தழலேந்தியின் இரும்பு முகம் கள் உண்ட வண்டாக மாறி தடாகையின் முகத்தை தான் பார்த்திருந்தது‌. ‘இத்தனை ஆண்டுகள் இருவரும் ஒரே அரண்மனையில் இருந்தும் எப்படி அவளை பார்க்காது போனேன் நான்’ என்று தான் மனதில் நினைத்தபடி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்திருந்தான்.
     “வீரரே! வீரரே…” தடாகையின் குரலில் கனவில் இருந்து மீண்டு வந்தது போல் உணர்ந்த தழல் “ஆன் கூறுங்கள் தேவி” என்றான் பணிவாக.
     “நீங்கள் இருவரும் தான் இந்த காட்டில் காவலுக்கு இருக்கிறீர்களா? வேறு யாரும் இல்லையா என்று கேட்டேன் வீரரே” என தடாகை வினவியதற்கு
     “ஆம் தேவி நாங்கள் இருவருமே இங்கு காவல் பணியில் உள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் நேற்றைய இரவு காவல்காரர்கள். இன்று பகல் நேர காவலாளிகள் இன்னும் வரவில்லை தேவி” என்று பதிலளித்தான் எழிலரசன்.
     தற்போது இவள் எதற்கு யாரோடோ சண்டையிட்டாள் என யோசித்த தழல் “தடாகை தேவியே தாங்கள் இந்த அடந்த வனாந்திரத்தில் இந்த சமயம் என்ன செய்கிறீர்கள். அதுவும் யாரென்று தெரியாத அந்த நபர்களிடம்‌ சண்டையிட்டு கொண்டிருந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பி நின்றான்.
     “என்னவென்று சொல்வது வீரரே இந்த காந்தாரி வன அருவி காலையில் பார்க்க வான் முகில் பாய்ந்து வருவதை போல் வழிந்தோடும் பேரழகி என கேள்வியுற்றோம். அதில் நீராடி மகிழவே என் தோழியை இங்கு அழைத்து வந்தேன்” என்ற தடாகை நடந்தவற்றை அப்படியே கூறலானாள்.
     தங்களுடன்  வந்த வீரர்களை ஏய்ந்துவிட்டு வந்த தடாகையும் வஞ்சிக் கொடியும் அப்படியே வடக்கு பக்கமாக நடக்க துவங்கினர். அதுவும் கொடியின் வீட்டிற்கு நேர் வடக்கே தான் காந்தாரி வனம் இருக்க அது அவர்களுக்கு சாதகமாய் போய்விட அந்த வழியே பேசியபடி நடக்கலாயினர்.
     “ஏய் கொடி உன் வீட்டிலிருந்து காந்தாரி வனத்தின் அருவி மிக நெருக்கத்தில் உள்ளதே நீ ஒருமுறையாவது இங்கு நீராட வந்திருக்கிறாயா?”
     தடாகை கேட்டதற்கு அவளை மேலிருந்து கீழாக பார்த்த கொடி “நான் உன்னை போன்று விசித்திர ஆசை எல்லாம் கொண்டவள் அல்ல தடாகை. என் ஆசையெல்லாம் மிக மிக சிறியவையே. அதில் இந்த ஆசை இல்லையடி தடாகை. இருப்பினும் என் சகாக்கள் என்னை அங்கு நீராட அழைத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு தான் அங்கே செல்ல இதுவரை மனதில் தைரியம் வந்ததில்லை”
     “ஓஓஓ.. பின் இச்சமயம் அங்கு வர எப்படி தைரியம் வந்ததோ என் கொடிக்கு?”
     “என்ன செய்வது கழுதைக்கு வாக்குப்பட்டால் உதைப்பட்டுதான் ஆகவேண்டும் என்று கூறுவார்களே அதேபோல் தான் உன்னுடன் சேர்ந்ததில் இருந்து இது போன்ற கிறுக்கு தனங்களை செய்ய பழகிவிட்டேன்”
     தோழிகள் இருவரும் சிரிப்புடன் பேசிக் கொண்டே மெல்ல வனத்தினுள் நுழைந்தனர். அப்பொழுது யாரோ பேசும் அரவம் கேட்க கொடியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தடாகை அதை கூர்ந்து கவனித்தாள்.
     “இன்று நமக்கு இடப்பட்ட கட்டளையை நாம் எப்படியாயினும் செய்தே ஆகவேண்டும். இன்று இளவரசர் தழலேந்தி இங்கு வர இருப்பதாய் கூறி அவரை அடித்து வீழ்த்தும்படி கூறியிருக்கிறார்கள். அவரை எப்படியாவது முடமாக்கிவிட வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை‌. அதை நாம் நிறைவேற்றியே தீரவேண்டும்”
     அந்த குரல்கள் இப்படி பேச அதிர்ந்து போய் நின்றனர் தோழிகள் இருவரும். அதன்பின்னரே சுதாரித்துக் கொண்டு “யார் நாட்டிற்கு வந்து யாரிடம் உங்கள் வேலையை காட்டப் பார்க்கிறீர்கள்” என கோபப்பட்ட தடாகை தன் வாளை உருவி களத்தில் இறங்கினாள்.
     திடீரென அவள் சண்டையில் இறங்கியதில் அங்கிருந்த ஆட்களால் தடாகையை சமாளிக்க இயலவில்லை. தடாகையின் வீரத்தின் முன் அவர்கள் ஒன்றுமே இல்லை என்பது எவ்வளவு உண்மை என நேராக கண்டு தெரிந்துணர்ந்தாள் கொடி.
     “அச்சமயமே நீங்கள் இருவரும் இந்த இடம் வந்தீர்கள் வீரர்களே. ஆனால் எனக்கு ஒன்றுதான் புரியவில்லை இளவரசர் தழலேந்தி இருப்பதோ அரண்மனையில் அதுவும் இன்று ஏதோ அவசர வழக்கு என்று பாதி தடாகபுரியே அங்கு குழுமியிருக்க இளவரசருக்கு இந்த அடர்ந்த வனாந்தரத்தில் என்ன வேலை இருக்கப் போகிறது?”
     தடாகை அனைத்தையும் கூறி முடித்திருக்க எழிலரசனும் தழலேந்தியும் ஒருவரை ஒருவர் புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டனர்.
     “என்ன வீரர்களே இருவரும் அமைதியாக இருக்கிறீர்கள். நான் கூறியது சரிதானே?”
     தடாகையின் குரலில் அவளை திரும்பி பார்த்த தழலேந்தி “சரிதான் தேவி இளவரசருக்கு இங்கு என்ன வேலை இருக்க போகிறது. ஆம் தேவி எனக்கு ஒரு சந்தேகம் அதை தங்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாமா?” என்க தடாகையும் சரி என்றாள்.
     “இந்த கதையெல்லாம் சரிதான் தேவி. ஆனால் தாங்கள் இந்நாட்டு தளபதியின் ஒரே மகள் தாங்கள் எப்படி எந்தவித பாதுகாவலும் இன்றி இந்த வனத்தில் உலா வருகிறீர்கள். அதற்கு தளபதி எங்கணம் சம்மதித்தார். இல்லை தளபதிக்கு தெரியாது இங்கு வந்துள்ளீர்களா…”
     தழலேந்தி நக்கலாக கேட்டு நிறுத்தி அவள் பேச்சை திசைமாற்ற நினைக்க அதேபோன்று தான் தடாகைக்கு திக்கென்று ஆக அவனை அதே பாவத்துடன் நோக்கினாள்.
     இருக்காதா பின்னே இவள் திட்டமிட்டு தந்தையிடம் பொய் உரைத்து வந்திருக்க சரியாய் கண்டுக் கொண்டானே என திருதிருவென விழித்தாள் தடாகை. அதை கண்டு புன்னகைத்த தழல்
     “அப்பொழுது நான் கூறியதே சத்தியம் போல் தெரிகிறது. தாங்கள் தளபதியை ஏய்த்துதான் வந்துள்ளீர்கள் போலவே”
     தழலின் கிண்டலில் “வீரரே அது என்னவோ உண்மைதான். ஆனால் இதை தாங்கள் யாரிடமும் கூற மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து தாருங்கள்” என்றாள் சற்று சினுங்களாகவே.
     அது என்னவோ தழலின் கண்கள் பேசும் பாஷையில் அவனிடம் வீரமாக என்ன சாதாரணமாக கூட பேசமுடியாமல் போனது பேதைக்கு. தழலேந்தி அவள் சினுங்களில் சிக்கி சிதறியே போனான். சற்று நேரம் இருவரும் ஒன்றுமே பேசாது ஒருவரை ஒருவர் பார்த்திருக்க இருவரின் இதயம் துடிக்கும் சத்தம் சற்று அதிகமாகவே கேட்டது.
     பார்த்த முதல் பார்வையில் மனதை ஒருவன் பறிக்கமுடியுமா என்று இதுனாள் வரை எண்ணியிருந்த தடாகைக்கு முடியும் என சொல்லாது சொல்லி நிற்கிறானே ஒருவன். இவர்களின் மோனநிலையை கலைக்க “க்கும்” என்று சத்தமிட்டு அவர்களை இயல்புக்கு கொணர்ந்தான் எழில்.
     எழிலுக்கு அவன் தோழனின் மனது நன்றாக புரிய சிரிப்பை கட்டுப்படுத்தி நின்றிருக்க கொடிக்கோ அங்கு என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை.
     “சரி தாங்கள் வந்த பணி முடிந்துவிட்டதா தேவி?” தழல் மெதுவாக கேட்க “இன்னும் இல்லை வீரரே. ஆனால் இன்று அதற்கான சூழல் இல்லாது போனது. எனவே இப்படியே கிளம்பி செல்ல வேண்டியதுதான்” என்றாள் சற்றே சோகமாக தடாகை.
     அவளின் அந்த சோகமுகம் தழலேந்தியினுள் ஏதோ செய்ய அவன் முகமும் ஏதோ போல் ஆனது‌. “சரி நான் வருகிறேன் வீரரே” என்ற தடாகை கிளம்பி சிறிது தொலைவு செல்ல
     “எப்போது வருவீர்கள் தேவி?” என்றிட்டான்.
     அப்போது தான் தடாகை தான் செல்கிறேன் என கூறாது வருகிறேன் என்று கூறியதை உணர அவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது. ஆனால் அதை அவனுக்கு காட்டாது அப்படியே செல்ல பார்க்க
     “தடாகை தேவியாருக்கு என்னை போன்ற சாதாரண வீரனிடம் இதற்கு மேல் உரையாட இஷ்டம் இல்லைப்போல்” தழலேந்தி மீண்டும் பேசியபடி அவள் பின்னே நடக்க தடாகை கவனித்தாலே ஒழிய ஏதும் பேசவில்லை.
     “தேவிக்கு பேச இஷ்டமில்லை என்றாலும் பரவாயில்லை நான் கடைசியாக கூறுவதை கேட்டால் அது எனக்கு போதும். நான் மாறன், இந்த காவல்காரன் இந்த வனத்தின் காவல் பணியில் தான் இந்த ஒரு திங்களும் இருக்கப் போகிறேன் அதுவும் இரவு காவல் பணி”
     தழலேந்தி கூறியது தடாகையின் காதுகளில் நன்றாகவே விழுக “அதை எதற்கு வீரரே என் தோழி அறிந்துக் கொள்ள வேண்டும்” என இடையிட்டாள் வஞ்சிக்கொடி.
     வஞ்சிக்கொடியின் இடையீட்டில் மற்ற இருவருக்கும் புன்னகைத்தான் வந்தது. தடாகை ஏதும் பேசாமல் அவள் நடையை தொடர தழலேந்தியோ
     “நாளை இரவு தங்கள் வருகைக்காய் நான் காத்திருப்பேன் தேவி” தடாகையின் அருகே சென்று மெல்ல அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறியவன் அவள் அந்த வனத்தை விட்டு பாதுக்காப்பாக வெளியேறிய பின்னரே அவனும் வேறு வழி நகர்ந்தான்.
     எழிலரசன் வெகுநேரம் ஏதோ யோசனையில் வருவதை பார்த்தபின்னரே இத்துனை நேரம் வரை இருந்த மாய வலையில் இருந்து தழலேந்தி வெளியே வந்தான்.
     “என்னவாயிற்று எழில் எந்த மலையை சாய்க்க இவ்வளவு யோசனையில் வருகிறாய்?” விளையாட்டாய் தழல் கேட்டு வைக்க
     தழலேந்தியை நக்கலாக பார்த்த எழில் சிரிப்புடன்‌ கேட்டான் “மலைதான் அடியோடு சாய்ந்து விட்டதே இளவரசே. இது மாயையா இல்லை மாயாவி பார்த்த வேலையா?”
     “ம்ஹும் காந்தாரி வன மாயாவி என்னை அவள்புறம் சாய்த்துவிட்டாளே நண்பா. இந்த மாயாவியிடம் இருந்து மீண்டு வர வழியேதும் உண்டா?”
     எழில் கேட்டதற்கு ஒருவித மோன நிலையில் பதில் தந்த தழலை பார்த்தவன் தன் தோழனை இனி அந்த மாயவலையில் இருந்து மீட்க முடியாது என்ற முடிவிற்கே வந்திட்டான்.
     “அதை விடு தழல் இன்று உன்னை தாக்க வந்ததாக கூறிய ஆட்களை குறித்து நீ என்ன செய்யப்போகிறாய். தடாகை தேவி மட்டும் அவர்கள் பேசியதை கேட்டிருக்காவிட்டால் அவர்கள் இங்கு வந்த காரணத்தை நாம் கண்டு கொண்டிருக்க மாட்டோமே. இது யாரின் செயலாய் இருக்கும் என ஏதேனும் எண்ணம் உள்ளதா?”
     தழலேந்தி எழில் கூறியதை தலையசைத்து கேட்டுக் கொண்டவனே தவிர பதில் ஏதும் கூறவில்லை. அவன் மனதிற்குள் என்ன நினைக்கிறான் என முகத்திலிருந்தும் எழிலால் கண்டுக் கொள்ள முடியாது போகவே, இளவரசர் தழலேந்தியால் எதையும் சமாளிக்க முடியும் என அமைதியாக அவனுடன் நடந்தான்.
     அரண்மனையில் வசந்தவள்ளியின் அறையில் மந்திரி தலை குனிந்து நின்றிருந்தான்.
     “என்னவாயிற்று மந்திரியாரே? எல்லாம் நான் கூறிய திட்டத்தின்படி தானே செயல்படுத்தினீர்கள். எங்கே தவறு நடந்தது” ஆவேசத்துடன் கேட்டு நின்றாள் வசந்தவள்ளி.
     முகத்தில் கோபத்தை தேக்கி வைத்திருந்த மந்திரியும் “தாங்கள் கூறியபடியே அனைத்தையும் நான் தயார் செய்திருந்தேன் தில்லைபுரி ராணி அவர்களே. ஆனால் இடையில் ஒரு பெண் வந்துவிட்டாள் என கேள்வியுற்றேன்”
     மந்திரியிடம் அங்கே நடந்ததை அந்த ஆட்கள் கூறியிருக்க அதை அப்படியே வசந்தவள்ளியிடம் ஒப்பித்தான் மந்திரி. அதை கேட்டு அதிர்ந்த தில்லைபுரி ராணி
     “இது எப்படி சாத்தியம் மந்திரியாரே. இந்த தடாகபுரி நாட்டில் இப்படி ஒரு பெண்ணை பற்றி நான் கேள்வியுற்றதே இல்லையே. இதை அவர்கள் என்னை நம்ப சொல்கிறார்களா?”
     “இல்லை அரசியே அவர்கள் பேசும் போது நானே உடனிருந்து பார்த்தேன் ஒருவரின் முகமும் பொய் உரைக்கவில்லை. அதுமட்டும் இன்றி அப்பெண் இளவரசரைதான் அடிக்க இவர்கள் சென்றிருக்கிறார்கள் என கண்டுக் கொண்டாளாம்”
     மந்திரி இன்னொரு இடியை வசந்தவள்ளியின் தலையில் இறக்கினார்‌.
     “அப்படியானால் இதுகுறித்து தழலேந்தி ஏதும் அறிவானா?” இதயம் தடதடக்க கேட்டு வைத்தாள் வசந்தவள்ளி.
     “அதுகுறித்து அவர் அறிய வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன் அரசியே. ஆனால் ஒன்று இன்னும் சிறிது காலம் நாம் அமைதியாக இருப்பதுதான் சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. தக்க சமயம் வரும்போது நாம் இளவரசரை பார்த்துக் கொள்ளலாம்”
     மந்திரி தனக்கு தோன்றியதை கூற வசந்தவள்ளிக்கும் அதுவே சரியென பட இன்னும் சிறிது காலம் அமைதி காக்க முடிவு செய்தாள். வஞ்சகமும் சதியும் சேர்ந்து நீதியிம் முன் மண்டியிடுமா அல்லது நீதியையே வீழ்த்துமா பொறுத்திருந்து பார்ப்போம்.