“புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதாம்…” அப்படினு நம்ம பெரியவங்க சொல்லுவாங்க… அது என்னம்மோ உண்மை தான். இப்போ எல்லாம் நம்மூர் பசங்க ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்றது வாழ்நாள் சாதனையா மாறிப் போச்சு…
கரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தில் புகழ் பெற்ற சக்ரவர்த்தி யின் வீடு காலையிலே அத்தனை பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம் அவரின் மகனுக்கு பொண்ணு பார்க்க குடும்பம் மொத்தமும் கிளம்பிக் கொண்டிருந்தது.
சக்ரவர்த்தி கோதை நாச்சி தம்பதிக்கு நான்கு மகள்கள் ஒரு மகன்.
பொண்ணுங்களை எல்லாம் பக்கத்திலே வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சொந்தத்தில் உள்ளூரிலே குடுத்து விட்டார்.
அது தவறு என்று இப்போது தான் அவருக்கு புரிந்தது. ஒரு மகளை பக்கத்தில் கொடுத்து விட்டாலே பொறந்த வீட்டில் அவளுடைய ராஜ்ஜியம் தான் பெரியதாக இருக்கும். இதில் நான்கு மகளையும் உள்ளூரில் கட்டிக் குடுத்தால் சொல்லவா வேண்டும்.
அதேதான் அவருடைய வீட்டிலும் நடக்கிறது. நான்கு மகளும் தம்பி மேல் வைத்திருக்கும் பாசத்தில் அவர்கள் செய்யும் அலப்பறைகள் எண்ணில் அடங்காது.
இன்னும் மகனுக்கு மட்டும் தான் திருமணம் ஆகவில்லை. அவனுக்கு நான்கு வருடமாக பொண்ணு பார்த்தும் இன்னும் ஒன்றும் அமையவில்லை என்பதை விட அவருடைய மகள்கள் அமைய விட வில்லை என்றே சொல்லலாம்.
ஒரு மகளுக்கு பிடித்தால் இன்னொரு மகளுக்கு பிடிக்காது. இரண்டு பேருக்கும் பிடித்தால் மகனுக்கு பிடிக்காது. இல்லையென்றால் ஜாதகம் சரியாக பொருந்தி வராது. ஆக மொத்தத்தில் இன்னும் மகனுக்கு திருமணம் ஆகவில்லை.
அவனுக்கும் வயது முப்பதை தொட்டு விட்டதால் இந்த வருடமாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் குடும்பம் மொத்தமும் வலை வீசி பொண்ணு தேடிக் கொண்டிருக்கின்றது.
பொண்ணு பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான் சேது. அவனுடைய அறைக்கு அக்கா பிள்ளைகள் ரெடியாகி வந்தனர்.
“என்ன மாமா பொண்ணு பாக்க கிளம்பிட்ட போல…” ரெண்டாவது அக்கா மகள் கேட்டதும்,
“ஆமா ப்ரித்தி… இந்த ட்ரெஸ் நல்லாருக்கா…?” என்று கேட்டான்.
“அதலாம் நல்லாத்தான் இருக்கு…” என்றவள் “ஏன் மாமா எப்படியும் இந்த பொண்ணும் உன்ன வேண்டாம்னு தான் சொல்லப் போகுது… அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு…” மாமனை அவள் கலாய்த்ததும்,
அவனுடைய பெரிய அக்கா மகன் “இவ எல்லாம் உன்ன கலாய்க்கற அளவுக்கு உன்ற நிலமை ஆகிப்போச்சே மாமா… பாவம் மாமா நீ…” என உச்சுக் கொட்டினான்.
அதில் கடுப்பானவன் “இப்போ எல்லாரும் என்ன கலாய்க்கறதுக்கு தான் இங்க வந்திங்ளா…?”
“சரி சரி கோபப்படாத மாமா…” என்றவள் “மாமா இனிமே உன்ற அக்காளுங்க கிட்ட உனக்கு பொண்ணு பாக்கறதா இருந்தா கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு ஊட்டி, ஆக்ரா ல இருக்க பொண்ணா பார்த்து பார்க்க சொல்லு மாமா…”
பொண்ணு பார்க்க கிளம்பி வந்து நின்ற தம்பியை பார்த்த அவனுடைய பெரிய அக்கா “டேய் தம்பி இது என்றா கோலம்?” என பதட்டமாக கேட்டாள்.
தன்னையே ஒருமுறை குனிந்து பார்த்தவன் “ஏன்க்கா நல்லாத்தானே இருக்கு?” என்றான்.
“என்றா பேசற…? நம்ம சாமிக்கு கருப்பு ஆகாதுன்னு உனக்கு தெரியாதா…? அதும் உனக்கு பொண்ணு பாக்க போறப்ப இதப்போய் போட்டு வர…? போய் வேற ஒண்ண மாத்தி போட்டு வா… அதுக்குனு திரும்பவும் சாயம் போனத போட்டு வராத… மங்களகரமாக இருக்க மாதிரி ஒரு ட்ரெஸ் போட்டு வா…” என்று கூறிவிட்டு அவர் சென்றதும்,
“மங்களகரமா போடணும்னா காவி வேட்டி தான் கட்டிக்கிட்டு வரனும்.” அவன் கடுப்பில் புலம்பிக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த அவனுடைய பெரிய அக்கா மகன் “கூடிய சீக்கரம் அதையும் கட்டிடுவ மாமா… கவலைப்படாத…” என கலாய்த்தான்.
“நீயெல்லாம் கலாய்க்கற அளவுக்கு என்ற நிலமை ஆகிப்போச்சு டா…”
“என்ன பண்றது மாமா… நாலு பாசக்கார அக்காங்களுக்கு தம்பியா பொறந்துட்டியே… அப்போ இதெல்லாம் நீ அனுபவிச்சி தான் ஆகனும்.”
“எதே இவளுங்களா பாசக் கார அக்காளுங்க…?”
“பின்ன இல்லைங்றியா… சரி இரு இப்பவே உன்ற சந்தேகத்த தீர்த்துடலாம்…” என்றவன்
“அம்மாஆஆஆ… ஆதி சித்தீதீதீதீ… என அவன் கத்தியதும் பதறிப்போனவன் அக்கா மகனின் வாயை கைகளால் மூடினான்.
“ஏன்டா நம்ம வூடு அமைதியா இருக்கறது உனக்கு புடிக்கலையா? இது மட்டும் தெரிஞ்சது இப்பவே ஒப்பேரி வச்சி வூர கூட்டிடுவாளுங்க…”
“அந்த பயம் இருக்கணும் மாமா…” என்றவன் “ஆனா ஒண்ணு மாமா வாரா வாரம் பொண்ணு பாக்க கிளம்பற ஒரே கரகாட்ட கோஷ்டினா அது நம்ம குடும்பம் மட்டும் தான் மாமா…”
“என்னடா கலாய்க்கறியா?”
“ச்சேச்சே… உண்மைய சொன்னேன் மாமா…”
“இதெல்லாம் கேக்கணும்னு என்ற நேரம் டா…”
“ஏன் மாமா இன்னைக்கு பாக்க போறது ஒரு 200 ஆவது பொண்ணா இருக்குமா மாமா…?”
“200 அ தாண்டி பல வாரம் ஆச்சு டா மாப்பிள்ளை…”
“உன்ற நிலமை எதிரிக்கும் வரக்கூடாது மாமா…”
இருவரும் இன்னும் அதே இடத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவனுடைய அக்கா “டேய் இன்னும் போய் ட்ரெஸ் மாத்தாம இவன் கூட நின்னு பேசிட்டு இருக்க… போய் சீக்கரம் மாத்திட்டு வா… நல்ல நேரம் முடியறதுக்குள்ள சாமி கும்பிட்டு கிளம்பணும்…”
“ம்கூம் நல்ல நேரத்துல போனா மட்டும் பொண்ண ஓகே சொல்லிடுவிங்க பாரு…” என முனகினான்.
“அங்க என்றா முனகற?”
“இல்லக்கா சும்மா பேசிட்டு இருந்தேன்… நீ போ நா மாத்திட்டு வரேன்…”
“அக்கா இந்த சேலை நல்லாருக்கா…? பார்த்து சொல்லுங்க…” என கேட்டுக்கொண்டே பட்டுச் சேலை சரசரக்க அங்கு வந்தனர் சேதுவின் கடைசி இரண்டு அக்காவான செல்வமணி, ஷர்மி.
“அக்கா எனக்கு தான் பொண்ணு பார்க்க போறோம்… உனக்கு மாப்பிள்ளை பார்க்க இல்லை.. மாப்பிள்ளை நானே சாதாரணமா வரேன்… நீங்க ரெண்டு பேர் என்னடானா ஒரு மணி நேரமா கல்யாணத்துக்கு போற மாதிரி பட்டுச்சேலை கட்டிட்டு நிக்கறிங்க” நேரம் ஆவதை பார்த்து கடுப்பில் கூறினான்.
ஷர்மி “என்ற புருசன் எடுத்து தராரு… நா கட்றேன்… அதே மாதி அவ புருசன் எடுத்து தராரு அவ கட்றா… இதுல உனக்கு ஏன் டா பொறாமை…”
“அப்படி சொல்லு ஷர்மி…” தங்கச்சிக்கு அவளும் ஒத்து ஊதினாள்.
“இதுக்கெல்லாம் காரணம் நீங்க ரெண்டு பேரும் தான் மாமா காரணம்… இவளுங்க கேட்கற அப்ப எல்லாம் புடவை எடுத்து குடுக்காதிங்கனு சொன்னா கேட்கறிங்ளா?”
“அட நீ வேற மாப்பிள்ளை… நாங்க எங்க எடுத்துகுடுக்கறோம்… அவளுங்களே எடுத்துக்கிட்டு அமௌண்ட் மட்டும் தான் எங்ககிட்ட வாங்கறாங்க… எதாவது சொல்லிட்டா உன்ற அக்கா வரிஞ்சிக் கட்டிட்டு எப்பவோ சொன்ன வார்த்தையை எல்லாம் தூக்கிட்டு சண்டைக்கு வந்துடறா… ஒரு சேலைக் கூட எடுத்து தர முடியாதானு…” அவனுடைய மூன்றாவது அக்காவின் கணவன் புலம்பியதும்,
“ஆரு நா உங்ககிட்ட சண்டைக்கு வரேனா…? என்ன பாத்தா உங்களுக்கு சண்டை காரி மாதிரி தெரியுதா…?” என அதுக்கும் ஒரு சண்டையை ஆரம்பித்து விட்டாள்.
பெரிய அக்கா வாணி “ஐயோ உங்க சண்டைய இங்கையே ஆரம்பிச்சிடாதிங்க… நல்ல நேரம் முடியறதுக்குள்ள சாமி கும்பிட்டு கிளம்பணும்…” என இருவரையும் சமாதான படுத்தினாள்.
அக்கா சொன்னதற்காக போனா போகிறதென்று சண்டை போடாமல் விட்டாள்.
குடும்பம் மொத்தமும் ஒரு வழியாக கிளம்பி முடித்ததும் அவனுடைய பெரிய அக்காவும் இரண்டாவது அக்காவும் பழைய படி கடவுளிடம் வேண்டுதலை வைக்க ஆரம்பித்தனர்.
அவனுடைய பெரிய அக்கா ரெண்டு பேரும் “பழனி மலை முருகா… என்ற தம்பிக்கு ஒரு கல்யாணத்த நடத்தி வைச்சிடு முருகா… ஒரு மாதம் மாலை போட்டு விரதம் இருந்து உன்ற சன்னிதிக்கு நடந்தே கூட்டி வந்து என்ற தம்பிக்கு மொட்டை போடறோம்…” என வேண்டிக் கொண்டு 210 வது முறையாக மஞ்சள் துணியில் பணத்தை வைத்து முடிந்து வேண்டுதல் பணத்தை வைப்பதற்காகவே வாங்கி வைத்திருந்த இரும்பு லாக்கரில் போட்டு வைத்தனர்.
‘அடி பாவிங்ளா? வாரம் ஒரு வேண்டுதல் வைக்கறாளுங்களே… இதெல்லாம் செஞ்சி முடிக்கவே பல மாசம் போயிடும் போலயே… அடேய் சேது கல்யாணம் ஆனாலும் ஆகாட்டியும் நீ காவி வேட்டி கட்டறது கன்பார்ம் டா…’ என தனக்கு தானே சொல்லி புலம்பிக் கொண்டான்.
பத்தாதற்கு அவனுடைய அக்கா மகன் வேற “ஏன் மாமா உங்க அக்காங்க வாரம் வாரம் வேண்டிக்கிட்டு மஞ்சள் துணில காசு முடிஞ்சி வைக்கறாங்ளே மொத்தம் எவ்வளவு வரும்னு நினைக்கற?”
“ஏன் மாப்பிள்ளை நீ வேற… நானே இவளுங்க வாரம் ஒரு வேண்டுதல் வைக்கறாங்கனு கவலைல இருக்கேன்…”
“அவங்க வச்சா வச்சிட்டு போறாங்க மாமா… அதுக்கு எதுக்கு நீ கவலை படற?”
“நா கவலை படாம வேற ஆரு மாப்பிள்ளை கவலை படுவா… ஏனா வேண்டுதலே என்ற பேர்ல தானே வைக்கறாளுங்க…”
“டேய் சேது நண்டு சிண்டு எல்லாம் உன்ன கலாய்க்குது… இந்த அசிங்கம் எல்லாம் உனக்கு தேவையா டா…” என முகத்துக்கு நேரா விரலை நீட்டி தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.
விபூதி தட்டுடன் அவன் முன்னாள் வந்த அவனுடைய அக்கா வாணி “டேய் தம்பி என்றா ஆச்சு உனக்கு… இப்படி நல்ல நாளும் அதுமா தனியா பேசிட்டு இருக்கற… கதை எழுதறேனு நீ தனியே பேசும்போதே(வாய்ஸ் டைப்பிங்) சந்தேக பட்டேன்…” என்றவர் தங்கச்சியிடம் “பாத்தியா லஷ்மி அன்னைக்கு கொல்லி மலை சாமியார் சொன்ன மாதிரியே ஆகிபோச்சு…” என ஒப்பேரி வைத்தாள்.
“ஐயோ ஆமா க்கா… இப்போ என்னக்கா பண்றது…?” கூட சேர்ந்து அவனுடைய இரண்டாவது அக்காவும் அழ ஆரம்பித்தார்.
‘அடி பாவிங்ளா? இவளுங்க கல்யாணம் பண்ணி வைக்காம கீழ் பாக்கத்துக்கு அனுப்பிடுவாளுங்க போலையே…’ என பதறிப்போனவன்,
“ஐயோ அக்கா… நா நல்லாத்தான் இருக்கேன். இப்படி அழுது ஊர கூட்டாதிங்க…” என்றான்.
“உனக்கு என்ன டா தெரியும் நீ பேசாம இரு…” தம்பியை அடக்கிய வாணி… “லஷ்மி நாளைக்கே அந்த சாமியார வர சொல்லு டி…” ரெண்டு அக்காவும் மாத்தி மாத்தி ஒப்பேரி வைத்ததும்,
கடுப்பான அவனுடைய சின்ன அக்கா ஷர்மி “அக்கா அவன் நல்லாத்தான் இருக்கான்… ரெண்டு பேரும் ஒப்பேரி வைக்கறத முதல்ல நிறுத்திட்டு கிளம்புங்க…” என திட்டியதும் தான் சற்று அடங்கினர்.
இல்லையென்றால் அவர்கள் இருந்த வேகத்திற்கு இன்றே தம்பியை கீழ்பாக்கத்திற்கு அழைத்து சென்றிருப்பர்.
தனது சின்ன அக்காவை பாசமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
தம்பியின் பாசமான பார்வையை உணர்ந்த ஷர்மி “ரொம்ப உணர்ச்சி வசப்படாத டா… விட்டா ரெண்டு பேரும் இங்கேயே ஒப்பாரி வைச்சிக்கிட்டு உட்கார்ந்து போடுவாங்க… நான் கஷ்டப்பட்டு போட்ட மேக்கப் எல்லாம் வீணாப் போயிடும் ல… வேற ஒன்னும் இல்ல… சரி சரி நீ போய் காரை எடுத்து வெளிய நிறுத்து டா…” என்றாள்.
“அதான பார்த்தேன் எங்கடா என்ற அக்காவுக்கு திடீர்னு நம்ம மேல பாசம் வந்துடுச்சுன்னு ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டேன்…”
“சரி சரி போதும் போடா…”
எப்படியோ ஒரு வழியாக பஞ்சாயத்தெல்லாம் முடித்து சொன்ன மாதிரி நல்ல நேரத்தில் கிளம்பி காரில் பொண்ணு பார்க்க சென்றனர்.
சேதுவுக்கு இப்பவே கண்ணைக் கட்டி விட்டது… இன்னும் பொண்ணு பாக்க போகும் வீட்டில் தன் அக்காமார்கள் நால்வரும் பண்ணப்போகும் அலப்பறையை நினைத்து தலை சுத்த ஆரம்பித்து விட்டது.