பசுபதியின் தந்தை அன்னை.. உறவில் பெரியவர்கள் என இரண்டு பெரிய கார்களில் மட்டுமே இப்போது வந்து சேர்ந்தனர்.. அவசரம், அத்தோடு.. பசுபதி பற்றி, கந்தசாமி சொல்லியதில் புரிந்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
பசுபதி ராஜபுத்.. அவரின் தந்தை கெளவ்ரவ்ராஜ் ராஜ்புத்.. மனைவி அமுதா ராஜ்புத். முறுக்கிய மீசை.. காதில் கடுக்கன்.. தலையில் சின்ன தலைப்பாகை என அவசரமாக இறங்கி நின்றார், எல்லோரும்.
மற்றொரு காரில் அவர்களின் உறவினர்கள் ஆணும் பெண்ணுமாக.. குர்த்தா தோத்தி.. வலபக்கம் முந்தாணி போட்டு.. தலையில் முக்காடிட்ட பெண்மனிக்களுமாக இறங்கினர்.
அதிகாலை நேரம் பரபரப்பில்.. இத்தனை நேரம் காத்திருந்து உறங்கியும் உறங்காத நிலையில்.. நந்தித்தாவின் வீட்டார்கள் இவர்களை பார்த்ததும்.. அரண்டு நின்றனர்.
இளசுகள் எல்லாம் ‘ஹே வடக்கன் வாலா..’ என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
வேதாந்தன் அதிர்ந்து கந்தசாமியை பார்த்தார்.
கந்தசாமி அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று “வாங்க, வாங்க.. வாம்மா அமுதா.. எப்படி இருக்கீங்க.. எத்தனை வருஷமாச்சு..” என பேசி அமர வைத்தார் எல்லோரையும்.
சூழலை சற்று அமைதியாக்க நினைத்தார்.
இரவே பசுபதி, தான் தங்கியிருந்த அறைக்கு வந்துவிட்டான். அவன் அறை வாசலில் அவனுக்கு தெரியாமல், நந்தித்தாவின் பங்காளி பசங்க இருவர் காவலிருந்தனர்.
கந்தசாமி.. வேதாந்தனை அருகே அழைத்து அறிமுகம் செய்து வைத்தார்.. பின் நடந்தவைகளை விளக்கினார்.. ‘எனக்காக சென்றான்.. என் வருத்தத்தை போக்க போனான்.. மற்றபடி நம்ம பையன் சுத்த தங்கம்.. உன் பையனை நல்லா வளர்த்திருக்க.. அமுதா. எங்கும் ஒடலை.. ஒளிந்துக் கொள்ளவில்லை.. ஒரு பெண்ணின் நிலையை யோசித்து.. அப்படியே அமைதியாகிவிட்டான். உள்ளே இருக்கான் போய் பார்’ என்றார், அவனின் அன்னையிடம்.
கெளவ்ரவ்ராஜ் தன் பேச்சில் ஹிந்தியின் சாயல் இருந்தாலும்.. நன்றாக தமிழ் பேசினார்.. “என்ன சொல்’றாங்க” என்றார் அழுத்தமான குரலில்.
கந்தசாமி “பெண்ணுக்கு கல்யாணம் பேசியிருந்தாங்க. இனி அவளை யார் கட்டினாலும் பேச்சு வரும். மாப்பிள்ளை.. உங்களுக்கு புரியாதது இல்லை.. கல்யாணம் செய்து கூட்டி போங்க.. அதுதானே சரி. உங்களுக்கு தெரியாதது இல்லை..” என்றார்.
என்ன நடந்தது என விவரமாக சொல்லிக் கொண்டிருந்தார்..
சரியாக அப்போது பசுபதி வந்தான் கலங்கிய முகத்தோடு.
தன் பெரியப்பா சித்தப்பாக்களை பார்த்தும் வழக்கம் போல.. ஆசீர்வாதம் வாங்கினான்.
அப்படியே தன் தந்தையிடம் வந்து ஆசீ வாங்கினான்.. அவனின் தந்தை.. அவன் நிமிர்ந்ததும்.. இயல்பாக இருந்த அவனின் மீசையை இருபுறமும் தன் கைகளால் முறுக்கிவிட்டார்.. பின் ஹிந்தியில் “நிமிர்ந்து நில்லு.. என்ன முன்வாசல் வழியாகவே போயிருந்திருக்கலாம் நீ.. சரி விடு.. தைரியமா இருடா..” என அவனின் நெஞ்சில் தட்டியவர், புன்னகையோடு “என்ன போலவே அஹ.. அஹ.. தமிழ்நாட்டு பொண்ணுகிட்ட விழுந்துட்ட” என்றார் பெரிதாக சிரித்து.
என்ன புரிந்ததோ.. வந்திருந்தவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்ததும் நந்தித்தாவின் வீட்டாரின் முகத்திலும் புன்னகை வந்தது.
கந்தசாமி “வேதாந்தா..” என அழைத்தார்.. “அவங்க முறை என்னான்னு கேட்க்கலாம்.. கொஞ்சம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.. உங்க பக்கம் ஆட்களை வர சொல்லு பேசிக்கலாம்” என்றார்.
கந்தசாமியின் வீட்டில், பசுபதி வீட்டு ஆட்கள் தங்கிக் கொண்டனர்.
இரண்டு மணிநேரம் கடந்து.. காலை உணவு உண்டு முடித்து.. பெரியவர்கள் எல்லோரும் பேசி முடிவெடுத்தனர்.. இப்போது திருமண தேதி குறித்துக் கொண்டு செல்லுவது. அத்தோடு பெண் மாப்பிள்ளை இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்று வரட்டும்.. மோதிரம் மாற்றி கொள்ளவது என முடிவெடுத்தனர்.
நந்தித்தாவின் வீட்டாருக்கு அவர்களோடு பேசுவதே சங்கடமாக இருந்தது.. அமுதா நன்றாக ஹிந்தி பேசினார். தமிழில் எல்லாம் சொன்னார்.. வேதா அண்ணா.. தாமரை அண்ணி என அழைத்து சிரித்த முகத்தோடு பேசினார். அதனால், பாதி பயம் இல்லை. ஆனால், வேறு வேறு நிறைய பயங்கள் இருந்தது நந்தித்தாவின் பெற்றோருக்கு.
திருமண தேதி குறிப்பதற்கு என.. நந்தித்தாவின் பெற்றோர் ‘ஜோதிடரை அழைக்கவா’ என்க.
கெளரவ் “இல்ல.. நாங்க எங்க குருகிட்ட கேட்டுதான் செய்வோம்.. நீங்க பெண்ணின் ஜாதகம் மட்டும் கொடுங்க” என்றார். அதன்பின் எல்லாம் பசுபதியின் வீட்டாரின் வசம் சென்றது. எங்கே திருமணம்.. எப்படி நடைபெறும்.. என்ன செய்ய வேண்டும் இவர்கள்.. என்பது எல்லாம் இவர்கள் முடிவானது.
நந்தித்தாவின் வீட்டார் ஏதும் பேச முடியாமல் நின்றனர்.
பெண் பார்க்க செல்ல வேண்டும் என பசுபதியின் வீட்டார் சொல்ல.. தேவையான சாமான்கள் வாங்குவதற்கு என.. திருச்சி கிளம்பி சென்றனர் பசுபதியின் வீட்டு பெண்கள்.
அவர்கள் முறைப்படி.. மகாலக்ஷ்மிதான் தங்கள் வீட்டு மருமகள்.. அதனால், தங்கம் இல்லாமல் பார்க்க கூடாது என்பது வழக்கமாம்.. மாலையில், தங்கள் வெள்ளி.. இனிப்புகள்.. புடவை என பெரிய சீரோடு சென்று.. நந்தித்தாவை பார்த்தனர், பசுபதி வீட்டார்.
பசுபதி நடுநாயகமாக அமர்ந்திருந்தான்.
நந்தித்தா.. நேற்று போல காட்டான் புடவையில் இல்லை.. பட்டு புடவை.. அணிமணிகள் என வந்து நின்றாள். ஆனால், முகத்தில் புன்னகை இல்லை.. அதே வெறுமைதான் இருந்தது. பசுபதிக்கு புரிகிறது. அவளின் நிலையில் மாற்றமில்லை. நேற்று அவன்.. இன்று நான். ஆக அவளுக்கு எல்லாம் சிறைதான் என புரிகிறது. நீண்ட பெருமூச்சு வந்தது, ‘ஆமாம்.. இவ்வளவு யோசிக்கிரியே.. உனக்கு பிடிச்சிருக்கா அவளை?’ என கேள்வி எழுந்தது அவனுள். பசுபதிக்கு விடை தெரியவில்லை.
கந்தசாமி வந்திருந்தார் இவர்களோடு.. அவர்தான் இருவீட்டாருக்கும் பொதுவான மனிதர் இப்போது.
நேரம் பார்த்து.. தாங்கள் வாங்கி வந்த சிவப்பு துணியை.. நந்தித்தாவின் தலையில் முக்காடிட்டனர். எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க சொல்லினர். நந்தித்தா அதன்படியே செய்தாள்.
வேதாந்தன் தாமரை இருவரும்.. தயங்கி தயங்கி.. “மோதிரம்” என்றனர்.
அமுதா “ எங்கள் வழக்கமில்லை. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் இது தேவைதான். பேட்டா..” என பசுபதியை அழைத்தார்.
அமுதாவின் ஓரகத்திகள்.. தங்களின் மங்கள பாடல்களை பாட தொடங்கினர்.. பசுபதி நந்தித்தா இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அட்சதைகள் தூவினர். பொதுவாக இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். நந்தித்தா முக்காடினை எடுக்கவேயில்லை. வசதியாக அதில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
பெண்ணை உள்ளே அழைத்து சென்றனர். பெரியவர்கள் பேச தொடங்கினர். நந்தித்தாவின் உறவுகளுக்கு இப்போதுதான் திருப்தி. சீர் என.. பசுபதி வீட்டார் நிறைய செய்திருந்தனர். மனிதர்களும் நன்றாக பேசினார்.. சிரித்த முகமாக.. எல்லாம் சொல்லினர். அதுவே நிம்மதி.
உணவு பரிமாறப்பட்டது. ஆண்கள் உண்டனர்.
அமுதா, நந்தித்தாவை தேடி வந்தார்.. பசுபதி பின்னால் நின்றிருந்தான். தாமரை என்னவென பார்த்தார்.
பசுபதி “நந்தித்தாவை கொஞ்சம்.. தாத்தாவை பார்க்க அனுப்புங்களேன். பாவம் தாத்தா..” என்றான்.
தாமரை என்ன செய்வதென தெரியாமல் நின்றார். பசுபதி “அவங்க அப்பாகிட்ட கேட்டுட்டு செய்ங்க” என்றவன் சென்றுவிட்டான்.
தன் கணவனிடம் கேட்டு பெண்ணை அனுப்பி வைத்தார்.
கந்தசாமி உண்டு.. தன் வீடு வந்து சேர்ந்தார். அப்போது நந்தித்தாவும் வந்தாள்.. அவரை பார்க்க.
பொம்மு தாத்தா இருவரும் புன்னகையோடு “வாம்மா.. வா என் வீட்டு மருமகளே..” என்றார்.
நந்தித்தாவின் கண்கள் இதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீரை திறந்துவிட.. கன்னம்தாண்டி கண்ணீர்.
நந்தித்தா ஹாலில் அமராமல்.. நேராக தாத்தாவின் அறைக்கு சென்றுவிட்டாள். அங்கே, ஆனந்தனின் புகைப்படம் இருக்கும்.. இருந்தது. அதை பார்த்ததும் கண்ணீர் நின்று விட்டது. மனது பாரமானது.
தாத்தா“சாரி நந்தித்தா.. ஆனந்தன் செய்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன்னை யோசிக்காமல் விட்டுட்டான். எங்க கனவும் போச்சு.” என்றவர் அமைதியானர் சற்று நேரம்.
இப்போது நந்தித்தாவின் கண்களில் நீர்.
தாத்தா “பசுபதி.. பொறுப்பானவன். நம்பிக்கையானவன்.. நீ நம்பு. உன் நல்ல மனசுக்கு, எல்லாம் நல்லதே நடக்கும் நந்தித்தா.” என்றார்.
நந்தித்தா அமைதியாகவே இருந்தாள்.
பொம்மு “பாப்பா சந்தோஷமா இருடா. ஆனந்தன் வேற வாழ்க்கையை ஆரம்பித்துட்டான். நீயும் அப்படிதான். பசுபதி நல்ல பையன் டா.. “ என்றார்.
நந்தித்தா “அதான், என்னை பார்க்க திருட்டுத்தனமாக வந்தாரோ. போங்க பொம்மு. அவனுக்காவது, ஆனந்தன் பற்றி.. என்னை பற்றி தெரியாது. இவருக்கு எல்லாம் தெரியும், அத்தோட.. அவங்க குடும்பத்தை பார்த்தாலே பயமா இருக்கு..” என்றாள்.. கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
இப்போது பசுபதி வந்தான்.. இவர்களின் அறைக்கு. கதவு திறந்துதான் இருந்தது.. தானாக உள்ளே வந்து தாத்தாவின் அருகே அமர்ந்தான்.
நந்தித்தா எழுந்து போவதா.. இருப்பதா என தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
தாத்தா “வா பசுபதி..” என்றார்.
தாத்தாவின் அழைப்பை ஏற்று தலையைசத்தான்.
பின் பசுபதி “நந்தித்தா, நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.
நந்தித்தா இந்த வார்த்தையில் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. கரைகட்டிய கண்கள்தான்.. சிவந்து உயிரின்றி இருந்தது.. சிமிட்டாமல் அவனையே பார்த்தவள்.. ‘முடியாது’ என்பது போல.. எழுந்து விறு விறுவென நடந்துவிட்டாள் தன் வீடு நோக்கி.
பசுபதி இருவரின் முகத்தினை பார்க்க முடியாமல் எழுந்து தனக்கென இருந்த அறைக்கு சென்றான்.
இப்போது ஆனந்தன் அழைத்தான் பசுபதிக்கு.. “அண்ணா, நான் மோர்னிங் தான், வரேன்.. பிளைட் டிலே.. திருச்சி வந்திட்டு.. ஸ்டே செய்திட்டு மோர்னிங் வரேன். தாத்தா ஒகேவா” என்றான்.
பசுபதிக்கு பேசவே முடியவில்லை.. “ம்.. வா.. கிளம்பினதும் கால் பண்ணு” என சொல்லி வைத்துவிட்டான்.
பசுபதி, ப்ளான்டு பெர்சன். ம்.. நிறுவத்தின் அழுத்தங்களை சாதரணமாக சமாளிப்பான். தன்னை ஒரு திட்டமிடுதலோடுதான் நகர்த்திக் கொள்வான். எங்கும் அவனிடம் விவேகம் மட்டுமே இருக்கும். இவனிடம் டேலி ஆகாத கணக்குகள் இருக்காது. முதல்முறை.. இப்படி எந்த திட்டமிடுலும் இல்லாத தன் முக்கிய முடிவு.. இப்போது தன்கைகளில் இல்லாமல் இருப்பது.. தடுமாற்றத்தை கொடுத்தது. ஜன்னல் வழி வானத்தை வெறிக்க தொடங்கினான்.
அதிகாலையில், பசுபதியின் அன்னை தந்தை உறவுகள் எல்லோரும் கிளம்பினர்.
பசுபதி, இங்கே வந்ததன் காரணமே.. ஆனந்தனை வரவேற்பதுதானே. இப்போது ஆனந்தன் விஷயம் பழைய கதை ஆகி.. பசுபதி கதை புதிதானது அந்த தெருவில்.
ஆனந்தன், தன் புது மனைவி குடும்பத்தோடு பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தான்.
தாத்தாவின் முகத்தில் நேற்று வரை இருந்த சங்கடம் இல்லை. தன் பேரனை இன்முகமாகவே வரவேற்றார். பசுபதி அமைதியாக எல்லோரின் பேச்சுகளையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
மதியம் விருந்து நடந்தது. எல்லோரும் உண்டு சற்று ஓய்வெடுக்க என சென்றனர்.
மீண்டும் அவனே “நான் நினைக்கவேயில்ல ண்ணா.. தாத்தா வருத்தப்படுவார்ன்னு நினைத்தேன். சூப்பர் அண்ணா, என்ன பேசுன..” என்றான் ஆரவாரமாக.
பசுபதி ஏதும் பதில் சொல்லவில்லை.
ஆனந்தன் “ஏதாவது பேசுண்ணா, என்ன ஆச்சு கௌவ்பாய்.. என் மேல கோவமா” என்றான்.
பசுபதி “இல்ல.. எனக்கு வேலை நிறைய இருக்கு.. நான் கிளம்புகிறேன். இனி நீ பார்த்துக்கோ. ம்” என்றான்.
ஆனந்தன் “ஏன் பையா.. ப்ளீஸ் இருங்களேன்..” என்றான், அவனின் கைகளை பற்றிக் கொண்டு.
பசுபதி ஆனந்தனை இமைக்காமல் பார்த்தான் இப்போது. அவனின் முகத்தில் எந்த குற்றயுணர்ச்சியும் இல்லை.. சந்தோஷம் நிரம்பி வழிந்தது. பசுபதிக்கு, அன்று.. பிரம்மை பிடித்தவள் போல.. அமர்ந்திருந்தவளின் முகம்தான் நினைவில் வந்தது சட்டென. தலையை உலுக்கிக் கொண்டான்.. பசுபதி, அவனின் பிடியை நாசூக்காக விலக்கிவிட்டு.. வெளியே சென்றான் பேக்’வோடு.
தாத்தா பொம்முவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் பசுபதி.
ஆனந்தினை பார்க்க வந்த தெருவாசிகள்தான் நடந்ததை சொல்லினர். தாத்தாவும் பொம்முவும் ஆமாம் என்பது போல நின்றனர்.
ஆனந்தன் எப்படி உணர்ந்தான் என தெரியவில்லை. இப்போதுதான் அவனுக்கு நந்தித்தா பற்றியே நினைவே வருவது போல இருவரிடமும் “பேசனும்ன்னு நினைச்சேன். என் பிரென்ட் அவ, எல்லாத்தையும் புரிஞ்சிப்பா.. அ..வளுக்கு.. பசுபதி அண்ணா கூட கல்யாணம்.. சூப்பர்..” என்றான்.
தாத்தாவும் பொம்முவும் ஏதும் பேசாமல் நகர்ந்து போக்கினர்.
பத்துநாட்கள் ஆனந்தன் குடும்பம் இங்கே தங்கினர். தாத்தா ஒருநாள் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தார். நல்லவிதமாக வழியனுப்பி வைத்தார் அவர்களை.
ஆனந்தன் தினமும் பசுபதிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். ஒருமுறை கூட பசுபதி அவனின் அழைப்பை ஏற்கவில்லை.
ஆனந்தன், பசுபதிக்கு.. வாழ்த்துக்கள்.. நான் கிளம்புகிறேன் என செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு கிளம்பினான்.
நாட்கள் கடந்தது,
திருமணம் சென்னையில் என முடிவானது.
பெண்வீட்டார்.. அங்கே வந்து தங்க ஏற்பாடுகள் நடந்தது.
நந்தித்தா சென்னை வந்தாள்.
பசுபதியின் வீட்டார் தங்களின் பழக்கத்திற்கு என.. நந்தித்தாவை பழக்கினர். உடைகள் அணிமணிகள்.. என அவளுக்கு தங்களின் பழக்கப்படி எடுத்தனர். எங்கும் ஹிந்தி. நந்தித்தா திணறினாள். பேச்சுகள் புரிவதே இல்லை. ‘என் ஊரில்தான் இருக்கிறேன்.. ஆனாலும் வேறு எங்கோ இருக்கும் பீல் வருது’ என அழுகையாக வந்தது.
எல்லோருக்கும் தமிழ் தெரியும். நிறைய உறவுகள் இங்கேதான் இருந்தனர். ஆனால், விட்டுக் கொடுக்காமல் ஹிந்தியில் பேசிக் கொண்டனர். அதனால் பயம் பெண்ணுக்கு.
அவளின் வருங்கால மாமியார்தான், நந்தித்தாவின் முகம் பார்த்து “இதெல்லாம் முறைக்கு மட்டும்தான் நந்தித்தா. தினப்படி நாட்களில் நீ எப்போதும் போல இருக்கலாம்.. நீ பயப்படாத, எல்லோரும் ரொம்ப அன்பானவங்க..” என்றார்.
நந்தித்தா ஆசுவாசமாக மூச்சுவிட்டாள்.. இவரின் தமிழ் வார்த்தையில்.
இந்த கலாட்டாக்களில் எங்கும் பசுபதி வரவேயில்லை. எந்த உடைகள் எடுக்கவும்.. வேறு பொருட்கள் வாங்கவோ.. எதற்கும் அவன் வரவில்லை. அவனின் தம்பி பிரகதீஷ் கூடவே இருந்தான்.. “பாபி.. பாபி” என அழைத்துக் கொண்டு.. கொச்சை தமிழ் பேசிக் கொண்டு.. இவளின் விருப்பம் கேட்டு உடைகள் தேர்வு செய்து.. இல்லையெனில்.. எல்லோரிடமும் பேசி.. வேறு எடுத்து என.. கனிவாக கூடவே நின்றான். இப்போது கல்லோரி இரண்டாம் வருடம் படிக்கிறான். கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்.