Advertisement

தடுமாற்றம் 5

வாணி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் நிலையில் இருந்தது.

அன்று வாணியின் கல்லூரியில் கலை விழா.

அதில் இருந்த குழு நடனத்தில் நித்யாவும், வாணியும் பெயர் கொடுத்து இருந்தனர்.

அதனால் கல்லூரியில் இருந்த ஒரு அறையிலே அந்த மாலை நேரத்தில், வாணி சிவப்பு நிற பரதநாட்டிய உடையும், நித்யா வெள்ளை நிற பரதநாட்டிய உடையும் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். காலுக்கு சலங்கை, கைகளில் மருதாணி வைத்தது போன்ற செயற்கை மருதாணி என்று செய்து கொண்டு இருந்தார்கள்.

முதல் நடனமே இவர்கள் இருவருதும் தான், இறை வணக்க பாடல் முடிந்ததும்.

“பி.எஸ்.சி(கணிதம்) முதல் ஆண்டு மாணவிகள், வாணி ஸ்ரீ மற்றும் நித்யா, நமது பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை ஆடி நமது கண்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். அவங்களுக்கு இந்த மேடையை இப்ப கொடுத்துட்டு நான் கிளம்பறேன்” என்று அந்த விழாவை தொகுத்து வழங்கும் ஒரு மாணவி கூறி விட்டு சென்றாள்.

பாடல் போட்டு ஒலிபெருக்கியுடன் இணைந்து இசைக்க ஆரம்பித்தது. வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் இருந்து கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் தான் அது.

பாடல் போட்டவுடன் முதலில் நித்யா வெள்ளை நிற பரதநாட்டிய உடையில் நளினமாக இசைக்கு ஏற்றபடி நடந்து வந்தாள்.

ஏனோ  இன்பமே
புதுமையாய் காண்பதே
காதல் என்பது இது தானோ
இது தானோ அறியேனே…

கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

நித்யா தனது பாகத்தை முடித்து ஒரு முத்திரையில் வந்து நின்றாள்.

அடுத்த இசைக்கு ஏற்ப அசைந்து ஆடியபடி முகத்தில் தேவையான பாவனையுடன் மேடையின் நடுவே வந்தாள் வாணி ஸ்ரீ. அந்த நேரம் சரியாக அந்த பாடலில் வரும், “சபாஷ் சரியான போட்டி” என்ற வசனம் வந்தது.

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி
இனி அனைவரும் மயங்கிட

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

நித்யா ஆடிய பகுதியை ஒப்பிடும் போது, வாணி ஆடும் பகுதியில் இசை சற்று துள்ளலாக இருக்க, அதற்கு அவளின் முக பாவனையும் கூடுதல் அழகை சேர்க்க, நன்றாக கை தட்டி ரசித்தனர் பார்வையாளர்கள் ஆன ரசிகர்கள்.

தன் பகுதியை முடித்து வாணி, ஒரு நடன அடவில் நின்றாள். வாணி அவள் பகுதியை ஆடும் போது நித்யா கண்களால் பிடித்தாள்.

அவள் முடிய மீண்டும் நித்யா அவளின் பகுதியை ஆடினாள்.

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ

பேதமையாலே மாதே இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே

நித்யா அவள் பகுதியை முடித்து நிற்க, முகத்தில் பாவனையுடன் நின்ற வாணி அவளின் பகுதியை தொடங்கினாள்.

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி

நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி

பாடல் முடிந்து இசை ஒலிக்க, வாணி அதற்கு ஆடினாள். அவள் பகுதி முடிய, தற்போது சின்ன கோப முகத்துடன் நித்யாவின் பகுதி தொடங்கியது.

ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடேதடி
நீ படமெடுத்து ஆடேதடி

அவள் முடித்ததும், மீண்டும் வாணி தனது பகுதியை தொடர்ந்தாள்.

இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ

வாணி முடிக்க, நித்யா தொடர்ந்தாள்.

மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி

நித்யா ஆடி முடிக்கும் வரை வாணி அவளை ஒரு அலட்சிய, நித்யாவை பிடிக்காத முகத்துடன் இருக்கும் பாவனையை முகத்தில் கொண்டு வந்து ஒரு அடவில் நின்றாள்.

பின்னர் இசை மட்டும் வர சின்ன சின்ன அசைவுகளை இருவரும் மாறி மாறி ஆடி, பின்னர் ஒன்றாய் ஆட ஆரம்பித்தனர். இறுதியை நெருங்க, இருவரும் கை கோரத்து ஒன்றாய் சுற்றினர், அந்த பாடலில் வருவது போலவே. பாடல் முடிந்தவுடன் இருவரும் அரை மண்டியிட்டு, நித்யா வலது கையை மேலே தூக்கியும், வாணி இடது கையை மேலே தூக்கியும் இறுதி அசைவில் நின்றனர்.

இருவரின் நடனமும் அந்த பாடலில் வருவது போலவே 90% அசைவுகளை கொண்டு இருந்தது. பரத நாட்டியத்தை பொருத்தமட்டில் ஒரு ஒரு அசைவும் அவ்வளவு எடுத்து கொடுக்கும். மக்களுக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு இடுப்பை வளைத்து நின்றாள். ‘ஏய் எப்படி வளஞ்சி அப்படியே நிற்கிறாங்க பாரேன்’ என்று இருக்கும்.

ஆடி முடித்தது மிகப்பெரிய கைதட்டல் பார்வையாளர்களிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க அந்த மகிழ்ச்சியுடனே மேடையில் இருந்து இறங்கி, மீண்டும் உடை மாற்ற சென்றனர் இருவரும்.

இருவரும் பரதநாட்டிய உடையை மாற்றி விட்டு, ஒரு அனார்கலி சுடிதாரில் வந்து தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.

இருவரும் முறையாக பரதம் கற்றவர்கள். இந்த பாடலை தேர்வு செய்ததும் யார் எந்த பகுதி ஆடுவது என்று முடிவு செய்யும் போது வாணி இரு மனநிலையில் இருந்தாள். ஒன்று அந்த பாடலில் அதிக நேரம் ஆடல் அசைவுகள் இருப்பது முதல் பகுதிக்கு தான் யார் தொடங்குவார்களோ அவர்களுக்கு. ஆனால் அது மெலிதாக தான் தொடங்கும். அடுத்து இரண்டாவது தொடங்குவது துள்ளலான இசை அனைவரின் கவனத்தையும் ஈரக்கும். சிறிது நேரம் யோசித்த வாணி, இரண்டாம் பகுதியை தேர்ந்தெடுத்தாள். அவள் எண்ணப்படியே தான் இருந்தது பார்வையாளர்களின் வரவேற்பு.

மறுக்க முடியாத உண்மை இருவரின் நடனமும் அவ்வளவு அழகாக நளினமாக ரசிக்க தக்கதாக இருந்தது தான்.

மேலும் சில நடனங்களும், பாடல்களும் மற்ற மாணவ மாணவிகளால் முடிக்கப்பட்டது.

எல்லாம் முடிந்து சிறப்பு விருந்தினரின் உரையாடலும் முடிந்து பரிசு வழங்கும் நேரம் நெருங்கியது.

பாடல் பிரிவில் முதல் பரிசு என்று சொல்லி அந்த பிரிவு முடிய, அடுத்து நடன போட்டியின் முடிவை சொல்ல இருந்தனர்.

தனி நடனம் முடிந்து, “குழு நடனம் – முதல் பரிசு வாணி ஸ்ரீ மற்றும் நித்யா. பி.எஸ்.சி (கணிதம்)” என்று சொன்னவுடன் கைதட்டல்கள் புடை சூழ வாணியும் நித்யாவும் மேடை ஏறினர். அழகான புடவை அணிந்து பரிசு பொருளை எடுத்து வந்து சிறப்பு விருந்தினர் கையில் ஒரு மாணவி கொடுக்க, அதை வாங்கி, “வாழ்த்துக்கள்” என்று சொல்லி இருவரின் கையையும் குலுக்கி, புகை படம் எடுக்க நின்றனர், வாணி, நித்யா மற்றும் சிறப்பு விருந்தினர்.

விழா முடிய இரவு உணவும் அங்கே தான் இருந்தது. வாணி அவளது நண்பர்களுடன் உண்டு கொண்டு இருக்க, அவளது சீனியர்கள் அங்கு வந்தனர்.

“நித்யா, வாணி” என்று அழைத்தனர்.

“ஆன் சொல்லுங்க கா” என்று சொன்னாள் நித்யா.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடனீங்க” என்று சொன்னாள்.

“தேங்க்ஸ் கா” என்று இருவரும் ஒன்றாக சொன்னார்கள்.

“அடுத்த மாசத்துல ஒரு காம்படேஷன் இருக்கு. வேற காலேஜ்ல. நீங்க ரெண்டு பேரும் எங்க டீம்ல சேந்துகறீங்களா??” என்று கேட்டாள் அவள்.

“கண்டிப்பா கா” என்று இருவரும் ஒன்றாக சொன்னார்கள்.

“சரி டா. அப்ப நாளைல இருந்து ப்ராக்டீஸ்க்கு வந்துடுங்க” என்று சொன்னாள் அவள்.

“சரிங்க கா” – வாணி.

“எத்தன மணிக்கு கா?? எவ்வளவு நேரம்??” – நித்யா.

“சாய்ந்தரம் 4 மணிக்கு. ஒரு ஒரு மணி நேரம்” – சீனியர்.

“ஓகே கா. இவ காலேஜ் பஸ் செகண்ட் டிரிப் போகும் போது போய்க்கலாம்” என்று வாணியை காட்டி சொன்ன நித்யா, “எனக்கு எப்பவும் 5 மணிக்கு தான் பஸ். அதனால பிரச்சனை இல்ல கா” என்று சொன்னாள்.

அவள் சென்றதும், “லூசு வாணி. எப்ப என்ன ஏதுனு கேக்காம நீ பாட்டுக்கு சரிங்க சொல்லற?? போற வரதுக்கு, க்ளாஸ் ஹவர் இதுல எல்லாம் எதுனா பிரச்சனை வருமானு கேட்டு தெரிஞ்சிக்க மாட்டியா??” என்று திட்டினாள் நித்யா.

“இல்ல… டக்குனு கேட்டதும் சொல்லிட்டேன்” என்று சிரித்து கொண்டே சொன்னாள் வாணி.

“சரி விடு டி. சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கு. வாங்க சாப்பிடலாம்” என்று சொன்ன நளினி, வாணியை காப்பாற்றி, கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

அங்கே இருந்த அவர்களது வகுப்பு மாணவிகளும், அவர்களை பாராட்டி விட்டு, “ஆமா நள்ளி… உனக்கும் ஆட தெரியுமா??” என்று நளினியை பார்த்து கேட்டார்கள்.

அதை கேட்டவுடனே நித்யா சிரித்து விட்டாள்.

“ஏய் என்ன சிரிப்பு!!!. நானும் ஆசைப்பட்டேன். ஆனா அந்த டான்ஸ் மாஸ்டருக்கு என்ன புடிக்காது. அதனால் என்ன மட்டும் கால் மணி எச்சா அரமண்டி போட சொல்லுவாரு. அப்பறம் ஸ்டெப் சொல்லி கொடுத்துட்டு, எல்லாரையும் ஆட சொல்லுவாரு. நான் ஆடும் போது மட்டும், சாணி தட்டுற ஆட கூடாது. காலை தூக்கி வச்சா பூல வக்கற மாறி இருக்கனும். இப்படி சதக்கு சதக்கு சத்தம் வர கூடாது சொல்லிட்டாரு” என்று மூக்கை சுருக்கி சொன்னவள் தொடர்ந்து, “நானும் கம்முனு இருக்க மாட்டாம ரோஜா பூவ கீது போட்டுறாதீங்க முள்ளு குத்தி வாயில சத்தம் வந்துடும் அப்பறம்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பறம் அந்த மாஸ்டர் எங்க அம்மாவ கூப்பிட்டு என்ன சொன்னாங்களோ தெரியாது… என்ன அதுக்கு அப்பறம் டான்ஸ் க்ளாஸ் அனுப்பல. சரி ஒரு சிறந்த கலைஞரை இழந்துட்டாங்கனு நானும் விட்டுட்டேன்” என்று பாவனையுடன் சொன்னாள் நளினி.

எல்லோரும் அதை கேட்டு சிரித்து கொண்டே தங்களது உணவை உண்டனர். பின்னர் அவரவர் பேருந்தில் ஏறி இல்லம் சென்று சேர்ந்தனர்.

வெள்ளி கிழமை முக்கால் வாசி காலியாகும் நேரம், குருவும் இரவு பத்து மணி போல தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான். அந்த பேருந்து நிலையமே ஒரு திருவிழா போன்று கலகலவென மினுக்கி கொண்டு இருந்தது.

சென்னையை சொந்த ஊராய் கொண்டவர்கள் குறைவாய் தான் இருப்பார்கள். மற்ற ஊரில் இருந்து வேலை தேடி வந்து அதன் பின் இங்கேயே செட்டில் ஆனவர்களும் இருப்பார்கள். அதை தவிர மற்றவர்கள் எல்லாம் இது போன்ற விடுமுறை நாட்களில் கண்டிப்பாக வீட்டுக்கு செல்வார்கள். அது தான் இந்த திரு விழா கோலத்தின் காரணம்.

குரு ஏறி அமர்ந்த பஸ்ஸும் புறப்பட்டது. முதலில் திருமணம் என்றவுடன் அவனுக்கு இப்போதேவா!!! என்று இருந்தது. என்ன வயது தனக்கு!! 25 தானே என்று. பின்னர் பெண் பார்க்க போலாம் என்றவுடன் சின்ன குறுகுறுப்பு. அந்த உணர்ச்சியை உணர்ந்து கொண்டே ஊருக்கு சென்றான் குரு.

தாங்கும்…

Advertisement