Advertisement

அத்தியாயம் – 9
ஒரு சனிக்கிழமை விடியற்காலை மலையேற்றக் குழு ஒன்றுகூடியது. அதில் வினோத், வானதி, சங்கர் புனிதாவுடன் சேர்த்து ஆண்களும், பெண்களுமாக பதினைந்து பேர் இருந்தனர். இவர்களுடன் செல்ல பொறுப்பாளர், வழிகாட்டி, மலையேற்ற கைட் தணிகாசலம், தேவைப்படும்பொழுது அவரே முதலுதவி சிகிச்சை நிபுணரும் கூட.
வானதிக்கு அதில் இருந்த மற்ற இருவரைத் தெரிந்திருந்தது. அவளுடன் முன்பு ஏறியிருந்தவர்கள். இன்னொரு ஆறு கல்லூரி மாணவர்கள் இருந்தார்கள். மத்திம வயதில் இரண்டு ஜோடிகள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
“குட் மார்னிங். எங்க மலையேற்றக் குழுவின் சார்பாக உங்க எல்லாரையும் வரவேற்கிறேன். நீங்க எழுதின ஃபார்ம் எல்லாம் பார்த்தேன். எல்லாருக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கு. சிலருக்கு நிறையவே. இப்ப நம்ம போறது திருப்பதிக்கு பக்கத்துல இருக்க நாகலாபுரம் ஃபால்ஸ். அங்க ஒரு நாள் நைட் டென்ட்ல தங்கிட்டு, மறுனாள் காலையில கிளம்பி வந்திருவோம். பன்னெண்டு கிலோ மீட்டர்தான் ஆனா மலை பாதை கொஞ்சம் கரடு முரடா இருக்கும். புதுசானவங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். ஆனா கஷ்டமில்லை. யார் மிஸ்டர். சங்கர் ?”, தணிகாசலம் விசாரிக்க, சங்கர் கை உயர்த்தினான்.
“நீங்க மட்டும்தான் முதல் வாட்டி ட்ரெக் செய்யறீங்க இல்லையா? எப்ப கஷ்டமா இருந்தாலும் சொல்லுங்க. நானும் பார்த்துக்கறேன்.”, என்று சொல்லவும், தலையாட்டினவன்,
“அந்த காலேஜ் பொண்ணுங்க மத்தியில பேரைக் கெடுக்கணும்னே சொல்றான் பாரு சொட்டையன்.”, வினோத்திடம் முனங்கினான் சங்கர்.
“விடு மச்சி. நீ அவங்க கூட சேர்ந்து நடந்து வா. அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க.”, கண்ணடித்துச் சொல்லும் வினோத்தை சந்தேகமாக பார்த்தான் சங்கர்.
“ம்ம்… அப்பறம் உன் பொண்டாட்டியை அதே காலேஜ் பசங்க  நாலு பேர் இருக்கானுங்களே, அவங்க பார்த்துக்குவாங்க.”, என்று சிரிக்க,
“அடப்பாவி டேய்… என்னடா துரோகம் பண்ணேன் உனக்கு ? இப்படி சொல்லி பி.பி  ஏத்தற?”, சங்கர் நெஞ்சில் கை வைத்துக் கேட்க,
“உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண யோசிக்கலையே மாப்பி, அதான் நிலவரத்தை உனக்கு சொன்னேன். இதே புனிதாகிட்ட சொல்லியிருந்தா….”
“அந்த ஃபால்ஸ்லயே தள்ளி விட்டுட்டு நானே விழுந்துடேன்னு சொல்லிருவா, ராட்சசி.”
“தெரியுதில்ல? அப்பறம் என்ன உனக்கு காலேஜ் பொண்ணுங்க கிட்ட சீனு? “
“ஹ்ம்ம்… எனக்கு பொண்டாட்டிதான் ரவுடின்னா, நண்பனும் டானா இருக்கான். கிரகம்டா சங்கரா உனக்கு.”, புலம்பிக்கொண்டே போய் புனிதாவின் அருகில் நின்று கொண்டான்.
சென்னையில் இருந்து தனி பேருந்தில் புத்தூர்  சென்று காலை உணவை முடித்தவர்கள், கொஞ்ச நேரத்தில் நாகலாபுரம் கிராமத்தை அடைந்தனர்.
“கிருஷ்ணதேவராயர் அவரோட அம்மா ஞாபகமா கட்டினது இந்த வேத நாராயணஸ்வாமி கோவில். விஜயனகர சிற்பக்கலை பார்க்கலாம். பக்தி இருக்கவங்க சுவாமியையும் வேண்டிக்கலாம். சீதேவி, பூதேவியோட, மத்ஸ்ய அவதாரத்துல இருப்பார் பெருமாள். இந்தக் கோவில் பார்த்துட்டு, இங்க கிராமத்துல எளிமையா ஒரு லன்ச் முடிசிட்டு நாம மலையேறலாம்.”, தணிகாசலம் சொல்லவும், சலசலத்துக்கொண்டே அவரின் பின் சென்றனர்.
“நீ இங்க வந்திருக்கியா வானதி?”, புனிதா கேட்க,
“இல்லை. இது எனக்கும் முதல் ட்ரிப். நீங்க திடீர்னு போகலாம்னு சொல்லவும், எங்க ட்ரெக்கிங் கிளப்ல இது சொன்னாங்க. நல்ல வேளையா இடம் இருந்துச்சு. இல்லைன்னா வீக்கெண்ட் கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம்.”, பேசிக்கொண்டே தன் காமெராவை ரெடி செய்து கொண்டாள்.
எல்லோரும் எங்கே என்று திரும்பிப் பார்த்தவள், வினோத் கோவிலின் வாசலுக்குள் வருவதைப் பார்த்து, அந்த ப்ரம்மாண்ட நுழைவாயிலுடன் அவனையும் சேர்த்து புகைப்படமெடுத்தாள்.
“அஹ்… என்ன நேர உங்க ஆளைத்தான் எடுப்பியா?”, புனிதா கலாய்க்க,
“ டெஸ்ட் போட்டோ எடுத்தேன் புனிதா…”
“ஏன்…எங்களை வெச்சு அத டெஸ்ட் பண்ணக்கூடாதா?“
“ஷ்… நீ கிட்ட இருக்க, எனக்கு தூரம் தெரியணும். இப்ப என்ன, உன் போட்டோதான, எடுக்கறேன்… போய் உன் ஹப்பி கூட காஷுவலா பேசு, அந்த இரண்டு தூண் மத்தியில. ஃப்ரேம் அழகா வரும். வெய்யில் படற மாதிரி நில்லுங்க, சரியா ?”
அங்கே பராக்கு பார்த்துக்கொண்டிருந்த சங்கரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நின்றவள், “இது ஓகேவா ?”, என்று கேட்டு உறுதி செய்துவிட்டு, சங்கரிடம் ஏதோ சொல்ல, அவனோ திருட்டு முழி முழித்தான்.
காமெரா வழியாகப் பார்த்தவள் டெலி போட்டோ லென்சில், புனிதா முகம் கடுப்பாவது தெளிவாகத் தெரிந்து, குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்னதான் நீ எக்ஸ்பர்ட் ஆனாலும், இப்படி சிரிச்சா, போட்டோ ஷேக் ஆகும் வானதி.”, வினோத்தின் குரல் அருகில் கேட்கவும், திரும்பியவள், “காஷுவலா புனிதாகிட்ட பேசச் சொன்னா உங்க ப்ரெண்டு பேய் முழி முழிக்கறார். முதல்ல காமராவைப் பார்த்து முழிச்சார், அடுத்து புனிதாவை. “, சிரிப்புனூடே அவள் சொல்லி, புனிதாவைப் பார்த்து, ‘ என்ன ரெடியா?’, என்பது போல சைகை செய்ய,  அவள் இன்னும் சங்கரை மிரட்டுவது தெரிந்தது.
“இரு.. இன்னும் கொஞ்சம் இருந்தா சண்டையாகிடும், நான் போறேன், என்னை கட் பண்ணிட்டு அவங்களை எடு.“, வினோத் சென்று சற்று தள்ளியிருந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருவரையும் சிரிக்க வைக்க,
ஒரு மண்டபத் தூணில் சாய்ந்த படி கைகட்டி நின்றிருந்த வினோத்தின் புன்னகைக்கும் பக்கவாட்டு முகமும், அவன் தலைக்கு மேலே, தூணில் இருந்து தும்பிக்கையைத் தூக்கி அவனை வாழ்த்துவதுபோல இருந்த யானை முக சிற்பமும் கவிதையாக அவள் காமெராவில் படமாகியிருந்தது.
சங்கர் புனிதா புகைப்படமும் எடுத்து முடித்து, கோவிலை சுற்றிப் பார்த்து, வணங்கிவிட்டு வந்தார்கள்.  அழகாக மூன்று கோபுரம், அதிலிருந்த பல சிற்பங்கள் என்று பலப் புகைப்படங்கள் எடுத்தாள் வானதி. அவள் சிரத்தையாக எடுத்துக்கொண்டிருக்க, வினோத் அவள் புகைப்படமெடுப்பதை  படம்பிடித்துக் கொண்டிருந்தான்.
சாம்பார் சாதம், தயிர்சாதம், பொரியல் என்று எளிய கிராமத்து சாப்பாடு உண்டுவிட்டு சற்று இளைபாறிக்கொண்டிருக்கையில், தன் மொபைலில் எடுத்த போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருந்த புனிதா சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன புனி?”, சங்கர் கேட்க,
“உங்க ப்ரெண்டைப் பார்த்தாவது லவ் பண்ண கத்துக்கலாம் நீங்க. இங்க பாருங்க.”, என்று சங்கரிடம் காட்டவும், அவள் கூறியதைக் கேட்டு வினோத்தும் வானதியும் முழித்தார்கள்.
“என்ன முழிக்கற? உங்க ஆள் கோவில் வாசல்ல வரதை சட்டுன்னு போட்டோ எடுக்கற? எங்களை எடுக்க சொன்னா, அவரை கிட்ட அனுப்பிட்டு, அவரை முதல்ல போட்டோ எடுக்கற, அப்பறம் போனாபோகுதுன்னு எங்களை எடுத்த. நான் என்ன பார்க்கலைன்னு நினைச்சியா?”, புனிதா சிரிக்க, இது எப்போது என்பது போல வினோத் அவளைப் பார்த்தான். அவன் பார்வையைத் தவிர்த்தவள், “சும்மா ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?”
“அப்படித்தான் நானும் நினைச்சேன். இங்க என் போட்டோல பின்னாடி பாரு.  நீ அந்த லேடிகிட்ட பேசிகிட்டு இருக்க, அண்ணா உன்னைத்தான் சைட்லர்ந்து பார்க்கறார்.”, அவள் போட்டோவைக் காட்ட, அது உண்மை என்றது.
“இது பாரு, அவர் தணிகா சார்கூட நின்னு சாப்பிடறார், நீ என்னை டீல்ல விட்டுட்டு அவரை பராக்கு பார்த்துகிட்டு இருக்க. இரண்டு பேரும் என்னமா சைட் அடிக்கறீங்கப்பா. நீங்களும் இருக்கீங்களே !”, என்று அவர்களைக் கலாய்த்து சங்கரைத் திட்டினாள்.
“டேய்… நீங்க கல்யாணம் முடிச்சவங்கதானே? அப்பறம் ஏன்டா லவ்வர்ஸ் மாதிரி விளையாண்ட்டு இருக்கீங்க? மச்சான்… என்னடா… காலேஜ்ல கூட இப்படில்லாம் சைட் அடிச்சதில்லையே ?”, சங்கர் கேட்க இருவருமே ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இயலாது தவிர்த்தனர்.
“அய்யோ… வானதி முகம் சிவக்குது பாருங்க. “, புனிதா சொல்லவும்
“புனிதா… சும்மா நீயா கிளப்பிவிடாத…”, என்று வானதி அவஸ்தையாகக் கூறினாள். அவளைப் பார்த்த வினோத்,
“எங்களுக்குள்ள நாங்க பார்த்துகறதுல, உங்களுக்கு என்ன ப்ரச்சனை? ஆமா, ஒரு விளையாட்டு தனியா ஓடிகிட்டு இருக்கு. பார்க்காத மாதிரி போவீங்களா… இதைப்போய் விசாரணை பண்ணிகிட்டு. “, வினோத்தின் குரலும் பார்வையும் இலகுவாகவே இருந்தாலும், இதற்கு மேல் பேசக் கூடாது என்ற செய்தி தெளிவாக இருந்தது.
தணிகாசலம் கிளம்பலாம் என்று சொல்லவும், பேச்சும் அதோடு முடிய, அனைவரும் எழுந்து கொண்டனர். அவர்கள் எல்லோரையும் முன்னே விட்டு சற்று பின் தங்கி, வானதியுடன் சேர்ந்து வந்த வினோத், “ இப்ப ஒகேவா ? புனிதா கேட்டா, ஆமா அப்படித்தான்னு சொல்ல வேண்டியதுதான?”
“நீங்க தப்பா நினைக்கப்போறீங்கன்னுதான்….”, வானதி சொல்லவும், மேற்கொண்டு அது பற்றி எதுவும் சொல்லாமல், “ சரி, அதென்ன போட்டோ எடுத்தியாமே என்னை? காமி.”, என்று கேட்டான்.
போட்டோவைப் பார்த்தவன் புன்சிரிப்புடன், “அழகா எடுத்திருக்க. நல்லா வந்திருக்கு. எனக்கு வாட்ஸப்ல அனுப்பு, டிபில வைக்கறேன்.”, என்று திருப்பிக் கொடுத்தான்.
“ சப்ஜெக்ட் அழகா இருந்தா, போட்டோ நல்லாத்தான் வரும்.”, வானதியின் பதிலில் சிரித்தவன்,
“ஓ…நான் அழகா இருக்கேன்னு சொல்றியா? அதை நேராத்தான் சொல்லேன்.”,  முகம் மலர்ந்து சொன்னான்.
“நான் சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரியாதா? எத்தனை பேர் சொல்லியிருப்பாங்க?”
இருவரும் சிரிப்புடன் பேசிக்கொண்டு தனியாக வருவதைப் பார்த்த சங்கர், “நாங்க எதுவும் பார்க்கலை, பார்த்தாலும் கேட்கலை…கேட்கலை…”, என்று வினோத்தைப் பார்த்து ஒழுங்குக் காட்டிவிட்டு பத்தடி வேகமாக முன்னே சென்றான்.
சிரித்துக்கொண்டே அனைவரோடும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும். ஒரு இனிமை மனதை நிறைத்தது. பெரிதாக பேச்சுக்கள் இல்லையென்றாலும், இருவருமாக நடப்பது நன்றாக இருந்தது. மெல்ல ஜெர்மனியில் அவன் ட்ரெக் போனதைப் பற்றி கூற, சிங்கப்பூரில் இவள் அனுபவம் பற்றிப் பேச என்று நேரம் ஓடியது.  திரும்பிப் பார்த்தால், அனைவரைவிடவும் முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் வரட்டும் என்று காத்திருக்க, சில நிமிடங்களில் பேச்சு சத்தம் கேட்டது. குழுவின் இறுதியில் மூச்சு வாங்க வந்து கொண்டிருந்தான் சங்கர். அருகில் வந்தவன்,
“டேய்..உன்னை நம்பி வந்தேன். இப்படி என்னை கழட்டி விட்டுட்டு போயிட்டியேடா.”, என்று புகார் வாசித்தான்.

Advertisement