Advertisement

கேடில் விழுச்செல்வம்

“ஏம்மா! ஏறுனா ஏறு, இல்லினா அப்பாலிக்கா போ! இன்னாமோ மொச புடிக்கறே?” 

பூக்கார பெண்மணியின் குரலுக்கு பயந்து நான் பின்னடைந்தேன். இறங்குபவர்களுக்கு வழி விடாமல் திமுதிபுவென ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறியது. 

பாதிபேர் ஏறிய நிலையில் கண்டக்டர் விசிலடித்து விட்டார். பஸ்ஸும் புறப்பட, கோபமான பிரயாணிகளில் சிலர் பஸ்ஸின் பின்புறம் வேகமாக தட்டினர் என்றால் சிலர் நடத்துனரை கண்டபடி திட்டினர்.

நின்று சண்டை போடாமல், எதையும் கண்டுகொள்ளாமல் பேருந்து சென்றுவிட்டது. அலுவலகம் முடிந்து பேருந்து நிலையத்திற்கு வந்த நான் ஒரு மணி நேரத்தில் நான்கு பேருந்துகளை தவற விட்டிருந்தேன். 

பக்கத்தில் இரண்டு பெண்மணிகள் தத்தம் மாமியாரை குறைகூறி பேசிக்கொண்டிருக்க, காதல் ஜோடி ஒன்று உலகமே மறந்து கிசுகிசுப்பாக கொஞ்சிக் கொண்டிருந்தனர். எதையும் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. வீட்டிற்கு சீக்கிரம் சென்று பள்ளியிலிருந்து திரும்பியிருக்கும் மகளுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே என்னும் பதைப்பு மட்டுமே மேலோங்கி நின்றது.

கைக்கடிகாரத்திலிருந்து சாலையில் கண் பதிக்க, எதிரே வரும் பஸ்ஸை பார்த்தால் இதிலும் ஏறமுடியுமா என எனக்கு சந்தேகம் வந்தது. முயல் பிடிக்க முயற்சி எதும் செய்யாமல், ஒரு ஆட்டோவை கூப்பிட்டு பேரம் பேசி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

என் சாவி கொண்டு கதவை திறக்கும்போதே கணவரும், மகளும் பேசிக்கொள்ளும் சத்தம் செவியை வந்தடைந்தது.

‘அப்பாடா! நொறுக்குத்தீனி சாப்பிட்டு இருப்பாள். இனி ஆறஅமர சமைக்கலாம்’ என நிம்மதியுடன் உள்ளே நுழைந்தேன்.

“இன்னுமா உன் வண்டி வரல? பஸ்ல தான் வந்தியா?” என்ற கணவரின் கேள்வியை சாமர்த்தியமாக தவிர்த்தபடி,

“எப்போடா வந்தே?” எனக் கேட்டவாறே மகள் அருகே சென்று உட்கார்ந்தேன்.

 “அம்மா! நான் கேட்ட நோட்புக் எங்கே?” மகள் கேட்க,  

“ஆட்டோவ எங்கயும் நிறுத்த முடியலடா. சர்வீஸ்க்கு விட்ட வண்டி நாளைக்கு வந்திடும். நாளைக்கு வாங்கி தரேன்” எனச் சொல்லி நானே மாட்டிக்கொண்டேன்.

“என்ன! ஆட்டோல வந்தியா? காலைல ஆபிஸ் போகும்போதுதான் நேரமாகுதுன்னு ஆட்டோல போறே! சாயந்தரமும் என்ன? சம்பாதிக்கற காசை எல்லாம் ஆட்டோ டிரைவருக்கும், மெக்கானிக்குக்கும் கொடு. அந்த மெக்கானிக் உன்னை நல்லா ஏமாத்துறான்னு தலைப்பாடா அடிச்சிக்கிறேன்! அது உன் மண்டைல ஏறுதா?” என அவர் பேசிக்கொண்டே போக, நான் எழுந்து முகம் கழுவும் சாக்கில் குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன்.

‘நியாயமா தான் சொல்றார், அதான் உன்னால மறுத்து பேச முடியல. இல்லனா விட்டுட்டு வர ஆளா நீ? கூடக்கூட பேசுவே தானே?’ மனசாட்சி தலையில் தட்டினாலும், அவர் பேச்சை உடனே கேட்டால் நம் கெத்து என்னாகிறது?

இதற்கு மேல் பொறுக்கமுடியாது, சுறுசுறு எனக் கோபம் ஏற படுக்கையறைக்குள் சென்று வண்டி மெக்கானிக்கை போனில் அழைத்தேன். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ சூப்பர் ஸ்டாரின் பாட்டு ஓடி முடிய, என் அழைப்பு ஏற்கப்படவில்லை. இன்னும் எரிச்சல் வந்தது எனக்கு. வண்டியை தான் சொன்ன நேரத்துக்கு தரவில்லை, போனை எடுத்து பேசினால் என்ன?

பிடிவாதமாய் விடாமல் அழைத்தேன். என் மனசு தங்கம் இல்லை, இல்லை, இல்லை! ஒருவழியாக அழைப்பு எடுக்கப்பட ஒரு பிஞ்சுக்கிளி கொஞ்சியது. கோபம் பாதியாய் வடிய, மெக்கானிக் பேர் சொல்லி விசாரித்தேன். 

“டாட் வெளிய போயிருக்காங்க, ஆன்ட்டி! போன் நான் வச்சிருக்கேன்” என நுனி நாக்கு ஆங்கிலத்தில் மழலையில் குட்டிப்பெண் பேச, என் கோபமும் எரிச்சலும் போன இடம் தெரியவில்லை.  

குழந்தையோடு கதை பேசி, அவள் சர்ச்பார்க் கான்வென்ட்டில் படிப்பது, அவளுடைய தோழர்களின் பெயர்கள், அவளுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் தெரிந்து கொண்டு போனை வைக்கவும், என் மகள் என்னை தேடி வந்துவிட்டாள்.

“என்னம்மா, அப்பாக்கு பயந்து இங்கயே உட்காந்திட்டீங்களா?” என்றபடி வந்தவளை கிச்சன் அழைத்து சென்று, ஒரு கேரட்டை சீவி கையில் கொடுத்துவிட்டு, அவளின் அன்றைய நாளை பற்றி கேட்டுக்கொண்டே சமையலை முடித்தேன்.

இரவு உணவு உண்ணும்போது வேறு பேச்சுக்கள் வர, கணவர் வண்டி விஷயத்தை மறந்து விட, ‘அப்பா முருகா! உனக்கு நன்றி!’ என திருத்தணியில் இருப்பவருக்கு ஒரு நன்றியை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை செய்தவளுக்கு, மனதில் அந்த குட்டிக் கிளியின் கீகீ சத்தம் தான் இனிமையாய் ஒலித்தது.

என்னதான் தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், தன் மகளை தரம் வாய்ந்த பள்ளியில் படிக்க வைப்பதை நினைத்து மெக்கானிக்கை பாராட்டிக் கொண்டேன். அவர் மேல் இருக்கும் கோபமும் குறைந்தது. அதற்கு ஏற்றார்போல் காலையிலேயே அவரும் போன் செய்து சாயந்திரம் என் அலுவலகத்திலேயே வண்டியை கொண்டு வந்து தருவதாக சொல்லவும், நான் முறைப்பாக கூட பேசவில்லை.

ஆனால் என் போனில் அவருடைய காதை போட்டு வைத்திருந்த கணவர்,

 “இப்படி தன்மையா பேசினா அவன் ஏன் பில்லுல எக்கச்சக்கமா ஏத்த மாட்டான்? அந்த ஸ்பேர் பார்ட்ஸ் போட்டேன், இது வெல்டிங் வச்சேன்னு உன்னை நல்லா ஏமாத்துவான். நீயும் ஒன்னும் சொல்லாம கேட்கற காசை கொடுத்துட்டு வருவே! மெக்கானிக்கை மாத்துன்னு சொன்னா மொழி புரியாத மாதிரி பார்ப்பே” என்று ஆரம்பிக்க, நான் பேசுபவர் யார் என்றே தெரியாத பாவனையில், அமைதியின் சொரூபமாக மகளுக்கு டிபன் பாக்ஸில் உணவை எடுத்து வைத்தேன்.

‘பின்னே! நான் ஏன் பேரம் பேசப் போறேன்? மகளை படிக்க வைக்க அவருக்கு எவ்வளவு செலவு ஆகும்? நாமே காசை பிடித்துக் கொடுத்தால் அவர் என்ன செய்வார், பாவம்!’ மனதில் நினைத்தபடி வெளியே மண்டையை நன்றாக உருட்டினேன். 

‘கணவன் மனைவி உள்ளத்தால் ஒருவரே’ என்பது மட்டும் உண்மையானால், நான் நினைத்தது மட்டும் கணவருக்கு தெரியக் கூடுமானால், என் கதி அதோ கதி தான். 

மகள் மிதிவண்டி ஓட்டி செல்ல, 

“எனக்கு அந்த பக்கம் தான் வேலை இருக்கு. வா, உன்னை பாதி தூரம் விட்டுட்டு போறேன்” என கணவரும் கை கொடுக்க, மடமடவென கிளம்பி அவரின் பின்னால் உற்சாகமாக அமர்ந்து கொண்டேன். 

“அவன் துடைச்சி கொடுத்தான்னு அப்படியே வண்டியை எடுத்துட்டு வந்திடாதே. என்ன என்ன சரிசெய்தான்னு கேளு. வண்டியை ஓட்டிப் பார்த்துட்டு காசு கொடு. கொஞ்சம் பேலன்ஸ் வச்சிட்டே கொடு. கிறுக்கலா கொடுக்காம பில்லை தெளிவா எழுதி தர சொல்லு” என அவர் முன்னால் வண்டியை ஓட்டிக்கொண்டே சொல்ல, எனக்கு தலையை ஆட்டும் அவசியம் கூட இருக்கவில்லை. 

‘இருந்தாலும் இவர் ரொம்ப பேசுறார். வேற எப்பவாது என்கிட்டே மாட்டாமலா இருப்பார்? அப்போ இதுக்கும் சேர்த்து வச்சி சொற்பொழிவு ஆற்றிடணும்’ என மனதின் மூலையில் போட்டு வைத்துக் கொண்டேன்.

சிக்னலில் என் அலுவலகம் செல்லும் பேருந்தின் முன்னே வண்டியை கொண்டு வந்து அவர் நிறுத்த, எப்போதும் ரூல்ஸ் பேசும் நான் தப்பித்தேன் பிழைத்தேன் என ஓடி ஏறிக்கொண்டேன்.

அலுவலகத்தில் உணவு இடைவேளையில் என் மெக்கானிக் புராணமும், அவர் பெண்ணின் பிரதாபமும் தான் என் வாயில் அரைப்பட்டது. 

“எத்தனை பேர் பெண்கல்விக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பார்கள்?” என்று மைக் இல்லாத குறையாய் நான் பேச, என் தோழி, 

“எழுந்து வா! உனக்கு இன்னைக்கே நோபல் பரிசு கொடுத்துட மாட்டாங்க” என இழுத்து சென்றாள்.

சாயந்தரம் விட்ட குறை தொட்ட குறை வேலைகளெல்லாம் முடித்துவிட்டு, ‘அதான் வண்டி வரப்போகிறதே’ எனும் மிதப்பில் பேருந்து நிலையம் செல்லும் தோழியையும் வழி அனுப்பிவிட்டு, பியூனுக்கு துணையாய் தவமிருந்தால் என் ஆருயிர் வண்டியையும் காணோம், ஒற்றை தகவலையும் காணோம்.

திரும்பவும் பஸ் ஸ்டாப்க்கு நட மகளே நட…. இன்றும் ஆட்டோவில் போய் யார் பேச்சு வாங்குவது? 

முட்டி மோதி அல்லாடி உள்ளே ஏறி கம்பியை பிடித்துக்கொண்டு சாய்ந்து நின்றால், நம் மேல் ஒரு குடிமகன் சொகுசாக சாயப் பார்க்கிறார். 

‘அட! நீ வேற! போப்பா’ திட்டுவதற்கு கூட தெம்பு இல்லாமல் முன்னே நகர்ந்தால், நான் விட்டு வந்த இடத்தில் உட்காரும் சீட் காலியாகிறது. 

‘வட போச்சே!’ என நின்றுக் கொண்டே பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.

என் முகம் பார்த்தே பாவம் பார்த்து கணவர் தன் வேலையில் மூழ்க, ஆரவாரமாக நகரும் வெள்ளிக்கிழமை இரவு ஏனோதானோ என நகர்ந்தது.

மறுநாள் விடுமுறை என்றாலும் சமையல் முடித்து காலையிலேயே மகளுடன் நான் கிளம்ப, என் கணவர் என்னை விடுத்து வெளியே எட்டி வானம் பார்க்கிறார். 

‘இருங்க, இருங்க, என் வானத்திலும் மேகம் கறுக்கும், இடி இடிக்கும், மழை கொட்டும். அப்போ இருக்கு உங்களுக்கு!’ என கறுவிக்கொண்டே வெளியேறிவிட்டேன்.

ஆறாவது படிக்கும் மகள் கேட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவள் கையில் ஒரு ஐஸ்க்ரீமோடு மெக்கானிக் கடைக்கு சென்றுவிட்டோம். கடை திறந்திருந்தது. என் உடலின் ஒரு அங்கமான என் வண்டியையும் காணவில்லை, அந்த புகழ்பெற்ற வண்டி வல்லுனரையும் காணவில்லை.  

கடைப்பையன்,

 “அக்கா! உங்க வண்டிய தான் அண்ணா வாட்டர் வாஷ்க்கு எடுத்துட்டு போயிருக்கார். நீங்க கடைக்கு எங்கனா போறதா இருந்தா போயிட்டு வாங்கக்கா. அதுக்குள்ள அண்ணா வந்திடுவார்” என சொல்ல, நான் அவனை மேலும் கீழும் பார்த்தேன். 

‘என் மகள் வயதை விட ஒன்றிரண்டு கூட இருக்கும் உனக்கு நான் அக்காவா?’

“இல்லப்பா! நீ உன் அண்ணாக்கு போன் செய்து சொல்லு. நாங்க இங்கயே காத்திருக்கோம்” என அழிச்சாட்டியமாக நான் சொல்ல, அவன் தலையை சொறிந்துக்கொண்டே உள்ளே சென்று இரண்டு தகர டின்களை கொண்டுவந்து கவிழ்த்துப் போட்டான்.

“நீங்க உட்காருங்கக்கா, நான் போன் போடுறேன்” என்று அவன் வாகன பாகங்கள் சிதறி கிடந்த அழுக்கான அந்த சிறிய கடையின் உள்ளே செல்ல, என் மகள் என்னையும் தகர டின்னையும் பார்த்தாள். 

அவள் பார்வையை சந்திக்காமல் நான் ஒரு டின்னை பிளாட்பார்ம் ஓரம் நகர்த்தி போட்டு உட்கார்ந்து கொண்டேன்.

அவளும் என் அருகே அமர்ந்து கொண்டு சாலையை வேடிக்கை பார்க்க, நான் அவளுக்கு நேற்று என் மனம் கவர்ந்த பச்சைக்கிளியை பற்றியும், அவள் படிக்கும் பள்ளியை பற்றியும் பெருமை பேச ஆரம்பித்தேன். 

“சிஎம் ஜெயலலிதா படிச்ச கான்வென்ட் டா! இந்த மெக்கானிக் கிரேட் தானே?”

நான் கேட்ட கேள்விக்கு பதிலாக, என் பத்து வயது மகள் கேட்ட கேள்வியில் நான் வாயடைத்துப் போய் விட்டேன்.

“ஏம்மா, அவர் மகளை கான்வென்ட்ல படிக்க வைப்பாரு, இந்த அண்ணாவை படிக்க விடாம வேலைக்கு வச்சிக்குவாரா?” 

முற்றும்.

Advertisement