Advertisement

மித்ரன் காரை இயக்கிக் கொண்டிருக்க, கார் வேகமாக சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்மனின் கண்கள் சிவந்து கன்றியிருந்தது. பின் இருக்கையில் மலயனாதன்!  

தர்மனது அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் அதை எடுத்தான். 

“சுச்சி! மம்மி வந்துட்டாங்காளா? அங்க தானே இருக்காங்க?” அவன் குரல் நடுங்கி, டன் கணக்கில் எதிர்பார்ப்பு வழிந்தோடியது.

“இல்லை பா. நீங்க அத்தையை கண்டுபுடிச்சிடீங்களானு கேட்க தான் போன் பண்ணினேன்”

“ஓஹ்!”

“இங்க பாருங்க! அவங்க எங்கயும் போயிருக்க மாட்டாங்க, பயப்படாதீங்க. அத்தையோட ஃப்ரெண்டு ஒருத்தங்க இருக்காங்களே, லீலானு அவங்க கிட்ட கேட்டீங்களா?”

“அங்கயும் மம்மி இல்லை. மம்மியோட மத்த ஆபிஸ் கொலீக்ஸ் எல்லார் கிட்டயும் விசாரிச்சுட்டேன். எங்கேயும் இல்லை. இப்போ ஒவ்வொரு கோயில் கோயிலா தேடிட்டு இருக்கோம்” சொல்லும்போதே அவன் குரல் உடைய, 

“ப்ளீஸ் பா. தைரியமா இருங்க. எதுவும் ஆகாது”

“என்னால பேச முடியல மா. நான் அப்புறம் உனக்கு கூப்பிடுறேன்”

அலைபேசியை அனைத்தவனை மித்ரன் தேற்றினான்.

“அண்ணன்! ஒன்னும் ஆகாது. அம்மா கிடைச்சுடுவாங்க”

“அர்ஜுன் போன் ரீச் ஆச்சா?”

“இல்லை ண்ணா”

“எம்.எல்.ஏ வீட்ல விசாரிச்சியா?”

“ம்ம் விசாரிச்சேன். எம்.எல்.ஏ வைஃப், அர்ஜுன் அங்க வரவே இல்லைன்னு சொல்றாங்க. எம்.எல்.ஏ எங்கனு கேட்டதுக்கு அதை எல்லாம் சொல்ல முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க”

அவன் தலை துவண்டு கார் இருக்கையில் சாய்ந்து கொள்ள, கண்கள் தாமாக மூடிக் கொண்டது

சாயுங்காலம் வரை பத்மஜா அறையை விட்டு வெளியே வராததால் கவலைக் கொண்ட சுசித்ரா தர்மனிடம் உரைக்க, அவன் அவர் அறை கதவை தட்டியும் எந்த எதிர் பதிலும் கிடைக்கவில்லை. லேசாக பயம் ஆட்கொண்டது. மதிய சாப்பாட்டின் போது சுசித்ரா அவரை பார்த்ததாகவும், தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அவர் மறுத்ததையும் கூற, சிறிது நம்பிக்கை மிச்சம் இருந்தது.

எப்பொழுதும் கதவை அவர் தாளிட்டு வைப்பதால் அதை திறந்து பார்க்கும் முயற்சியை மேற்கொள்ளாத தர்மன், திடீரென்று முளைத்த சந்தேகத்தினால் கதவை தள்ள அது பட்டென்று திறந்து, வெற்று அறை அவர்களை வரவேற்றது.

பதற்றம் தொற்றிக் கொள்ள, அவர் அலைபேசிக்கு அழைத்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மித்ரனிடம் விஷயத்தை கூறி தேட கிளம்பியவனுக்கு இதுவரை எந்த நல்ல செய்தியும் கிட்டவில்லை.

“இங்க தான் எங்கேயாவது இருப்பா தர்மா. நீ கவலைப்படாதே. அவளுக்கு நம்ம எல்லாரையும் கஷ்ட்டப்படுத்தி பார்க்கிறதே வேலையா போச்சு! இதே தான் அவ எப்பவும் பண்றா. நம்மளை பதற வைக்கிறதுக்காகவே இப்படி பண்ணியிருக்கா. அவ நல்லா தான் இருப்பா”

“அப்பா! நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா” மித்ரனுக்கே மலயாந்தன் மீது கோபம் வந்ததது. இத்துனை இக்கட்டான சூழ்நிலையிலும் தன்முனைப்பு வாதத்தை முன் வைக்கும் அவரின் மீது ஆத்திரம் எழுந்தது.

‘இதே தான் அவ எப்பவும் பண்றா?’ கண் மூடி அமர்ந்திருந்த தர்மனின் காதுக்குள் மலயனதனின் சொற்கள் ஒலித்து அடங்க, அவனுக்குள் சட்டென்று ஒரு பொறி தட்டியது.

“அப்பா! ஒருவேளை சின்ன வயசுல நடந்த மாதிரி இப்பவும் மம்மி செஞ்சிருப்பாங்களோ?”

மலயநாதன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது!!

“மித்ரா! வண்டியை ஒகேனக்கல் விடு”

“என்ன அண்ணா சொல்றீங்க?”

“என்னோட சின்ன வயசுல ஒரு தடவை இப்படி தான் வீட்ல சண்டை ஆகி மம்மி கோபப்பட்டு ஒகேனக்கல் போய்டாங்க” சொல்லும்போதே அவன் குரலில் அதீத நடுக்கம்.

“ஓ!” அவன் சொல்லாமல் விட்ட ஒன்று மித்ரனுக்கு புரிந்தது.

“அண்ணன்! எதுக்கும்…..போலீஸ்க்கு……..சொல்லிடலாமா?”

“இல்லை, இல்லை, அது மாதிரி………அது மாதிரி எதுவும் இருக்காது. இல்லை”

“அண்ணன்! எதுவும் நடந்திருக்காது. போலீஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணினா நாம அங்க போய் சேருரதுக்கு முன்னாடி அவங்க அங்குள்ள போலீஸ் கிட்ட சொல்லி தேட சொல்வாங்கல?”

“இருப்பா! ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர் தான். அவருக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிடுறேன்”

“அப்பா! கொஞ்சம் அன்அபீசியலா தேடச் சொல்லுங்க பா. வேற எதுவும் சொல்ல வேண்டாம்”

“சரி தர்மா”

இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைக் கூறி அவரை தேட சொல்ல, மித்ரன் ஒகேனக்கல் செல்லும் வழியில் காரை வளைத்து திருப்பினான். இடையிடையே தர்மனும், சுசித்ராவும் அர்ஜுனுக்கு மாற்றி மாற்றி அழைத்து பார்க்க, அது தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை!!!

கார் முன்னோக்கி செல்ல தர்மனின் நினைவுகள் பின்னோக்கி அவன் பால்யத்துக்குள் சென்றது

மலயனாதன், பத்மஜா தம்பதியினர் திருமணம் ஆன புதிதில் சந்தோஷமாகவே வாழ்ந்தனர். அதன் பின் சிறு சிறு சண்டையில் ஆரம்பித்து, இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் சண்டைகளாய் உருமாறி, கத்தி கூச்சல் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவுக்கு அது வளர்ந்ததற்கு காரணம் இருவரில் ஒருவர் கூட தங்கள் கருத்தையோ, எண்ணத்தையோ விட்டுக் கொடுக்கும் எண்ணமும் இல்லை, புரிதலும், நம்பிக்கையும் இல்லை என்பதே ஆகும். 

தர்மன் பிறந்து ஆறு வருடங்கள் கழித்தே அர்ஜுன் பிறந்தான். சிறு வயதில் தர்மனும், அவன் தாயும் அவன் படித்த பள்ளியில் மிகவும் பிரபலம்!!!

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரைக்கும் ஒரே பள்ளியில் தான் தர்மன் படித்தான். காலை, மாலை இடைவெளியின் போது தர்மனின் தாய் அங்கே ஆஜர் ஆகிவிடுவார். அவர் கையில் ஏதாவதொரு சாப்பாடு பொருள் இருக்கும். சத்துமாவு உருண்டை, பழங்கள், இல்லாவிட்டால் பக்கத்து கடையில் வாங்கிய பூஸ்ட், பழச்சாறுகள் இப்படி தினம் ஒரு விதம் அவர் கையில் இருக்கும். இடைவெளி முடியும் வரை அங்கேயே நின்று அவனை சாப்பிட வைத்துவிட்டு அவர் அலுவலகத்துக்குச் செல்வார்

அறியா வயதில் இதை பார்க்கும் மற்ற பிள்ளைகள் ஆர்வத்துடன் பார்க்க, கண் வைத்து விடுவர் என்று கூறி அந்த பிள்ளைகளை துரத்தி விட்டு விடுவார் பத்மஜா! அடுத்தடுத்த வகுப்பு செல்ல செல்ல இந்த பழக்கத்தை அவன் நண்பர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அப்படியே அவன் அந்த பள்ளியில் பிரபலம் என்றானான். 

அதற்கு மட்டுமில்லை, வேறு ஒரு காரணத்திற்காகவும் அவன் பிரபலம் ஆனான்.

ஒரு முறை தர்மன் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாமல் போக, எப்பொழுதும் போல அவனை அழைத்துச் செல்ல வரும் பொழுது அவன் தேர்வு தாளை வாங்கி பார்த்தவர், கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவனை முட்டி போட வைத்து அந்த இடத்திலேயே வெளுத்து வாங்கினார்.

சுற்றிலும் மாணவர்கள் வாயை பிளந்தபடி வேடிக்கை பார்க்க, ஓரிரு ஆசிரியர்கள் ஓடி வந்து தடுத்தபின்பே அவனை அடிப்பதை நிறுத்தினார். அன்றிலிருந்து தர்மனின் நண்பர்களுக்கு பத்மஜா என்றாலே ஒருவித பயம்!

அன்று முதல் தர்மனுக்கு மாலை நேர விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டது. தொலைக்காட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டது. நண்பர்கள் வீட்டுக்கு செல்வதும், நண்பர்கள் இங்கே வருவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

அர்ஜுன் பள்ளியில் சேர்ந்து பின் அவனுக்கும் இதே உத்தியை அவர் கடைபிடிக்க, ஒரு அடி விழுந்த அடுத்த நொடி அவன் ஓடி போய் நடு தெருவில் புரண்டு புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான். அதிலிருந்து பத்மஜா அவனை அடிக்கவே யோசிப்பார்.

தர்மன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள், எப்பொழுதும் போல தன் தாய்க்காகக் காத்திருந்தான். அவன் முகம் பயத்தில் வெளிறியிருந்தது. அன்று அவனுக்கு தேர்வு தாள்களை ஆசிரியர் திருத்தி தந்திருந்தார். அறிவியல் பாடத்தில் அவன் தேர்ச்சி பெறவில்லை. அன்னை அடிப்பார் என்ற பயத்தில் அந்த சிறுவனின் மனது தவறு செய்ய முடிவெடுத்தது. ஒரு ரெட் இங்க் பேனாவை வைத்து மதிப்பெண்களை திருத்தி எழுதினான் தன்னை தானே பாஸ் செய்துக் கொண்டான்.

பத்மஜா அவன் தேர்வு தாளை கேட்க, அதை அவரிடம் அளித்தவன் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். பத்மஜாவின் கழுகு கண்கள் அவனின் கள்ளத்தனத்தை கண்டுகொண்டது. எதுவும் பேசாமல் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் அவனை பெல்ட்டால் அடி வெளுத்து வாங்கி விட, அவன் கையிலும், காலிலும் தோல் கன்றி சிவந்தது!! 

வேலையிலிருந்து திரும்பிய மலயனாதன் அதிர்ந்து போய் தர்மனை அடிப்பதை தடுக்க ஓடினார். பிள்ளை வளர்ப்பில் நீ சரியில்லை அதனால் தான் அவன் இப்படி மாறி போனான் என்று மலயனாதன் குறை கூற, பிள்ளைக்களுக்கென்று எதுவுமே செய்ததில்லை, அப்பா என்ற பொறுப்புடன் நடந்ததில்லை என்று பத்மஜா குறை கூற, பிள்ளைக்கு எது நல்லது, எது கெட்டது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவாதத்தை தாண்டி, நீ சரியா நான் சரியா என்ற வாக்குவாதத்தில் போய் நின்றது. வாக்குவாதம் முற்றி பத்மஜாவை மலயனாதன் அடிக்க, “என்னையவே அடிச்சிடீங்கள்ல, உன்னை எப்படி அலைய விடுறேன் பாரு’ என்ற மிரட்டலுடன் வீட்டை விட்டு வெளியேறினார் பத்மஜா! 

பத்மஜா வெளியேறியதை அலட்சியமாய் எடுத்துக் கொண்ட மலயனாதன் பொழுது சாய்ந்தும் மனைவி வீடு திரும்பாததை எண்ணி பயம் கொள்ள ஆரம்பித்தார். அழுது கொண்டிருக்கும் தன் மூத்த மகனையும், மூன்று வயதே ஆன தன் இரண்டாம் மகனையும் அழைத்துக் கொண்டு தெரு தெருவாய், கோயில் கோயிலாய் சுற்றி தேடினார். யாருக்கும் தெரிவிக்கவோ, போலீஸ் கம்ப்ளையின்ட் செய்யவோ கலெக்டர் பி.சி யான அவர் கௌரவம் முன்வரவில்லை!!!! 

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது!! போலீஸ்க்கு தெரிவிக்க நினைத்த சமயம், அவர் அலைபேசிக்கு மலயனாதனின் சொந்தக்காரர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் கூறியதை கேட்டு பதறி அடித்துக் கொண்டு ஒகேனக்கல் ஓடினார்.

அங்கே அவருக்கு, பத்மஜா ஒகேனக்கல் அருவியில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் காத்திருந்தது. சரியான நேரத்தில் பரிசல் ஓட்டுபவர்கள் பார்த்து அவரை விழவிடாமல் தடுத்ததாகவும், தற்செயலாக தான் அங்கே சென்றதால் அவரை பார்க்க நேர்ந்ததையும் மலயனாதனின் சொந்தக்காரர் கூறினார்.

Advertisement