Advertisement

“அட நானே சும்மாயிருக்கேன், நீ என்ன இப்படி பாயற ராக்கி? ப்ரியா சொன்ன மாதிரி ப்ரபோஸ் பண்ணி தொலைச்சிடாத…”, வானதி கலாய்க்க கேலியும் சிரிப்புமாக குடித்து முடித்து விடை பெற்றார்கள். வானதி அவள் போனிலிருந்த செல்ஃபியை ப்ரியாவுக்கு அனுப்பினாள்.
“மேம்… அப்படியே, சாரை ஒரு போட்டோ எடுத்தீங்களே. அதுவும் கிடைக்குமா?”, கிருஷ் கேட்க, ஆச்சரியமாகப் பார்த்தாள் வானதி.
“ஷார்ப். யாரும் பார்க்கலைன்னு நினைச்சேன். “ வானதி புன்னகைக்க,
“நான் பக்கத்தில இருக்கவும் பார்த்தேன்.எல்லார் கவனமும் சார் சொன்ன அஞ்சு நிமிஷ கெடுவை கேட்டதுலதான் இருந்துச்சு. “
“உங்க காலேஜ்லதான இருக்கார். நீங்களே போட்டோ எடுக்க வேண்டியதுதான கிருஷ்?”, வானதி கேட்க
“இன்னிக்கு மாதிரி காஷுவல் லுக்ல வரமாட்டாரே மேம். ஜீன்ஸ் எல்லாம் போட்டு பார்த்ததேயில்லை. ஒரு காலை ஸ்டைலா கிராஸ் பண்ணி , அப்படி சுவர்ல சாஞ்சி, கை கட்டி… மாஸ் போஸ். ”
அவன் வர்ணனை கேட்டு ‘ அடடா, பிள்ளைக்கும் நம்ம அலைவரிசை போல’, என்று நினைத்தவள், சரி என்று அவன் நம்பருக்கு மின்னல் வேகத்தில் தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும், “அவ்வளவு சிரிப்பு அவங்க உன் கூட இருந்த போது. என்ன பேசிகிட்டு இருந்தீங்க ?”, என்று கேட்டான் வினோத்.
“நீங்க எதுக்கு அவங்ககிட்ட இவ்வளவு விரைப்பா இருக்கீங்க ?”
பதில் கேள்வியில் புருவம் உயர்த்தியவன், “ ஒரு டிஸ்டென்ஸ் இருக்கணும் வானதி. இல்லைன்னா இரண்டு பக்கமும்மே மிஸ்யூஸ் பண்ற சான்ஸ் இருக்கும். காலேஜ் விட்டு போனதுக்கு அப்பறம் ஜாலியா பழகுவேன். ஆனா இப்ப இடைவெளி இருக்கணும்.“
“நீங்க…ஜாலியா…”, என்னும் விதமாக வானதி ஒரு பார்வை பார்க்கவும், அது புரிந்து சிரித்தவன், “சரி.. உன் பாஷைல விரப்பா இருக்க மாட்டேன்னு வெச்சுக்கோ. இப்ப நீ பதில் சொல்லு, எதுக்கு சிரிச்சிகிட்டு இருந்தீங்க ?”
“சும்மாதான் பசங்க கலாட்டா செய்துகிட்டு இருந்தாங்க. அனேகமா அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு லவ் ப்ரபோசல் வரலாம். பார்த்து பதமா டீல் பண்ணுங்க.”, வானதி கண்ணடிக்கவும்,
“ஹே… விளையாடாதே… என்ன, யாருன்னு சொன்னங்களா? இதெல்லாம் ரொம்ப சென்சிடிவ் இப்ப இருக்க சூழல்ல.”, என்று சீரியசாகக் கேட்டான் வினோத்.
“ரிலாக்ஸ்….சும்மாத்தான் சொன்னேன். பொண்ணுங்களைவிட உங்களை பசங்கதான் அப்படி நோட் பண்றாங்க. உங்க நடை உடை பாவனை எல்லாத்துக்கும் ரசிகர்கள் இருக்காங்க போல?”
அதைக் கேட்டு புன்னகைத்தவன், தோளைக் குலுக்கி, “ பசங்க கண்ணுலர்ந்து எதுவும் தப்பாது. கண்டுக்காம போயிடுவேன்.”, என்றான்.
“எல்லாருக்குமே உங்க மேல தனி அபிமானம் இருக்கு. நல்லாவே தெரிஞ்சது.”, அவள் பாராட்டில் மகிழந்தவன்,
“அவங்களுக்கு இருக்கு சரி… உனக்கு எப்படி?” என்றான். சொன்னபிந்தான் கேள்வியை உணர்ந்தவன், அவளையே பார்க்க,
“எனக்கும் அபிமானம் உண்டுதான். அம்மாக்கு நல்ல பிள்ளை, ஸ்வேதாக்கு நல்ல கணவன், இப்ப எனக்கு நல்ல ஃப்ரெண்டு, யாருக்குத்தான் உங்க மேல அபிமானம் வராது ?”, கேட்டுவிட்டு புன்னகையோடு எழுந்து சென்றவள், உள்ளுக்குள் இருந்த படபடப்பை அடக்க அவன் அறியாது, தண்ணீர் குடித்தாள்
அவள் பதிலைக் கேட்டவனுக்கோ ஏமாற்றமாக இருந்தது. என்ன எதிர்பார்த்தேன் அவளிடம் என்று அவனையே கேட்டுக் கொள்ள ஏதுவோ தடையாக இருந்தது.
திங்கள் மாலை கல்லூரியிலிருந்து வந்தவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். வானதி வீட்டுக்குள் வரும்போதே அவன் மலர்ந்த முகத்தைப் பார்த்தாள். அதே மலர்ச்சி அவள் முகத்திலும் தொற்றிக்கொள்ள,
“என்ன ? ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல ?”, என்று கேட்டாள்.
“ம்ம்… ஜெர்மனில நான் படிச்ச ப்ரொஃபசர் கூட அவர் ரிசர்ச்ல போன வருஷம் வேலை பார்த்தேன். என்னோட ஆர்வத்துக்கு தீனியாகவும், அவருக்கு ஒரு ஹெல்ப்பாவும்தான் செஞ்சேன். ஆனா நான் செஞ்சதை அங்கீகரிச்சு, அதுனாலதான் அவங்களுக்கு ஒரு முக்கியமாக ப்ரெக்-த்ரு கிடைச்சுதுன்னு என் பேரையும் சேர்த்து நேசர்ஸ் ரிவ்யூன்னு ஒரு பெரிய ஜர்னல், அதுக்கு சப்மிட் பண்ணிருக்காங்க. அந்த ஜர்னல்ல ரிசர்ச் பேப்பர் பப்ளிஷ் ஆகப் போகுது.”
“ஹே… சூப்பர் ந்யூஸ் வினோத்! வாழ்த்துக்கள்! பெரிய பெருமைதான இது?”, வானதியும் ஆர்பரித்தாள்.
“ம்ம்… மைக்ரோ பயாலஜில நம்பர் ஒன் ஜர்னல் இது. லண்டன்லருந்து வருது. கண்டிப்பா, என் உழைப்புக்கு அங்கீகாரம் இது. இங்க காலேஜ்ல கரஸ் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டார். ஒரு விழா எடுத்து உங்களை கௌரவிக்கலாம். உங்க ஆராய்ச்சி பத்தி பேசுங்க. பசங்களுக்கு அது பெரிய அளவுல ஆர்வத்தை உண்டாக்கும்னு நிறைய சொன்னார். “
“வாவ்… கலக்கறீங்க… விழா நாயகரே….”, அவள் கூற்றைக் கேட்டு சற்று வெட்கப்பட்டவன், தலை கோதி…
“எனக்கு இந்த விழா எல்லாம் பிடிக்கலை. அப்படி ஒன்னும் நான் லீட் இல்லை இந்த ஆராய்ச்சில. ஆனா இது பசங்களுக்கு மோடிவேஷனா இருக்கும்னு அவர் சொன்னது உண்மை. அதுக்காகத்தான் ஒத்துக்கிட்டேன். நான் அப்படி ஒரு ஆராய்ச்சில இருக்கேன்றது, காலேஜுக்கும் பெருமை, அதையும் வெளிச்சம் போட்டு காட்டணும் அவருக்கு.”
“அஃப் கோர்ஸ். காலேஜுக்கான ஆதாயம் இல்லாம எதுவும் நடக்காதுதான். ஆனா, அதுல உங்களுக்கும், பசங்களுக்கும் ஒரு நல்லது நடந்தா, செய்யறதுல தப்பில்லை. அத்தைகிட்ட சொன்னீங்களா ? ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”
“ம்ம்.. இனிதான். நீ வந்ததும் உங்கிட்ட சொல்லிட்டு அப்பறம் சேர்ந்து அவங்களை கூப்பிடலாம்னு நினைச்சேன்.”, என்று வினோத் சொன்னது வானதிக்கு மகிழச்சியாக இருந்தது. தறிகெட்டு ஓடத் துவங்கிய மனதை, “இரு, சேர்ந்து கூப்பிடலைன்னா அத்தை எதாவது கேட்கப் போறாங்கன்னு கூட வெய்ட் பண்ணியிருக்கலாம். நீயா கற்பனை கட்டாத..’, என்று அடக்கிவிட்டு,
“சரி, இரண்டு நிமிஷம், நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன். பேசிடலாம்.”, என்று சொல்லி மாடியேறினான்.
சம்பூரணத்திற்கும் பெருமையாக இருந்தது. தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் மகனிடமும், மருமகளிடமும்.
“அத்தை விழா எப்பன்னு தெரிஞ்சதும் நான் சொல்றேன். நீங்க கிளம்பி வர்றீங்க. மேடையில உங்க பிள்ளையை வாழ்த்தி பேசுறதை காது குளிர கேட்கறீங்க.”, வானதி கூறவும், அவளை நிமிர்ந்து பார்த்து முழித்தான் வினோத்.
“என்ன முழிக்கறீங்க? அத்தை வராட்டா நானும் வர மாட்டேன்.”, வானதியின் மிரட்டலில்,
“இல்லை… இது காலேஜ் விழா. நான் யாரையும் கூட்டிட்டு போறதாவே யோசிக்கலை.”, வினோத் இழுத்தான்.
“ஓஹோ… அப்ப நாங்கல்லாம் வேணாமா?” சம்பூர்ணத்தையும் லைனில் வைத்துக்கொண்டே கேட்டாள் வானதி.
“நீ போனை குடுமா அவங்கிட்ட. நான் பேசிக்கறேன்.”, என்று கோபமாய் அவர் குரல் ஒலிக்க, சட்டென்று அவன் புறம் கைபேசியை நீட்டினாள்.
“ஏன் மாட்டிவிடற?”, என்று வாயசைத்து முறைத்தவன், “சொல்லுங்கம்மா..”, என்று கைபேசியை காதில் வைத்தான்.
“ஏண்டா… நான்தான் படிக்கலை, கிராமத்துக்காரி, படிச்சவங்க இருக்க இடத்துல வேலையில்லை, சரி.  வானதியை ஏன் கூட்டிட்டு போகக் கூடாது? எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சிட்டு நீ மட்டும் என்னத்தை அங்க போய் செய்யப்போற?”, என்று ஆரம்பித்து அவன் பேச இடம் கொடுக்காமல் திட்டினார்.
“பூம்மா… ஸ்டாப்… நான் யோசிக்கலைன்னுதான் சொன்னேன். உங்களுக்கும் வானதிக்கும் வர ஆசையிருந்தா கண்டிப்பா கூட்டிட்டு போறேன். இந்த ஆராய்ச்சி சம்பந்தமாத்தான் பேச்சு இருக்கும். அங்க வந்து போர் அடிக்குதுன்னு சொல்லக்கூடாது. நான் உங்களுக்காகத்தான் பார்த்தேன்.”, என்று சமாளிக்க,
“பொய் பொய் பொய். “, என்று சன்னமாகக் கூறினாள் வானதி. பேசி முடித்த பின்,
“இப்படியா கோர்த்து விடுவ?  என் பர்சனல், அங்க காலேஜ்ல எதுக்குத் தெரியணும்னுதான் நான் மட்டும் போனா போதும்னு நினைச்சேன். எப்படியும் வீடியோ எடுப்பாங்க. வீட்ல அப்பறம் போட்டு பார்த்துக்கலாம்தான ?”
உதட்டைப் பிதுக்கியவள், “ஹ்ம்.. அவங்களுக்கு நேர்ல பார்க்கற மாதிரி இருக்குமா? உங்களை எப்படியும் வாழ்த்தி பேசி ஒரு அவார்ட் குடுப்பாங்க. அது  வரைக்குமாவது இருந்து பார்க்கட்டும். அப்பறம் நான் அழைச்சிகிட்டு வந்துடறேன்.”, என்றாள்.
“ஹ்ம்ம்… நீ சொல்லிட்டா அதை மாத்த முடியுமா? காரண காரியத்தோட அடுக்குவியே பாயிண்ட் பாயிண்ட்டா… அடுத்த மாசம்தான் விழா இருக்கும். அப்ப பார்த்துக்கலாம். அதற்குள் தலையால் தண்ணி குடிக்கப்போகிறான் என்று தெரியாமல் சாதரணமாகக் கூறினான்.

Advertisement