Advertisement

தடுமாற்றம் – 3

வாணி ஸ்ரீ அன்று பதட்டமாய் இருந்தாள். இன்று தான் அவள் எழுதிய மேல் நிலை பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

சும்மாவே எல்லாருக்கும் இந்த நாளில் சிறு பதட்டம் இருக்கும். இதில் வாணி வேறு நடுநிலை பொது தேர்வில் பள்ளி இரண்டாம் இடம். முதல் இடம் எடுத்த மாணவிக்கும் இவளுக்கும் ஒரு மதிப்பெண் தான் வித்தியாசம். அதிலே வாணிக்கு அவள் மீது சிறு மனத்தாங்கல்.

சரியாக பத்து பதினைந்துக்கு மதிப்பெண்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டன.

குரு தான் அவனது தெருவில் இருந்த அனைவருக்கும் மதிப்பெண்கள் பார்த்து சொல்லி கொண்டு இருந்தான்.

முதலில் வாணி மதிப்பெண் தான் பார்த்தான். பார்த்தவுடன் தனது அத்தை சாந்திக்கு போன் பண்ணி சொல்லி விட்டான்.

“அத்த… வாணி மார்க் வந்துடுச்சி. 973 மொத்தமா” என்று சொல்லி விட்டு தனி தனி பாடங்களில் எவ்வளவு மதிப்பெண்கள் என்று சொல்லி கொண்டு இருந்தான். அதை எல்லாம் ஒலி பெருக்கியில் போட்டு கேட்டு கொண்டு இருந்தாள் வாணி.

அவளது சொல்லி முடித்தவுடன், “அம்மா காவ்யாது எவ்வளவுன்னு கேளு மா” என்று சொன்னாள். காவ்யா தான் நடுநிலை பொது நிலை தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவள்.

“குரு அப்படியே இந்த நம்பருக்கும் பாத்து சொல்லேன்” என்று நம்பரை சொல்ல, “சரி அத்த… இங்க பசங்க இருக்காங்க.. அவங்களுக்கு பாத்துட்டு இத பாத்து  சொல்லறேன்” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் குரு.

வாணி தனது தோழிகளுக்கு அழைத்து பேச போக, அவர்களே இவளுக்கு அழைத்தார்கள்.

“ஏய்… ஸ்கூல் பஸ்ட் மார்க் என்ன தெரியுமா??. 1087” என்று சொன்னாள் அவள்.

‘அப்ப நிறைய மார்க் வித்தியாசம் தான்’ என்று நினைத்து கொண்டவள், “யாரு டி அது??” என்று கேட்டாள் வாணி.

“ஏய்.. என்னடி தெரியாத மாறி கேக்கற??. நம்ம காவ்யா தான். பத்தாவதுல அவ தான் முத மார்க்னு இப்பவும் அவ தான வரனும்னு எல்லாம் எதிர் பாத்தாங்க. அதே மாறி அவ தான்” என்று சொன்னாள் அவள்.

ஏனோ அத ஏற்று கொள்ள முடியவில்லை வாணியால். வாணி முதல் மதிப்பெண் இல்லை என்பது கூட ஏற்று கொள்ள கூடியது தான். ஆனால், காவ்யா… தன் அருகிலே அமர்ந்து இருப்பவள் என்று அது சிறு சங்கடமாக தான் இருந்தது வாணிக்கு.

சாந்தி, அவரது இன்னொரு போனில் பேசி கொண்டு இருந்தார். அறிந்தவர், தெரிந்தவர், உற்றார், உறவினர் எல்லாம் அழைத்து இருந்தார்கள், வாணியின் மதிப்பெண்ணை கேட்டு. டிவில மாநில முதல் மதிப்பெண் பெற்றவரின் நேர்காணல் நடந்து கொண்டு இருந்தது.

போன் பேசி கொண்டே அந்த இடைவெளியில் களியபெருமாள், ஸ்ரீநாத் மற்றும் வாணிக்கு உணவு வைத்து வந்து தட்டை நீட்டினார் சாந்தி.

களிய பெருமாள் வாணியின் மதிப்பெண்ணை பற்றி எல்லாம் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. அவர் அப்படி தான் பட்டும் படாமல் இருப்பார்.

உண்டு விட்டு, “நான் கிளம்பறேன்” என்று தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

காவ்யாவே வாணிக்கு அழைத்தாள். ஆனால் வாணி அந்த அழைப்பை ஏற்கவில்லை. காவ்யா ஏதோ தான் நிறைய மதிப்பெண் எடுத்து விட்டேன் என்று வாணியை நக்கல் செய்ய தான் அழைக்கிறாள் என்பது போல் எண்ணி கொண்டாள் வாணி. அதனால் தான்.

மேலும் சில நேரம் கடக்க, குரு அங்கே வந்தான் சாக்லெட் வாங்கி கொண்டு.

“அத்த” என்று குரு அழைக்க, “இதோ வரேன்” என்று வெளியே வந்தார் சாந்தி.

“வாணி எங்க அத்த??” என்று கேட்டான் குரு.

எங்க என்று அவளை தேட, பின் பக்கம் கிணற்றின் பக்கத்தில் நின்று இருந்தாள் வாணி.

“ஓய்… வாணி இந்தா முட்டாய்” என்று அவளிடம் கொடுத்தான் குரு.

எதுக்கு? என்பது போல் கேள்வியாய் வாணி பார்க்க, “புரியலையா??. நம்ம நாலஞ்சு தெருவுலயே நீ தான் நிறைய மார்க். அதுவும் அந்த ஓவக்கா வூட்டு பையன் எப்படி ஆடுனான். தனியார் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டு என்னமா பீத்திட்டு இருந்துச்சி. அவன் உன்ன விட கம்மி தான்” என்று சொல்லி சாக்லெட்டை கொடுத்தான் குரு.

“என்ன அப்படியா??” என்று கேட்டு கொண்டே அந்த மிட்டாயை வாங்கி உண்டாள். இப்போது அவள் மனம் ஓரளவு சமாதானம் அடைந்து இருந்தது.

குருவும் வாணியும் அந்த அளவு நெருக்கம் கிடையாது. ஏன் சாந்தி குடும்பத்திடமே அந்தளவு நெருக்கம் இருந்தது இல்லை. ஏன் என்றால் ஏன்?? ஏதாவது உதவி தேவைப்படும் இடத்தில் குரு செய்து கொடுப்பான். அப்படி தான் இருந்தது அவர்களது உறவு நிலை. அதே போல் சாந்தி ராமசாமியின் சொந்த தங்கையும் அல்ல. ராமசாமியின் சித்தப்பா மகள் தான் சாந்தி.

அதன் பின் சில நாட்கள் கடந்தது. அதில் எந்த கல்லூரியில் எந்த பாடத்தில் சேர்க்கலாம் என்ற ஆலோசனை தான் நடந்தது. வாணியின் மதிப்பெண்ணுக்கு மருத்துவம் கிடைக்காது. பொறியியலுக்கும் முதன்மை கல்லூரிகளில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் வாணியை வெளி ஊர் அனுப்பி விடுதியில் சேர்த்து படிக்க வைக்க சாந்தி களியபெருமாள் விரும்பவில்லை.

அந்த கால கட்டத்தில் தான் ஒரு புதிய கல்லூரி அவர்கள் ஊரில் துவங்கப்பட்டது. அது தான் முதல் வருடம். எனவே ஒரு சில விரிவுரையாளர்கள் தான் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட அளவு மாணவர்களை கல்லூரியில் சேர்க்க வைக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு அந்த ஆசிரியர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும்.

அதன் படி அந்த ஊரில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மூளை சலவை செய்ய புறப்பட்டார்கள் சிலர். உண்மை தான். ஒரு கல்லூரி பேர் புகழ் பெற்று விட்டால் அதில் சேர்த்து விட முண்டி அடித்து கொண்டு செல்வார்கள். இது போல் ஆரம்ப கல்லூரிகள் எத்தனை தரமுடையதாய் இருந்தாலும் எல்லோரும் தயக்கம் காட்டுவார்கள். முதல் நான்கு வருடம்… அதாவது முதன்முதலில் அந்த கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறும் போது வேலையுடன் சென்று, நல் நிலையில் இருந்தால் தான் மேலும் அந்த கல்லூரியில் மாணவர்கள் சேர விருப்பப்படுவார்கள். அதனால் நன் மதிப்பெண் பெற்றவர்களை அந்த முதல் நான்கு வருடமும் சேர்க்க பாடுபட வேண்டும். அவர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர, அந்தந்த கம்பெனிக்களுக்கு சென்று தங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த கோர வேண்டும்.

சரி அப்படி தேர்ந்தெடுத்த மாணவிகளில் காவ்யாவும் ஒருவள். கல்லூரி கட்டணத்தில் 75% குறைப்பு என்று சொல்லி 1050 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தவர்களை சேர சொல்லி கேட்டார்கள். இந்த கட்டணம் அவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாங்கும் அளவை விடவும் சற்று குறைவாக இருக்க, அவளது பெற்றோர் அங்கே அவளை சேர்த்து விட்டனர்.

இதற்கு முன்னரே வாணிக்கு, B.Sc (கணிதம்) சேர்த்து விட்டனர். அதுவும் நல்ல கல்லூரி என்று பெயர் பெற்றது தான். மேலும் அது பெண்கள் மட்டும் பயிலும் கல்லூரி. வாணி பள்ளி படித்ததும் பெண்கள் பள்ளி தான். அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் தான் படித்தாள் அவள்.

இரு பாலரும் படிக்கும் கல்லூரியில் அவளை சேர்க்க விரும்பவில்லை சாந்தி. அதனால் தான் நல்ல கலை கல்லூரி என்று தெரிந்து, மேலும் அது பெண்கள் கல்லூரி என்பது அந்த முடிவுக்கு வலு சேர்க்க, அந்த கல்லூரியில் சேர்த்து விட்டாள்.

காவ்யாவை பற்றி அறிந்ததும் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி.

“பேரே தெரியாத காலேஜ்ல சேந்து இருக்கா??. அங்க படிச்சா எப்படி சொல்லி கொடுப்பாங்களோ என்ன வேலை கிடக்குமோ என்னவோ!!. என்னையும் கூப்பிட்டாங்க. நான் தான் போகல. அவளையும் என் கூடவே பி.எஸ்சி எடுக்க சொன்னேன். எங்க??!!!. அவ தான் கேக்கல” என்று தனது மற்ற தோழிகளிடம் சொல்லி கொண்டு இருந்தாள் வாணி.

அன்று சென்னை செல்வதால், தனது துணி மணிகளை பேக் செய்து கொண்டு இருந்தான் குரு.

குரு சென்னையில், ஒரு ஐடி கம்பெனியில் பணி புரிகிறான். ஐடி கம்பெனியில் பணி புரிவது ஒரு கவுரமாக பார்க்க பட்டது அந்த ஊர் மக்களிடையே.

“சுபா போய்ட்டு வரேன்” என்று சொன்ன குரு, திலகாவிடமும் விடை பெற்றான்.

“பாத்து போ பா. ஊருக்கு போனதும் போன் போடு. வேளா வேளைக்கு சாப்பிடு. நேரத்துக்கு தூங்கு” என்று எப்போது ஊருக்கு கிளம்பினாலும் சொல்லும் வாசகத்தை சொன்னார் திலகா.

எல்லாவற்றிற்க்கும், ‘சரி மா’, ‘சரி மா’ என்று தலையை ஆட்டிய குரு, எல்லாம் சொல்லி முடித்தவுடன் இறுதியாய் தலையை பெரிதாக ஆட்டி, “போய்ட்டு வரேன் மா” என்று, சுபாவின் தலையை கலைத்து விட்டு கிளம்பினான்.

ராமசாமி, அவனை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றார்.

வழியில் பார்த்தவர்கள், “என்ன தம்பி ஊருக்கு கிளம்பியாச்சா??” என்று கேட்டு விட்டு, “பாத்து பத்தரமா போய்ட்டு வா பா” என்றும் சொல்லி விட்டு சென்றார்கள். ராமசாமியும், அவர்கள் பேசுவதற்கு ஏதுவாக வண்டியை அவ்வப்போது நிறுத்தி கொண்டு இருந்தார்.

பேருந்து நிலையம் வர, அவர்கள் ஊரில் இருந்தே பெரு நகரங்களுக்கு செல்லும் பேருந்து எதுவும் இல்லை. அதனால் டவுன் பஸ்ஸில் ஏறி பெரிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கே இருந்து தான் சென்னை, கோயம்பத்தூர் போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல முடியும்.

ராமசாமி, நேராக அந்த பேருந்து நிலையத்திற்கு தான் அழைத்து சென்றார். டவுன் பஸ்க்கு ஏன் காத்திருக்க வேண்டும்? என்று. நேரம் பார்த்து சரியாக தான் வந்து இருந்தார்கள்.

எப்போது சென்றாலும், அந்த பஸ்ஸில் தான் ஊருக்கு செல்வான் என்பதால் அதன் கண்டக்டர் குருவுக்கு நல்ல பரிச்சயம்.

“தம்பி… வண்டி கிளம்பி இன்னும் கால் மணி நேரம் இருக்கு” என்று குருவிடம் சொன்னார் அவர்.

“சரிங்க ணா” என்றவன், தன் தந்தையிடம் திரும்பி, “சரி பா. நீங்க கிளம்புங்க. நானும் பஸ்ல உக்காந்துக்கறேன்” என்று சொன்னான் குரு.

“சரி பா” என்றவர், அவனது பாக்கெட்டில் நூறு ரூபாய் தாள்கள் இரண்டை வைத்தார்.

எப்போதும் அவர் செய்வது தான்  எத்தனை பெரிய வேலையில் இருந்து எவ்வளவு சம்பாதித்தாலும், வெளியே செல்லும் போது பிள்ளைகள் கையில் பணம் கொடுப்பது.

புன்னகையுடன் தந்தையிடம் விடை பெற்று பேருந்தில் ஏறினான் குரு.

தாங்கும்…

Advertisement