தலைகீழ் நேசம்

15

திவ்யா, பசுபதி தன் அழைப்பினை இரவு வரை ஏற்காததால்.. இரவில் தன் காரில் கிளம்பிவிட்டாள் சென்னை நோக்கி. திவ்யா தனியாக வசிக்கிறாள் கிருஷ்ணகிரியில். மூன்று நாட்கள் இங்கே இருப்பாள்.. பின் பெங்களூர்க்கு தன் வீட்டுக்கு சென்றுவிடுவாள். அவளின் தந்தையின் கெடுபிடியால் கிளம்புவாள்.

நந்தித்தா உறங்கிக் கொண்டிருந்தாள். பசுபதி எழுந்துக் கொண்டான். 

அவன் எழுந்தது முதல், போனை தொடவில்லை. நேற்றிலிருந்து போனை கண்டு அஞ்சி இருந்தான் எனலாம். 

நான்குநாட்கள் உடற்பயிற்சி செய்யாததால் இன்று.. தொடங்கிவிட்டான். நேற்று நடந்தவைகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது, தன்போல. ஆனாலும், விடாமல் தன் பயிற்ச்சியை தொடர்ந்தான்.

சற்று நேரம் அமர்ந்தான்.. அப்போதுதான் அலைபேசியை கையிலெடுத்தான்.

போன் திரையை தொட்டதும்.. திவ்யாவிடமிருந்து விடுபட்ட அழைப்புகளும்.. குரல்வழி செய்திகளும் வந்து குவிந்திருப்பது தெரிந்தது.

சரியாக மனையாள் எழுந்து வந்தாள் இப்போது.

காபி எடுத்து வந்து.. தனக்கும் கணவனுக்கும் கப்பில் மாற்றிக் கொண்டு.. அமர்ந்தான், கணவன் அருகில். நந்திதாவிற்கு, கணவன் இரவில் தன் பெயரை சொல்லியது அத்தனை ஆனந்தம். அத்தோடு, தன்னுடைய நல்ல செய்தியை சொல்லவும் நேரம் பார்த்திருந்தவள் ஆனந்தத்தோடு.. கணவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

பசுபதிக்கு, திவ்யாவின் கணக்கில்லா அழைப்பினை பார்த்ததும் பதற தொடங்கிவிட்டது.

மனையாள் பற்றி அவன் யோசிக்கவே இல்லை. அவள் அருகில் அமர்ந்ததையோ.. அவள் முகத்தையோ பார்க்கவில்லை.. கொடுத்த காபியை வாங்கி பருக தொடங்கினான்.

நந்தித்தா “பதி.. பதிதேவ்..” என அழைத்தாள், பசுபதி போனில் கவனமாகவே இருந்தான். 

மனையாள் “என்னை பாருங்க” என்றாள். கொஞ்சம் சத்தமாக.

பசுபதி “இரு நந்தித்தா..” என்றான் எரிச்சலாக.

நந்தித்தா அமர்ந்திருக்க, கணவன் எழுந்துக் கொண்டான். காபி கப்’பினை.. கிட்செனில் சென்று வைத்தவன்.. அங்கேயே நின்று திவ்யா அனுப்பிய குரல் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தான். அவள் நடு  இரவுக்கு மேல் அனுப்பிய செய்தியில்.. ‘நான் சென்னை வரேன் பஷூ.. ப்ளீஸ் பிக்கப் மை கால்..’ என இருந்தது.

இப்போது கடைசியாக.. அவள் அரை மணி முன்பு அழைத்திருக்கிறாள்.

பசுபதி அரண்டுவிட்டான்.. தன் தலையை ஒற்றைகையால் பிடித்துக் கொண்டான். ‘கிளம்பியிருக்கிறாள்.. எப்படி முடியும்.. சென்னை வந்திருப்பாளோ.. என்ன செய்வது.. எப்படி வந்தாள்.. அவங்க வீட்டில் யாரும் கேட்கமாடான்களா’ என உள்ளே ஓட..

நந்தித்தா இப்போது வந்தாள் கணவனின் அருகில் “பதி, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு.. இங்க பாருங்க” என்றாள்.

பசுபதி வெறுமையாக மனையாளை ஏறிட்டான்.. அவனுக்கு மனையாள் பேசியது அரைகுறையாகதான் காதில் விழுந்தது. என்ன செய்வது ‘நண்பன் சொன்னது போல.. அவளிடம் முன்பே பேசியிருக்கனும்.. இப்போது வந்திருப்பாளோ.. வந்திருந்தாள் இந்நேரம் கால் வந்திருக்குமே.. அவனை பேச சொல்லலாமா’ என நினைக்க நினைக்க.. திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது இப்போது.

பசுபதி அதில், மனையாளை அதிர்ச்சியாக பார்த்தான்.

நந்தித்தா கணவனின் பதிலுக்காக காத்திருந்திருந்தவள்.. கணவனின் அதிர்வில், யார் அழைப்பது என இயல்பாக அவனின் போனினை எட்டி பார்த்தாள்.

பசுபதி அவசரமாக அதனை மறைத்தான்.

பெண்ணவள், அவன் மறைத்ததில்  இயல்பு போல  கணவனையே பார்க்க..

பசுபதி கோவமாக “என்ன வேண்டும் நந்தித்தா” என்றான்.

இப்போது மீண்டும் அவனின் அலைபேசிக்கு.. திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

நந்தித்தா, கணவனின் முகம் பரபரப்பாவதை கவனித்து “யாருங்க.. என்ன” என கேட்டுக் கொண்டே போனினை எட்டி  பார்த்தாள் யார் அழைப்பது என.. ‘திவ்யா’ என பெரிய எழுத்தில் திரையில் ஒளிர்ந்தது.

மனையாள் எட்டி கொண்டு பார்ப்பதால்.. பசுபதி கலவரமானான் “ஒண்ணுமில்ல.. நான் பேசிட்டு வரேன்” என போனோடு தனியாக சென்றான்.

நந்தித்தாவிற்கு, அதிர்ச்சியான யோசனை. கணவனை பார்க்க அவனோ, அல்சால்ட்டாக போனோடு போகிறான் என தோன்ற.. முகம் வாடி போக.. பால்கனிக்கு போய் நின்றுக் கொண்டாள், பெண்.

பசுபதி போனோடு பாத்ரூம் சென்றுவிட்டான்.

நந்தித்தாவிற்கு உலகத்தில் இருக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களும் அவளுள் புகுந்துக் கொண்டது. ‘அப்போ.. அந்த பெண்ணோடு இவர் இன்னமும் தொடர்பில் இருக்கிறாரா.. என்னோடு எப்படி வாழ்ந்தார்.. பொய்யாகவா? அந்த கோவம் பொய்யா.. கோவம் வரும் இடத்தில் குறை இருக்காது என்பார்களே.. என்னை அவன் கோவத்தால் சுட்டது உண்மையெனில்.. எப்படி இப்படி நடப்பான்.. ஐயோ.. குழந்தை..’ என தன் வயிற்றை தடவிக் கொண்டு.. உள்ளே ஹாலுக்கு வந்தாள்.

எல்லாம் புரிந்த நிலை. ஆனால், நடந்தவைகளும் இப்போது நடப்பவைகளும் சரியாக பொருந்தாதது போல அவளுள்.. சுழற்சி ‘ஓ ஏமாற்று என்பது இதுதானோ.’ என நிதர்சனம் புரிய.. பெண்ணவளின் அடிவயிற்றில்.. சுளீரென வலி.. தொடங்கியது. அது மெல்ல முதுகில் பரவி.. மேல்வயிறு வரை நீள தொடங்கியது.

திவ்யாவின் அழைப்பினை ஏற்றவனுக்கு பேரதிர்ச்சி.. திவ்யா உடைந்த குரலில் “பஷூபதி,  எப்படி இருக்க.. என்ன ஆச்சு.. ஏன் அங்கிருந்து சொல்லாமல் வந்துட்ட..” என அடுக்கடுக்காக கேள்விகள்.. அத்தோடு கேவலும் கூட.

பசுபதிக்கு தேவையான அன்பு இது. ம்.. அவனுக்கென துடிக்க யாருமில்லையே என எண்ணியிருந்தான்.. சில மாதங்களுக்கு முன்வரை. அவன் தலை சாய்ந்துக் கொள்ள எண்ணும் போதெல்லாம் அவனோடு யாரும் இருந்ததில்லை. அவனின் ஆகசிறந்த நண்பர்கள் எப்போதும் பாரில் சந்தித்துக் கொள்பவர்கள்தான். மற்றபடி அவனின் இறுகிய முகத்திற்கும்.. எப்போதும், அளந்தும்.. கடினமாக பேசும் குணத்திற்கும்… யாரும் அவனோடு நண்பன் என நீண்ட தூரம் பயணித்ததில்லை. இப்போது திவ்யாவின் வார்த்தைகள் தனக்கு சொந்தமில்லையே என்ற எண்ணத்தை கொடுக்க.. தன் தலையை கோதிக் கொண்டு.. தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

பசுபதி “திவி.. திவ்யா.. அமைதியா பேசு. ஏன் இப்படி அழற.. எனக்கு சென்னையில் கொஞ்ச வேலை, அதான் வந்துட்டேன். ஜூனியர்ஸ் கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன், ஏன் அவங்க உன்கிட்ட சொல்லையா” என்றான் அதிஇயல்பான குரலில்.

திவ்யா “இல்ல, எனக்கு உன்னை பார்க்கணும் உடனே வா.. நான் அசோக் நாகரில் நிற்கிறேன். வா..” என்றாள்.

பசுபதி “என்ன, எங்க” என்றான்.

மீண்டும் திவ்யா “சென்னை வந்துட்டேன் பஷூ.. எனக்கு உன்னை உடனே பார்க்கணும், வா.. ப்ளீஸ்” என்றாள்.

பசுபதி கோவமாக வந்தது. துவண்டு போனான். 

திவ்யா “வரியா” என்றாள்.

பசுபதி “ஏன் திவ்யா இப்படி பண்ற.. உன்னை உங்கள் வீட்டில் தேடமாட்டாங்களா” என்றான், வருவித்துக் கொண்ட இயல்பான குரலில்.

திவ்யா “எல்லாம் தேடுவாங்க.. நான் உன்னை பார்த்துட்டு.. கிளம்பிடுவேன்.. வா மதியம் நான் கிளம்பி போகனும்.. வா பஷூ” என்றாள்.

இந்த அன்பா.. அடக்குமுறையா.. என  புரியவில்லை அவனுக்கு. ‘வாழவும் முடியலை.. சாகவும் முடியலை.. என்னால’ என அப்படியே அமர்ந்தான்.

திவ்யா அழைப்பினை துண்டித்தாள்.

பசுபதிக்கு நிதானமான கோவம்.. அத்தோடு ஒரு எரிச்சல் மண்டையில் ஏறிக் கொண்டது. நிதானமாக மிக நிதானமாக கிளம்பினான்.. என்னமோ திவ்யாவின் பேச்சினை செய்கைகளை ஆராய்ந்துக் கொண்டே கிளம்பினான்.

திவ்யா அழைக்க தொடங்கிவிட்டாள்.

பசுபதி அவளின் அழைப்பினை ஏற்று “திவ்யா வரேன்” என்றான், கடுமையான குரலில்.

திவ்யா “ஏன் பஷூ கோவமா பேசுற..” என்றாள்.

பசுபதி “கோவமா பேசாமல்.. எனக்கு வேலை இருக்கு திவ்யா.. நீ எதுக்கு வந்த இப்போ” என பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்தவன்.. மனையாளை பார்த்தும் அவசரமாக அழைப்பினை துண்டித்துவிட்டான்.

நந்தித்தா கணவனின் வரவிற்காகவே காத்திருந்தாள்.

பசுபதி இப்போது மனையாளின் சோர்ந்த தோற்றம் பார்த்து “நந்து” என்றான், அக்கறையாக.

மனையாள் “கூப்பிடாதீங்க அப்படி..” என்றாள்.

பசுபதி “ஹே.. என்ன” என அழைத்துக் கொண்டே  இயல்பாய் அவள் அருகில் நெருங்கினான்.

நந்தித்தா எழுந்தாள், முகமெல்லாம் சிவந்து போகிற்று.. கணவனின் அலட்சிய அழைப்பில் “என்ன.. என்ன? என்னை பார்த்தால் அலட்சியமா தெரியுதா.. நான் நேற்றிலிருந்து வெயிட் பண்றேன்.. உங்கிட்ட பேசனும்ன்னு.. நீங்க, ஜாலியா கிளம்பிட்டீங்க.. என்ன ஏதுன்னு கேட்டீங்களா” என்றவளுக்கு வலி அதிகமாக.. அப்படியே அமர்ந்தாள்.

பசுபதிக்கு அவளின் வாடிய முகமும்.. இப்படி கோவமாக பேசுவதும் புதிதாக இருக்க அருகில் நெருங்கி “நந்து.. சாரி.. சொல்லு” என்றான் குனிந்து அவளின் உச்சி வருடி..

மனையாள் தள்ளி அமர்ந்தாள் “ப்ளீஸ்.. தள்ளி நில்லுங்க.” என்றாள், படபடவென பேசினாள்.

பசுபதிக்கு நிதானம் பறந்தது “என்ன பிரச்சனை உனக்கு, அதான் என்னான்னு கேட்க்கிறேனே” என்றான்.

நந்தித்தா “அதான் நானும் கேட்க்கிறேன்.. என்கிட்டேயிருந்து மறைந்து யார்கிட்ட பேசுறீங்க..” என்றாள் அவளுக்கு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பசுபதி தலையை கோதிக் கொண்டான் ‘என்னிடம் இப்படி எல்லாம் பேசமாட்டாளே.. பார்த்திருப்பாளோ..’ என சிந்தனை.

நந்தித்தா “என்ன அமைதியா இருக்கீங்க” என்றாள்.

பசுபதி “யாருமில்ல ஆபீஸ் கால்ஸ்.. நீ சொல்லு” என தணிந்த குரலில் அவளிடம் கேட்டான்.

மனையாள் “அதெல்லாம் இல்லை, நான் திவ்யா பேர் பார்த்தேன்” என்றாள்.

பசுபதி ‘எந்த சூழ்நிலையிலும்.. தன்னைபற்றி பகிர்ந்ததேயில்லை அவளிடம்.. இப்போது திவ்யா என பெயர் சொல்றா’ கொஞ்சம் அரண்டு போனான்.

இப்போது திவ்யாவிடமிருந்து மீண்டும் அழைப்பு.. பசுபதி பார்க்காமலே அந்த அழைப்பினை கட் செய்தான்.