Advertisement

தடுமாற்றம் 2

ராமசாமி தரகரிடம் பேசி விட்டு, இந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக சொல்லி விட்டும் வந்து விட்டார். எப்படியாவது தலயால தண்ணி குடிச்சாவது அவன சம்மதிக்க வைக்கனும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

‘இன்னும் இப்படியே எல்லாம் இவன வுட்டு வைக்க போறீங்களா??. உங்களுக்குனு ஒரு வாரிசு வேணாமா??. இப்பயே வயசு 35 ஆவ போவுது. இப்பவே இரண்டாவது கல்யாணத்துக்கு கொழந்த இல்லாம பொண்ணு கெடைக்கறது முடியாத காரியம். இன்னும் போனா கல்யாணமே பண்ண முடியாது போனா கூட சொல்லறதுக்கு இல்ல’ என்று இவரது உறவுகள் சொல்ல மளமளவென வேலைகளை ஆரம்பித்து விட்டார் ராமசாமி.

அது தான் தற்போது குருவிடம் கூட கலந்து ஆலோசிக்காமல், இவர்களே முடிவு எடுத்தது.

குருவின் கடையில், கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்கள் வந்த வேலை முடிந்து கிளம்பினர்.

அங்கே குருவை தவிர இன்னொரு பெண்ணையும் பணியில் அமர்த்தி இருந்தான். அவர் பெயர் அனிதா. இவர்கள் வீட்டிற்கு அருகில் தான் குருவின் கடை இருக்கிறது.

வீட்டில் சும்மா இருப்பதற்கு இங்கே வேலைக்கு வரலாம் என்று வந்து இருக்கிறாள். 22 வயது ஆகிறது. இவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

“அண்ணா… கணக்கு எல்லாம் எழுதிட்டேன் ணா. கரெண்ட் பில் கட்டன ரசிது மட்டும் கொடுத்தா அதுல சேத்து வச்சிடுவேன்” என்று குருவிடம் கேட்டாள் அனிதா.

“சரி டா. நான் வச்சிக்கறேன். நீ போய் சாப்பிட்டு வா” என்று அவளை மதிய உணவு உண்ண அனுப்பினான் குரு.

“ம்ம்ம்… சரி ணா” என்று சொல்லி விட்டு அருகில் இருந்த அவள் வீட்டுக்கு சென்றாள்.

அவள் வந்தவுடன் தான் குரு உணவு உண்ண தனது இல்லம் செல்வான்.

அதே போல் அவள் முடித்து வந்தவுடன்,  அவன் மதிய உணவுக்கு செல்ல, அங்கே ராமசாமி, திலகா மட்டுமே இருந்தனர். சுபா தனது இல்லம் சென்று விட்டாள்.

“கை கால் கழுவிட்டு வா… சாப்பிடுவயாம்” என்று சொல்லி கொண்டே தங்கள் உரையாடலை நிறுத்தி விட்டு குருவை கவனிக்க சென்றார் திலகா.

சுடு சோற்றில், நிறைய பருப்பு குழம்பு ஊற்றி, அதில் முருங்கை இலை போட்டு காய்ச்சிய நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டான். அந்த நெய்யின் வாசம் மூக்கை துளைக்க ஒரு நொடி உலகம் மறந்து தன் துக்கம் கலைந்து அதை அனுபவித்தான். சிறு பிள்ளையில் அவனது விருப்ப உணவு இது.

அவ்வளவு தான் மீண்டும் அவன் முகம் பழையபடி மாறி, உணவை உண்டான்.

ராமசாமி திலகாவிடம் கண்ணசைக்க, திலகா ‘மொத சாப்புட்டும். அப்பறம் பேசறேன்’ என்று பதில் சைகை செய்தார்.

குருவும் உண்டு முடித்து விட்டு, அவர்களை பார்த்து அமர்ந்து இருந்தான்.

திலகா, “தம்பி ஒனக்கு கல்யாணம் பண்ணிலாம் நினைக்கறோம்” என்று சொன்னார்.

“எனக்கு தான் ஏற்கனவே ஆகிடுச்சே மா” என்று சொன்னான் குரு.

“அது தான் நிலைக்கலையே!!” – பதிலுக்கு திலகா.

“சரி… அதுக்கு??” – குரு.

“அதுக்கு…. அப்படியே விட்டுட முடியுமா??. உனக்குனு ஒரு வாழ்க்க வேணாமா??” என்று திலகா ஆதங்கத்துடன் சற்றே கோபத்துடன் கேட்டார்.

“என் வாழ்க்கைக்கு என்ன?? நல்லா தான் இருக்கு” என்று இலகுவாக சொன்னான் குரு.

“என்ன நல்லா நாளைக்கு உன் பேரு சொல்ல ஒரு புள்ள வேணாமா??. எங்களுக்கே ஒன்னுன்னா உன்ன பாக்க யாரும் வேணாமா??” என்று கவலையுடன் கேட்டார் திலகா.

“அப்படி எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும் என்ன பாத்துக்க என்னால முடியும். அப்பறம் என்ன?? ஆன்… புள்ள… எனக்கு தான் இருக்கே!!. அப்பறம் என்ன??” என்று பதிலும் கேள்வியுமாய் சொன்னான் குரு.

“என்ன இருக்கு?? எங்க இருக்கு?? உன்கிட்ட இருக்கா??. அந்த புள்ளக்கு நீ தான் அது அப்பனாவது தெரியுமா??. இப்படியே தனி மரமா தான் இருப்பேன் சொல்லிட்டு இருக்க!!” என்று ஏறிய குரலில் வேக வேகமாக கோபமாக கேட்டார் திலகா. அவரால் அவரையே அடக்கி கொள்ள முடியவில்லை… பைய வாழக்க இப்படி ஆகி போச்சே என்று.

“என்ன மா என்கிட்ட இல்ல??.. ம்ம்ம்??.. எனக்கானது என்னைக்கு ஆனாலும் என்கிட்ட வந்து சேரும். அப்ப அத ஏத்துக்க என்கிட்ட எதுவும் தடையா இருக்க கூடாது!!. நீ சொல்லறனு இப்ப கல்யாணம் பண்ணா நாளைக்கு என்ன தேடி வரும் போது எப்படி ஏதுக்க முடியும்??” என்று குருவும் கோபமாக கேட்டான்.

திலகா கண்ணீருடன் இருக்க ராமசாமி தான், “புரியாம கிறுக்கு மாறி பேசாதடா??. எப்படி உன்ன தேடி வரும்??. அப்டி எந்த நம்பிக்கைல சொல்லற??” என்று கேட்டார்.

“வரும்னா வரும். அவ்வளவு தான். அந்த நம்பிக்க எனக்கு இருக்கு. அப்படி இல்லனா வரும்ங்கற நம்பிக்கல வாழந்துடுவேன். போதுமா??” என்று கோவமாக சொன்னான் குரு.

“சத்தியமா உனக்கு கிறுக்கு தான் புடிச்சி இருக்கு. உன் வாழ்க்கைல எங்களுக்கு இருக்க அக்கறல கொஞ்சம் கூட ஒனக்கு இல்லையா??” என்று ஆதங்கமாக கேட்டார் ராமசாமி.

“அத பத்தி உங்களுக்கு என்ன??. இனி இந்த மாறி எல்லாம் பேசிட்டு என்கிட்ட வராதீங்க. எனக்கு வாழ்க்கைய பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க இனி அதுல தலயிட வேணாம்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் குரு.

அவன் கிளம்பியதும், “என்னங்க?? இப்படி சொல்லிட்டு போறான். நம்ம என்ன அவனுக்கு கெட்டதா பண்ண போறோம். அவனும் நல்லா இருக்கனும்னு தான பண்ணறோம். நம்மளயே அவன் வாழ்க்கைல தலையிட வேணாம் சொல்லிட்டு போறான் ” என்று மிக மிக வருத்தமாக கேட்டார் திலகா.

“நீ வருத்தப்படதா!!. அவனுக்கு மதம் ஏறி போய் கிடக்கு. இப்ப ஒன்னும் தெரியாது. பின்னாடி தான் நம்ம சொல்லறது புரியும். அப்பவும் நம்ம மட்டும் தான் கூட இருப்போம். பாத்துக்கலாம். அவனுக்கு புடிச்ச மாறி இருந்துட்டு போகட்டும். நான் போய் அந்த புரோக்கர் கிட்ட வேணாம்னு சொல்லிட்டு வந்துடறேன்” என்று திலகாவ சின்ன ஆறுதல் சொல்லி விட்டு, அவரும் வெளியே கிளம்பி விட்டார்.

“சனியனுங்க… என்னிக்கு அத கல்யாணம் பண்ணானோ அன்னிக்கு புடிச்சது பீட… நல்ல உத்தியோகத்துல சென்னைல இருந்தான். வந்து சேந்தது… வேலயும் போய் அது கூடவும் இல்லாம… இப்ப இவன் வாழ்க்க தான் அந்தரத்துல தொங்குது… தலப்பாடா அடிச்சிக்கிட்டேன்… வேணாம்னு கேட்டானா!!” என்று புலம்பி கொண்டே, அவர்கள் சாப்பிட்டு விட்டு சென்ற பின் குழம்பு குண்டா, சோத்து குண்டா என்று எல்லாவற்றையும் சமையலறைக்கு எடுத்து சென்றார்.

பின் ஜலதாரியில் இருந்த பாத்திரங்களை துலக்கி கொண்டே, “இங்க இருந்த வரை ஒரு வேல சொல்லி இருப்பனா… நாந்தான் அவளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரி… தனி குடுத்தனம் போயாச்சும் நல்லா இருப்பானு பாத்தா… அதுக்கும் ஒத்து வரல அந்த மவராசி… இப்ப அதுங்க எல்லாம் நல்லா இருக்கு… இவன் தான் பைத்தியம் புடிச்சி அலையுறான்” என்று புலம்பினார்.

குருவிடம் பேசி கல்யாணத்துக்கு ஒத்து வரல என்றவுடன், அந்த முதல் திருமணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று, அதையும் அவளையும் திட்டி கொண்டு இருந்தார் திலகா. வேறு என்ன தான் செய்ய முடியும் அவரால் மட்டும். முக்கால் வாசி இல்லதரசிகளின் நிலை அது தானே.

வெளியே சென்று இருந்த ராமசாமி, வழியிலே அந்த புரோக்கரை பார்த்தார்.

“பொண்ணு வீட்டுல எல்லாம் ஓகேவாம். எப்ப பொண்ணு பாக்க வறீங்கனு கேட்டாங்க!!” என்று ராமசாமியிடம் சொன்னார் அந்த புரோக்கர்.

சிறிது தயங்கிய ராமசாமி, “இல்ல… வேண்டாம்… இப்ப கல்யாணம் பண்ணல” என்று சொல்லி விட்டார்.

“அட ஏன் சாமி… நல்ல சம்பந்தம்… இரண்டாம் கல்யாணத்துக்கு இப்படி அமையுறதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பன வேணும். எல்லாம் பொருந்தி வரப்ப ஏன் வேணாம் சொல்லுற??” என்று கேட்டார் அவர். அவருக்கு இந்த வேல ஆக வேணும். அந்த கமிஷன் தானே அவர் சம்பளம்.

“பைய வேணாம் சொல்லிட்டான்” என்று மட்டும் சொன்னார் ராமசாமி.

“ஓஓஓ… வேற எந்த மாறி பொண்ணு வேணுமாம்??” என்று கேட்டார் அவர்.

“இல்லங்க… அவனுக்கு கல்யாணம் பண்ணற மாறியே இல்ல” என்று சொன்னார் ராமசாமி.

“என்ன சாமி இது??. அவங்களா வந்தா கல்யாணம் பண்ணுங்கனு கேப்பாங்க!!. நம்ம தான் பேசி சொல்லி புரிய வக்கனும்” என்று மேலும் சொன்னார் அந்த புரோக்கர்.

“ம்ம்ம்… பாப்போங்க” என்று விட்டு சொல்லி, “சரி வரேங்க” என்று மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து அகன்று விட்டார் ராமசாமி.

வீட்டில் இருந்து கிளம்பிய குரு, மீண்டும் கடைக்கு செல்லவில்லை. தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவர்களது ஊரின் கடைசியில் இருந்து ஒரு கரட்டுக்கு சென்றான். கரடு என்பது வேறு ஒன்றும் காலி இடம் தான். ஆனால் விவசாயம் செய்ய தகுந்த இடம் அல்ல. நிறைய கற்கள் கொண்டு இருக்கும் இடம். அதே போல் இடம் முன்பு எல்லாம் நிறைய இருக்கும். தற்போது அதை எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றி விற்று விட்டனர்.

அது போல் வீட்டு மனைகளாக மாறாமல் இருந்த ஒரு கரட்டுக்கு தான் சென்றான் குரு. அந்த மொத்த இடத்துக்கும் ஓரே ஒரு பெரிய மரம் தான் இருந்தது. அதிலும் நிறைய கிளைகள் / இலைகள் இல்லை. ஆனால் இவன் ஒருவனுக்கு நிழல் தரும் அளவு இருந்தது. அந்த மரத்தின் நிழலில் கீழே இருந்த கல்லில் அமர்ந்தான் குரு.

பசங்களுக்கு இது ஒரு அட்வாண்டேஜ்… ஏதேனும் கோபம் வருத்தம் இருந்தால், யாருக்கும் சொல்லாமல் செருப்பை மாட்டி கொண்டு வண்டி எடுத்து கொண்டு எங்கேனும் சென்று விடலாம். வீட்டில் இருப்பவர் தான் சண்டையினாலும் எங்க சென்றாரகள் என்ற கவலையிலும் இருப்பார்கள். அலைபேசியில் அழைத்தாலும் எடுக்க மாட்டார்கள்.

அப்படியே இரு கைகளையும் தலைக்கு பின் கோர்த்தவாறு அந்த மரத்தின் மீது சாய்ந்து கண்களை மூடி கொண்டான் குரு.

தனிமையிலே இனிமை காண முடியுமா???.. என்றால் குருவால் முடிந்தது தான். தனிமை கொடுமையாய் இருந்தாலும், தனது உறவுக்காக காத்திருப்பது ஒரு வித இனிமையாய் தான் இருந்தது அவனுக்கு. அந்த இனிமையுடனே அப்படியே கண்ணயர்ந்தான் குரு.

அவன் தூங்கட்டும். குரு பிரசாத்தின் வாழ்வில் நடந்ததை நாம் பார்த்து விட்டு வரலாம்.

தாங்கும்

Advertisement