Advertisement

மகன் சாப்பிடப்போகிறான் என்றதுமே, சம்பூர்ணம் அவளையும் போகச் சொல்லி வைத்துவிட்டார்.  ‘அவரை கிண்டல் பண்ணேன்னு கோவப்படலையே, அதிசயம்தாண்டி வனு…’, என்று உள்ளுக்குள் வியந்தபடியே வானதியும் கிழே இறங்கினாள்.
அதற்குள் இருவருக்குமாக தட்டை வைத்து, சப்பாத்திகளை ஹாட்பாக்ஸில்லிருந்து எடுத்து வைத்திருந்தான்.  அவள் இடத்தில் வந்து அமர்ந்தவள், அவன் முகத்தை முகத்தைப் பார்க்க, புன் சிரிப்புடன், “என்ன ? என் முகத்தையே பார்க்கற ?”
“இல்ல… அது… நான் சும்மா ஒரு ப்ளோல…. “, வானதி இழுக்க, குர்மா இருந்த காசரோலை அவள் பக்கம் தள்ளியவன்,  “ஸ்வேதா சேலையை கட்டி பிடிச்சிகிட்டு தூங்கலையா? நீ பார்த்தியா ? என்னமா அடிச்சி விடற ?”, வினோத் கேட்க, வானதியால் அசடு வழியத்தான் முடிந்தது.
“அதுவும், நான் நிக்கறதைப் பார்த்து ஒரு முழி முழிச்சயே… ப்ரைஸ்லெஸ். “, நினைப்பில் மீண்டும் சிரிக்க,  அவன் கிண்டலில் உதட்டை சுழித்தவள், “ரொம்பத்தான். என்னவோ உங்க அம்மா சண்டை போட்டதுல சோகமா இருக்கீங்களேன்னு நான் ஹெல்ப் பண்ணப் பார்த்தா, என்னையே ஓட்டறீங்களா ?”
“சண்டை போட வெச்சதே நீதான ?”  அர்த்தமற்ற வாக்குவாதம்தான் ஆனாலும் இருவருமே தொடர்ந்தனர். தனிமையும் அமைதியுமாகவே இருந்தவனுக்கு வானதியின் ஆர்பாட்டமில்லாத அணுகுமுறை ஒரு நல்ல சூழலை உருவாக்கித் தந்தது. பேச்சு வாக்கில் ஸ்வேதா வந்து சென்றாள். அவனை எடை போடாது இயல்பாக ஸ்வேதாவின் நினைவுகளைப் பேசுபவளைப் பிடித்தது. அவனுக்கு தெரிந்தவர்கள் ஸ்வேதா பெயரை எடுக்கவே சங்கடப்படுவார்கள். தப்பித் தவறி அப்படி வந்தால் உடனே அவன் வருத்தப்படுகிறானோ என்று அவன் முகத்தைப் பார்ப்பார்கள். அதனாலேயே அவள் பற்றிய பேச்சை சுத்தமாக ஒதுக்கிவிடுவான். ஸ்வேதா போய்விட்டாலும் அவள் நினைவுகளுடன் இருக்கிறான். இதில் மற்றவருக்கு என்ன ஆர்வம் என்று வினோத்திற்கு புரியவேயில்லை. வானதியிடம் மட்டுமே ஸ்வேதா பற்றியும் யோசிக்காமல் பேச முடிகிறது. சத்தியமாக வேறு ஒரு பெண்ணை அம்மாவின் திருப்திக்கு கட்டியிருந்தால் இது போன்று இருக்க முடியாது என்பது இந்த சொற்ப நாட்களிலேயே தெரிந்தது.
அந்த வார இறுதியில் காலையிலேயே வினோத்துடன் கிளம்பி விட்டாள் வானதி. அன்று அவன் கல்லூரி செல்ல வேண்டியிருந்தது. அவளுக்கு விடுமுறை. எனவே அம்மா வீட்டில் அவளை விட்டுவிட்டு செல்வதாக ஏற்பாடு. இன்னமும் வினோத்திற்கு வானதியின் வீட்டில் இருக்க சற்று சங்கடம்தான். அதனால், காலை டிபனை முடித்த கையோடு அவன் கல்லூரி கிளம்புவதாக இருந்தது.
வானதி வீட்டில் மாப்பிள்ளைக்கு ஏக போக உபசாரம். நாலு வித டிபனை உண்டவன், காபி வேறா என்று அவஸ்தையாக வானதியைப் பார்த்து தலையசைக்க,
“ம்மா… காபி வேண்டாம்மா. அவர் போய் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கறதா இல்லை தூங்கறதா. விடுங்க.”, என்று பார்வதிக்கு தடை விதித்தாள் வானதி.
வழியனுப்ப வாசல் சென்றவளிடம், “சங்கர் வீட்டு டின்னர் இருக்கு. சாயந்திரம் நாலு மணிக்கு வரேன். ரெடியா இரு. மறுபடி டிபன் காபின்னு எதாவது செய்யப் போறாங்க. வந்ததும் கிளம்பணும். சரியா ?’, என்று உறுதி செய்து கொண்டே கிளம்பினான்.
மாலை வெளிர் சாம்பல் வண்ணத்திலிருந்து மெல்ல அடர்ந்து, பார்டர் அருகில் அடர் சாம்பல் வண்ணமாக மாறும் ஒரு அழகிய ஜூட் காட்டன் சேலையில், ப்ரின்ட்டட் பார்டர், அதே டிசைனில் ரவிக்கையும் அணிந்து பார்வதியே திருஷ்டி சுற்றிப் போடும் படி அழகாய் இருந்தாள். வெள்ளியினாலான பெரிய மெட்டல் ஜிமிக்கியும் அதற்கு ஏற்ற சோக்கர் நெக்லஸ், ஒரு டஜன் மெல்லிய வளையல்கள் என்று பாந்தமான அணிகலங்கள் அணிந்திருந்தாள். தாலி மட்டும் தங்கத்தில் இருந்தது. பார்வதி கூட, அதை ரவிக்கைக்குள் ஒளிக்குமாறு கூறினார்.  “அதெல்லாம் வேணாம்மா.”, என்று மறுத்திருந்தாள்.
தாயும் மகளும் ஊர் கதையெல்லாம் பேசி இனிமையாக அன்றைய பொழுது சென்றது. பெண் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று பார்வதியும் நாராயணனும் கூட நிம்மதியாகியிருந்தனர்.
சங்கரின் வீட்டிற்கு வானதியும் வினோத்தும் வந்து சேரும் முன்னர் அவனின் மற்றொரு நண்பன் சாம் தன் மனைவி ஷீலா மூன்று வயது மகன் ஜேகப்புடன் வந்திருந்தான். கௌதம் மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருக்க தனியே வந்திருந்தான்.
வாசலுக்கே வந்து வரவேற்ற நண்பர்களை அணைத்து விடுவித்த வினோத், உள்ளே செல்ல, சங்கரின் மனைவி புனிதா வானதியை கைபிடித்து,
“அவங்க ஒன்னு சேர்ந்தா, நம்மளை மறந்துடுவாங்க. நீங்க உள்ள வாங்க வானதி.”, என்று உள்ளே அழைத்தாள்.
“வா வானதி… ரொம்ப அழகா இருக்க இந்த சேலையில.”, ஷீலாவும் வரவேற்றாள்.
இன்முகமாக அவர்கள் வரவேற்பை பெற்று , உள்ளே நுழையும் முன்னரே ஹால் சோஃபாவை நிறைத்திருந்தார்கள் அவர்களின் கணவன்மார்கள்.
“என்ன வினோத்… ஒரு ஆர்டின் போட்டு அம்பு விட்டதுக்கு மச்சானை இப்படி திட்டிருக்க? மறுனாள் எங்கிட்ட ஒரே அழுகை தெரியுமா…”, சாம் மறுபடி ஞாபகப்படுத்தினால், வினோத்திடம் மீண்டும் ஒரு வசைமாரி கிடைக்கும் சங்கருக்கு என்று கோர்த்துவிட்டான்.
“டேய்… வந்ததும் வராததுமா …ஏண்டா அவனை வெறியேத்துற?”, சங்கர் சாமை முறைக்க, வினோத் சங்கரிடம், “இனிமே ரோஜாப் பூவை பார்த்தா என்ன செய்வ ?”, என்று குழந்தையிடம் கேட்பது போலக் கேட்டான்.
“ம்ம்… சாமிக்கு வெச்சிடறேன். சத்தியமா பிச்சி என் பெட்ல கூட போடமாட்டேண்டா …போட மாட்டேன்…”, நெஞ்சில் கைவைத்து உறுதி மொழி எடுத்தான் சங்கர்.
“அது….”, என்று திரும்பவும், பழசாறுடன் வந்த புனிதா… “அண்ணா… ஒரு வாட்டி நீங்க எனக்காக அவரை திட்டுங்கண்ணா… நான் ரெக்கார்ட் பண்ணிக்கறேன். அப்பப்ப போட வசதியா இருக்கும்.”, என்றாள் கணவனைப் பார்த்துக்கொண்டே.
“அச்சோ… நான் லைவ்வா கேட்டேன் புனிதா… சான்சே இல்லை… அத்தனை வார்த்தை, எதுவும் இரண்டாவது வாட்டி ரிபீட் ஆகலை. இப்படி கெட்ட வார்த்தை மட்டுமே சேர்த்து சென்டென்ஸ் பேச முடியும்னு அப்பத்தான் தெரிஞ்சுது…”, தன் பங்குக்கு புனிதாவுடன் சேர்ந்து வானதியும் வினோத்தை கலாய்த்தாள்.
“ஹே… எனக்கும் சொல்லுங்கப்பா… அப்பப்ப யூசாகும்.”, ஷீலாவும் சேர,
“மச்சான்… இதென்ன கூட்டணி சரியில்லையே….”, என்ற சாம், “ போய் பசங்களைப் பாருங்க தெய்வங்களா… ரொம்ப நாள் கழிச்சு நாங்க ஒன்னா சேர்ந்திருக்கோம்… கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கறோம்…”, என்று வேண்டவும், மன்னித்து உள்ளே சென்றார்கள் பெண்கள்.
புனிதா, ஷீலாவுடன் பொதுவாக பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது வரவேற்பறையிலிருந்து வந்த வெடிச் சிரிப்பு, வானதியின் கவனத்தில் பதிந்து கொண்டிருந்தது. இவர்கள் சாப்பாட்டு மேசையை சுற்றி அமர்ந்திருந்தார்கள். வடையும் சாலட்டும் உள்ளே சென்று கொண்டிருக்க, பிள்ளைகள் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
புகைப்படம் எடுக்க அவள் கை பரபரத்தது. குழந்தைகள் விளையாடுவதை முதலில் சில புகைப்படம் எடுத்தவள், “அவங்களையும் எடுத்துட்டு வரேன். நம்மளும் செல்ஃபி எடுத்துக்கலாம்.”, என்று சொல்லிவிட்டு, கதவருகில் சென்றாள். அங்கிருந்து கோணம் சரியில்லை என்று புரிந்து, மெதுவாக பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனம் கலையாமல் பின்பக்கம் சென்றவள், வீட்டை சுற்றி வந்து பக்கவாட்டு ஜன்னல் அருகில் நின்றாள். அங்கிருந்து மாலை வெய்யிலின் வெளிச்சம் ஒரு புறம் வினோத்தின் முடியை ஒளிர வைக்க, நால்வருமே மலர்ந்த முகத்துடன், அவர்கள் உலகத்தில் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஐ-போன் செட்டிங்க்ஸ் மாற்றி மாற்றி, புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினாள். மீண்டும் உள்ளே வந்தவளை,
“எங்க போயிட்ட வானதி… ?”, ஷீலா கேட்கவும், வெளிய ஜன்னலோரத்திலர்ந்து நல்ல லைட்டிங், ஆங்கிள் கிடைச்சது. அதான் …”
“தா, பார்க்கலாம் ?”, ஷீலா வாங்கி சிலதைப்பார்க்கவுமே… “ஹே…சூப்பர் யா… செம்மையா இருக்கு. என் ஆள் கூட அழகா தெரியறாரே….எனக்கு அனுப்பி வைப்பா….”, இவள் உற்சாகத்தைப் பார்த்து அவள் பின்னே நின்று பார்த்துக்கொண்டிருந்த புனிதாவும் அதையே ஆமோதித்தாள்.
“என்னங்க… இங்க பாருங்க… எவ்வளவு அழகா போட்டோ எடுத்திருக்கு வானதி.”, ஷீலா போனுடன் அதற்குள் ஓடிவிட்டாள் அவர்களிடம் காட்ட. அனைவரது பாராட்டிலும் நெளிந்த வானதி… “நான் சும்மா கிளிக் பண்ணேன். நீங்க சந்தோஷமா இருக்கறது, அப்படியே போட்டோல தெரியுது, அதுனால அழகா இருக்கு.”, என்றாள்.
“மேடம் ப்ரொஃபெஷனல் காமெரா வெச்சிருக்காங்க. ஊர்ல சூர்யோதயம் போட்டோ எடுக்கறேன்னு போய் எடுத்துகிட்டு வந்ததைப் பார்த்து நானும் மிரண்டுட்டேன். ப்ரொஃபெஷனல் போட்டோ மாதிரி செம்மையா இருந்துச்சு.”, வினோத் பெருமையாக சொல்ல, வானதி மனதில் ஒரு சந்தோஷம் பூத்தது.
“ஓஹ்… அப்ப இந்த ரெண்டு வாராமா உன்னைத்தான் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துச்சா தங்கச்சி ?”, சங்கர் கேட்க,
“இல்லை… அவங்க இயற்கை மட்டும்தான் எடுப்பேன்னு சொன்னாங்க. இப்ப திடீர்னு என்ன மாறுச்சோ. இதுதான் என் முதல் போட்டோவும்.”, வினோத் அவளை கேள்வியாய் நோக்கினான்.
“இயற்கை எடுக்க பிடிக்கும்னு சொன்னேன். அதுக்காக மனுஷங்களை எடுக்கவே மாட்டேன்னு சொல்லலையே…”, வினோத்திடம் கண்ணை உருட்டியவள், “ இது என்னோட சின்ன கிஃப்ட் உங்க நட்புக்கு. நீங்கதான சொன்னீங்க, ரொம்ப நாள் கழிச்சு ஒன்னா சேர்ந்திருக்கீங்கன்னு. அதோட நினைவாத்தான் இது. நானே ஃப்ரேம் செஞ்சு தரேன்.”, என்று சங்கர், கௌதம், சாமைப் பார்த்து வானதி சொல்லவும்  நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.
எல்லோருமாக பேசி சிரித்து உண்டு மகிழ்ந்திருந்த போது சங்கர் வினோத்திடம், “ம்ம்… இப்பத்தான் வினோ நிம்மதியா இருக்கு. “, என்றான்.
“ஏன்டா?”
“இல்லை, ஸ்வேதாக்கு எங்களை பிடிக்காது. உன் கல்யாணத்துக்கப்பறம் ஒரு வாட்டிதான் வந்தீங்க. அப்பறம் ஒரு வாட்டி தனியா வந்த, அப்பவும் பாதியில அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு கிளம்பிட்ட.  வானதி எப்படியோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. இது ரொம்ப நல்ல டைப் போல. “, வெள்ளந்தியாக சொன்னவன் வினோத் முகம் பார்க்க, அவன் முகமே இருண்டிருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின் அன்றுதான் சந்தோஷமாக இருந்தான் வினோத். மனது மிகவும் லேசாக இருந்தது. கடவுளுக்குப் பொறுக்கவில்லை போல. சங்கர் இப்படிக் கேட்கவும், நொடியில் எல்லாம் மறைந்தது. சங்கர் கேட்டதின் சாராம்சம் மனதை சுட்டது. அதன் அதிர்வில் வினோத் சமைந்து நின்றான்.

Advertisement