Advertisement

அத்தியாயம் – 7
வினோத் ஸ்வேதாவிற்கு பிடிக்காததால் தங்களுடனான உறவை துண்டித்ததாக சொன்னதன் பின் பாதியைக் கேட்ட சாம், “டேய் உன் மூளைக்கும் வாய்க்கு இடையில் ஃபில்டரே கிடையாதாடா ?”, என்று பல்லைக் கடித்து சங்கரின் தலையில் கொட்டியவன், “மச்சி… சாரிடா… சங்குப்பய எப்பவும் போல உளர்றான். நீ கண்டுகாதடா…”, என்றான் சமாதானமாய்.
அடி வாங்கிக், தலையைத் தேய்த்த சங்கரோ… வலியின் காரணமாய் சாமை முறைத்து, “ உண்மையைத்தானடா பேசினேன் ? அடிக்கற ? ஸ்வேதா இருந்த வரைக்கும் நம்ம கூட ஒரு வீக்கெண்ட் வந்தானாடா? அப்பறம் ஜெர்மனி போயிட்டான், திரும்பி வந்த அப்பறமும் நம்ம சேர்ந்து இருக்கும்போதும் வரமாட்டான். போன்ல கூட எப்பவாச்சம்தான் பேசுவான்.”, இந்த சில வருடங்களாக நண்பனை இழந்த அவனின் ஆதங்கம் புரிய, வினோத் சாம் இருவருக்குமே பாவமாகப் போய்விட்டது.
அவனை அணைத்தவர்கள், “சாரிடா… சாரிடா மாப்ள…”, என்று மன்னிப்பை வேண்ட,
“என்ன கட்டிப்புடி வைத்தியம் நடக்குதா இங்க?” , ஷீலா அவர்கள் அன்பின் இடையே புகுந்தாள்.
“நீதான பேபி… உன்னை கட்டிபிடிக்க விடமாட்டேன்ற…. அதான், என் நண்பன் இருக்கான் …”, என்று சாம் பதில் பேச,
“அய்ய…அவனா நீ ?”, என்று புனிதா வேண்டுமென்றே சங்கரை கலாய்த்தாள்.
துள்ளி விடுபட்ட சங்கரின் முகம் போன போக்கைப் பார்த்து எல்லோரும் சிரிக்க, அதற்கும் புனிதாவே… “ஹே…. என் புருஷனை ஏன் காமெடி பீசாக்கறீங்க ?”, என்று சண்டைக்கு வந்தாள்.
“யாரு… அவங்களா ? இல்ல நீயா ? ஆணியே புடுங்க வேணாம்… போ… போய் பாயசம் கொண்டுவா…”, என்று கை கூப்பி அனுப்பி வைத்தான்.
“நிமிஷமா கலாய்ச்சிடறாங்கப்பா… நமக்குத்தான் எந்த கவுன்ட்டரும் வந்து தொலையறதில்லை…”, சங்கரின் புலம்பல் வினோத்தை மறுபடி சிரிக்க வைத்தது.
நேரம் பதினொன்றைத் தாண்டியும் ஜமா கலையவில்லை.  குழந்தைகள் உறங்கியிருக்க, எல்லோரும் சீட்டாடிக்கொண்டும், ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும் இருந்தனர்.
நடு நிசியைத் தாண்டி காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள் வினோத்தும் வானதியும். காரில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.
“புனிதா, ஷீலா கூட செட் ஆச்சா உனக்கு ? “, வினோத் கேட்கவும்,
“யா… பெருசா எங்க இன்ட்ரெஸ்ட் எதுவும் மாட்ச் ஆகலை, பட் சும்மா ஒரு ஈவினிங் பேசிகிட்டு இருக்க டாபிக்கா இல்லை. நல்ல கம்பனிதான். அவங்களை நாமளும் கூப்பிடலாம் அடுத்த மாசம்.”
“ம்ம்.. சரி. நீ கஷ்டபட வேண்டாம். சாப்பாடு வெளிய சொல்லிக்கலாம்.”, வினோத் சந்தோஷத்தோடு கூறினான்.
“ கூட நாலு பேருக்கு சமைக்கறதுல என்ன கஷ்டம் ? மலரக்கா இருக்காங்க. பார்த்துக்கலாம். நீங்க அவங்களை கேட்டுட்டு சொல்லுங்க.”
“உன் ஃப்ரெண்ட்ஸ் கூட கூப்பிடேன் ? இவங்களோடன்னு இல்லை, தனியா கூட ஓக்கேதான்.“
“இல்லை… அப்படி பெருசா என் ஃப்ரெண்ட்ஸ்ன்னு கிடையாது இங்க. “, என்றவளை திரும்பிப் பார்த்தவன்,
“ஸ்வேதா கூப்பிடுவாளே, அவங்க ?”
“அவங்க ஸ்வேதா ஃப்ரெண்ட்ஸ். எனக்கும் தெரியும் அவ்வளவுதான். ஆனால் க்ளோஸ் கிடையாது.”, அவன் புறம் திரும்பி பதில் கூறியவள், ஒரு மெல்லிய புன்னகையுடன் நேரே பார்த்து,
“ஸ்வேதாவோட பெஸ்டிக்கு அவளைத் தவிர வேற யாரும் நெருக்கம் கிடையாது. அப்படி இருக்கவும் ஸ்வேதா விடமாட்டா.”, என்றாள் மென்குரலில்.
ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு ஆரம்பிக்கும் இடைவெளியில் பேசியதால், வானதியின் குரல் தெளிவாகவே கேட்டது.
“என்ன ? ஏன் அப்படி சொல்ற ?”
“அது அப்படித்தான். அவளுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ்  இருக்கலாம். ஆனா அவ ஸ்பெஷலா நினைக்கற எனக்கு, அவளைத் தவிர யாரும் கிட்ட வந்துடக் கூடாது. அவ்வளவு பொசசிவ். அவ சர்கிள்லகூட யாராவது என்னை நெருங்கினா, அவங்களை அவ லிஸ்ட்லருந்தே வெளியேத்திடுவா.”, என்றவள் தொடர்ந்து,
“சிங்கப்பூர் போனதுக்கப்பறம் கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் அங்க இருக்காங்க. ஆனா இங்க யாரும் அப்படியில்லை.”, என்று முடித்தாள்.
“ஓ…”, என்றவன் அமைதியாகிட, அவன் முக மாற்றத்தை கண்டவள்,
“என்னாச்சு ? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா? வேற யாராவது அவளைவிட எனக்கு பிடிச்சிடுமோன்னு ஸ்வேதாக்கு  ஒரு பயம்.   நான் இல்லைன்னு சொன்னாலும் நம்ப மாட்டா.  அதான், அவ இஷ்டப்படியே  இருக்க பழகிக்கிட்டேன். கூட அவ ஒருத்தியே பத்து பேருக்கு சமம், அத்தனை கேரிங்கா இருப்பா.“, வானதி விவரிக்க,
“இல்லை… இன்னிக்கு சங்கர் ஒன்னு சொன்னான். ஸ்வேதாக்கு அவங்களைப் பிடிக்கலை அதனால என்னையும் அவங்களோட சேர விடலைங்கற மாதிரி பேசினான். கல்யாணம் முடிச்சு ஒரு வாட்டிதான் போனோம். அவ இருந்த அந்த இரண்டு வருஷத்துல, அவ ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டுத்தான் பார்ட்டி வைப்பா, டின்னர் போக ப்ளான் செய்வா. யோசிச்சு பார்த்தா எனக்காக வந்த மாதிரி, எதுவுமே நியாபகம் வரலை. “, கொஞ்சம் யோசனையாகவும், வருத்தமாகவும் கூறினான் வினோத்.
“இது… அனேகமா அதே பயம்தான். அவள்தான் உங்களுக்குப் பிரதானமா இருக்கணும்னு நினைச்சிருப்பா. உங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், அவங்களோட  உங்க நெருக்கம் பார்த்துப் பொறாமையாகிருப்பா. உங்க கல்யாணத்துல அவங்க அடிச்ச லூட்டிதான் பார்த்தோமே.”, வானதி சொல்லவும்,
“ஹ்ம்ம்… இருக்கலாம். ஆனா, இதை கேட்டு நான் சந்தோஷப்படணுமா இல்லை வருத்தப்படணுமான்னு தெரியலை.”, அவன் கூறும் வேளை வீடும் வந்திருக்க, அதோடு பேச்சு முடிந்தது. ஆனால் அவன் மனதில் ஒரு விதை விழுந்திருந்தது.
மறுனாள் இரவு உணவின் போது,
“என்னோட லீவ் முடிக்கணும். மூணு நாள் அடுத்த வாரத்துல எடுக்கலாம்னு இருக்கேன் வினோத்.  அத்தையை வர சொல்லுவோமா. நானும் வீட்ல இருக்க அவங்களுக்கும் பொழுது போகும்.”
கேட்டவளை புன்னகையுடன் பார்த்தவன், “ உன் ஃப்ரீ டைம் உன்னிஷ்டத்துக்கு செய். இப்பதானே அவங்களைப் பார்த்தோம், இன்னும் இரண்டு மாசம் தாங்கும்.”, என்றான்.
“இதென்ன , அவங்களை ஏங்க வெச்சு, அப்பறம் போய் தலையைக் காட்றதா?  முதல்ல நாம அங்க போகலாம்னு நினைச்சேன். நீங்கதான் காலேஜ் புது பாட்ச் இப்ப சேர்ற நேரம்னு சொன்னீங்க. அதான் அவங்களை இங்க கூப்பிடலாம்னு பார்க்கறேன். நான் மட்டும் போனா, அவங்க வருத்தப்படுவாங்க.”
“கூல்…கூல்…”, அவள் பேசிக்கொண்டே போக, “ தாராளமா கூப்பிடு. நான் உனக்காகத்தான் சொன்னேன். ஆனா அவங்க வந்தா நமக்குத்தான் சிக்கல். அதை யோசிச்சயா ?“
“பார்த்துக்கலாம். அவங்க கீழ இருக்க ரூம்லதான தங்குவாங்க ? அஞ்சு நாள்தான, சமாளிக்கலாம். எப்படியும் அவங்க வந்து இருப்பாங்கதானே ? அது இப்பவே இருக்கட்டும்.” , நம்பிக்கையாக கூறுபவளைப் பார்த்தவன், சம்மதமாகத் தலையசைத்தான்.
அன்றே, அப்போதே சம்பூரணத்துடன் பேசி ஏற்பாடுகளை செய்ய வைத்தாள் வானதி.  தாயின் குரலில் தெரிந்த சந்தோஷத்திலேயே வினோத்திற்கு அவர் எதிர்பார்த்திருக்கிறார் போலும் என்று புரிந்தது.
“தாங்க்ஸ் வானதி. அம்மா இங்க வர ஆசைப்பட்டிருப்பாங்க போல. நான் சொன்னதுமே சரின்னுட்டாங்க. இல்லாட்டி வயல்ல வேலை, மாட்டுக்கு வைத்தியம்னு எதாவது சாக்கு சொல்லுவாங்க.  “
அவன் சொன்னதற்கு மறுத்தவள் , “அச்சோ… இதுக்கு என்ன தாங்கஸ்? அவங்களுக்கு நம்மோட சேர்ந்து இருக்க ஆசையிருக்கு. நாம அங்க போனபோதே தெரிஞ்சது. வயசான காலத்துல பெத்தவங்க வேற என்ன பெருசா நம்மகிட்ட எதிர்பார்க்கப் போறாங்க ? முடிஞ்ச வரை அவங்களோட  இருக்கப் பார்க்கணும்னு, அப்பவே நினைச்சேன். இனி உங்க லீவ் பொறுத்து அங்க அடிக்கடி போகலாம்.”, கையாட்டி விடை பெற்று, அவள் அறைக்குச் செல்ல மாடி ஏறினாள்.
 அவள் சென்ற பின்னும் பளிச்சென்ற புன்னகையும், அவளின் அன்பான மனமும் அவனிடம் நின்றது.
சொன்னபடியே மறு வாரம் விடியற்காலையில் கிளம்பி அவர் வழக்கமாக வரும் வாடகைக் காரில்  மதியம் வந்து இறங்கினார் சம்பூர்ணம். வானதி வீட்டில் இருக்க, வினோத் காலேஜ் சென்றிருந்தான். திரும்பி வந்தவன் கதவை திறக்கவும், கேட்டது வானதியின் சிரிப்புடன் இணைந்து அவன் அம்மா சிரிப்பதுதான்.
‘இவ்வளவு சத்தமாக சிரிக்க என்ன நடந்தது’, என்று யோசித்தபடியே வரவேற்பறை வாசலில் நின்றவன் பார்த்தது அவனை ஆச்சரியத்தில் நிறுத்தியது.
“பூம்மா… என்னதிது ? கொரியன் ட்ராமா பார்க்கறீங்க ? நாடு தாங்குமா ?”,வினோத் பொய்யாக அலற, அப்போதுதான் மகனைப் பார்த்தவர், “ஏய்யா… “, என்று வேகமாக எழுந்து வர, “உக்காருங்க…. நானே வரேன்.”, இரண்டெட்டில் அவன் அவர் அருகே வர, இயல்பாய் எழுந்த வானதி, அவன் லாப்டாப் பையை வாங்கிக் கொண்டாள்.
தாயும் மகனும் குசலம் விசாரிக்கட்டும் என்று வினோத்திற்கு காபியும் பலகாரமும் எடுத்து வர உள்ளே சென்றாள்.
“நம்ம ஊர் அழுகாச்சி சீரியல் பார்த்து சலிச்சுப் போச்சுன்னு சொன்னேன். வானதி இதை போட்டுச்சுடா. ஆம்பள , பொம்பள எல்லாம் பொம்மை கணக்கா அழகா இருக்காங்க. யாரு பையன், யாரு பொண்ணுன்னு கூட வித்தியாசம் தெரிய மாட்டீங்குது, ஆனாலும் காமெடியா போகுது. அங்கங்க வானதி தமிழ்ல சொல்றாளா, அதுனால புரியுது.”, சம்பூர்ணம் விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார்.
“இந்தாங்க. அத்தை உங்களுக்காக அதிரசமும், எள்ளு தட்டையும் செஞ்சு எடுத்திட்டு வந்திருக்காங்க. சாப்பிடுங்க. காபி வருது.”, தட்டை அவனிடம் தந்தவள், அவர்களுக்கு எதிர்புறம் அமர்ந்தாள்.
“என்ன, வந்த அரை நாள்ல எங்கம்மாவை இப்படி மாத்தி வெச்சிருக்க ?”, என்றான் சிரிப்புடன், வானதியைப் பார்த்து.
வசீகரப் புன்னகை நிறைந்த அவன் முகத்தை மன நிறைவோடு பார்த்தவள், “அவங்களும் புதுசா பழகட்டுமே. எனக்கும் அவங்க புதுசா பழக ஒரு விஷயம் சொல்லித் தரப் போறாங்க.”
அவள் பீடிகை கண்டு புருவம் தூக்கியவன், ‘என்ன ?’ என்பது போலப் பார்க்க, “வீட்டுக்கு பின்னாடி கொஞ்சம் காய்கறி தோட்டம் போடப் போறோம்.”, என்றாள் பெருமையாக.
“ஓஹ்… சரி. பக்கத்துல இருக்க நர்சரி நம்பர் தரேன். அவங்களை வரச் சொல்லி என்ன செய்யணும்னு சொல்லி எவ்வளவு கேக்கறாங்கன்னு விசாரி . அவங்களை மெயிண்டெய்ன் பண்றதுக்கும் சேர்த்து கோட் வாங்கு.”, வினோத் பெரிதாக எந்த உணர்வும் காட்டாது சொல்லவும் மாமியார், மருமகள் இருவர் முகமும் கடுப்பானது.
“ஹல்லோ… வீட்டுத் தோட்டம் நாங்களே செய்யப் போறோம். அவங்க செய்யறதுக்கு நான் என்ன வேடிக்கைப் பார்க்கவா? வேணுங்கற விதை, உரம் எல்லாம் அத்தையே கார்ல போட்டு எடுத்துட்டு வந்துட்டாங்க.”
“அம்மா கிளம்பினா, நீயே பார்த்துக்குவியா? “, யோசனையாகக் கேட்டான்.
“பார்த்துக்க முடியும்னாதான இதுல இறங்குவேன் ?”
“என் வூட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்னு பூத்தோட்டம் போடறேன்னு காசை கரியாக்கி, கட்டாந்தரையா ஆக்கினவ மாதிரி இல்லை வானதி. ஒரு வாரமா இதைப் பத்தி  பேசி, கம்ப்யூட்டரையெல்லாம் பார்த்து, படிச்சி, என்ன ஆலோசனை கேட்டு, என்னல்லாம் செடி வளர்க்கலாம்னு லிஸ்ட் போட்டு நிறைய வேலை பார்த்திருக்கா.”, யாரையோ இடித்து வானதியைப் புகழவும், வினோத் முகம் சுருங்கினான்.

Advertisement