Advertisement

அத்தியாயம் – 10
ஆட்டமெல்லாம் முடித்து, தணிகாசலம் அனைவரையும் சென்று உறங்கச் சொன்னார். சூர்யோதயம் பார்க்க விரும்புபவர்கள் விடியற்காலை தயாராக இருக்க நேரம் சொல்லிவிட்டு சென்றார்.
“டேய்… வினோத்… இந்த அநியாயத்தைக் கேளுடா…”, சங்கர் அலற,
“என்னடா… என்ன ஆச்சு?”
“பிரிச்சிப்புட்டாங்க மாப்ள… நம்ம பொண்டாட்டிகளை தனி டென்ட்டுக்கு அனுப்பிட்டாங்க….நாம இங்கயாம்!”, நண்பன் வந்து  நியாயம் கேட்க வேண்டும் என்று வினோத்தின் கையைப் பிடித்து இழுத்தான்.
“டேய்.. லேடீஸ் எல்லாம் அந்த பக்கம் இருக்கற நாலு டென்ட்ல இருப்பாங்க. இந்த சைடு நமக்கு. இதுல என்னடா பிரச்சனை ?”, ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவன், இது என்ன என்பது போல அயர்ச்சியுடன் சங்கரைப் பார்த்தான்.
“ஓஹ்… தனித் தனியாதான் தங்கணுமா? நான் ஜோடியா இருப்போம்னு நினைச்சேன் டா…”, அழமாட்டாத குறையாக சொன்னான் சங்கர்.
அவனை வினோதமாகப் பார்த்த வினோத்,”டேய்… ஒரு நைட்தான…போய் படு. நான் கொஞ்ச நேரத்துல வரேன்.”, என்றான்.
“மச்சி… நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா? டேய்… ப்ளீஸ், வாடா… அந்த மனுஷன் கிட்ட போய் கேட்கலாம்.”, வினோத்தின் கையைப் பிடித்து இழுக்க, வினோத்தின் எந்த சமாதானமும் எடுபடவில்லை. முடிவில்,
 “ டேய்…படுத்தறடா… சரி நான் வரேன். நீயே பேசிக்கோ. “,  வேண்டா வெறுப்பாக எழுந்து வந்தான் வினோத்.
பெண்கள் தங்கும் டென்ட்டுக்கும், ஆண்கள் தங்கும் டென்ட்டுக்கும் மத்தியில் இருந்தது தணிகாசலத்தின் டென்ட். அதன் வாசலுக்குச் சென்றவன்,
“தணிகா சார்… ஒரு நிமிஷம்…”, என்று குரல் கொடுத்தான் சங்கர்.
அப்போதுதான் படுத்தவர், டென்ட்டின் உள்ளிருந்தே,  “என்ன சார்? என்ன “வேணும் ?”, என்று குரல் மட்டும் கொடுத்தார்.
“ம்ம்… என் பொண்டாட்டி வேணும்.”, என்று முனகியவன், “கொஞ்சம் வாங்க சர். ஒரு விஷயம்.”, என்று அழைத்தான்.
உள்ளுக்குள் திட்டியிருப்பாரோ என்னவோ, ஆனால், அவரது டென்ட் குகைக்குள்ளிருந்து வெளியில் வந்தார்.
“என்ன சங்கர் சார்?”
“வந்து… நான் என் வைஃப் கூட டென்ட்ல இருந்துக்கறேன். வினோத் வைஃப் அவர் கூட தங்கிக்கட்டும். “
“சார்… இது ரூல்ஸ்ல இல்லை. லேடீஸ் தனியாத்தான் தங்கணும்.”
“புரியுது சார். ஆனா நாங்க கப்பிள்ஸ்தான? எங்களை பிரிச்ச பாவம் உங்களுக்கு எதுக்கு சார்?”, சங்கர் விடாமல் கேட்க, தணிகாசலம் கொஞ்சம் டென்ஷன் ஆனவர்,
“எந்த புருஷன் எந்த பொண்டாட்டி டென்ட்ல படுக்க போறான்னுல்லாம் என்னால பார்க்க முடியாது சார்…”, என்றார்.
“ஹான்… யோவ் … என்ன பேசறீங்க? டேய் வினோத்… அவமானப் படுத்தறார்டா…”, சங்கர் குரலெடுத்துப் பேசவும், தான் சொன்னதை உணர்ந்தவர், இரு கைகளையும் சமாதானமாக உயர்த்தி,
“ஐயோ… இத பாருங்க சங்கர்… இராத்திரியில் லைட் வெளிச்சம் இல்லாத இடம் இது.  நைட் பாத் ரூம் போக எழுந்து வெளிய போவாங்க. போயிட்டு வந்து சரியான டென்ட்லதான் படுக்கப் போறாங்களான்னு தெரியாது. மாறி போச்சுன்னா பெரிய வம்பாகிரும். தெரியாம செஞ்சாங்களா, இல்லை தெரிஞ்சே வம்பு பண்றாங்களான்னு கூட சொல்லமுடியாது.”
அவர் கொடுத்த நீண்ட விளக்கம் கேட்டு வினோத் முகத்தில் புன்னகை அரும்பியது. இவனை நம்புவது வேஸ்ட் என்று உணர்ந்த சங்கர்,
“தணிகா சார். நான் என் பொண்டாட்டி டென்ட்டுக்குள்ள போனா வெளியவே வரமாட்டேன் சர். நான் ரொம்ப பயந்த சுபாவம்.”, என்று அவரிடம் இறங்கி வந்தான்.
“வினோத் சார். கொஞ்சம் சொல்லுங்க உங்க ப்ரெண்ட்கிட்ட. முன்னாடி ஒரு வாட்டி இப்படி ஆள் மாறி டென்ட்ல படுத்து, நிஜ புருஷன் தம்மடிச்சுட்டு உள்ள வந்தா அவர் பொண்டாட்டி பக்கத்துல வேற ஒரு ஆள் படுத்திருக்கான்.  இது எதுவும் தெரியாம அந்தம்மா களைப்புல தூங்குது. நடு ராத்திரி பெரிய சண்டையாகிருச்சு. அதுலர்ந்து இந்த ரூல்ஸ் கொண்டு வந்துட்டாங்க. புரிஞ்சிக்கோங்க சர். உங்க மனைவிதான, ஒரு நாளைக்கு கூட வா தனியா விட மாட்டீங்க?”, இருவருக்குமாக மாறி மாறி தணிகாசலம் சொல்லவும், வினோத் அவர் சொன்னதைக் கற்பனை செய்து பார்த்து, அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் சிரிப்பு சத்தத்தில், அவள் டென்ட்டிலிருந்து எட்டிப் பார்த்த வானதி வெளியே வர, பின்னோடே புனிதாவும் வந்தாள்.
“என்ன… என்ன ஆச்சு?”, புனிதா கேட்க,
“உன் வீட்டுக்காரன் உன் கூடத்தான் படுப்பேன்னு தணிகா சார்கிட்ட சண்டையடிக்கறான் மா.”, வினோத் அழகாகக் கோர்த்துவிட்டான்.
இதைக் கேட்டு கடுப்பான புனிதா, “ வீட்ல எப்பவும் பத்து மணியாச்சுன்னா யார் வந்தாலும் வராட்டியும், பெட்ஷீட்டை இழுத்து போர்த்திகிட்டு படுப்பீங்கதானா? இங்க வந்து எதுக்கு இந்த சீனு ?”, என்று சிடுசிடுக்க, இப்போது கேட்டுக்கொண்டிருந்த மூவருக்கும் சிரிப்பு.
“டோட்டல் டாமேஜ். “, வினோத் முணுமுணுக்க…
சங்கர் முகம் போன போக்கை பாட்டரி வெளிச்சத்தில் பார்த்தபின் தான் பேசியது உறைக்க, நாக்கைக் கடித்தவள், தலையில் தட்டிக் கொண்டு,
“அண்ணா… அவரை கூட்டிட்டு போங்கண்ணா முதல்ல. அவரோட சேர்ந்து எங்க மானத்தை நானுமே வாங்கறன். கிரகம். “, நிமிர்ந்து பார்க்காமல் புனிதா அவள் டென்ட்டிற்கு செல்ல, வானதி சிரிக்கும் வினோத்தின் முகத்தைப் பார்த்து சற்று சமாதானமானாள். அவன் சஞ்சலமாக இருந்தது, அவளுக்கும் ஒரு தவிப்பைக் கொடுத்திருந்தது.
“சாரி சர்.”, என்று தணிகாசலத்தை அனுப்பிய வினோத்,  “வாடா மச்சி, இன்னிக்கு நாந்தான் உனக்கு.”, என்று கலாய்க்க,
“வினோத்…. பாவம் அவரே நொந்து போயிருக்கார். “, என்று வானதி அவனை அதட்டினாள்.
“ஹ்ம்ம்… ஏதோ உனக்காச்சம் என் ஃபீலிங்க்ஸ் புரிஞ்சுதேம்மா…”, சங்கர் சிம்பதி வோட் வாங்க முயற்சிக்க, வானதியும்,
“நான் போய் புனிதாவையும் திட்றேன் அண்ணா. இப்படியா பேசுவா?”, என்று சங்கரை ஆதரித்தாள்.
“வேணாம்மா… இன்னேரம் அங்க வருத்தப்பட்டுகிட்டு இருப்பா. நீ சமாதானப் படுத்து.”
“போறும்டா… நீ இவனை நம்பாத வானதி… சிம்பதி கிரியேட் பண்றான். உங்களுக்கு அங்க எல்லாம் ஓக்கேவா?”, என்று விசாரிக்க,
“ம்ம்… ஆல் ஓக்கே. “, என்று புன்னகைத்தாள். அவள் கிளம்பியதும், இவர்கள் திரும்பி நடக்க,
“இதெல்லாம் அராஜகம் மச்சி. எவனோ டென்ட் மாறி படுத்ததுக்கு, எல்லா புருஷங்களையும் பழி வாங்கறாங்க. நான் எவ்வளவு கனவு கண்டிருந்தேன் தெரியுமா? ரொம்ப நாள் கழிச்சு, நானும் என் பொண்டாட்டியும் மட்டும், அந்த குட்டி டென்ட்ல…”
“போறும் …போறும்… நிறுத்துடா….”, வினோத் காதைப் பொத்தி, டென்ட்டுக்குள் நுழைந்தான், பின்னேயே சென்று, இருவருமாக படுக்க,
 “ம்ம்.. இல்ல மச்சி… எனக்கு… ம்ம்… இல்லை வேணா விடு. நான் எதாச்சம் கேட்டு உனக்கு கோவம் வரும்.”, சங்கர் பின்வாங்கினான்.
“ஏய்… என்னடா…. கேளு.”
“நீங்க புது ஜோடிதான?  உனக்கு ப்ரச்சனையில்லையா? “, வினோத்தைப் பார்த்து சந்தேகமாகக் கேட்டான் சங்கர்.
“ஒரு நாள்ல என்னடா?”
“அதில்ல… காலேஜ்ல கூட இப்படி நீ சைட் அடிச்சி பார்த்ததில்லை நான். புது பொண்டாட்டிதான். ஆனாலும், உன் பார்வை…”
“பார்வை…”
“அது… நீங்க இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலைன்னு நினைக்கிறேன். சரியா?”, துல்லியமாகச் சொல்லும் நண்பனை ஆச்சர்யமாகப் பார்த்தான் வினோத். சிறிய டார்ச் தந்த அறை குறை வெளிச்சத்தில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை.
“சரி…உன் ரூட்லயே போனாலும்… வானதியை நான் பார்க்கறதை வெச்சு இது எப்படிடா முடிவு செய்த ?”, அவன் கேள்விக்கு விடையளிக்காமல் பதில் கேள்வி கேட்டான் வினோத்.
“இல்லை… உங்க ரெண்டு பேர் கண்ல தெரியற ஆர்வம்… காதலருங்க மாதிரிதான் தெரியுது. ம்ம்…ருசி கண்ட பூனை பார்வை வேற மாதிரி இருக்கும். பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு, விரும்பி வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா இன்னிக்கு சாயந்திரம் ஏன் மூட் ஆஃப் ஆன?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைடா…”, நண்பன் தன்னை கண்டு கொண்டது தெரிந்து நழுவப் பார்த்தான் வினோத்.
“நீ மூட் அவுட் ஆனதுமில்லாம, பாவம் வானதிகிட்ட வள்ளுனு விழுந்த, அது உங்கிட்ட பேச வரும்போதும் மூஞ்சை காட்ன. நான் பார்த்தேன். அது சோகத்தை மறைச்சு, காமிராவை தூக்கிட்டு வந்து எங்களை போட்டோ எடுத்துகிட்டு இருந்துச்சு. பாவம்டா வானதி. நல்ல பொண்ணு. “
“…”
“உன் அளவு எனக்கு பெருசா யோசிக்கத் தெரியாது வினோத். ஆனா நீ தேவையில்லாம மனசுக்குள்ள போராடிக்கிட்டு இருக்கன்னு தோணுது. வாழ்க்கை உனக்கு செகன்ட் இன்னிங்க்ஸ் குடுத்திருக்கு. முதல் பாகத்துக்கு முற்றும் போட்டு அடுத்ததை ஆரம்பி. இருக்கற வாழ்க்கை சந்தோஷமா வாழு. உன் மேல வானதிக்கு நிறையவே பிரியம் இருக்கு. நீ கோவப்பட்டாலும் அது ஈகோ பார்க்காம உன் கிட்ட பேசுது. அதும் மனசை நோகடிக்காதடா… நான் சொல்றத சொல்லிட்டேன். நீ எனக்கு பதில் சொல்ல வேணாம். ஆனா யோசிடா. அது போறும்.”
அவன் பதிலை எதிர்பார்க்காமல், நெருங்கிய நண்பன் என்றாலும், தங்கைக்கு அண்ணனாக வானதிக்காகப் பேசும் சங்கரை இன்னமும் பிடித்தது.
மனது குழம்பிக் கிடந்தது. ஒரு பக்க மனது, இதில் தவறில்லை, துரோகமில்லை என்றது. இது நாள் வரை, மனைவி இறந்தாலும் தன்னை ஏக பத்தினி விரதனாக நினைத்துக்கொண்டிருந்தவனின் நினைப்பில் மண் விழுந்து, மற்றொரு பெண்ணின் அருகாமையில் நீயும் சாதாரணமானவன் என்று, இன்னொரு பக்கம் இடித்துரைக்க அதை ஏற்க முடியாது தவித்தான். ஸ்வேதாவிடம் மனதுக்குள் பேசவும்கூட குற்ற உணர்வாக இருந்தது.
இந்தக் குழப்பத்திலேயே முதல் முறையாக மனைவிக்கும் பிள்ளைக்கும் குட் நைட் சொல்லாமலேயே தூங்கிப் போனான்.

Advertisement