைன்னா, என்னால கைட் பண்ணமுடியாதுன்னு சொன்னேன். என்னோட கமெண்ட்ஸ் எழுதி, அவங்க ட்ராஃப்ட்ஸ் சேர்த்து என் ரிபோர்ட் குடுத்துட்டுதான் நான் விலகினேன்.”, வினோத் அவரை மட்டும் பார்த்துக் கூறினான்.
“ரிப்போர்ட் இங்க இருக்கு சர். “, கல்லூரி முதல்வர் தரவும், மற்ற இரு துறைத் தலைவர்களிடம்,
“இது நியாயமான கமென்ட்ஸ்தானா? நீங்க படிச்சிப் பார்த்தீங்களா? இந்த மாதிரி வேற யாரும் செஞ்சிருக்காங்களா ?”
“எப்பவாவது நடக்கறதுதான் சர்.”, சாரதா கூறினார்.
“வினோத் எடுத்துக்கற பசங்க நிறைய உழைப்பைப் போடணும்னு எதிர்பார்ப்பார். அவங்க எழுதற தீசீஸ் சிறப்பா, தனித்தன்மையோட இருக்கணும்னு நினைக்கறார். அதனால ரொம்ப நல்லா படிக்கற பசங்களாலதான் அவர் எதிர்பார்ப்புக்கு ஈடு குடுக்க முடியும் சர். இந்த இரண்டு வருஷத்துல ஆறு பேருக்கு கைட் பண்ணிருக்கார். அதுல இரண்டு தீசீஸ் IFERP பெஸ்ட் ரிசர்ச் பேப்பர் அவார்ட் நாமினேஷனுக்குப் போயிருக்கு சர். “ குமரேசன் விளக்கினார்.
“இந்திய அளவுல தேர்வு செஞ்சு அங்கீகாரம் தருவாங்க. நம்ம கல்லூரி இதுக்கு தேர்வானது இதுதான் முதல் முறை.”, கீதாவின் பெற்றோருக்கு விளக்கினார் ஜெகன்னாதன்.
“இருக்கட்டுங்க. அவர் நல்லா பாடம் சொல்லி குடுக்கறவராவே இருக்கட்டும். என் பொண்ணு சுமாரா படிக்கறான்னே இருக்கட்டும். ஆனா அவருக்கு ஒத்துப்போக சொல்லி எப்படி சொல்லுவாரு? மாட்டேன்னதுக்கு, இப்படித்தான் செய்வாரா? அதுக்கான நியாயத்தை சொல்லுங்க?
என்னதான் எங்க சொந்தத்துலயே மாப்பிள்ளை ரெடியா இருந்தாலும், இப்படி ஒரு விஷயம் நடந்தது தெரிஞ்சா அவ கல்யாணம் பாதிக்காதுங்களா? “, தனஞ்சயன் படபடத்தார். எங்கே இதை ஒரு காரணமாக சொல்லி வினோத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவாங்களோ என்று அவருக்கு அச்சம்.
“கீதா… வினோத் நீங்க சொன்ன மாதிரி விரும்பினதாவோ இல்லை ஒத்துப்போக சொல்லி உங்ககிட்ட சொன்னதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா?”
தலை குனிந்து இல்லை என்று கீதா சொல்ல, “குடுத்த ஆதாரத்துக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க ஐயா.”, திருமதி தனஞ்சயன் வாய் திறந்தார்.
“வினோத்… இந்த வீடியோக்கு என்ன நடந்துச்சுன்னு உங்க பக்கத்தை சொல்லுங்க.”, ஜெகன்னாதன் கேட்கவும்,
“சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. க்ளாஸ்ல எடுக்க வேண்டிய பாடத்துக்கான நோட்ஸ் ஜெராக்ஸ் எடுத்து வைக்க சொல்லியிருந்தேன் கிளார்க் கோபால்கிட்ட. அதை வாங்கறதுக்கு போனேன். எதிர இந்த பொண்ணு மோதற மாதிரி வந்துச்சு. எதுவும் நடக்கலை, நான் க்ராஸ் பண்ணிட்டு, “ எதுக்கு இடிச்சிகிட்டு வர. இன்னொரு வாட்டி இப்படி பஹேவ் பண்ணா நடக்கறதே வேறன்னு திட்டிட்டு உள்ள போயிட்டேன்.”
“என் பொண்ணு எதுக்கு பொய் சொல்லணும்? இதுல பாதிப்பு அவளுக்குத்தான? உங்க வாத்தியார் அவருக்கு கெட்ட பேர் வந்துடக்கூடாதுன்னு பொய் சொல்றார். இப்படி ஒரு ஆதாரம் சிக்கும்னு அவர் எதிர்பார்க்கலை போல. இதுல மேல பேசறதுக்கு ஒன்னும் இல்லை. எங்களுக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க சார்.”, தனஞ்சயன் கோபமாக பேசினார்.
“கோபப்பட வேணாம் சார். விசாரிச்சிகிட்டுதான இருக்கோம். சரி நீங்க ஆரம்பிக்கவே, உங்களுக்கு நியாயம்னு என்ன படுது?  சொல்லுங்க. இதுனால அவர் மேல தப்புன்னு சொல்ல  வரலை.  நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னு தெரிஞ்சிக்க கேட்கறேன்.”, ஜெகன்னாதன் போட்டு வாங்கினார். ஒரு வேளை ஒரு மன்னிப்புடன் சுமூகமாக சரியாகிவிடாதா என்ற நப்பாசை அவருக்கு.
“காலேஜ்ல எல்லார் முன்னாடியும் அவர் எங்கிட்ட பேசினதுக்கு மன்னிப்பு கேட்கணும். காலேஜ் விட்டு அவரை நீக்கணும். “, கீதா வேகமாகக் கூறினாள்.
“அப்பத்தான் சார் மத்தவங்களுக்கும் ஒரு பயம் வரும். பிள்ளைங்க படிக்கணும்னு ஸ்கூலுக்கும் அனுப்பமுடியலை, காலேஜுக்கும் அனுப்பமுடியலை. எல்லா இடத்துலையும் இந்த மாதிரி ஒரு நல்ல பாம்பு கொத்தறதுக்கு காத்துக்கிட்டு கிடக்கு.”, அவனை நோக்கி வெறுப்பை உமிழ்ந்தார் தனஞ்சயன்.
அவர் வார்த்தைகளில் கோபமும் காயமும் உற்றவன், “ஹேய்…. என்ன பேசிகிட்டே போறீங்க? நிச்சயமா உங்க பொண்ணு பொய்தான் சொல்றா. அதை ஏன் சொல்றான்னு எனக்குத் தெரியாது. எனக்கு வலை விரிச்சி மாட்ட வெச்சிருக்காங்க. அது மட்டும் நல்லா தெரியுது. என்னால செய்யாத ஒரு விஷயத்துக்கு கண்டிப்பா மன்னிப்பு கேட்க முடியாது…உங்களால ஆனதைப் பாருங்க. “, இருக்கையில் இருந்து எழுந்த வினோத் தனஞ்சயனை கை நீட்டிப் பேசினான்.
 “ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியாக இருங்க ரெண்டு பேரும். வார்த்தைகள் தடிக்கறது யாருக்குமே நல்லதில்லை. வினோத்… உக்காருங்க. பேசலாம்.”
விஷயம் உணர்ச்சிகரமாகப் போவதை உணர்ந்த ஜெகன்னாதான், அமைதிப் படுத்த முனைந்தார்.  அமைதியாகுமா, கைகலப்பில் முடிந்து வினோத் அன்றிரவு கம்பி எண்ணப்போகிறானா?

Advertisement