Advertisement

“காப்பி கோப்பையை கையில் எடுத்தவன், நான் ஃப்ரெஷாகிட்டு வரேன். நீங்க பாருங்க.”, என்று மேலே சென்றுவிட்டான்.
என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்த வானதி சம்பூர்ணத்தைப் பார்க்க, அவர் முகமும் வாடித்தான் இருந்தது.
“என்ன அத்த ? என்னாச்சு ?”, என்று கேட்டாள் வானதி.
“ஹ்ம்ம்ம்…. என் வாய் சும்மாயிருக்கறதில்லை. வந்ததும் வராததுமா, என் புள்ள மனசை காயப்படுத்திட்டேன். நீ அவனைப் போய் பாரு. நான் ஒரு கூறுகெட்டவ.”, சம்பூர்ணம் கலங்க, அவர் அருகில் சென்று அமர்ந்தவள்,
“ நீங்க முதல்ல வருத்தப்படுறதை விடுங்க. யாரைப் பத்தி குறை சொன்னீங்க ?”, அவளுக்கு சந்தேகம் இருந்தது, ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டிக் கேட்டாள்.
“எல்லாம் உன் ஃப்ரெண்டுதான். எங்கயோ போய் தோட்டத்தைப் பார்த்துட்டு, அதே மாதிரி இங்க செய்யணும்னு சொல்லியிருக்கா. ஆனா மகராசிக்கு மண்ணுல கை வைக்கறதெல்லாம் ஆகாதே. அம்பதாயிரத்தை அந்த நர்சரி காரனுக்கு தண்டம் கட்டி, தோட்டம் போட்டா.  ஆனா அதுக்கு முறையா தண்ணியாவது பாய்ச்சணுமில்ல ? நர்சரிகாரன் ஒரு வாரம் வளர்த்து குடுத்துட்டு, இனி நீங்க பார்துக்கங்க, நாங்க மாசம் ஒரு வாட்டி வந்து பராமரிக்கறோம்னு போயிட்டான். அதுக்கு ஒரு தோட்டக்காரனுக்கு சம்பளம் குடுத்தான் என் புள்ள. அந்த தோட்டக்காரனும் ஏதோ அவசரம்னு ஊருக்குப் போக, அடுத்த ஒரு வாரதுக்கெல்லாம் எல்லா செடியும் வாடிடுச்சு. ஒரு கல்யாணத்துக்கு இங்க வந்தவ காஞ்சு போன செடியெல்லாம் பார்த்து என் வயிறே எரிஞ்சு போச்சு. ஸ்வேதாவ நல்லா திட்டிட்டேன். அம்பதாயிரத்துக்கு ஒரு ஏக்கரா பயிர் வளர்த்திருப்பேன். என் புள்ளை தொண்டை தண்ணி வத்த பாடம் எடுத்து சம்பாரிச்சா, இவ இஷ்டத்துக்கு கரைப்பாளான்னு அப்படி ஒரு கோவம்.”, வேதனையாக விவரிக்கவும் வானதிக்குமே சங்கடாமாகியது.
“திரும்ப அவன் நர்சரிங்கவும் பழைய கோவம் வந்துடுச்சு. அதுக்குத்தான் நீ முதல்ல பேசும்போது கூட, அது ரொம்ப வேலை, வேண்டாம்னு சொன்னேன். நீ காட்ன ஆர்வம் பார்த்துதான் சரின்னு சொன்னேன். போகுது… நீ அவங்கிட்ட போம்மா… தனியா உக்காந்து வருத்தப்பட்டுகிட்டு இருக்கப் போறான்.”, வானதியை துரத்திவிட்டார்.
‘இவர் முருங்கை மரத்துல ஏறியிருந்தா, நான் எப்படி இறக்கி கூட்டிட்டு வரது? முருகா…காப்பாத்து..’, இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக்கொண்டே அவன் அறைக்குச் சென்றாள்.
கதவைத் தட்டியவள், அது திறந்திருக்கவும், மெல்ல உள்ளே தலையை நீட்டி, “வரலாமா ?”, என்று மெதுவாகக் கேட்டாள்.
படுக்கையில் அமர்ந்து எதிரில் இருந்த சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தான் வினோத். அவனும் ஸ்வேதாவும் இருந்த புகைப்படம் மாட்டியிருந்த சுவர் அது.
அவள் குரலில் பார்வையைத் திருப்பியவன், “ம்ப்ச்… நீ போ வானதி. கொஞ்ச நேரம் கழிச்சு, நானே வரேன்.”, என்றான் சோர்வாக.
“எனக்கு இது பத்தி தெரியாது வினோத். இல்லைன்னா இப்படி ஒரு விஷயமே ஆரம்பிச்சிருக்கமாட்டேன். இப்பக்கூட ஒன்னுமில்லை, ஐடியா விட்டுடலாம்.”, வானதி கூறவும்,
“சே.. சே… அப்படியெல்லாம் இல்லை. அம்மாவும் நீயும் சேர்ந்து செய்யறீங்க. அதை ஏன் விடற? அது, ஸ்வேதாவோட ஆக்சிடென்ட்டுக்கு முன்னாள்தான் இந்த விஷயம் வெச்சு அம்மாக்கும் அவளுக்கும் பெரிய சண்டையாச்சு. அன்னிக்கெல்லாம் மூட் அவுட்டாகியிருந்தா. அவ பக்கமும் பேச முடியாம, அம்மா பக்கமும் பேச முடியாம திண்டாடினதுல, ரெண்டு பேருக்குமே என் மேல கோவம்.”, அவன் வருத்தமாய் நினைவு கூற,
“இப்ப எதுக்கு அதையெல்லாம் நினைச்சு வருத்தப்படறீங்க ? எதுவும் வேணும்னு செய்யலை. ஸ்வேதாக்கு அப்பப்ப இந்த மாதிரி திடீர் பிடித்தம் வரும். வந்த கொஞ்சம் நாள்லயே காணாம போயிரும் இல்லை வேறு எது மேலயாவது கவனம் போயிரும். காசைப் பார்க்காம அவளுக்காக நீங்க தோட்டம் ரெடி செஞ்சது அவ மேல உங்களுக்கு இருக்க பிரியத்தைத்தான் காட்டுது. போகுது, அப்போதான் உங்க அம்மா பக்கம் பேச முடியலை. இப்ப உங்களை வருத்திட்டதா அவங்க புலம்பிகிட்டு இருக்காங்க. இப்பவாவது வந்து அவங்களை சமாதானப் படுத்துங்க.”, வானதி ஆறுதல் சொல்லவும், லேசாய் புன்னகைத்தவன்,
“ம்ம்..ஒரு பத்து நிமிஷம். நான் வரேன்.”, என்றான்.
“அச்சோ…இந்த சோகப் புன்னகையை இங்கயே விட்டுட்டு, கொஞ்சம் முகத்தை சந்தோஷமா வெச்சிட்டு வருவீங்களாம்…”, தோரணையாய்க் கூறிவிட்டு செல்பவளையே பார்த்தான் வினோத்.
அடுத்த ஐந்து நாட்களும் இனிமையாகச் சென்றது. மருமகள் கவனிப்பில், சம்பூர்ணம் ஐந்து வயது கம்மியானது போல இருந்தார். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தால், வானதியும் இறங்கி வந்துவிடுவாள். வெய்யில் வருவதற்குள்ளாக இரண்டு மணி நேரம் தோட்டம் அமைப்பதில் செல்லும். ஓரிரு நாள், வினோத்தும் வந்து மண்ணை கொத்தி விடவும்,பாத்தி அமைக்கவும் உதவினான்.
 பின் மதியம் யாராவது உறவினர் வீட்டுக்கு அவள் காரில் அழைத்துச் சென்றாள். இதில் அவள் அம்மாவீடும் சென்றார்கள். மாலை ஏதாவது ஒரு கோவில் சென்று ஏழு மணி போல வீடு திரும்பினார்கள்.அதன் பின் மகனோடு அன்றைக்கு நடந்தவற்றைக் கூறி, பேசி சிரிக்க என்று கலகலப்பாக சென்றது.
சனிக்கிழமை வினோத்தும் இருக்க, தாயும் மகனுமாக அமர்ந்திருந்தார்கள்.  “ராசா… வானதி வேலையை விட்டதும், உன் தோது பார்த்துகிட்டு ஒரு வாரம் பத்து நாள் ஊருக்கு வாங்கப்பா.”
“சரி மா. பார்க்கறேன். நீங்க இன்னும் கொஞ்சம் இங்க இருக்க வேண்டியதுதான ? சந்தோஷமாத்தான இருந்தீங்க ?”
“ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டா. வானதி தங்கமா பார்த்துகிட்டா. நானும் அடிக்கடி இனிமே வரேன்.”, சம்பூர்ணம் மகிழ்வாகவே சொன்னார்.
“ஏன் வயல்ல வேலையிருக்காதா, மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வேணாமா…?”, கிண்டலாய் வினோத் கேட்கவும்,
“நான் வாழ்ந்த இந்த வீட்லையே ஸ்வேதா என்னை அன்னியமா நடத்துனா. அதான் முடிஞ்ச வரை இங்க வர சாக்கு சொன்னேன். அப்படியும் புள்ள, பேரன் பாசம் இழுத்துகிட்டு வந்துடும். திரும்ப போகும் போது , இனி வரவே கூடாதுன்னு நினைப்பேன். ஒரு இரண்டு மூணு மாசம் போனா, பார்க்காம இருக்க முடியாது. மாங்கெட்டுபோய் திரும்ப வருவேன். “, பழைய நினைவுகளில் உழன்றவர், சட்டென்று சுதாரித்து மகன் முகம் பார்த்தார். வேதனையில் முகம் கறுத்து, கண் கலங்க அமர்ந்திருந்தான்.
அவன் கையைப் பிடித்தவர், “ஐயோ… நான் ஒரு கூறுகெட்டவ. நீ எதுவும் மனசுல வெச்சிக்காத ராசா. ஸ்வேதாக்கு என்னத்தான் ஆகலை. உன் மேலையும் பிள்ள மேலையும் உயிராத்தான இருந்தா. அதை நினைச்சு எனக்கு சந்தோஷம்தான். வயசான காலத்துல நான் ஒதுங்கி உன் புள்ள, பெண்டாட்டிக்கு வழிவிடறது நியாயம்தானே. அதை நினைச்சு தேத்திக்குவேன். ஒரு வகையில அப்படி நான் ஒதுங்கி இருக்கவும், அவ இருந்த கொஞ்ச காலத்தையும் உன் கூட முழுசா கழிச்சான்னு ஒரு நிம்மதி எனக்கு.”, பலவிதமாக சமாதானம் சொல்லும் தாயையே பார்த்திருந்தவன்,
“எனக்காக அவளை மன்னிச்சிருங்கமா. அவளுக்கு என்னை யார் கூடவும் பங்கு போட பிடிக்கலை போல. அதுவுமே வானதி கூட பேசிகிட்டு இருக்கும்போதுதான் புரிஞ்சுது.  இந்த வீட்ல உங்களை அன்னியமா ஃபீல் பண்ண வெச்சது கூட தெரியாம  நான் இருந்திருக்கேன்னு நினைச்சுத்தான் கலங்கிட்டேன். எப்படி உங்களையும் அவளையும் பாலன்ஸ் செய்யறதுன்னு, எனக்குத் அனுபவம் பத்தலை. சாரிம்மா. “, என்று பாவமாய் மன்னிப்பு வேண்டினான்.
“அட…எதுக்குப்பா இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசற ? மாமியாருக்கும் மருமகளுக்கும் முட்டிக்கறதும், இடையில் ஆம்பள சிக்கறதெல்லாம் வீட்டுக்கு வீடு நடக்கறதுதான். எத்தனை அனுபவம் இருந்தாலும் தடுமாறும்தான். நீ விசனப்படாதே. அம்மா அதெல்லாம் தப்பா நினைக்கலை. போனதெல்லாம் போகட்டும். வானதி ரொம்ப நல்ல பொண்ணு. என்னை நல்லா பார்த்துகறா. உன்னை பார்த்துக்கறாளாப்பா ? நீ அவளை சந்தோஷமா வெச்சிருக்கியா வினோத் ?”
“நல்லாத்தான்மா இருக்கோம்.  ஏன் வானதி எதுவும் சொன்னாளா?”
“இல்லைடா. இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கீங்கன்னு தெரியுது. ஆனாலும், புதுசா கல்யாணமானவங்க மாதிரி இல்லை… அதான்….”, சம்பூர்ணம் இழுக்கவும்,
“பூம்மா… நான் என்ன சின்ன பையனா? அவ முந்தானையை பிடிச்சிகிட்டு சுத்த ? இரண்டு பேருமே நல்லாருக்கோம். தேவையில்லாம யோசிக்காதீங்க சரியா?”, பெரிய புன்னகையோடு சொன்னான் வினோத்.
“அதில்லைடா… அவளுக்கு இதெல்லாம் புதுசுதான. வானதிக்கு அப்படி எதிர்பார்ப்பு இருக்குமில்ல ?”, கேள்வியாய் நோக்கும் அம்மாவைப் பார்த்து கண்களை உருட்டியவன்,
“அப்படி இருந்தா எங்கிட்ட சொல்ல அவளுக்கு ஒரு தயக்கமும் இல்லை. உங்க மருமக தைரியமான பொண்ணுதான்.”
அவன் பேச்சிலும் செய்கையிலும் சிரித்தவர், “போக்கிரி. என் மருமக தைரியமான பொண்ணா இல்லைன்னா, கல்யாணத்துக்கு நீ செஞ்ச கலாட்டாவ பார்த்து பயந்து போய் நிறுத்தியிருப்பா.”, என்று அவன் தோளில் ஒரு அடி வைத்தார்.
தாயின் சந்தோஷம் கண்டு பூரித்தவன் மனதில் வானதியின் மேல் நன்றியுணர்ச்சி கூடியது.
“ஆனா…அவளே எல்லாம் சொல்லுவான்னு நினைக்காத வினோத். இன்னமும் அவ கால்ல மெட்டி போடலை. ஏம்மா, அன்னிக்குத்தான் போடலை, அப்பறமும் போட்டுக்கலையான்னு கேட்டேன்.  இல்லை, வேலைக்கு போறதுக்கு ஷூ போடடும் போது இடிக்கும், அது இதுன்னு சொல்லி மழுப்பிட்டா. நீ கோவில்ல வெச்சு போடாததுக்கு வருத்தம் இருக்கும் போல. நீ அழைச்சிகிட்டு போய் போட்டுவிடுடா.”, என்று கூறவும், ‘இதுவேறா’, என்று கிறுகிறுத்தது.
அவன் பார்வையைக் கண்டுகொண்ட சம்பூர்ணம், “உனக்கு சங்கடம் தரக்கூடாதுன்னு அவங்க அப்பா, அம்மாவை சங்கடப்படுத்தி, தாலியை செயின்ல கோர்த்து போட சொன்ன பொண்ணுடா அது. அவ்வளவு உனக்காக அவ பார்க்கும்போது, நீயும் அவளுக்காக பார்க்கணும் ராஜா.”, சம்பூர்ணம் சொல்லவும், அவரை சமாதானப்படுத்தி செய்வதாக ஒத்துக்கொண்டான்.
சம்பூர்ணம் ஊருக்குக் கிளம்பிய பின்னர், அவளோடு அமர்ந்திருக்கையில் தன் நன்றியுணர்வைப் அவளிடம் பகிர்ந்து,
“இதுக்கெல்லாம் பதிலுக்கு நான் உனக்கு என்ன செய்யப் போறேன்னு தெரியலை வானதி. என்ன செஞ்சாலும் தகும். இப்பத்திக்கு கோவிலுக்குப் போய் உனக்கு மெட்டி போடணுமாமே, அதை செய்யறேன்.“, என்று நெகிழ்ந்து கூறினான்.
“ எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு வினோத். நான் காட்றது உண்மையான பாசம் தான். அதுக்கு உங்ககிட்டர்ந்து எந்த ப்ரதிபலனும் நான் எதிர்பார்க்கலை. அது எனக்கு வேண்டவும் வேண்டாம். அதனால இந்த கைமாறு பேச்செல்லாம் பேசி, என் அன்பை கொச்சைப்படுத்தாதீங்க.  இட்ஸ்  நாட் ஃபார் சேல்.”, சிடுசிடுத்துவிட்டு சென்றவளைப் பார்த்து முழித்தான் வினோத்.
‘இவ காரெக்டரே புரியலையே’, என்று ஓடியது அவன் எண்ணம்.

Advertisement