Advertisement

கல்யாணம்.2

மொத்த குடும்பமும் பொண்ணு பார்க்க கிளம்பி காரில் சென்றுக் கொண்டிருந்தது.

  “ஏ சர்மி அடுத்த வாரம் தம்பிக்கு பொண்ணு பார்க்க போறப்ப கட்டிக்க  உன்ற கிட்ட கட்றதுக்கு புது சேலை இருக்கா?” 

“புது சேலை இல்லக்கா…  இருக்கிறதுல தான்  ஒன்னு கட்டிக்கணும்..”  என்றதும்

 பெரிய அக்கா மகன் “அப்போ மாமாவுக்கு இந்த பொண்ணும் அமையாதுனு சொல்றிங்க… அப்படித்தானே சித்தி…?” என வாய் விட்டு கேட்டே விட்டான்.

“நாங்க எப்போடா அப்படி சொன்னோம்…”

“நீங்க சொன்னதுக்கு அதுதான் அர்த்தம் சித்தி…”

“நல்லகாரியத்துக்கு போகும்போது இப்படித்தான்  அபசகுனமா பேசிட்டு வருவியா…?” பெரிய அக்கா மகனை திட்டினார். 

 “இவன் கிடக்கிறான் விடு சர்மி.   ஏற்கனவே   கட்டின சேலையை திரும்ப கட்டுனா நல்லாவா இருக்கும்?”  திரும்ப சேலை எடுப்பதில் வந்து நின்று விட்டாள்.

“வேற என்னக்க பண்றது என்ற கிட்ட புது சேலை இல்லையே…” 

“சரி  சர்மி ரெண்டு பேரும் ஒரு பத்து சேலை ஆர்டர் போடுவோமா…?”

இருவரும் பேசுவதை கேட்ட அவளுடைய புருசன் “கொஞ்சநாள் முன்னாடி  தானேடி புது சேலை வாங்குன… அதுக்குள்ள எதுக்கு இப்போ சேலை…”

“அதெல்லாம் கட்டிட்டேன் ங்க… அடுத்த வாரம் தம்பிக்கு பொண்ணு பாக்க போறப்ப கட்டறதுக்கு ஏங்கிட்ட வேற புது சேலையே இல்லைங்க.. அதான் ஆர்டர் போடறேன்…” என்றதும்,

முன்னாடி உட்கார்ந்திருந்த சேது தன் அக்காங்களை திரும்பி பார்த்து ‘அடி பாவிங்ளா… இவளுங்க எனக்கு கடைசி வரையிலும் கல்யாணம் பண்ணவே விடமாட்டாளுங்க போலையே…?’என புலம்பினான்.

“என்னமோ பண்ணு ஆனா காசுக்கு என்றகிட்ட வந்துடாத… மாத கடைசி நானே டிவூ எப்படி கட்டுவது முழிச்சிட்டு இருக்கேன்…”

“நீங்க ஒன்னும் தர வேண்டாம் என்ற தம்பி தருவான்…” என்றாள்.,

சேது சடாரென திரும்பி பார்த்து “எதே… பத்து சேலையா? அப்போ இன்னும் ஆறு மாசத்துக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வைக்கிற ஐடியா உங்களுக்கு இல்லை… அப்படித்தானே?” 

“அது அப்படி இல்ல டா தம்பி அக்காவுக்காக ஒரு  10 சேலை கூட  எடுத்து தர மாட்டியா…” பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 “நீ எப்படி சீன் போட்டாலும் என்றகிட்ட  சல்லி பைசா  கிடையாது… சொல்லிட்டேன்…”

உடனே அம்மாவை பார்த்தவள் “பாருங் ம்மா உன்ற மகன் எங்களுக்கு சேலை எடுத்து தரக் கூட கணக்குப் பார்க்கிறான்…”

“எங் கண்ணு அதான் புள்ள  ஆசைப்படுதில்ல… சேலை தானே எடுத்துக் கொடுத்து போடு… புள்ள போக்கும் போயிரும்… காசு கூட பத்துலைனா சொல்லு அம்மா தரேன்..”

“ஏனுங் ம்மா இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா? நான் போன வாரம் செலவுக்கு காசு கேட்டதுக்கு என்றகிட்ட காசு இல்ல டா னு சொன்ன… இப்ப மட்டும் எங்க இருந்து காசு வந்தது?”

“எப்படியோ வந்தது அது எதுக்கு உனக்கு புள்ளைங்க கேட்டத மட்டும் வாங்கி  கொடு… அம்புட்டுதான் சொல்லிப் போட்டேன்…”

“எல்லாம் என்ற நேரம் வாங்கித்தரேன் போதுமா ம்மா…?” 

மச்சான் சேலை எடுத்து தரேன் ஒத்துக்கொண்டதும் தான் மாமன் இருவருக்கும் நிம்மதியே வந்தது.

 “இந்த மாசம் எப்படியோ தப்பு தப்பிச்சுட்டோம் தம்பி…” 

“ஆமாங் அண்ணா… நம்ம மச்சான் இருக்க வரையிலும் நமக்கு கவலை இல்லை…” இருவரும் மெல்ல பேசிக்கொண்டே வருவதை கேட்ட சேது “அப்போ கடைசி வரையிலும் என்ன விட்டு போறதா இல்லை அப்படித்தானே மாமா?” 

“மச்சான் தயவு இருந்தால் மலை ஏறலாம்னு அந்த காலத்திலேயே சொல்லி இருக்காங்க  மாப்பிள்ளை…”

“இதுக்கும் நீங்க என்ற வூட்ட வுட்டு போகாத தற்கும் என்னங்க மாமா சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்கு மாப்பிள்ளை… 

உன்ற அக்காகூட குடும்பம் நடத்தறதே செங்குத்தான மலை ல ஏற  மாதிரிதான்…”

“நல்லா பேசுறீங்க மாமா…”

“இல்லைனா உங்க அக்காவ எல்லாம்  வச்சி சமாளிக்க முடியுமா?”

திடீரென அவனுடைய பெரியக்கா “டேய் தம்பி காரை செத்த  நிறுத்துடா…” என்றாள்.

“இங்க எதுக்கு நிறுத்த சொல்ற க்கா…?”

“ஏதும்  வாங்காம சும்மா வெறுங் கையோடவா பொண்ணு வூட்டுக்கு போக முடியும்? நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?” என்றவள் அவன் பாக்கெட்டில் இருந்து 2000  ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு சென்றாள். 

 பை நிறைய பூ பழம் ஸ்வீட் அனைத்தையும்  வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறினாள்.

அவள்  ஏறியதுமே பையில் எடுத்து  ஸ்வீட் பாக்ஸை பிரித்து குடும்பம் மொத்தமும் சாப்பிட ஆரம்பித்து விட்டது.

‘பொண்ணு வீட்டுக்கு போய் சேர் அதுக்குள்ளேயே எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க போலயே… இதுக்குத்தான் என்ற பெரிய அக்கா அம்புட்டு பாசமா என்ற பேர சொல்லி வாங்கிட்டு வந்தாளா அதான பார்த்தேன்…’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டே வந்தான். 

பொண்ணு வீட்டுக்கு போய் சேரும் வரை காரில் கலகலப்புக்கு  பஞ்சமில்லாமல் இருந்தது.

பொண்ணு வீட்டு  வாசலில்  கார் போய் நின்றது.

அவர்களை வரவேற்க வாசலிலே காத்திருந்த பெண்ணின் அப்பாவும் அம்மாவும் எல்லாரையும் வரவேற்றனர்.

“வாங்க வாங்க.. சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து வந்துட்டீங்க போல…”   பெண்ணின் அப்பா கேட்டார்.

சக்ரவர்த்தி “சொந்தக்காரங்க எல்லாம்  இல்லைங்க… நாங்க எல்லாருமே ஒரே குடும்பம் தான்…   இவங்க நாலு பேரும் என்ற பொண்ணுங்க… அவங்க மாப்பிள்ளைங்க… பேரன் பேத்தி எல்லாரும் வந்துருக்கோம்ங்க…” என்றதுமே,

 பெண்ணின் அம்மா புருஷனை பார்த்து முறைத்தார்.

அவருக்குமே அதிர்ச்சிதான் ‘ப்ரோக்கர் ஒரு பையன் தான் சொல்லி இருந்தான்…’ என சந்தேகமாக கேட்டார்.

“பையன் ஒன்னு தானுங்க… பொண்ணுதான் நாங்க நாலு பேர்ங்க… எங்க எல்லாரையும் பக்கத்திலேயே வச்சி பாத்துக்கோணும்னு  என்ற அப்பா சொந்தத்துல ஊருக்குள்ளேயே குடுத்து போட்டாருங்க… நாங்களும் எங்க வூட்ல இருக்கறத விட என்ற பொறந்த வூட்ல இருக்கறது தான் அதிகம் ங்க…  காத்தால போணோம்னா ராத்திரி சாப்ட்டு முடிச்சு போட்டு தானுங்க எங்க வூட்டுக்கே போவோம்… என்ற தம்பி மேல அம்புட்டு பாசம் வெச்சிருக்கோம்ங்க… அவனும் அப்படித்தான் ங்க… என்ற தம்பி நாங்க கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டானுங்க…” 

பெரியக்கா சொன்னதை கேட்டு பெண்ணின் அம்மா புருஷனை முறைத்து  பார்த்தவாறே ‘அடப்பாவி மனுசா என்ற மகளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பனு பார்த்தா பாலும் கிணத்துல புடிச்சி தள்ள  பாத்துருக்கியே உள்ள வா உன்னை வச்சிக்கிறேன்…’ மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தார்.

‘அவங்களே கொடுக்கலாம்னு யோசிச்சாலும் இவளுங்க விட மாட்டாளுங்க போகலையே டேய் சேது நீ   காவி வேஷ்டி கட்றது கன்ஃபார்ம் தாண்டா…’ என தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டான்.

பத்தாதற்கு அவனின் அம்மா “நல்லது கெட்டது எல்லாமே என்ற பொண்ணுங்க தானுங்க பாத்துக்கறாங்க… எங்களுக்கும் வயசு ஆகிப்போச்சுல ங்க…   அதான் எங்க பொறுப்பை எல்லாம் என்ற மகளுங்க கையிலேயே கொடுத்து போட்டேனுங்க…” பெருமையாக சொல்கிறேன் என்று சேதுவின் அம்மா பெண் வீட்டாரை வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே பயமுறுத்தி விட்டார். 

“இதெல்லாம் இப்போ  உன்ற கிட்ட  ஆராவது கேட்டாங்களா… கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருந்தா போதும் போதும் டி… ஒரு பக்கம் உன்ற மகளுங்க எதையாவது பேசி கெடுத்து விடுறாளுங்கனா மறுபக்கம் நீ கெடுத்து விடற… உன்ற பையனுக்கு கல்யாண ஆகணும்னு நினைக்கிறியா இல்லையா? கொஞ்ச நேரம் பேசாம வா…” மனைவியிடம் எறிந்து விழுந்தார் சக்கரவர்த்தி.

பெண் வீட்டாரின் முகத்தினை பார்த்த அவனுடைய சின்ன அக்காவின் வீட்டுக்காரர் “மாப்பிள இந்த சம்பந்தமும் உனக்கு அமையாது… பேசாம இப்பவே கிளம்பிடுவோம்” என்றான்.

“அது எனக்கும் தெரிஞ்சு போச்சு மாமா… அங்கிருந்து பெட்ரோல் செலவுக்கு ரெண்டாயிரம்…  பூ பழம்னு  ரெண்டாயிரம்  4 ஆயிரம் செலவு பண்ணி வந்ததுக்கு  பொண்ண பாத்து சைட் அடிச்சுட்டாவது வாரேன் மாமா..”

“கடைசி வரையிலும்  பொண்ண பார்த்து சைட் மட்டும்தான் மாப்பிள்ளை அடிக்க முடியும்.” என்று கலாய்த்தான்.

பெண் வீட்டார் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

உள்ளே சென்றதும் பெரியக்கா வாங்கி வந்திருந்த பூ பழத்தை பெண்ணின் அம்மாவிடம் கொடுத்தாள். 

பையை வாங்கிக் கொண்ட பெண்ணின் அம்மா கணவனை பார்த்து உள்ளே வா என சைகை காட்டி விட்டு சென்றார். அவரும் மனைவி பின்னாலே சென்றவர் நேரம் கழித்து மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தார்.

அவரின் முகத்தைப் பார்த்தாலே பொண்டாட்டியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்தது.

நேரம் கழித்து அவரின் மனைவி     மகளிடம் டீ யை கொடுத்து விடாமல் அவரை கொண்டுவந்து கொடுத்தார்.

“என்ன மாமா இப்படி செலவு பண்ணி வந்ததுக்கு பொண்ணக் கூட கண்ணுல காட்ட மாட்டாங்க போல…”  மாமாவிடம் கேட்டான்.

“அப்படித்தான் தெரியுது மாப்ள… சரி இனிமே எதுக்கு இங்க உட்கார்ந்து கிட்டு… அவங்களே நம்மள கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளுறதுக்குள்ள   வா நாம வெளிய போவோம்…” என கூறியதும் ஆண்கள் எல்லாரும் வெளியே செல்ல எழுந்தனர்.

ஆதி அக்கா “எல்லாம் எங்க எங்க போறீங்க இருங்க பொண்ணு பார்த்துபோட்டு போகலாம்” என்றாள்.

“இவ்வளவு நடந்திருக்கு அப்புறமும் உன்ற அக்கா பொன்ன காட்டுவாங்கனு நம்பிட்டு இருக்காளே…” என ரெண்டாவது மாமா  மச்சினனிடம் கலாய்த்து விட்டு

 “நாங்க எதுக்கு பொண்ணு நீங்க பாத்துட்டு வாங்க என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார். அவருடன் மற்ற மாமன்களும் சென்றதும் சேதுவும் செல்ல போனான்.

“நீ எங்கடா போற…?” பெரியக்கா கேட்டதும்,

“ஒரு அர்ஜென்ட் போன் பண்ணனும் பேசிட்டு வந்துடறேன்… நீங்க பேசிட்டு இருங்க க்கா…” என்றுவிட்டு   வெளியே சென்றுவிட்டான்.

“என்ற தம்பி பெரிய கம்பெனியில வேலை செய்யறான்ல… அதான் ஆபீஸ்ல இருந்து ஏதாவது முக்கியமா பேச போட்டிருப்பாங்க கூப்பிட்டு இருப்பாங்க… வந்துருவான்…” என சமாளித்தார்.

அது அவன் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் வெளியே ஓடி வந்து விட்டான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே இருந்து எல்லாரும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தனர்.

 பெரிய அக்கா “இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது தம்பி…” 

‘செட்டாகற மாதிரி இருந்தா மட்டும் விடவா போறீங்க?’ என நினைத்துக் கொண்டவன் 

“ஏனுங் க்கா?” என்றதும்

லஷ்மி “அந்தப் பிள்ளை வாய் ரொம்ப   பேசுது டா.. இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு செட்டாகாது…” என்றாள்.

சேது உள்ளுக்குள் திட்டிக்கொண்டே  “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் க்கா”  என்றான்.

உடனே சேதுவின் பெரிய மாமா திரும்பி  அக்கா தங்கை நால்வரையும் பார்த்து விட்டு   ‘இவளுங்க என்னமோ கம்மியா பேசுற மாதிரியும்… அந்த பொண்ணு மட்டும் நிறைய பேசற மாதிரி சொல்றாளுங்க…” என்றார்.

 ரெண்டாவது மாமா மச்சினனை பார்த்து “டேய் மாப்பிள்ளை நா சொல்றத கேளு முதல்ல உன்ற அக்காங்கள அடிச்சி தொரத்தி விடு… இல்லைனா இவளுங்க இருக்கற வரையிலும் உனக்கு கல்யாணமே நடக்காது”  என்ற மாமனை கண்கள் விரிய மாப்பிள்ளை.

“சரி சரி காரை எடு… எப்பவும் போல இனியாவது ஆக்கி சாப்டுவோம்…” என்றார்.

சேதுவிற்கு கல்யாணம் ஆகுமா? ஆகாதா? என்ற எண்ணம்  போய் பர்சில் இருக்கும் மீதி பணம் மிஞ்சுமா? மிஞ்சாதா? என்ற பயம் வந்து விட்டது.

அந்த பயத்திலே காரை எடுத்தான்.

அவனின் அம்மாவை தவிற மற்ற அனைவரும் அடுத்த வார ப்ரோகிராமிற்கு ஃப்ளான் போட ஆரம்பித்தனர்.

Advertisement