Advertisement

அத்தியாயம் – 11
“ஹலோ… மேடம்… நான் வினோத் சர் ஸ்டூடன்ட் ப்ரியா பேசறேன். அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே…”
“அஹ்… சொல்லு ப்ரியா… ஞாபகமிருக்கு.”, இவள் எதற்கு போன் செய்கிறாள் என்ற யோசனையோடே, குரல் சற்று பதற்றமாக இருப்பது போல படவும், தொடர்ந்து வானதியே,
“எல்லாம் ஓக்கே தான ?”, என்று கேட்டாள்.
“ம்ம்.. இல்லை மேம்… இங்க ஒரு ப்ரச்சனை. ஒரு பொண்ணு சர் மேல கம்ப்ளெய்ண்ட் குடுத்திருக்கா. அது …”..ப்ரியா இழுக்கவும்,
“என்ன… என்ன கம்ப்ளெய்ண்ட்… முழுசா சொல்லு ப்ரியா…”, பதட்டம் சற்று கூட வானதி அதட்டினாள்.
“வந்து மேம்… சார் மேல கண்டிப்பா தப்பிருக்காது. அவதான் எதோ எவிடென்ஸ் இருக்குன்னு ப்ரின்சிகிட்ட போயிருக்கா…. “
துண்டுத் துண்டாக ப்ரியா சொல்வதைக் கேட்டு எரிச்சல் மண்டினாலும், இவளிடம் பொறுமையாகத்தான் விஷயத்தை வாங்க வேண்டும் என்று வானதிக்குப் புரிந்தது.
“ரிலாக்ஸ்… உங்க சர் மேல உங்களை மாதிரியே எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கு. அந்த பொண்ணு என்ன மாதிரியா கம்ப்ளெய்ண்ட் குடுத்திருக்கா… முழுசா சொல்லு…”, நிதானமாக வானதி கேட்கவும், ப்ரியா
“ஒஹ்… நீங்க நமபறீங்கதான மேடம் சாரை… அது போறும். அவ என்ன எவிடென்ஸ் வெச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கத்தான் ராக்கி, கிருஷ் எல்லாம் சுத்திகிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு பி.ஜி. படிக்கறா. ஒரு பக்கம் அவ ப்ரெண்ட்ஸ் யாருன்னும் தேடிகிட்டு இருக்காங்க. உங்களுக்கு வேற யாரும் அரை குறையா சொல்லிடப் போறாங்க, நீங்க சர் கூட சண்டை போடப் போறீங்களோன்னு பயந்துதான் உங்களுக்கு பேசினேன். சாரி மேம்.”
‘விஷயத்தை இப்படியா சொல்லுவாள் ஒருத்தி ?’, என்று தலையில் அடித்துக்கொண்டு, கண்களை மூடி நிதானப் படுத்திக்கொண்ட வானதி, வேறு விதமாக விஷயத்தை வாங்க முற்பட்டாள்.
“அந்த பொண்ணு பேர் என்ன ப்ரியா?”
“கீதவர்ஷிணி மேடம். பார்க்க கொஞ்சம் அழகா இருப்பா, அதனாலயே திமிரா இருப்பா. “, ப்ரியாவிடம் இந்த முறை கேள்விக்கான பதில் வந்தது.
“சரி… எப்ப கம்ப்ளெய்ண்ட் குடுத்தா ? உங்களுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சுது ?”
“இன்னிக்குதான் மேம் குடுத்திருக்கா. சர் எங்களுக்கு கிளாஸ் எடுத்துகிட்டு இருந்தப்போதான் ப்ரின்சி உடனே கூப்பிடறார்ன்னு வேலுண்ணா அழைச்சிகிட்டு போனார்.”
“ம்ம்…வேலுண்ணா யாரு ?”
“அடெண்டர் மேம். நல்ல மனுஷன். பாதி கிளாஸ் முடியற வரைக்கும் கூட அவர் வரலைன்னு, ராக்கியும், செல்வாவும் ப்ரின்சி ரூம் கிட்ட போனாங்க. அப்பத்தான் வேலுண்ணா, உள்ள என்குயரி நடக்குதுன்னு சொல்லியிருக்கார். அவர் வாயைப் பிடுங்கித்தான் விஷயத்தை வாங்கியிருக்காங்க. கொஞ்ச நேரத்துல அந்த கீதா பொண்ணு அழுதுகிட்டே போச்சாம். சர் பாத்தா திட்டுவார்னு இவனுங்க அவ பின்னாடியே போய் என்னன்னு கேட்டிருக்காங்க…..”
இப்போது ப்ரியா உந்துதல் இல்லாமலேயே கதையை தொடர ஆரம்பித்திருந்தாள். அதற்குள்ளாகவே வானதியின் மூளை மின்னல் வேகத்தில் இது எங்கே போகிறது என்று சொல்லிவிட்டது. மிகவும் எச்சரிக்கையாக இருப்பாரே, எங்கே எப்படி வந்தது இந்த சிக்கல் என்று யோசனை போக, எண்ணவோட்டத்தை தடை செய்தவள்,
“என்னா சொன்னா கீதவர்ஷிணி?”, என்று கேட்டாள்.
“சர்… சர் அவளை ஹாராஸ் பண்ணாராம்… வந்து … வந்து … அவளை முத்தம் குடுத்தாராம். வெளிய சொல்லக்கூடாதுன்னு எச்சரிச்சாராம்….”, குரல் உடைந்து தேய்ந்தது ப்ரியாவிற்கு.
“அத்தனையும் பொய் ப்ரியா… நீ எதுக்கு அழற? மேல சொல்லு.”, வானதியின் உறுதியான குரலில் சற்று ஆறுதலடைந்த ப்ரியா,
“ராக்கியும் அவ பொய் சொல்றதா சொல்லி கோவப்பட்டதுக்கு, எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கு. வீடியோ எவிடென்ஸோட அவர் முகத்திரையக் கிழிப்பேன்னு எதோ சபதம் மாறி சொல்லிட்டு போயிருக்கா.”
அவ்வளவு உறுதியாக சொல்லுபவள் எதாவது ஆதாரம் கையில் இல்லாமல் சொல்ல மாட்டாள். ஆனால் எப்படி ? கண்டிப்பாக எத்தனை பெரிய அழகியாக இருந்தாலும் ஸ்வேதாவை மீறி அசர மாட்டான். அவளுக்குத் தெரியாதா? வானதி யோசிக்கும்போதே…அந்தப்புறம் யாருடனோ ப்ரியா பேசுவது கேட்டது.
“குடு போனை..”, என்ற அதட்டலோடு , “மேம்… நான் க்ருஷ் பேசறேன் மேம். சாரி மேம்… இந்த அவசரக் குடுக்கை போன் பண்ணிருச்சு. சாரே இதை  உங்க கிட்ட சொல்லியிருக்கணும்.”, என்றான் மெதுவாக.
“பரவாயில்லை க்ருஷ்… எதோ வீடியோ இருக்குன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சாமே… என்ன ஏதுன்னு தெரிஞ்சதா?”
“ம்ம்… சுளையா மூவாயிரம் குடுத்து சிசிடிவி ஃபுட்டேஜ் வாங்கிட்டோம். அதைத்தான் அந்த பொண்ணு ஆதாரமா காட்டப்போகுதாம். ப்ரின்சியோட செக்ரட்டரியா இருக்க சீனு சார்தான் விஷயத்தை சொன்னார். அதை வெச்சு நாங்களும் எடுத்துட்டோம். ஆனா… அவ சொல்ற மாதிரிதான் தெரியுது மேம்… அதைத்தான் நம்ப முடியலை….”, இறுதிப் பகுதியில் க்ருஷ்ஷின் குரல் தேய்ந்து ஒலித்தது.
“எனக்கு அந்த கிளிப் இப்பவே அனுப்பு க்ருஷ்… நான் பார்க்கணும்.”
“டேய் …. சர் வெளிய போயிட்டாராம்டா… வேலுண்ணா சொன்னார்…”, பின்னால் ராக்கி பேசுவது இவளுக்கும் கேட்டது.
“எனக்கு உடனே அனுப்பு க்ருஷ். அதோட… வேற என்ன நடந்துச்சு… திரும்ப எப்ப எங்கொயரி…யார் வருவாங்கன்னு முடிஞ்ச வரை விஷயம் வாங்கிட்டு சொல்லு. நான் வீடியோவை பார்த்துட்டு உங்களை திரும்ப கூப்பிடற வரை நீங்க அங்கயே இருங்க. விஷயம் பரவாம பார்த்துக்கோங்க, முக்கியமா இந்த க்ளிப் யார் கைக்கும் போகாம பார்த்துக்கோங்க. அவளோட வேற போட்டோ எதுவும் கிடைச்சா எனக்கு அனுப்பு.“, வானதி கட்டளையிட்டாள்.
“நானும் விசாரிக்கறேங்க்கா…சர்கிட்டயும் கேளுங்களேன்.”, க்ருஷ் சொல்ல, வினோத்தைப் பற்றி நன்கு அறிந்தவள், கண்டிப்பாக அவனாக எதுவும் கூறமாட்டான் என்று தெரிந்திருந்தாள். அதை க்ருஷ்ஷிடம் சொல்லாமல், “ம்ம்.. அவர் வீட்டுக்கு வந்தா கேக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு தெரிஞ்சதும் எனக்கு சொல்லு,”, என்று கூறி வைத்துவிட்டாள்.
வீடியோவை அவள் லாப்டாப்பில் மாற்றி, அவளது எடிட்டிங் மென்பொருளைக் கொண்டு ஓட விட்டாள். முதல் முறை வினோத் நடந்து வருவதும், அறை வாசலில் இவன் உள்ளே நுழைய, ஒரு பெண் வெளியே வர முற்படுவது போலத் தெரிந்தது. அவனது பரந்த முதுகு அவளை மறைக்க, அந்த நொடி என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இவன் உள்ளே செல்ல, அந்தப் பெண் வெளியே வருகிறாள், அவள் கைகள் உதட்டை அழுந்தத் துடைக்க, அறை வாயிலில் நிற்கும் வினோத் அவளை ஒரு விரல் நீட்டி எச்சரிக்கையாக ஏதோ கூறுகிறான். அடுத்து அவன் சென்றுவிட, இந்தப் பெண் கண்களைத் துடைத்துக்கொண்டே தோளைக் குறுக்கி, தலையைக் குனிந்து வேக நடையாக சென்று விடுகிறாள்.
கிருஷ் வட்டமிட்டு அனுப்பிய க்ரூப் போட்டோவை அடுத்து பார்த்தாள் வானதி. சும்மா சொல்லக்கூடாது. அழகிதான். அதை தெரிந்தும் வைத்திருந்தாள் என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது. கொஞ்சம் ஸ்வேதா ஜாடையோ? மனம் குதர்க்கமாக கேள்வி கேட்க, ‘சீ… சும்மாயிரு.’, என்று அதை அதட்டினாள்.
மீண்டும் ஸ்லோ மோஷனில் ஓடவிட்டாள். இருவரும் எதிரும் புதிருமாக நிற்கும் நொடியில் நிறுத்திப் பார்த்தாள். அந்தப் பெண் முகத்தை நிமிர்த்தியிருந்தது போலத்தான் இருந்தது. அவன் நெருங்கும் முன் அவள் கைகள் புத்தகத்தை மார்புடன் அணைத்திருந்தாள். மடங்கியிருந்த கைகள் அப்போதும் அப்படியே இருந்தது. அவள் கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவள், வினோத்தின் கைகளைத் தேட… இரண்டு கைகளுமே அவனது பக்கவாட்டில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. வலது கையில் போனைப் பிடித்திருந்தான்.
“ஹ்ம்ம்… சோ… அவளை வற்புறுத்தவில்லை. ஒன்று அவளாக நிமிர்ந்து இவன் முத்தத்தை வாங்கியிருக்க வேண்டும், இல்லை, எதிர்பாராமல் வினோத் அவள் நிமிரும் நேரம் கொடுத்திருக்க வேண்டும்…. இதில் எது?”, என்று யோசித்தாள்.
‘என்னதான் ஸ்வேதா ஜாடையாகவே இருந்தாலும், மாணவிகளிடம் அவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுபவன், இப்படி செய்ய மாட்டான்’, என்று முழு மனதாக நம்பினாள். ஆனால், கண் முன் தெரியும் இந்த ஆதாரத்தை எப்படி உடைப்பது? மார்ஃபிங், எடிட்டிங் எதுவும் செய்யப்படாத அக்மார்க் ஒரிஜினல் வீடியோ என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது.
தீவிர யோசனையில் இருந்தவள், மீண்டும் கைபேசி அழைக்க எடுத்தாள்.
“அக்கா… சர் வந்துட்டாரா வீட்டுக்கு? நாளைக்கு மதியம் டிபார்ட்மென்டல் என்கொயரி வைக்கறாங்களாம். கரஸ், ப்ரின்சி, வைஸ் ப்ரின்சி… அப்பறம் சீனியர்  H.O.Dங்க ரெண்டு பேரு. கீதவர்ஷணி பேரண்ட்ஸ் வர சொல்லியிருக்காங்களாம்.”, க்ருஷ் தகவல் தந்தான்.
“இன்னும் அவர் வரலைடா. எத்தனை மணிக்கு? எங்க நடக்குதுன்னு தெரியுமா?”
“மதியம் இரண்டரைக்கு, எங்க கரஸ் ஆபிஸ் கான்ப்ரென்ஸ் ரூம்லயாம். அங்கதான் டீ.வி. இருக்கு. வீடியோ போடுவாங்க போல… நீங்க பார்த்தீங்களாக்கா….?”
“ம்ம்.. அதைத்தான் பார்த்துகிட்டு இருந்தேன். எந்த எடிட்டிங்கும் பண்ணலை. அதான் குழப்பமா இருக்கு. வேற எதுவும் காமெரா இருக்கா அங்க? வேற ஆங்கிள்ல பார்க்கணும்.” வானதி சொல்லவும்,
“இல்லை. நான் கேட்டேன். அந்த இடத்துல அது ஒன்னுதான் போட்டிருக்காங்க. அது கிளர்க் ரூம். முதல்ல அந்த பொண்ணு போகுது. கொஞ்ச நேரத்துல கிளர்க் வெளிய போறார். அவர் கிளம்பிப் போன அஞ்சு நிமிஷத்துல சர் உள்ள வரார். “. கிருஷ் விவரிக்க,
“அது வரைக்கும் அந்த பொண்ணு உள்ள என்ன செஞ்சிகிட்டு இருந்தா? “
“தெரியலையே? நியாயமா ஸ்டூடென்ட்ஸ்க்கு அங்க வேலையே கிடையாது. லெக்சரர்ஸ், சில நேரம், நோட்ஸ் ஜெராக்ஸ் எடுக்க அவர்கிட்ட குடுத்து வாங்குவாங்க. சர் வேணா அதுக்காக போயிருக்கலாம்…. இவ ஏன் போனா?”, வானதியையே திருப்பிக் கேட்டான்.

Advertisement