Advertisement

தடுமாற்றம் – 1

தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான் குரு பிரசாத். வயது கிட்டதட்ட 34 இருக்கும். ராமசாமி – திலகா தம்பதியினரின் மூத்த மகன்.

ஏறு நெற்றி… மேலும் முன் பக்கம் முடிகளும் சற்று குறைந்து தான் இருக்கும். ஆனால் பார்ப்பவர்கள் யாரும் அவனை குறை சொல்லும் அளவு இருக்க மாட்டான். இரசிக்க தக்கவன் தான். நம்மில் ஒருவன் தான்.

தபால் அலுவலகத்தில் கணக்கு ஆரம்பித்து சுமாராக இரண்டு வருடம் ஆகி இருக்கும். மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அதில் போட்டு கொண்டு வருகிறான்.

தனது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைத்து கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சில தூரம் கடந்து இருப்பான். அவனுக்கு எதிரே ஒரு சின்ன மிதிவண்டியில் ஒரு சிறுவன் வந்து கொண்டு இருந்தான்.

சரியாக இருவரும் எதிர் எதிரே இருக்க, குரு சாலையின் ஓரம் நகர்ந்து அந்த மிதிவண்டி செல்ல வழி விட்டு, போகும் அந்த சிறுவனையே பார்த்து கொண்டு இருந்தான்.

பின்னர் பெரு மூச்சுடன் தனது அன்றாட வாழ்க்கையை வாழ சென்றான்.

கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை வைத்து நடத்துகிறான் குரு பிரசாத். அங்கே சில மாணவர்கள் அவனிடம் சி, சி++, ஜாவா, ஜெ எஸ், பைதான் போன்ற மென்பொருள் மொழிகளை கற்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல்
வகுப்பு போக மற்ற நேரங்களில் அதை ப்ரசிங் சென்டராகவும், சில மாணவர்களுக்கு அவர்களது மினி ப்ராஜெக்டிலும் உதவி செய்கிறான். அருகிலே பிரபல பொறியியல் கல்லூரி இருப்பதால் அவனுக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைவில்லை.

அவன் அங்கிருந்து நகர்வதை பார்த்த ஒருவன், “எப்பா குரு என்ன பாத்துட்டு ஒன்னும் பேசாம போறானு வருத்தமா??” என்று கேட்டான். அவன் குருவின் பால்ய காலம் தொட்டே நண்பனான சம்பத்.

“இல்லடா… நான் யாருனு அவனுக்கு தெரியுமோ என்னவோ!!. இல்ல தெரிஞ்சாலும் என்னனு சொல்லி வச்சி இருக்காங்கனு யாருக்கு தெரியும்” என்று அந்த சிறுவனை விட்டு கொடுக்காமல் பேசினான் குரு.

“என்னவோ போடா!!” என்று அவன் தோளை தட்டி கூறி விட்டு, “எங்கடா போற?? கம்ப்யூட்டர் சென்டருக்கா??” என்று கேட்டான் சம்பத்.

“ஆமா டா… பசங்க வந்துடுவாங்க” என்று சொன்னான் குரு.

“அப்படியே வழில என்ன நம்ம வேலு ஸ்டோர்ஸ் பக்கத்துல இறக்கி விட்டுடு” என்று சொல்லி, குருவின் இரு சக்கர வாகனத்தின் பின்னே தொத்தி கொண்டான் சம்பத்.

அவனை இறக்கி விட்டுட்டு, தனது கடையை/டியூசன்/பிரவுசிங் சென்டரை திறந்தான்.

“அண்ணா எங்களுக்கு நாளைக்கு கேம்பஸ் இன்டர்வியூ இருக்கு ணா. காலேஜ்லயும் நிறைய டிரைனிங் கொடுத்தாங்க. நீங்களும் எதுனா சொல்லி கொடுங்கணா” என்று கேட்டான் ஒரு இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் கேட்டான்.

எல்லா கல்லூரியும் போல ப்ளேஸ்மெண்ட் டிரைனிங் என்ற ஒன்று அவர்களது கல்லூரியிலும் இருந்தது. அதையும் தாண்டி எதையாவது கற்று கொள்ள குருவை சுற்றி அமர்ந்தனர் அவர்கள்.

—————

அதே ஊரில் ஒரு வீட்டில்…

வாணிஸ்ரீ தனது இரண்டு வயது மகளை வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள். அப்போது தான் அவளது தாய் சின்னவளை குளிப்பாட்டி விட்டு, உடல் முழுதும் பவுடர் போட்டு நெற்றி, கன்னம், உள்ளங்ககை மற்றும் உள்ளங்கால்களை மை வைத்து விட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.

“அம்மு குட்டி… அழகு குட்டி” என்று வாணி சின்னவளை கொஞ்ச, குழந்தையோ பொக்கை வாயை திறந்து சிரித்து கொண்டு இருந்தது.

“வாணி இந்தா சாப்பிடு” என்று காலை உணவை ஒரு தட்டில் போட்டு வந்து கொடுத்தாள், வாணியின் தாய் சாந்தி.

குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு, உணவை வாங்கி உண்டாள். இன்று வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு ஊருக்கு வந்து இருந்தாள் வாணி. அதனால் எப்போதும் போல் அரக்க பரக்க உண்ணாமல், பொறுமையாய் சாப்பிட்டாள்.

வாணிஸ்ரீ, சாந்தி – களியபெருமாள் தம்பதியின் மூத்த மகள். இருபத்தி எட்டு வயது மங்கை. அவளுக்கு இரு பிள்ளை செல்வங்கள். மூத்தவன் ஆண் குழந்தை. ஏழு வயது ஆகிறது. பெயர் பரத். இரண்டாவது பெண். இரண்டு வயதாகிறது. பெயர் கனிகா. போட்டி தேர்வு எழுதி, அரசு பணியில் கடந்த மூன்று வருடங்களாக பணி புரிந்து வருகிறாள். அவள் தற்போது இந்த ஊரில் இல்லை. அவளது வேலை திருநெல்வேலியில் தான். அங்கே தான் வசித்து வருகிறாள். பிள்ளை செல்வங்கள் இரண்டும் சாந்தியிடம் தான் வளர்கின்றன.

வாணிக்கு ஒரு தம்பி இருக்கிறான், அவன் இப்போது தான் கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கின்றான்.

“டேய்… நாளைக்கு உனக்கு  கேம்பஸ் இன்டர்வியூ இருக்கு தான??!!. ப்ரிப்பேர் பண்ணிட்டயா??. எல்லாம் ஓகே வா??” என்று அங்கே தரையில் அமர்ந்து உண்டு கொண்டு இருந்த, தனது தம்பி ஸ்ரீநாத்திடம் கேட்டாள்.

“ம்ம்ம்…. ஆச்சி ஆச்சி” என்று பட்டும் படாமல் பேசினான்.

வாணிக்கு அதில் எந்த பெரிய கவலையும், இந்த இரண்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் தான். இரண்டு வருடங்களுக்கு முன் எல்லாம் இவளை பார்த்தாலே முறைத்து விட்டு செல்வான். தற்போது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறான்.

அப்போது தயிர் வாங்க கடைக்கு சின்ன மிதிவண்டியில் சென்று இருந்த பரத், வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு தயிரை தனது பாட்டி சாந்தியிடம் கொடுத்தான்.

தயிர் பாக்கெட்டை கழுவி விட்டு, அதை கட் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்த இருவருக்கும் ஊற்றி, உப்பு போட்டார் சாந்தி.

அடுத்து மற்றொரு தட்டில் சுடு சாதம் போட்டு, தயிர் விட்டு பிசைந்து, பொறியலையும் வைத்து பரத்திடம் சாந்தி தர,  அதை வாங்கி உண்டான்.

பிறகு களியபெருமாள் அவனை பள்ளியில் சென்று விட்டு விட்டு, தனது வேலையை பார்க்க சென்றார்.

————–

அதே ஊரில் மற்றொரு வீட்டில், ராமசாமி உண்டு கொண்டு இருக்க, திலகா பரிமாறி கொண்டு இருந்தார்.

“என்னங்க!!! அவனை இப்படியே விட்டுட முடியுமா??” என்று கேட்டார் திலகா.

“என்ன பண்ண சொல்லற திலகா?? சொன்னா கேக்கற பிறவியா அவன்??” என்று கேட்டார்.

“இதுக்கு தான் கல்யாணம் பண்ணும் போதே தலபாடா அடிச்சிகிட்டேன். யாரு கேட்டா??” என்று மூக்கை உறிஞ்சியவாறே பேசினார் திலகா.

“அவன் மட்டும் எடுத்துமே சரினு சொல்லிட்டானா??. என்ன என்ன பேசி அவன் மனச மாத்தி சரி சொல்ல வச்சாங்க!! ஆனா இப்ப அவன் தான் யாரும் இல்லாம இருக்கான்” என்று ராமசாமியும் புலம்பினார்.

அந்த அங்கே வந்த சுபலட்சுமியோ, “அம்மா… ஏன்மா சாப்பிடற நேரத்துல இத பேசற!!!” என்று தனது தாயிடம் சொல்லி விட்டு, “அப்பா… நீ முதல்ல சாப்பிடு… அப்பறம் எல்லாம் பேசலாம். இன்னிக்கு அவன் வரட்டும் நானே கேக்கறேன்” என்று சொன்னாள்.

சுபலட்சுமி, ராமசாமி மற்றும் திலகாவின் இளைய மகள் மற்றும் ஒரே பெண் குழந்தை. குருவின் தங்கை. சுபாவுக்கு கல்யாணம் முடிந்து கிட்டதட்ட ஆறு வருடங்கள் முடிய போகிறது. சுபாவுக்கு இரு பெண் குழந்தைகள். அவளது புகுந்த வீடு… அவள் வீடு என்று குறிப்பிட வேண்டுமோ, ஆமாம். திருமணத்திற்கு பின் இத்தனை நாளாய் அவள் வீடாய் இருந்தது, பிறந்த வீடு என்ற அடை மொழியுடன் தானே குறிப்பிடப்படும். சரி… சுபாவின் வீடு ராமசாமி – திலகாவின் வீட்டில் இருந்து இரு தெருக்களே தள்ளி இருக்கிறது. அதனால் அடிக்கடி வந்து செல்வாள்.

இவர்கள் இத்தனை நேரமாக பேசி கொண்டு இருந்தது வேறு யாரை பற்றியும் அல்ல. நமது கதையின் முக்கிய கதாபாத்திரமான குருவை பற்றி தான்.

அதுவும் அவனுக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றி தான் பேசி கொண்டு இருந்தனர். அவனது முதல் திருமணம் தான் சரியாய் அமையவில்லை. இதையாவது நன்றாய் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் அவன் அதற்கு பிடி கொடுத்தால் தானே… வாயில் வைத்தால் வழுக்கி கொண்டு போகும் அல்வாவை போல தப்பித்து கொண்டு இருந்தான். அதை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் என்ன பெற்றோர்கள். அதனால் அவனது சம்மதத்தை கேட்காமல், அவன் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த பெண் கலைச்செல்வி.

“சரி நான் அந்த புரோக்கர பாத்து மத்த சேதி எல்லாம் பேசிட்டு வரேன்” என்று ராமசாமி, திலகா மற்றும் சுபாவிடம் சொல்லி கொண்டு கிளம்பினார்.

“அம்மா பொண்ண பத்தி நல்லா விசாரிச்சிட்டயா??” என்று கேட்டாள் சுபா.

“ம்ம்ம்… எல்லாம் ஆச்சி… அந்த பிள்ளைக்கி கல்யாணம் முடிந்து ஒரு ஒரு வருடம் தான் வாழ்ந்து இருப்பா. அதுக்குள்ள புருஷன் செத்திட்டானாம். குழந்த எல்லாம் எதும் இல்ல. 23 வயசு தான் ஆவுது. அப்ப பக்கமும் பெருசா எதும் பாக்கல… நம்மளும் எதும் பாக்கல. அதனால ஒத்து வரும்னு தான் நினைக்கறேன்” என்று சொன்னார் திலகா.

“அது எல்லாம் சரி மா!!!. அந்த புள்ள குணம் எப்படி??” என்று கேட்டாள் சுபா.

“நல்ல அமைதியா புள்ளனு சொன்னாங்க. இதுவரைக்கும் எந்த சண்ட சச்சரவும் இல்லனு தான் சொன்னாங்க. நம்மளும் ஒன்னும் அந்த புள்ளய ஒதுக்கி வைக்க போறது இல்லயே!!!. எம்புள்ள வாழ்க்க பட்டு போகாம, தளைக்க வர போற புள்ள நானும் பாத்துக்க மாட்டனா!!” என்று அந்த பெண்ணை பற்றி சொல்லி தனது நிலையும் சொன்னார் திலகா.

“மொதல்லயும் இப்படி தான மா இருந்த!!!. எவ்வளவோ பண்ண, ஆனா என்ன ஆச்சி??. மொத மாறி இப்ப எதுவும் ஆகாது இல்ல மா. அண்ணே பாவம் மா” என்று வேதனையாக சொன்னாள் சுபா.

“ச்சே… நல்ல பேச்சு அப்போ அந்த இலவ பத்தி பேசாத… எம்புள்ள அது பாட்டுக்கு இருந்துச்சி. அவன் அத்தகாரி என்ன என்னவோ பேசி, அவ புள்ளக்கு கல்யாணம் பண்ணி வச்சா!!!. இப்ப அவன் வாழ்க்கய இப்படி பண்ணிட்டு, அவ நல்லா இருக்கா!!!. அப்படியேவா இருந்துடுவா??. பண்ணதுக்கு எல்லாம் அனுபவிக்கா போவ மாட்டா” என்று பேச வேண்டாம் என்று சொல்லி ஆதங்கத்தில் அவரே பேசி கொண்டு இருந்தார்.

சுபாவோ, ‘இதுக்கு மேல போனா அம்மா இன்னும் இன்னும் பேசி வருத்தம் தான் படுவாங்க. ச்சே நானும் வாய் இருக்க மாட்டாத அத வேற நெனப்பு பண்ணி விட்டுட்டேன்’ என்று தனக்குள்ளே திட்டி கொண்டு, தனது தாயை சமாதான படுத்த ஆரம்பித்தாள்.

“சரி சரி… விடுமா” என்று சொல்லி விட்டு, “அண்ணங்கிட்ட என்ன சொல்லி சம்மதம் வாங்கிறது. அது பாட்டுக்கு எதேதோ சொல்லி பினாத்திகிட்டு கல்யாணமே கட்ட மாட்டேனுட்டு திரியுதே” என்று பேச்சை மாற்றினாள் சுபா.

அது நன்றாய் வேலை செய்தது. என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு போய் விட்டார் அவர்.

தாங்கும்

Advertisement