Advertisement

உதட்டைக் கடித்த வினோத்…”சாரி மச்சி… பேசிகிட்டே வந்ததுல தெரியலை. இனி வா… உன் கூடவே நான் வரேன். புனிதாம்மா… நீ வானதிகூட பேசிகிட்டே போ.”
புனிதாவிற்கு ஏற்கனவே கல்லூரியில் மலையேற்றப் பழக்கம் இருந்ததால், அவளுக்காக சங்கர் வந்திருந்தான். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள்.
“சாரி வானதி. அண்ணா கொஞ்சம் கோச்சிகிட்டார் போல? எதுவும் சொன்னாரா?”, புனிதா கேட்கவும், மறுத்தவள், “உன்னையில்லை, என்னைத்தான் சொன்னார். கேட்டா ஆமான்னு சொல்ல வேண்டியதுதானன்னு. ஒன்னும் ப்ரச்சனையில்லை. விடுமா.”, என்று  நடக்கத் தொடங்கினாள்.
“நீ தப்பா நினைக்கலைன்னா, நான் கேட்டது உண்மைதான? இரண்டு பேரும் லவ் பண்ணறீங்களா? சங்கர் உங்களது அரேஞ்ச் மாரேஜ்ன்னுதான் சொன்னார்.”
“அரேஞ்ச் மாரேஜ்தான் புனிதா. நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. முன்னாடியே அறிமுகம். இப்ப கல்யாணத்துக்கப்பறம் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்கறோம், அவ்வளவுதான். நீயா பில்டப் செய்யற. “
“ஆனா, ஸ்வேதாவை அண்ணா ….” புனிதா கேட்கலாமா என்பது போல இழுக்கவும், சிரித்தவள்,
“ம்ம்… அது பக்கா லவ் மாரேஜ். அதுதான் லவ், நாந்தான் கிட்ட இருந்து பார்த்தேனே. பைத்தியமா இருந்தா ஸ்வேதா.”, நினைவுகளின் தாக்கத்தில் குரல் கமற வானதி சொல்லவும்,
“அப்படி என்ன லவ்… கொஞ்சம் சொல்லேன்.”, புனிதா உந்தினாள்.
“ம்ம்… இவங்க லவ் சொல்லிகிட்ட ஒரு இரண்டு வாரத்துக்கெல்லாம் வினோத் பிறந்த நாள் வந்துச்சு.  கிறுக்குப் பொண்ணுக்கு நைட் அவர் வீட்டுக்கு போய் கேக் கட் பண்ணணும்னு ஆசை. என்னை அவ வீட்ல தங்கற மாதிரி வர சொன்னா. கேக்கை கடை சாத்தற நேரம் வாங்கி வந்து,  யாருக்கும் தெரியாம ஃப்ரிஜ்ல வெச்சுட்டோம். இவ இருக்கறது அண்ணா நகர்ல. அவர் வீடு மைலாப்பூர். கார்லதான் போகணும். அவங்க அப்பா கார் சாவியை சுட்டு, அவங்க தூங்கினதுக்கப்பறம் காரை மெதுவா கிளப்பிட்டு போய்… ஷு… இப்ப நினைச்சாலும் கண்ணை கட்டுது. “
“கிளம்பி போனபோது, எங்க போறீங்க இந்த நேரத்துலன்னு நுங்கம்பாக்கம் ஹைரோடு கிட்ட போலீஸ் காரை நிறுத்திட்டாங்க. ஃப்ரெண்டு பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ணப் போறோம்னு சொன்னா, நிக்க வெச்சு பத்து நிமிஷம் லெக்சர், பயம் வேண்டாமா, பாதுகாப்பு இல்லை, கார் ரிப்பேரானா என்ன பண்ணுவீங்க… ஒரு வழியா இதான் கடைசீ வாட்டின்னு சத்தியம் செய்து கண்ல தண்ணி விட்டா ஸ்வேதா. அப்பறம்தான் அனுப்பினாங்க. அப்பவே லேட் ஆகிருச்சு.பத்து நிமிஷம்தான் இருக்கு போ போன்னு விரட்டுனா. நான்தான் வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன்.”
“ஸ்பீடா போய் மறுபடியும் போலீஸ்கிட்ட மாட்டவான்னு நான் திட்ட, சண்டை போட்டுகிட்டே போனோம். ஒரு வழியா அவங்க வீடு இருக்க ஏரியா போயாச்சு, ஆனா இருட்ல அவளுக்கு வீடு தெரியலை. மணி பன்னெண்டு தாண்டிருச்சு. ஸ்வேதா கண்ல தாரை தாரையா கண்ணீர். அவருக்கே போன் செஞ்சு தெரு முனைக்கு வர சொல்லுன்னு சொல்லிட்டு அங்க மரத்தடியில காரை நிறுத்திட்டேன்.”
“ம்ம்…வந்தாரா….?”, புனிதா கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ம்ம்… பக்கத்து தெருவிலர்ந்து வந்தார். மேடம் ஓடிப் போய் பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டா. நல்ல வேளை நடு ராத்திரி, ரோடு காலியா இருந்துச்சு.. நான் கேக் எல்லாம் கார் டிக்கி மேல செட் பண்ணிட்டு கூப்பிடற வரைக்கும் இவ அழுக அவர் சமாதனப் படுத்தன்னு போச்சு. ஒரு வழியா வந்து கட் பண்ணி ஊட்டிவிட்டு, நான் போட்டோ எல்லாம் எடுத்தப்பறம், இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கக் கூடாதுன்னு மறுபடி வினோத்கிட்டர்ந்து லெக்சர். என்னவோ நாந்தான் ஐடியா குடுத்த மாதிரி எனக்கும் சேர்த்து வந்துச்சு.”
“ஆனாலும் இப்படி ஒருத்தர் நமக்காக செய்யறது, செம்ம த்ரில்தான் இல்ல வானதி ? அண்ணா பறந்திருப்பாரே.”, புனிதா கேட்க,
கல கலவென்று சிரித்தவள், “ஆமாம்…நாங்க கிளம்பின பத்து நிமிஷத்துக்கெல்லாம் பறந்துதான் வந்தார். “
“ஏன் ?”
“ அவர்கிட்ட இந்தம்மா பிரியாவிடை வாங்கிட்டு நாங்க மெயின் ரோடு கிட்ட வந்திருப்போம், கார் நின்னுடுச்சு. பெட்ரோல் இல்லை. யோசி, நைட் ஒரு மணிகிட்ட ஆகுது. தெரியாத இடம். பங்க் எங்க இருக்கும்னு தெரியாது. திரும்ப வினோத்துக்கே போனைப் போட்டு சொல்லவும், அவர் கார் எடுத்துகிட்டு பறந்து வந்தார். இதைக் கூட பார்க்காம வண்டி எப்படி எடுப்பன்னு, எனக்குத்தான் செம்ம திட்டு. அப்பறம் அவர் காரோட எங்களுத டோ பண்ணி பெட்ரோல் பங்க் வரை வந்து, ஒரு வழியா நாங்க வீடு வந்தாச்சுன்னு சொல்லவும்தான் அவருக்கு நிம்மதியாச்சு.”
“பைத்தியக்காரப் பொண்ணுதான். அண்ணா பர்த்டே மறக்க முடியாத படி செஞ்சிட்டா….”, புனிதாவும் ஆமோதித்தாள்.
சிறிய அமைதிக்குப் பின், “ஆனா வானதி, லவ் எப்பவும் ஆர்பாட்டமாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை. அமைதியாக் கூட வரலாம். “, என்றாள் புனிதா.
சற்று மேடான இடத்தில் ஏறிக்கொண்டிருந்த வானதி, புனிதா சொன்னதைக் கேட்டு சட்டென்று திரும்ப, நிதானம் தவறி சறுக்கினாள்.
“ஹே… பார்த்து…”, புனிதா கத்தும் வேளை, பக்கத்திலிருந்த செடியின் கிளையைப் பிடிமானமாய் பிடித்து, விழாமல் பார்த்துக்கொண்டாள். ஆனால், துரதிர்ஷடவசமாக, அது முள்ளுச் செடி. கையில் இரண்டு மூன்று இடங்களில் குத்தியிருந்தது. உணர்ந்து மெதுவாக வலியைப் பொறுத்துகொண்டு அவள் எடுக்கும் வேளை வினோத் அவள் அருகில் வந்துவிட்டான்.
புனிதா கத்தியதற்கு முன்பே அவள் சறுக்குவதைப் பார்த்தவன், இரண்டே எட்டில் பாய்ந்து முன்னே வர, அதற்குள் கிளையைப் பிடித்திருந்தாள் வானதி.
“அறிவிருக்கா வானதி? ஸ்லோப் ஏறுப்போது கவனம் பாதையிலதான இருக்கணும்? கதை பேசி சிரிச்சிகிட்டு வந்தீங்க சரி, ஏறும் போது ஏன் திரும்பிப் பார்த்த? உள்ள முள்ளு சிக்கியிருக்கு போல”, வார்த்தைகளில் சூடு இருந்தாலும், விரல் மிக மென்மையாக அவள் கையை ஆராய்ந்து கொண்டிருந்தது.
தணிகாசலம் வந்துவிட, ஒன்றும் பெரிய காயமில்லை. செடியும் விஷச் செடியில்லை, என்று உறுதி செய்தார். குழுவினரை பார்த்து முன்னே நடக்கச் சொன்னவர், முதலுதவிப் பெட்டியை திறந்து மட மடவென்று கையில் இருந்த முள்ளை அகற்றி, மருந்திட்டு ,ப்ளாஸ்ட்டர் போட்டுவிட்டு குழுவினரை நோக்கி நடந்தார்.
“அப்படியென்னடி பேசிகிட்டு இருந்தீங்க ?”, சங்கர் புனிதாவைக் கேட்கவும்,
“அண்ணா பர்த்டேக்கு ஸ்வேதாவும் வானதியும் ராத்திரி கேக் கொண்டு போய் கட் பண்ண கதையை சொல்லிகிட்டு இருந்தாங்க.”, புனிதா கூறிய பதில் காதில் விழ, வானதியை ஒரு நொடி பார்த்தவன், அவள் கையை விட்டுவிட்டு, “இனியாச்சம் பாதையில் கவனம் வை.”, என்று உறுமிவிட்டு சங்கரை இழுத்துக்கொண்டு முன்னே சென்றான்.
“அப்பாடி… அண்ணனுக்கு என்னமா கோவம் வருது ?”, புனிதா சொல்லவும், “ம்ம்… ஸ்வேதாகிட்ட மட்டும்தான் கோவப் படமாட்டார். மத்த எல்லார்கிட்டயும் மூக்கு மேல வந்திரும்.”, அவன் உறுமியதை சட்டை செய்யாமல் புனிதாவுடன் மீண்டும் நடக்கத் தொடங்கினாள்.
தலக்கோணா அருவி எதிரே தெரியும் வகையில் ஒரு திட்டில் அன்று இரவு தங்க டென்ட் அடித்தார்கள். வானதி உதவப் போன போது, அவளை போகச்சொல்லிவிட்டு சங்கரும் வினோத்துமே இரண்டு டென்ட்டுகளை தணிகாச்சலம் சொன்ன இடத்தில் அமைத்தார்கள்.
சூரியன் அஸ்தமிக்க ஆரம்பிக்கும் நேரம் பளபளத்த அருவியினை தன் காமிராவில் பதித்துக்கொண்டிருந்தாள்.
“வானதி…”, அதட்டலாய் வந்தது வினோத்தின் குரல். நிமிர்ந்தவளைப் பிடித்தவன், “இன்னும் இரண்டடி தள்ளினா, கிழ விழுந்திருப்ப. என்னாச்சு உனக்கு? “, உறுத்துப் பார்த்தவனைக் கண்டு முழித்தவள்,
“தெரியும். நான் பார்த்துத்தான நிக்கறேன். மறந்து போய் நகர்ந்துடக் கூடாதுன்னுதான் இந்தக் கல்லுல ஒரு காலை வெச்சிருக்கேன்.  உங்களுக்கு என்ன ஆச்சு ? ஏன் டென்ஷனாகறீங்க?”, வானதி கேட்கவும், தலையைக் கோதியவன்,
“சாரி… ஒன்னுமில்லை. நீ பார்த்துக்கோ.”, என்றுவிட்டு திரும்பிப் போனான்.
காலையில நல்லாத்தான இருந்தார். இந்த புனிதா கலாச்சப்பறமும் கூட நல்லாத்தான் பேசினார்.’, ஒவ்வொன்றாக யோசித்தவள், புனிதா ஸ்வேதா பற்றி சொன்னதிலிருந்துதான் அவன் முகம் மாறியது புரிந்தது. ‘ இப்ப புனிதாகிட்ட நான் சொன்னது பிடிக்கலையா? இல்லை நாம பேசி தேவையில்லாம ஸ்வேதா ஞாபகத்தை கிளறிவிட்டோமா?’, வானதி குழப்பமாகவே திரும்பி வந்தாள்.
இரவு சாப்பாட்டுக்கான எளிமையான உணவு தயாரிக்க ஒரு கும்பலும், காம்ப் ஃபயர் ஆரம்பிக்க சிறு விறகுகளை சேர்க்க மிச்ச கும்பலும் இரண்டாகப் பிரிந்து சென்றார்கள்.
இரவில் இயற்கை உபாதைக்கு செல்லுபவர்களுக்கு தண்ணீர் தேவையென்று நான்கு கேன்களில் தணிகாச்சலம், வினோத், சங்கர், காலேஜ் மாணவர் இருவர் என்று அருவியிலிருந்து வரும் ஒரு கிளை ஆற்றில் எடுத்து வர சொன்னார். சென்றவர்கள் ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டே எடுத்து வந்தனர்.
ஒரு வழியாக எல்லாருமாய் சாப்பிட்டு, வளர்த்திருந்த தீயினை சுற்றி அமரவும், “யாராவது நல்லா பாடறவங்க இருந்தா பாடுங்கப்பா.”, என்றார் தணிகாச்சலம்.
காலேஜ் பிள்ளைகள் கானாப் பாட்டோடு தொடங்க, மெல்ல களைகட்டத் தொடங்கியது. சங்கர் பழைய இளையராஜாவின் மெலடி பாடல்களைப் பாட, தணிகாசலம், மத்திம வயதில் இருந்தவர்கள் அனைவரும் ரசித்துக் கேட்டனர்.
கையோடு எடுத்து வந்த சிறிய ஸ்பீக்கரில், போனை இணைத்து பாட்டுக்கள் போடவும், எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். அவ்வப்போது அவனை கவனித்து வந்த வானதிக்கு வினோத் ஏதோ தடுமாற்றத்தில் இருப்பது போன்று தெரிந்தது. மெல்ல அவன் அருகே வந்து அமர்ந்தாள். அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஏன்… நீயும் போய் ஆட வேண்டியதுதான ?”, என்று கேட்டான்.
“நீங்க ஏன் ஆடலை?”, பதில் கேள்வி வரவும்,
“ம்ப்ச்… மூட் இல்லை. “,சொல்லிவிட்டு மீண்டும் நெருப்பை உற்றுப் பார்க்க ஆரம்பித்தான்.
“நல்லாத்தான் இருந்தீங்க. நான் புனிதாகிட்ட ஸ்வேதா பத்தி பேசினது பிடிக்கலையா? அதுக்கப்பறம்தான் அமைதியாகிட்டீங்க.”, மெதுவாய் கேட்டாள் வானதி.
“ஊஃப். நீ பேசினதுல ஒன்னும் பிரச்சனையில்லை. எல்லாம் உன்னைப் பத்தி, இல்ல உன்னாலன்னு நினைச்சுக்காத வானதி. கொஞ்சம் தனியா விடு.”, அவன் சிடுசிடுப்பில் முகம் வாடியவள், “சாரி.”, என்று மட்டும் சொல்லி அகன்றுவிட்டாள்.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனிடம், அவளது அமைதியான மன்னிப்பு, குற்ற உணர்ச்சியைக் கிளப்பியது.
புனிதா ஸ்வேதா பற்றி வானதி பேசியதாக சொல்லும் வரையிலும், அன்று அவனுக்கு அவள் ஞாபகமே வரவில்லை. இன்னும் கொஞ்சம் யோசித்தவனுக்கு முகத்தில் அறைந்தது போன்ற விஷயம் புலப்பட்டது.  தூங்கும் முன் ஸ்வேதா, வம்சிக்கு சொல்லும் குட் நைட்டும், முழித்ததும் சொல்லும் குட் மார்னிங் தவிர சில நாட்களாய் அவர்களை பெரிதாக நினைக்கவில்லை.
அதற்கான காரணம் யோசித்த போது, விடையாக வானதி வரவும், குழம்பினான். ‘அழகான பெண்ணின் அருகாமையால் வந்த ஈர்ப்பா? இல்லை புரிதலோடு ஒரு துணை என்பதால் வந்த பாசமா? இல்லை இது காதலா?’, என்று புரியாமல் விடையை ஜ்வாலைக்குள் தேடிக்கொண்டிருந்தான்.
மீண்டும் காதலா? வானதியை மணமுடித்த இந்த சில மாதங்களிலேயே அவள் மீது காதலென்றால், அவன் என்ன மாதிரி மனிதன்? ஐந்து வருடங்களாக எந்தப் பெண்ணையும் அருகே விடாததால்தான் ஸ்வேதாவை  மறக்கவில்லையா? இவ்வளவுதானா நான் ஸ்வேதா மேல் கொண்ட காதல்?  செல்கள் இணைந்து, பிரிந்து புதியதாக உருவாவது போல, தொட்டு தொட்டு அவன் எண்ணங்கள் பலவாறாக அவனுள் மோதி புதிய கோணங்களைக் காட்டிக்கொண்டிருந்தது.
இது எதுவும் தெரியாமல், அவனிடம் பேசி புண்பட்டு அதை மறைக்க காமெராவை எடுத்துக்கொண்டு ஆடுபவர்களை படமெடுத்துக்கொண்டிருந்தாள் வானதி.
குத்துப் பாட்டுக்கு ஆடி ஓய்ந்தவர்கள் சற்று இளைபாற, மெலடி ஒன்று ஒலித்தது,
“ஒரு மனம் நிற்கச் சொல்லுதே, ஒரு மனம் நெட்டித் தள்ளுதே…..”
வினோத்தின் மன நிலையை அவனுக்கே படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தது அந்தப் பாடல். ஆனால் அதற்கான விடைதான் அவனுக்குப் பிடிபடவில்லை.

Advertisement