Advertisement

பத்மஜாவை அங்கிருத்து வீட்டுக்கு கூட்டி வந்த மலயனாதன், மறுநாள் கோயம்பத்தூரில் உள்ள புகழ்பெற்ற மனநல மருத்துவரிடம், பல போராட்டங்களுக்கு பின் அழைத்துச் சென்றார். 

அதன் பின் பல முறை அந்த மருத்துவரை சென்று சந்தித்து விட்டனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சனை. ஒவ்வொரு சண்டைக்கும் ஒவ்வொரு காரண காரியம். 

மலயனாதன், பத்மஜா இருவருக்கும் கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் முடிந்து வந்த சில நாட்கள் இருவருக்குமிடையே புயலுக்கு முன் வரும் அமைதி நிலவும். பின் மறுபடியும் ஒரு புயல் வீச ஆரம்பித்து, ஒரு நாள் அந்த புயல் கரையைக் கடக்கும். போட்ட கோட்டை எல்லாம் அழித்துவிட்டு தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்பர்.

மீண்டுமொரு கவுன்சிலிங்! மீண்டுமொரு அமைதி! மீண்டுமொரு சண்டை!! ஆரம்பத்தில் மலயநாதனும், பத்மாஜுவும் மட்டும் மருத்துவரை சென்று பார்த்துக் கொண்டிருக்க, தர்மன் வளர்ந்த பின் அவர்களை அழைத்துச் சென்று வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அவனுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து, அவன் பார்த்து வளர்ந்தது இந்த சண்டைகள் மட்டும் தான். பொதுவாக இப்படியான பெற்றோர்களின் வளர்ப்பில் வளரும் குழந்தைகள் தடம் மாறி போகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் தர்மன் தன் தாய் தந்தையருக்கும் சேர்த்து முழு குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டான். 

அர்ஜுனுக்கும் அவனுக்கும் ஏழு வயது வித்தியாசமாதலால், அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவனையே சார்ந்தது. இயல்பிலேயே சற்று பிடிவாத குணம் கொண்ட அர்ஜுன், அன்னை, தந்தையின் சண்டைகளை பார்த்து வளர்ந்தாதலோ, அல்லது எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள அண்ணன் இருக்கிறான் என்ற அலட்சியமோ, தான்தோன்றியாகவே சுற்றினான். பத்மஜாவின் வளர்ப்பில் அச்சு அசல் அவரின் பிரதியாகவே வளர்ந்தான்! பிழையாகி போன பிரதி!!  

பணம் அந்த வீட்டில் செழித்து கொழித்தது. தர்மன், அர்ஜுன் இருவரும் மனதிற்குள் நினைக்கும் முன்பே, அவர்கள் ஆசை நிறைவேறியது. பொருளாதார ரீதியில் குடும்பத்தை தாங்குவது மட்டும் ஒரு குடும்பத்தின் பொறுப்பில் அடங்கி விடாது. அதையும் தாண்டி குடும்பம் என்னும் இயந்திரம் பழுதில்லாமல் இயங்க விட்டுகொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை, புரிதல் என்னும் உயவு பொருட்கள் வேண்டும். 

பத்மஜாவிடமும், மலயனாதனிடமும் அது துளியும் இல்லாத காரணத்தால் தர்மன் தான் அந்த குடும்ப இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தான். இடையிடையே பழுதடைந்தாலும், இன்றளவும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காரணமும் அவனே!!

கார் கிறீச்சென்ற சத்தத்துடன் நிற்க, இறந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு தள்ளப்பட்டான் தர்மன்!

“என்னாச்சு மித்ரா? மம்மியை பார்த்துட்டியா? ஏன் காரை நிப்பாட்டின?” பரிதவிப்புடன் ஒலித்தது அவன் குரல்.

மித்ரனின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருக்க, அதையே கண் எடுக்காமல் பார்த்தவன், தர்மனிடம் அதை காட்டினான்!! அதன் திரையில் ‘அர்ஜுன் அம்மா’ என்று ஒளிர்ந்தது!!!!!!

——————————————————————————————————————————————- 

சரியாக இருபதாவது முறையாக அர்ஜுனுக்கு அழைத்து அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற பதிவு செய்யப்பட்ட குரலைக் கேட்டு சோர்ந்து விட்டாள் யக்ஞா!!

இதற்கும் மேல் பொறுத்திருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்தவள், சுசித்ராவுக்கு அழைப்பு விடுத்தாள்.

“அக்கா! எம்.பி வீட்ல இருக்காரா க்கா?”

“ஏன் மா கேட்குற?”

“அக்கா! ப்ளீஸ் சொல்லுங்க. அவரு போன்க்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். நாட் ரீச்சபிள்னு வருது”

“அது, எங்கேயோ முக்கியமான விஷயமா வெளிய போறதா சொல்லிட்டு தான் போனாப்ல. போன இடத்துல நெட்வொர்க் கிடைச்சிருக்காதா இருக்கும்”

“அப்படி என்ன முக்கியமான விஷயம்? எங்க போறோம்னு வீட்ல சொல்லிட்டு போக மாட்டாராமா?? அப்படி நெட்வொர்க் கூட கிடைக்காத இடத்துல அவருக்கு என்ன வேலை??? என்ன அமேசான் காட்டுக்கா போயிருக்கார்??? சரி! அப்படியே போயிருந்தாலும் நெட்வொர்க் கிடைக்கிற இடத்துக்கு வந்து ‘இந்த மாதிரி இங்க நெட்வொர்க் கம்மியா இருக்குது, அப்புறமா நன் பேசுறேன்னு சொல்லலாம்ல? நான் மதியத்துலேர்ந்து அவருக்கு ட்ரை பண்றேன். இப்போ மணி நைட் எட்டு, இவ்ளோ நேரம் வெளிய என்ன வேலை?”

“ஹேய் ஹேய் ஹேய் ரிலாக்ஸ். ரிலாக்ஸ். அர்ஜுனுக்கு ஒண்ணுமில்லை. அவனே உனக்கு கால் பண்ணுவான். நீ டென்ஷன் ஆகாத. ஒகே. ஹ்ம்ம் கல்யாணத்துக்கு அப்புறம் என் மச்சினன் நிலைமை ரொம்ப கஷ்டம் போலேயே?” யக்ஞாவை இலகுவாக்க அவளிடம் கேலி பேசினாலும் சுசித்ராவின் உள் மனது வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அதை மறைத்து யக்ஞாவிடம் இயல்பாய் பேசுவது பெரு முயற்சியாய் இருந்தது.

சுசித்ரா பேச்சில் ஏதோ ஒரு நெருடல்! அரை மனதாய் அலைபேசியை அணைத்தாள்!

சுசித்ரா உடனே தர்மனை தொடர்புக் கொண்டாள்

“யக்ஞா கால் பண்ணினாங்க பா. நான் அவ கிட்ட எதுவும் சொல்லலை. எதுக்கு தேவையில்லாம அவளையும் டென்ஷன் படுத்துகிட்டு. சப்போஸ் உங்களுக்கு கால் பண்ணினா நீங்களும் எதுவும் சொல்லிடாதீங்க”

“சுச்சி, மம்மி கிடைச்சுடாங்க சுச்சி”

“தேங்க் காட்! இப்ப தான் மூச்சே வருது. நல்லா இருக்காங்கள்ல?”

“அதெல்லாம் நான் வந்து சொல்றேன். இன்னும் அர்ஜுன் எங்க இருக்கான்னு தெரியல. மித்ரன் அவனை தேடி போயிருக்கான். மம்மி பயங்கற மூட் ஸ்விங்ல இருக்காங்க. திடீருன்னு கத்தி கத்தி அழுவுறாங்க, திடீருன்னு அமைதியா பேசுறாங்க. அதனால அவங்க கிட்ட அர்ஜுன் பத்தி எதுவும் சொல்லலை. அர்ஜுன் வீட்ல இருக்கிறதா தான் நினைச்சுட்டு இருக்காங்க. வீட்டுக்கு வந்து அவன் இல்லைன்னு எப்படி மறைக்கிறதுன்னு ஒண்ணும் புரியல. தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனும் புரியல. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்குது”

“நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள அர்ஜுன் வந்துடுவான் பா. நல்லதே நினைப்போம்”

கண்கள் சிவக்க, சோர்ந்து ஓய்ந்து, ஜீவனற்று வந்து சேர்ந்தான் தர்மன். மலயனாதனை பத்மஜா முன்பு வந்து நிற்க வேண்டாம் என்று தர்மன் கூறியிருந்ததால் அவர் ஒதுங்கியே நின்றுக் கொண்டார். 

ஒரு கையால் பத்மஜாவை கை தாங்கலாய் உள்ளே அழைத்து வந்தான். குளிருக்கு ஒரு போர்வை சுற்றியிருந்தார் அவர். உள்ளே வந்த அவர் குனிந்த தலை நிமிராது அவர் அறைக்குள் சென்று கதவை தாளிட எத்தனிக்க, தர்மன் அதை தடுத்தான்.

“மம்மி! இன்னைக்கு ஒரு நாள் உங்க ரூம்ல நான் தூங்குறேன். சுச்சி! மம்மி வரும்போதே வாமிட் பண்ணிட்டாங்க. டாக்டரை பார்த்துட்டு தான் வரோம். அவங்களால முடிஞ்சதை மட்டும் சாப்பிட கொடுக்கச் சொன்னார். தூங்குறதுக்கு மாத்திரை தந்திருக்கார். சாப்பிட எதுவும் வேண்டாம். மைல்ட் சூட்டில ஒரு டம்ளர் பால் மட்டும் கொண்டு வா. அப்படியே அந்த தைல பாட்டில் எடுத்துட்டு வா”

சிறிது மஞ்சள் தூள் கலந்து மிதமான சூட்டில் அவள் பால் எடுத்து வர, தர்மன் அதை பத்மஜாவுக்கு புகட்டி, அவர் கால்களுக்கு தைலம் தேய்த்து விட்டான். மாத்திரையும் எடுத்து கொடுத்து, தலைவலி தைலமும் தடவி விட்டு அவரை படுக்க வைத்தான். அது வரை தன்னகத்தே மூழ்கியிருந்த பத்மஜா பால் உள்ளே சென்றதும் சற்று தெளிந்தவராய் சுற்றுபுறத்தை கவனித்தார், “அர்ஜுன் எங்க தர்மா?”

“மேல அவன் ரூம்ல இருப்பான் மம்மி!”

“என்ன சொல்ற தர்மா? நான் காணோம்னு அவன் தேடவே இல்லையா?” அவர் குரலில் ஏமாற்றத்தின் த்வனி அப்பட்டமாய் தெரித்தது.

“மம்மி! நீங்க தூங்குங்க மம்மி. நாளைக்கு பேசிக்கலாம்”

“இல்லை தர்மா, நான் வேணா ஒரு தடவை அவன் ரூம்க்கு போய் அவனை பார்த்துட்டு வந்துடுறேன்”

“மம்மி! உங்களுக்கு உடம்பு முடியலை மம்மி! படியேறி போய் அவனை பார்க்க போறீங்களா? படுங்க மம்மி”

“இல்லை தர்மா, எனக்கு ஏதோ தப்பா தெரியுது. எனக்கு அவனை பத்தி தெரியும். என்ன தான் கோபம் இருந்தாலும் எனக்கொன்னுனா அவனால தாங்க முடியாது”

‘தெரிஞ்சு தான் ஓடி போனீங்களாக்கும்?’ வாய் வரை வந்த வார்த்தைகளை மென்று தின்றான். நிதானமாய் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவன் கையில் இருந்தது. 

“மம்மி! அவனுக்கு உங்க மேலயும் அப்பா மேலயும் கோபம் குறையல மம்மி. அதான் உங்களை பார்க்க வரலை. நாளைக்கு எல்லாம் சரியாகிடும். நீங்க தூங்குங்க”

“சரி! நான் அவனுக்கு போன் பண்ணி பேசிட்டு தூங்கிடுறேன்” அவர் அலைபேசியை கையில் எடுக்க, அதை அவர் கையிலிருந்து பிடிங்கினான் தர்மன்.

“இல்லை, நீ பண்றது எதுவுமே சரியில்லை. நானே அவன் ரூம்க்கு போய் பார்க்கிறேன்” தடுக்க வந்த தர்மனை தள்ளி விட்டபடி மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளின் முன்பு வந்து நின்றவர், அர்ஜுனை உரக்கக் குரல் கொடுத்து அழைக்க ஆரம்பித்தார்.

“அர்ஜுனா! அர்ஜுனா! அர்ஜுன்”

வழக்கமாய் இந்த படிக்கட்டுகளின் முன்பு நின்று அவனை சாப்பிட அழைத்தால், ‘வரேன் மம்மி’ என்றபடியே இறங்கி வரும் அவன் இன்று தாயின் குரலுக்கு இறங்கி வரவில்லை. 

“தர்மா! எங்க தர்மா அவன்? வெளிய போயிருக்கானா? இன்னும் வீட்டுக்கு வரலியா?” அவர் குரலில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

“மம்மி! கொஞ்சம் அமைதியா இருங்க மம்மி. நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க”

“தர்மா! சொல்லு தர்மா. என் புள்ளை எங்க?” அவர் குரல் அலறலாக மாறியது. வியர்த்து கொட்ட, கை கால்களில் நடுக்கம் பிறக்க, கண்கள் கிறங்க அவர் நின்ற அதே வேளை…………….

    

 

Advertisement