Advertisement

தடுமாற்றம் 4

நாட்கள் ஓடி வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்தது. கல்லூரி செல்வதற்கு என்றே புது ஆடைகள் எல்லாம் வாங்கி இருந்தாள் அவள்.

முதல் நாள் கல்லூரி தலைக்கு குளித்து ரெடி ஆகி, காலையிலே கோவில் சென்று வணங்கி விட்டு வந்தாள். பின்னர் வீட்டில் சொல்லி விட்டு கல்லூரி பேருந்தில் ஏறி சென்றாள்.

முதல் நாள் கல்லூரி…

பள்ளியில் இருந்து வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. ஒரு வழியாக தனது வகுப்பை கண்டுபிடித்து சென்று இரண்டாவது வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அதே போல் அதே இரண்டாவது வரிசையில் வந்து இரண்டு பேர் அமர்ந்தார்கள்.

“ஹாய் நான் நித்யா” என்று ஒருத்தி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

“ஹாய் நான் வாணி ஸ்ரீ” என்று சொன்னவள், நித்யாவுக்கு அருகில் இருந்தவளை பார்க்க, “அவ பேரு நளினி. நானும் அவளும் ஒரே ஸ்கூல் தான்” என்று சொன்னாள்.

அடுத்து என்ன பேச்சு இருக்கும் அவர்களிடத்தில் எல்லாம் மதிப்பெண் பற்றியது தான். வாணியும் தன் மதிப்பெண்ணை சொல்ல, “ஏய்… அவ்வளவு மார்க்கா?? செம்ம” என்று சொல்ல, வாணிக்கு பெருமையாக இருந்தது. அவள் இந்த கல்லூரியில் இந்த வகுப்பில் சேர்ந்ததை வரமாக நினைத்தாள்.

சாந்தி இவளை இந்த கல்லூரியில் சேர்த்ததை முதலில் நினைத்தாள். யாரோ கொடுத்த யோசனை படி தான் இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்தார்.

முதலில் வாணிக்கு, “அம்மா எல்லாரும் இன்ஜீனியரிங், ஆக்ரி அப்படி தான் மா சேருராங்க. கொஞ்ச பேரு தான் இப்படி பி எஸ் சி-ல சேருராங்க மா” என்று தான் கேள்வி பட்டதை சொன்னாள்.

ஆனால் சாந்தி, “அவங்க எல்லாம் அவ்ளோ நல்ல காலேஜ்லயா சேந்து இருக்காங்க??. இங்க இப்ப தான் ஆரம்பிச்ச காலேஜ். அக்ரி படிச்சி நீ என்ன காடு மேடு எல்லாம் அலையவா போற!!. இப்படி எதுனா படிச்சிட்டு பி.எட் படிச்சா டிச்சராவே போலாம்” என்று மண்டையை கழுவி இங்கே சேர்த்து விட்டார்.

அவளுக்கு என்ன வேண்டும் என யோசிக்கவோ தேர்ந்தெடுக்கவோ வாய்ப்பு கொடுக்கவில்லை. பள்ளியில் படிக்கும் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒன்றை தவிர அவள் மனதில் வேறு எதுவும் இல்ல. எல்லா குழந்தைகளும் சொல்வது போல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் இருந்தது. அது என்னவோ தெரியவில்லை மருத்துவர் என்பது மட்டும் தான் நல்ல படிப்பு என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடுகின்றனர். பின் அவர்கள் வளர்ந்து யோசிக்கும் போது தான் புரிந்து கொள்கின்றனர். தற்போது என்ன ஏது என்று யோசிக்கும் போதே தடுத்து விட்டார். அவர் சொன்னதை கேட்டு கொண்டாலும் மனதில் சின்ன நெடுடல் இருந்தது. இப்போது நித்யாவும்  நளினியும் பேசியதை கேட்டு அது எல்லாம் காணாமல் போய் ஒரு வித பெருமிதம் வந்து விட்டது.

மேலும் எல்லோரும் வர, வகுப்புகள் ஆரம்பித்தது. முதல் நாள் என்பதால் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டனர். முதல் வகுப்பில் அனைவரும் பெயர்கள் சொல்லும் போது ஆர்வமாக கேட்டவர்கள், அடுத்த அடுத்த வகுப்பில் அதே நடக்க நொந்து போய், எப்படா இந்த நாள் முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

நித்யாவும், நளினியும் வேறு ஊர் என்பதால் அவர்கள் வேறு பேருந்தில் ஏற, வாணி தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினாள். அதே பேருந்தில் வாணியின் ஊரை தாண்டி இருக்கும் ஊருக்கு செல்ல அவளது வகுப்பு தோழி கோமதியும் ஏறினாள். அவளை நட்பு பிடித்து கொண்டு, அவளுடன் அரட்டை அடித்து கொண்டே சென்றாள். கோமதியும் வாணியுடன் நெருங்கி விட்டாள். தினமும் கோமதி தான் முதலில் பேருந்தில் ஏறுவாள். அதனால் தனக்கு அருகில் உள்ள இருக்கையை வாணி என்று பிடித்து வைத்து கொள்வாள். இருவரும் ஒன்றாகவே சென்று வருவர்.

குரு சென்னை தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்து விட்டான். நண்பர்கள் ஆறு பேர் அந்த 2BHK வீட்டில் தங்கி இருக்கின்றனர்.

ஆறு பேருக்கு அது சற்று நெருக்கடியாக தான் இருக்கும் என்றாலும், வாடகை அவர்கள் எதிர் பார்த்ததை விட குறைவாக தான் இருந்தது. அதனால் சமாளித்து கொண்டு இருக்கின்றனர்.

அங்கே அருகிலே ஈஸ்வரி மெஸ் இருக்க காலை மற்றும் இரவு உணவை அங்கே தான் உண்பர். (நம்ம மதியோ சதியோ விதியோ பாலுவோட கடை தான்).

காலை நான்கு மணிக்கு வந்த குரு, எட்டு மணி வரை உறங்கி விட்டு குளித்து ரெடி ஆகி ஈஸ்வரி மெஸ்ஸில் உண்டு விட்டு தனது அலுவலகம் சென்றான்.

அன்று குருவுக்கு ராசியான நாள் போல… அவனது கேரியரில் சின்ன முன்னேற்றம் கிடைத்தது.

“குரு நம்ம டீமுக்கு புதுசா இரண்டு பேரு வேலைக்கு சேந்து இருக்காங்க. அதுல ஒருத்தர நீ மானிட்டர் பண்ணிக்கோ” என்று அவனுக்கு மேல் இருப்பவர் கூறினார்.

குரு இங்கே வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. அவர்கள் குழுவிலே இவன் தான் சின்ன பையனாக இருந்தான், தற்போது வரை. இப்போது இவனும் சீனியர்… மென்டர்… இவனுக்கு கீழ் ஒருவர்… மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. மேலும் அவனுக்கு ரோல் சேஞ்சும் நடந்து, சம்பள உயர்வும் கிடைக்கும், அடுத்த இன்க்ரிமெண்ட் அப்போது.

இவனுக்கு கீழ் சேர்ந்தவன் விவேக். தற்போது தான் கல்லூரி முடித்து விட்டு சேர்ந்து இருக்கிறான்.

“ஹாய் விவேக். ஐ எம் யுவர் மெண்டர். யூ ஹேவ் டூ லேர்ன் திஸ் அண்ட் திஸ் எஸ் எ ஸ்ட்டிங்” என்று அவன் முதலில் படிக்க வேண்டியவைகளை கூறினான்.

“ஓகே சார்” என்று விவேக் சொல்ல, குரு சிரித்து விட்டு, “ஏ… இது ஒன்னும் ஸ்கூல் காலேஜ் இல்ல. சும்மா பேரு சொல்லியே கூப்பிடு” என்று சொல்ல தயங்கினார்.

“சரி விடு. ரொம்ப தயக்கமா இருந்தா அண்ணானு கூப்பிடு. நான் கூட சகல பேர அப்படி தான் கூப்பிடுவேன்” என்று சொன்னவன், “ஆனா மீட்டிங்ல லாம் அப்படி கூப்பிட்டு வச்சிடாத…” என்று பயந்தது போன்ற போலியான குரலில் கூறினான்.

குரு நல்ல விதமாக தான் பேசுகிறான் என்று புரிந்து கொண்ட விவேக்கும், “சரி ணா” என்று வேகமாக தலையாட்டினான்.

“சரி முதல்ல இத படி” என்று சொல்லி விட்டு தனது வேலைகளை பார்க்க சென்றான் குரு.

சில நாட்கள் செல்ல விவேக், குருவுடன் நன்றாக ஒட்டி கொண்டான்.

அன்றும் அப்படி தான்.

“அண்ணா இன்னிக்கு புது படம் ரிலீஸ். இன்னிக்கு நைட் போலாமா?? வெள்ளி கிழம தான!!!” என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.

குருவும் சிரிப்புடன், மேலும் அவர்களது குழுவில் இருந்த இருவரையும் சேர்த்து கொண்டு போனார்கள்.

படம் முடிந்து திரும்பி வரும் போது, படம் இப்படி படம் அப்படி என்று சொல்லி கொண்டு வந்தான் விவேக்.

படம் முடிந்து இரவு இரண்டரைக்கு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

படத்தை பத்தி எல்லாம் பேசி முடித்த விவேக் தற்போது, “அண்ணா பசிக்குது” என்று பாவமாக சொன்னான்.

அப்படியே போகும் வழியிலேயே ஏதேனும் ஹோட்டல் உள்ளதா என்று பார்க்க, ஒரு பிரியாணி கடை கண்ணில் பட்டது.

அந்த இரவு நேரத்தில் நிறுத்தி, நால்வரும் மட்டன் பிரியாணி, சிக்கன் ப்ரை என்று வாங்கி, அங்கேயே நின்று கொண்டே சாப்பிட்டனர்.

குருவின் தோழன் ஒருவன், “மச்சா இத எப்படி நம்ம மிஸ் பண்ணோம் தெரில. செம்மயா இருக்கு” என்று சொன்னான்.

“ம்ம்ம்” என்று குருவின் மற்றொரு தோழன் சொல்ல, அருகில் இருந்த ஒருவனுடன் பேசி கொண்டு இருந்த விவேக், “அண்ணா எல்லா இன்பர்மேஷனும் கலெக்ட் பண்ணிட்டேன். இந்த கடை நைட் பன்னென்டு மணிக்கு தான் திறப்பாங்கலாம். இங்க பக்கத்துல இருக்க கம்பெனில நைட் ஷிப்ட்ல வேலை பாக்கறவங்க அப்பறம் அக்கம் பக்கத்துல இருக்க கடைல வேல செய்யறவங்க தான் இங்க வந்து சாப்பிடுவாங்கலாம்” என்று சொன்னான்.

“அடேய் எப்படிடா… உன் வாய் இல்லனு வச்சிக்கோ!!. இரண்டு நிமிடம் பேசி இருப்பயா??? அதுக்குள்ள… எனக்குலாம் அவங்ககிட்ட இன்ட்ரோ ஆகவே அரை நாள் ஆகும்” என்றான் குருவின் நண்பன்.

“அதுக்குலாம் ஒரு முக ராசி வேணும் ணே” என்று சிரித்து கொண்டே சொல்லி குரு நண்பன் தோளில் இடித்தான் விவேக்.

“ஆட்டம் அதிகமா தான்டா இருக்கு. இரு” என்று விவேக்கிடம் சொன்னவன், “டேய் மச்சா… நாளைல இருந்து இவனுக்கு எந்திரிக்கவே முடியாத மாறி வேலைய கொடுடா. அப்பறம் எப்படி ஆடறானு பாக்கறேன்” என்று குருவிடம் சொன்னான்.

குரு சின்ன சிரிப்புடன், “வுடு டா. சின்ன பைய… பொழச்சி போறான்” என்று சொல்லி விட்டு இலையை குப்பையில் போட்டு பணம் கொடுக்க சென்றான்.

பசங்களிடம் உள்ள ஒரு பழக்கம், செலவை குறைக்கனும், வீட்டுக்கு கொடுக்கனும், அது பண்ணனும். இது பண்ணனும் என்று நினைப்பார்கள். ஆனால் எங்கேனும் வெளியே சென்றால், இவ்வளவு செலவாச்சி அவ்வளவு செலவாச்சி என்று கணக்கு பார்த்து கேட்பதோ, சாப்பிட்டாலோ டீ குடித்தாலோ நீ கொடு நான் கொடு என்றோ எதுவும் சொல்ல மாட்டார்கள். யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்கள் கொடுத்து விடுவார்கள். அதை திருப்பி கேட்கும் எண்ணமும் இருக்காது. ஆனால் ஒருவன் எப்போதும் செலவு செய்ய மாட்டான் என்று தெரிந்தால் அவனுடன் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து விடுவார்கள்.

இந்த முறை விவேக் தான் அனைவருக்கும் தியேட்டரில் டிக்கெட் புக் செய்தான்.

குரு சொன்னதை கேட்ட விவேக், “ஹாஹா” என்று சிரித்தவன், “எங்க அண்ண எங்களுக்கு தான் சப்போட்டு” என்று சொல்லி விட்டு மீதி இருந்த உணவை ஒரு வாயில் அள்ளி போட்டு விட்டு இலையை குப்பையில் போட்டான்.

அதன் பின் மீண்டும் கிளம்பி, அவரவர் இல்லம் சென்று சேர்ந்தனர் அனைவரும்.

நாட்கள் விளையாட்டு போல் ஓடி, ஒரு வருடம் முடிந்து இருந்தது.

இந்த ஒரு வருடத்தில், குருவின் அவன் எதிர் பார்த்த மாற்றங்களான ஊதிய உயர்வு மற்றும் பதிவு உயர்வு கிடைத்தது. மேலும் அவன் வாழ்வில் எதிர் பாக்காத மாற்றமாக சிங்கிளில் இருந்து மேரிட் என மாற்ற வேண்டிய வேலைகளையும் செய்து கொண்டு இருந்தார்கள் குருவின் பெற்றோர்கள்.

அதற்காக ஒரு பொண்ணையும் பார்த்து அவளை பெண் பாக்க போக, அவனை அந்த வாரம் வீட்டுக்கு வர சொல்லி இருந்தார்கள்.

தாங்கும்…

Advertisement