Advertisement

அத்தியாயம் – 8
வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது. வானதி வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதால் பொறுப்புகளை கைமாற்றிவிடுவதில் மும்மரமாக இருந்தாள். கூடவே அவள் விருப்பப்பட்ட புகைப்பட நிபுணத்துவம் பெற அதற்காக ப்ரத்யேகமான ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தாள். காலையிலும் , இரவிலும் உணவருந்தும் போது மட்டுமே இருவருக்கும் பேசிக்கொள்ள நேரம் கிடைத்தது.
பொதுவான பேச்சுகள், சம்பூர்ணம் பற்றி, அவளின் காய்கறி தோட்டம், சாம், சங்கர் குடும்பத்தை விருந்துக்கு அழைப்பது என்று இருக்கும். அதிலும் வினோத்திற்கு ஒரு லேசான வியப்பு. அவன் என்ன எதிர்பார்த்து இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் என்று அவனுக்கே சரிவர தெரியாது. ஆனால் இப்படி நாட்கள் எளிமையாக, அதிலும் அவ்வப்போது பேசி சிரிக்கும் இனிமையுடன் நகர்வது பிடித்திருந்தது.  இந்த சில வருடங்கள் பெரிதாக யாருடனும் பேசாமல் இருந்தவனுக்கு, இந்த எதிர்பார்ப்பில்லாத ஸ்னேகம் பிடித்தது. இருவருமாக அவ்வப்போது ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும், ஏதாவது உப்பு சப்பில்லாத விஷயத்திற்கு விவாதம் செய்வதுமாக அவனை மெல்ல உயிர்பித்துக்கொண்டிருந்தது.
ஸ்வேதாவுடனான வாழ்க்கையில் எப்போதுமே டிராமாவிற்கு பஞ்சமிருக்காது. அது சண்டையா, அழுகையா, சிரிப்பா, ரொமான்ஸா என்பது ஸ்வேதாவின் மூடுக்கேற்ப மாறும். ஆனால் எதுவென்றாலும் மிகைதான். இதை நினைக்கும்போதே ஒரு இள நகை முளைத்தது அவன் இதழில். அவள் மூட் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதே ஒரு விளையாட்டாக இருக்கும் அவனுக்கு. மூட் அவுட்டில் இருந்தால், அவளை கொஞ்சி கெஞ்சி சந்தோஷமாக மாற்றுவான். அதற்கான வெகுமதியை வஞ்சனையில்லாமல் அள்ளித் தருவாள். ஆனால் விடுமுறை நாட்கள், வாரக் கடைசி கண்டிப்பாக அவளுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.
ஏதேனும் ஒரு சில சனிக்கிழமைகள் அவன் கல்லூரி செல்ல வேண்டியிருந்தால் முகத்தை தூக்கி வைத்து அவனை ஒரு வழி செய்வாள். எண்ணவோட்டம் திடீரென்று தடைபட, அவன் அறையிலிருந்து வெளிப்பட்டு வானதியின் அறைக் கதவைத் தட்டினான்.
“வாங்க… திறந்துதான் இருக்கு.”
அவள் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தவள், “என்னாச்சு ? எதுவும் வேணுமா ?”, என்று கேட்டாள்.
“ இந்த சனிக்கிழமை, என் ஸ்டூடெண்ட்ஸ் அஞ்சு பேர் வீட்டுக்கு கூப்பிடவா? நீ இருப்பியா?”, வினோத் கேட்கவும்,
“ஓ.. கூப்பிடுங்க. எனக்கு ஒரு வேலையும் இல்லை. லன்சுக்கா ?”
“இல்ல இல்ல… மதியம் இரண்டரைக்காத்தான் வர சொல்லாம்னு இருக்கேன். காலேஜ்ல ஷூட்டிங் நடத்தறாங்கன்னு க்ளோஸ் பண்ணிடு வாங்க. அதான் இங்க கூப்பிடலாம்னு யோசிக்கறேன். அவங்க ப்ராஜெக்ட்டுக்கு நான்தான் கைட்.  அஞ்சு பேர்ல இரண்டு பொண்ணுங்க. அதான் நீ இருக்கணும்”
“ ஓஹ்…”, என்றவள், “அப்ப காவலுக்குத்தான் என்னை இருக்க சொல்றீங்க? நான் கூட உங்க பசங்களைப் பார்க்கத்தான்னு நினைச்சிட்டேன்.”, வினோத்தை ஓட்டினாள். இது வரை அவன் கல்லூரி சம்பந்தமாக எதுவும் பேசியதில்லை. அங்கே மாணவர்களின் சேட்டை பற்றிக் கூட பேசியதில்லை.
“ஹே… அப்படி இல்லை. வந்தா அவங்க வேலைலதான் இருப்பாங்க. ஆனாலும் நீ இருக்கணும், உனக்கு போர் அடிக்கப் போகுதேன்னு பார்த்தேன்.”
“ஒன்னும் பிரச்சனையில்லை.  நீங்க வர சொல்லுங்க. “
அந்த சனிக்கிழமை சொன்ன நேரத்தில் அவன் மாணவர்கள் ஐந்து பேரும் வந்திறங்கினர். வினோத்திற்கு அறிமுகத்தில்  எந்த சங்கடமும் வரவிடாமல், வானதியே “ஹை … வாங்க….உக்காருங்க. நான் வானதி. நீங்க ?”,  என்று கேட்டு அனைவரிடமும் அறிமுகமாகினாள்.  அதன் பின்னர் வினோத்துடன் அவன் ஆபிஸ் அறைக்குச் சென்றவர்கள், அடுத்த இரண்டு மணி நேரம் அவர்கள் வேலையில் இருந்தனர். அவ்வப்போது பேச்சுக்குரல் மட்டும் கேட்டது.
நாலரை போல அறைக் கதவைத் தட்டினாள் வானதி. நிமிர்ந்து பார்த்தவனிடம், “ ஒரு ப்ரேக் விடுங்க. டீ ரெடி. பாவம் அவங்க, வந்ததுலர்ந்து வெளியவே விடலை.“
புருவம் உயர்த்தியவன், “ மேடம் சொல்லிட்டாங்க. போங்கப்பா. பதினஞ்சு நிமிஷம் ப்ரேக். “, என்று சொல்லவும் விட்டால் போறும் என்று லாப்டாப்பை கீழே வைத்தனர்.
சாப்பாட்டு மேஜையை நிறைத்தவர்களுக்கு சூடாக பஜ்ஜி, பஃப்ஸ் , கேரட் ஹல்வா என்று பரிமாரியவள், “ சாப்பிடுங்க, அடுத்து டீ வரும்.”, என்று அமர்ந்தாள். வினோத்திற்கு தனியாக அவன் ரூமில் கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.
“ சூப்பர் டேஸ்ட். நீங்களா செஞ்சீங்க ? செம்ம.”, என்று சுவைத்து ரசித்துச் சொன்னான் கிருஷ்.
“தாங்க்ஸ். கூட உதவிக்கு ஆள் இருந்துச்சு. எப்படி போகுது உங்க ப்ராஜெக்ட் ? “
“சர் இருக்கும்போது… ஜெட் வேகத்துல போகும் மேம். டைம் வேஸ்ட் பண்ணவே விடமாட்டார்.”, ப்ரியா சொன்னாள்.
“க்ளாஸ்ல ரொம்ப கறார் பேர்வழியோ ?”, அவனை பற்றி தெரிந்துகொள்ள வானதி கேட்டாள்.
“ஆமாம். பாடம் தவிர வேற எதுவும் பேசி அவரும் மொக்க போட மாட்டார். எங்களையும் போட விடமாட்டார்.”, கீதா சொன்ன பதிலில்,
“ஐயோ… மொத்தமும் லெக்சரா… போரடிக்காது ?”, வானதி உதட்டைச் சுழித்தாள்.
“ஹா ஹா… பொண்ணுங்க அவரை பார்த்துகிட்டே இருக்கும். எங்க போர் அடிக்கும்?”, சொன்னபின் உணர்ந்து கிருஷ் நாக்கைக் கடித்து முழிக்க, அவன் நண்பன் ராக்கி தலையில் தட்டினான்.
“சாரி…  உளறிட்டேன்.”, பாவமாக மன்னிப்பு கேட்பவனைக் கண்டு சிரித்தாள் வானதி.
“அப்ப, காலேஜ்ல அவருக்கு நிறைய ரசிகைகளா ?”, அவன் வாயைக் கிண்டினாள்.
“அதெல்லாம் இல்லை மேம். அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படியெல்லாம் தேவையில்லாம பேசிட முடியாது.  “,ப்ரியா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே,
“ஆமாமாம்… கண்ணு மட்டும் ….சும்மா தூரத்திலர்ந்து….”,  கிருஷ் இழுத்த இழுப்பில் அனைவரும் சிரித்தார்கள்.
 “பசங்களுக்கும்தான் சர் மேல ஒரு க்ரேஸ் . நீங்களும்தான் பார்க்கறீங்க.”, கீதா சொல்லவும்,
“ஆமாம். இன்னிக்கு கூட பாரு, வைட் ஜீன், பீச் ஷர்ட், ரிம்லெஸ் க்ளாசஸ், லைட் தாடின்னு காஷுவல் லூக் என்னமா கலக்குனார் பார். அவர் கிளாஸ் உள்ள நுழையும் போதே மாஸா இருக்கும். அவர் பாடி லாங்க்வேஜ் செம்மையா இருக்கும். அதெல்லாம் கத்துக்கணும்.”, சிலாகித்துச் சொன்ன ராக்கியைப் பார்த்த கீதா,
“டேய்… இப்படியே போனா… அடுத்த வாரம் ப்ரபோஸ் பண்ணிருவ போல… ? தூக்கி போட்டு மிதிச்சுடுவாருடா…”, என்று வாரினாள். மீண்டும் சிரிப்புப் பொங்கியது.
வினோத் மெதுவே வந்து சுவரில் சாய்ந்து நின்றான், சிரிப்பு அடங்கவும், லேசாக கனைத்தான். மொத்தப் பார்வையும் அவன் மேல்.
“ப்ரேக் டைம் முடிஞ்சு இரண்டு நிமிஷமாச்சு.”, அழுத்தமாய் ஒலித்தது வினோத்தின் குரல்.
“சாரி சர். “ கோரசாக சொல்லி அனைவரும் எழவும்,
“டீ சூடா இருக்குங்க. ஒரு அஞ்சு நிமிஷம். முடிச்சிட்டு வரட்டுமே. ப்ளீஸ்.”, அவர்களுக்காக வானதி பேசவும், அவனது ஒற்றைப் புருவம் மட்டுமே உயர்ந்தது.
“திரும்ப வந்து கூப்பிட மாட்டேன். அஞ்சு நிமிஷத்துல வரலைன்னா, நீங்க கிளம்பி வீட்டுக்குப் போகலாம்.”, சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
“அடேயப்பா… என்ன பசங்களா… உங்க வாத்தி… இப்படி ரொம்ப வாத்தியா இருக்காரு ?”, வானதி துக்கம் விசாரித்தாள்.
“லேட்டானா… சொன்ன மாதிரியே அனுப்பிடுவார் மேம்.”, அவசரமாய் நின்றபடியே குடித்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும்.
“என்னா ஒரு வில்லத்தனம் ? இருக்கட்டும். திங்கள்லேர்ந்து அவர் குடிக்கற கஞ்சில ஜெல்லி பவுடர் கலந்து குடுக்கறேன். “, வானதி சொல்லவும், ஒரு நொடி கழித்து, புரிந்து சிரித்தார்கள் அனைவரும்.
“அக்கா… சான்சேயில்லை. என்ன அசராம அடிக்கறீங்க? அப்படியே, எங்க அசைன்மென்ட் திருத்துவார் நாளைக்கு. அதுக்கு முன்னாடி அவர நல்ல மூட்ல இருக்கா மாதிரி பார்த்துக்கங்கக்கா.”, ராக்கி கோரிக்கை விடுக்கவும்,
“டேய்… என்னை அக்கான்னு சொல்லி, அவரை மாமாவாக்கிட்டீங்க. இப்ப அவர குஷி படுத்தச் சொல்லி என்னை…..”, அவள் சொல்லாமல் விட , மீண்டும் சிரிப்பலை.
கிருஷ் கைகூப்பி..” தெய்வமே… பார்த்து செய்ங்க தெய்வமே…”, என்று சரணடைந்தான்.
“மேம்.. செல்ஃபி எடுக்கலாமா? சாருக்கு லீவ்ல கல்யாணமாச்சுன்னு தெரிஞ்சதும், உங்களைப் பத்தி காலேஜ்ல ஒரே க்யூரியாசிட்டி. அவருக்கு செம்ம ஜோடி நீங்கதான். எல்லாரும் பார்க்க ஆசைப்படுவாங்க.”, ப்ரியாவின் கோரிக்கையை ஏற்று, சட்டென்று அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
“டேய்… டைம் ஆச்சு…வா… வா…”, என்று ராக்கி சொல்லவும், வினோத்திடம் ஓடினார்கள்.
“செம்ம ஜோடியாம் நாங்க… ஹ்ம்ம்ம்… பார்க்கறதெல்லாம் நிஜம்னு நம்பிடாதீங்க பசங்களா…”, என்று நினைத்துக் கொண்டே மேசையை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்.
மாலை கிளம்பும் முன் விடை பெற அனைவரும் வந்தார்கள். அவர்களுக்காக தயாரித்த தர்பூசணி ஜூசைக் கொடுத்தாள். வினோத்திற்கும் தந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன், கையில் வாங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு சென்றுவிட,
“ஆனாலும் உங்க வாத்திக்கு உங்க மேல பாசம்தான் பசங்களா… உட்காருங்க.”, என்று சாப்பாட்டு மேசையைக் காண்பிக்க, அனைவரும் சுற்றியிருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள்.
 “ஏன் மேம்?”, ப்ரியா கேட்க,
“அவரும் இங்க இருந்தா, மட மடன்னு குடிச்சிட்டு ஓடுவீங்க. அதான் உங்களை ஃப்ரீயா விட்டுட்டு அவர் தனியா போயிடறார்.”, தனக்கும் ஒரு கிளாஸ் எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“ஓஹ்… அதானா. நான் கூட சர் ஏன் போயிட்டார், ஒரு வேளை நாம ஜூஸ் எடுத்திருக்கக் கூடாதோன்னு நினைச்சிட்டேன்.”, கீதா சொல்லவும்,
“ஹே… நம்ம சர் பத்தி அவ்வளவுதான் தெரியுமா உனக்கு?”, ராக்கி சண்டைக்கு வந்தான்.

Advertisement