Advertisement

காலை ஆறு மணி போல பேச்சுக் குரல் கேட்டு எழுந்தார்கள் நண்பர்கள் இருவரும். வெளியே வரவும், சூர்யோதயம் பார்க்கப் போனவர்கள் திரும்பியிருந்தார்கள்.
“ வென்னீர் இருக்கு. பக்கத்திலேயே, சர்க்கரை, பால்பவுடர், காபி, டீ பாக்கெட் , பிஸ்கெட்ஸ் இருக்கு, உங்க டம்ளர் எடுத்துகிட்டு போய் காபி, டீ எடுத்துக்கங்க. இன்னும் அரை மணி நேரத்துல அருவிக்கு போகலாம். “, தணிகாசலம் அறிவிக்க, ஒரு கும்பல் காபி போட சென்றது.
“குட் மார்னிங்….இந்தாங்க… காபி குடிச்சிட்டு  போய் ஃப்ரெஷ் ஆகிக்கங்க.”, வானதி இரண்டு காபி டம்பளருடன் வந்து சங்கருக்கும் வினோத்திற்கும் தந்தாள்.
பதில் முகமன் இருவரும் கூற, “உனக்கு ?”, என்று கேட்டான் வினோத்.
“புனிதா எடுத்துகிட்டு வரா. “, துடைத்து வைத்த முகத்தில் பளிச்சென்ற புன்னகை மட்டுமே ஆலங்காரமாக இருக்க, அழகாக இருந்தாள். ஸ்வேதாக்கு மேக்கப் இல்லாது அவள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காது. காலை எழுந்து பல் துலக்கியதும், க்ரீம், கண் மை என்று போட்டுக்கொண்டுதான் வருவாள். மனம் இப்படி வித்தியாசப் படுத்துவதைப் புரிந்து நொந்து போனான் வினோத்.
“சீ… மனுஷனாடா நீ ? ஸ்வேதா இப்படி செய்யும்போது அவளைப் பார்த்து சிரிப்ப, இப்ப அதுவே கம்பேர் பண்ணி வானதியை பெட்டர்ங்கறியா? இரண்டு பேரையுமே அவமானப்படுத்தற.”, தன் மேலேயே எழுந்த ஆத்திரத்தைக் கண் மூடி கட்டுப்படுத்தியவன் அவர்களை விட்டு சற்று விலகி அருவியைப் பார்ப்பது போல சென்றான். புனிதாவும் வானதியும், சூரியோதையம் பார்க்கச் சென்ற கதைகள் பற்றி சங்கருடன் பேசுவது  மெலிதாகக் கேட்டது.
“டேய்… முடிச்சிட்டியா ? போலாமா ? “, சங்கரின் குரலில் தன்னை சமன் படுத்தியவன், “தாங்க்ஸ் வானதி.”, என்று கப்பை அவள் முகம் பார்க்காமல் கொடுத்துவிட்டு, அவன் ப்ரஷ் பேஸ்டை எடுக்கச் சென்றான்.
‘என்னாச்சு? விஷ் பண்ணும்போது நல்லாத்தான இருந்தார், ‘, என்று யோசித்த வானதி, ‘தொசி மறுபடி சுணங்கிருச்சு போல’, என்று அவனுக்கு வைத்திருந்த தொட்டா சிணுங்கி பேரை சுருக்கி தொசியாக்கியிருந்தாள்.
அருவியில் நீராட, முழங்கால் அளவு ட்ராக் ஷொர்ட்ஸ், மேலே கருப்பு பனியனுமாக இருந்தவள், அருவியின் ஆர்பரிப்பில் சந்தோஷமாக இருந்தாள்.
இடையிடையே, ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து திறந்த மார்புடன் அருவி பாய்ந்து உருவாக்கியிருந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வினோத்தையும் அவள் கண்கள் மொய்த்தன.
புனிதாவிற்கு நீச்சல் தெரியாததால், சங்கர் அவளை சற்று நீர் குறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றான். நேற்றைய சண்டை மறந்து இருவரும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
வினோத் தனியாக நீந்திக்கொண்டிருக்கவும், அவளும் குளத்தில் இறங்கி நீந்தி வந்தாள் அவனருகே. “ஹாய்…”, என்ற அவள் குரலில் திரும்பியவன்,
“ஹேய்… இங்க ஆழம் அதிகமா இருக்கு. நீந்துவியா?”, அவளைப் பார்த்துக் கேட்க, மல்லாக்காகத் திரும்பிப் படுத்தபடி மிதந்தவள், லேசாக கால் கைகளை அளைந்து மிதந்த படியே, 
“ஹ்ம்ம்… சிங்கப்பூர் உபயத்துல இதுவும் ஒண்ணு. அங்க அப்பார்ட்மெண்ட் கிளப் ஹவுஸ்ல பூல் இருக்கவும் கத்துக்கிட்டேன். தினமும் இருவது லாப் ஸ்விம் பண்ணுவேன். இங்க வந்ததுல விட்டுப் போச்சு. “, என்றாள்.
“நைஸ்… பட் இது ஆழம் அதிகம்… நீயும் ப்ராக்டிஸ் இல்லைங்கற… கொஞ்சம் அந்த பக்கம் போலாம் வா, அட்லீஸ்ட் கால் எட்டற ஆழம் இருக்கட்டும்.”, என்று சொல்லவும்,
“ஹ்ம்ம்…சரி”, என்று திரும்பி நீந்தினாள். இது முறையான ஆசிரியர் சொல்லிக் கொடுத்துப் பயின்றது என்பது அவள் நீந்தும் ஸ்டைலைப் பார்க்கும்போதே தெரிந்தது. தண்ணீர் பெரிதாக அதிராமல், சீராக உதைக்கும் அவள் கால்களும், விரல்கள் இறுக்கி ஒன்றாகச் சேர்த்து, கத்தியாகத் தண்ணீரைக் கிழிக்கும் கைகளும், மூச்செடுக்க தலையோடு ஒற்றைக் கோடாகத் திரும்பும் தோளும் இடுப்பும் என்று பார்த்தவன், அவள் அணிந்த டீ-ஷர்ட் உயர்ந்து எட்டிப் பார்த்த வெளிர் இடுப்பில் தடுமாறினான்.
அதுவரை கால் கைகளைக் கொண்டு தண்ணீரை அளைந்த படியே நின்ற வாக்கில் பார்த்துக்கொண்டிருந்தவன், தண்ணீரில் சற்று முங்க,
“டேய்…. என்னடா….”, என்று கண்ணை இறுக மூடி, உள் நீச்சலாக நீந்தினான் அவள் பின்னே. அவன் எழுந்து நிற்கையில், தண்ணீர் அவன் நெஞ்சளவு இருக்க, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாள் வானதி.
“ஸ்டைலா ஸ்விம் பண்ற… பார்க்க அழகா இருக்கு. “, என்று பாராட்டினான்.
அவன் பாராட்டில் அவள் மகிழ்ந்தது முகத்தில் உடனே வெளிப்பட்டது.
“ஆனா, கொஞ்சம் டீ-ஷர்ட் ஷார்ட்ஸ்க்குள்ள அப்பப்ப டக்-இன் பண்ணு. தூக்குது, உன் இடுப்பு தெரியுது.”, ஏனோ தான் பார்த்ததுபோல அவளை மற்ற கண்கள் மொய்க்கலாம் என்ற எண்ணம் கசந்தது.
‘ஹ்ம்ம்… ஒரு நிமிஷம் பாராட்டறாரேன்னு சந்தோஷப்பட முடியுதா?’, என்று உள்ளுக்குள் திட்டியவள், டீ-ஷர்ட்டை சரி செய்ய  நேராக நின்றாள். என்னவோ காலுக்கிடையில் ஊர்ந்து செல்வதுபோல இருக்க,
“அம்மா..”, என்று கத்தி துள்ளி காலை உதறி விழ, அவளை எட்டிப் பிடித்து அணைத்து நிமிர்த்தியவன்,
“என்ன…என்னாச்சு?”, என்றான்.
அவன் அணைப்பில், அருகாமையில் அதிர்ந்து பார்த்தவள், “இல்ல… என்னவோ கால்ல ஊறுச்சு….”
தண்ணீரிக்குள் முங்கி அளைந்தவன், நிமிர்ந்து, “ஒண்ணும் மில்லை… இந்த செடி உரசியிருக்கும். தண்ணியில அடிச்சிகிட்டு வந்திருக்கும்போல, “, என்று காட்டி தூர வீசினான்.
படபடப்பு சற்று அடங்கியிருந்தாலும், அவன் வெற்று மார்பில் சாய்ந்திருந்த அந்த நொடி… ‘வேணாம் வானதி… அப்பறம் யோசிக்கலாம்… ஸ்டெடி… ஸ்டெடி…’, என்று தன்னை திடப்படுத்திக்கொண்டிருந்தாள்.
தண்ணீருக்குள் முங்கியவன் கண்ணில் உடனே அந்தச் செடி தென்பட்டாலும், அதே ‘ஸ்டெடி… ஸ்டெடி..’ மந்திரத்தை அவனும் உச்சாடானம் செய்துவிட்டுத்தான் மேலே வந்திருந்தான்.
“ம்ம்… நான் இன்னும் கொஞ்சம் ஸ்விம் பண்ணப் போறேன் வானதி. நீ புனிதாகிட்ட போ..அவ அருவிகிட்ட இருக்கா பாரு.”, என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் பாய்ந்துவிட்டான்.
‘பாவம், என்னை பிடிக்கப்போய் அவருக்கு சங்கடமாகிருச்சு போல… ஒழுங்கா அருவிகிட்டயே இருந்திருக்கலாம். இவர் தனியா இருக்காரேன்னு வந்ததுக்கு…’, தன்னை திட்டிக்கொண்டே வந்தவள், ‘ஆக, உனக்கு அவர் மேல சாச்சிகிட்டது பிடிக்கலை? ஒரு செகன்ட் ஜிவ்வுன்னு பறக்கலை நீ?’, நக்கலடித்த மனசாட்சியை விரட்டியபடியே அருவிக்கு அருகில் செல்ல ஆரம்பித்தாள்.
அதன் பின்னர் கிளம்பி வரும் வரையிலும் இருவருமே அதை பெரிதாக எடுத்துக்கொண்டது போலவே காட்டிக்கொள்ளவில்லை. புனிதாவையும் சங்கரையும் உடன் வைத்துக்கொண்டு பேசவும், இலகுவாகவே இருக்க முடிந்தது.
வீடு வந்து சேர்ந்த பின்னும் வினோத் அவன் அறைக்குள் புகுந்து கொள்ள, ஞாயிறு மாலை என்பதால் மலரும் வராதது, இருவருக்குமே வசதியாகப் போய்விட்டது.
இரவு அரிசி உப்புமாவும் கடலை சட்னியும் செய்தவள், வினோத்தை அழைக்கச் சென்றாள். அவனது சங்கடத்தைப் போக்கும் விதமாக பொதுவான பேச்சுகள் பேசி, வானதி சாதாரணமாகக் காட்டிக் கொள்ள, ‘நாம்தான் தேவையில்லாமல் சலனப்படுகிறோமா? அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லையா?’, என்று குழம்பிப் போனான் வினோத்.
அவன் எதிர்பார்க்காத நேரம், இரவு படுக்கச் செல்லும் முன், அவனிடம் குட் நைட் சொன்னவள், “வினோத்… ஸ்விம் செஞ்சப்போ… நான் வேணும்னு உங்க மேல விழலை. நிஜமாவே பயந்துட்டேன். நீங்க தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்.”, என்றாள்.
அவளைப் பார்த்தவன், “நான் தப்பா நினைச்சதா சொல்லவேயில்லையே. நீயா ஏன் அப்படி நினைக்கற ?”
“அது… இல்லை… அதுக்கப்பறம் நீங்க எங்கிட்ட முன்ன மாதிரி ஃப்ரீயா இல்லையோன்னு ஒரு ஃபீல்… அதான்….”, சற்று தவிப்பாய் வானதி இழுக்கவும்,
“ஓ… நான் என்னவோ உன்னை அணைச்சதாலதான் நீ விலகிப் போறயோன்னு நினைச்சேன்… அப்படியில்லையா?”, அவளோடு விளையாடிப் பார்க்க ஆசை வந்து வினோத் வானதியை மடக்க, இப்போது என்ன பதில் சொல்வது என்று வானதி முழித்தாள்.
“இல்ல… அது… நான் தடுமாற… நீங்க பிடிச்சீங்க. அதுவும் ஜஸ்ட் செகண்ட்ஸ்.. அதுல ஒன்னும் தப்பில்லை.”
அவள் மோவாயைத் தட்டி, “அப்பறம் எதுக்கு மேடம் சங்கடம்… இரண்டு பேரும் புரிஞ்சிகிட்டோம்தான ?”, என்று கேட்க, ‘அஹ்… என்ன புரிஞ்சிகிட்டோம்’, என்று வானதி யோசிக்கையிலேயே, விசிலடித்துக்கொண்டு மாடி ஏறினான் வினோத்.
ஏதோ ஒரு விதத்தில், வானதியும் அந்த அணைப்பைப் பற்றி யோசித்திருக்கிறாள் என்பதே இனித்தது. ‘ஜஸ்ட் செகண்ட்ஸ்தானவா…, அதுக்கே நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்.’, என்று நினைத்துக்கொண்டே அவன் அறையைத் திறந்தான்.
‘என்ன உரிமையெல்லாம் தூள் பறக்குது? மனசாட்சி எட்டிப் பார்க்கவும், “இன்னிக்கு நான் எதுவும் யோசிக்கப் போறதில்லை. எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்.’, என்று அதை தட்டிவிட்டு படுக்கச் சென்றான்.
‘ஸ்வேதா, வம்சிக்கு குட் நைட் சொல்லலையே’, என்று உறக்கம் தழுவும் நேரம் தோன்றியது. சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை உறக்கம் ஆட்கொண்டது.

Advertisement