Advertisement

“என்னாச்சு பா? ஒரு மாதிரி டென்ஷனா இருக்க?”

“ஒண்ணுமில்ல அண்ணி”

“அட! எனக்கு தெரியாததா அர்ஜுன்?! சும்மா சொல்லு. உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்” அர்ஜுனுக்கு காபியை கொடுத்தவாறே எம்.எல்.ஏவின் மனைவி அவனை வினவ,

“இல்லை அண்ணி. கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொல்லிட்டு டார்ச்சர் பண்றாங்க. வீட்ல இருக்கவே எரிச்சலா வருது. தினம் தினம் சண்டை தான்”

“என்ன செய்ய அர்ஜுன்? உங்க வீடும் வீட்டு ஆளுங்களும் ஏன் தான் இப்படி இருக்காங்களோ!!? புள்ளைங்களுக்கு பிடிக்காததை எதுக்கு செய்யுறாங்க? உங்க அப்பா அம்மா தான் இப்படி இருக்காங்கனு பார்த்தா உங்க அண்ணனும் உன்னை புரிஞ்சிக்கிறதே இல்லை”

“அவரு எதுவும் பண்றதில்லை அண்ணி. எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுவாங்க. வீட்டு பிரச்சனை எல்லாத்தையும் அண்ணன் தான் பார்த்துகிறாங்க”

“அய்யோ நான் உங்க அண்ணனை குறை சொல்லலை அர்ஜுன். எனக்கு தெரியும் அந்த புள்ளை ரொம்ப பொறுப்பான புள்ளைனு. இருந்தாலும் உனக்கு கொஞ்சம் கஷ்டம் கொடுக்காம இருக்கலாம்னு தான் சொல்றேன். உனக்கு அங்க இருக்க புடிக்கலைனா எப்ப வேணும்னாலும் இங்க வந்துடேன்”

“எங்க போனாலும் விடாது கருப்பு மாதிரி பிரச்சனை என்னை வால் புடிச்சிட்டு வரத்தான் செய்யும் அண்ணி”

“ம்ம்ம்….கேட்கனும்னு நினைச்சேன், உனக்கு அந்த பொண்ணை புடிச்சிருக்குதா இல்லையா?”

“யாரு யக்ஞாவா? ம்ம்ச்ச்! புடிச்சிருக்குது, புடிக்கலைன்னு ஒண்ணுமில்லை. எப்படியும் கல்யாணம் பண்ணி வச்சே தீருவாங்க. தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசு மேல் தானே?!”

“ஓ! உனக்கு யக்ஞாவை முன்னமே தெரியுமா?”

‘இல்லையே! தெரியாதே! தான் ஏன் அவளை தெரிந்தவள் என்று கூறினோம்??’ அவன் மனது யோசனையில் ஆழ்ந்தது.

“அர்ஜுன். உன்னை தான்”

“ஆங்…..என்னது……இல்லையில்லை, இப்போ தான் தெரியும். இப்போ கொஞ்ச நாளா பேசிட்டு இருக்கோம்ல, அதை வச்சு தெரிஞ்சவங்கனு சொன்னேன்”

“ம்ம்ம்..எனக்கு என்ன தோனுச்சு தெரியுமா?”

“என்ன அண்ணி?”

“ஒண்ணுமில்லை விடு. சொன்னா நீ எதுவும் தப்பா எடுத்துக்கக் கூடாது”

“பரவாயில்லை சொல்லுங்கண்ணி. நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒண்ணு ரெண்டு ஆள்ல நீங்களும் ஒருத்தங்க. தாராளமா நீங்க சொல்லலாம்”

“இல்லை நீ அந்த பொண்ணு போட்டோ காட்டுனேலே. எனக்கென்னமோ அந்த பொண்ணை புடிக்கவே இல்லை. நீ இருக்கிற கலருக்கும் அழகுக்கும் அந்த பொண்ணு கொஞ்சம் கூட செட் ஆகாது. இது எனக்கு தோணுனது மட்டும் தான். தப்பா எதுவும் நினைச்சுக்காத சரியா?”

“தப்பா எதுவும் இல்ல அண்ணி, எனக்குமே ஆரம்பத்துல இது தோண தான் செஞ்சிச்சு. ஆனா என்ன செய்ய முடியும்? அதான் சொல்றாங்கள்ல மனசோட அழகை தான் பார்க்கணும். புற அழகை பார்க்கக் கூடாது பிளா பிளா பிளானு. அப்படி நினைச்சுக்க வேண்டியது தான்”

“ஆமா ஆமா குணம் நல்லா இருந்தா போதாதா என்ன? என்ன இருந்தாலும் உங்க வீட்ல இன்னும் கொஞ்சம் நல்ல இடமா பார்த்திருக்கலாம்”

“அர்ஜுன்” எம்.எல்.ஏவின் குரல் இடையிட்டது.

“அண்ணன்!”

“என்னப்பா என்ன சொல்றா உங்க அண்ணி?”

“சும்மா பேசிட்டு இருந்தோம் அண்ணன்”

“அப்புறம் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?”

“ஆமாண்ணன்! கடை வாடகைக்கு விடுறதுல ஒரு சின்ன பிரச்சனை”

“என்னபா நீ? மூணு நாலு கடை வச்சிருக்கிறவனெல்லாம் ஜம்முனு இருக்கான். இந்த ஒரு காம்ப்ளக்ஸ் வச்சிட்டு இவ்ளோ பாடு படுறீங்களே?!”

“என்ன செய்ய அண்ணன்? நமக்குன்னே வந்து சிக்குறாங்க. நம்ம எக்ஸ் ஒன்றியத் தலைவர் இருக்காரில்லை அவனோட ஆள் ஒருத்தன் பாஸ்கர்னு பேரு, கறிக்கடை வச்சிருக்கான். அவன் தான் முன்னாடி அந்த இடத்துல கடை வச்சிருந்தான். எங்க வீட்ல அவனுக்கு கொடுக்க வேண்டாம்னு சொல்றாங்க. வேற ஆளும் ரெடியா இருக்காங்க. இப்போ வந்து இவன் பிரச்சனை பண்றான். அவனுக்கு தான் கடையை கொடுக்கணும்னு அன்னைக்கு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறான். வர பதினைஞ்சாம் தேதி உங்க மேலிடத்து பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதுல, அப்போ உங்களுக்கு நாள் குறிச்சிட்டேனு கூவிட்டு போறான்”

“போச்சுடா! ஏற்கனவே அந்த ஒன்றியத்துக்கு உன் மேல ஒரு கண்ணு. அவன் மூலமா தானே நீ எனக்கு அறிமுகம் ஆன, இப்போ அவனை தாண்டி நீ என் கிட்ட நெருங்கி வந்துட்டனு அவனுக்கு கடுப்பு. அதான் உனக்கு குடைச்சல் கொடுக்க இந்த மாதிரி பண்றான்னு தோணுது. சரி! நம்மளை மீறி ஒன்னும் பண்ணிட முடியாது. நம்ம பசங்களை விட்டு அவனை கிளோசா வாட்ச் பண்ணச் சொல்றேன்”

“சரி அண்ணன்! நீங்க இருக்கும் போது எனக்கு ஒண்ணும் கவலை கிடையாது. உங்களுக்கு முன்னாடி அவனெல்லாம் ஒரு சுண்டக்காய் பய”

“இந்த கறசலெல்லாம் விட்டுட்டு நீ லவ் பண்ற வேலையை பாருங்க புது மாப்பிள்ளை”

“அதை தாங்க நானும் சொல்லிட்டு இருந்தேன். நீங்க அவனை விட்டா தானே அவன் போய் லவ் பண்ணுவான். எங்க போனாலும் அவனை கூடவே கூட்டிட்டு போனா அவனுக்கெங்க டைம் இருக்கும்?”

“அய்யோ அண்ணி! நீங்க வேற, சும்மா இருங்க அண்ணி. அண்ணன் அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை. அண்ணி சொல்றதை கேட்காதீங்க”

“அவ சொல்றதுலேயும் நியாயம் இருக்க தான் செய்யுது. இப்படி என் கூடவே சுத்துனா அந்த புள்ளை கோவிச்சிக்காது?”

“கோபப்பட்டா போயிட்டே இருன்னு சொல்லிட்டு வந்துடுவேன்”

“பார்த்தீங்களா இவன் பேசுறதை?”

“என் மேல அவ்ளோ மதிப்பும் மரியாதையும்டி அவனுக்கு. சரி! நான் கிளம்புறேன். வத்தல்மலை போறேன். போன தடவை நிலச்சரிவு வந்த பின்னால அந்த ரோடு எல்லாம் சரி செய்யாமையே இருந்துச்சுல. அந்த ரோடு வேலை ஸ்டார்ட் பண்ணியாச்சு. எலெக்ஷன் முடிஞ்சு ஜெயிச்சதும் எதுவும் பண்ணலேன்னு பேச்சு வரக் கூடாது பாரு, அதான் போய் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுறேன். மதிய சாப்பாட்டுக்கு வர மாட்டேன். வா அர்ஜுன் போகலாம்”

—————————————————————————————————————————————-

“எனக்கு ஏதோ தப்பா தெரியுது மித்ரா”

“நீங்க தேவையில்லாம பயப்படாதீங்க. அவன் எங்க போயிருக்க போறான்? எனக்கு தெரிஞ்சு எம்.எல்.ஏ கூட தான் இருப்பான்”

“இல்லை மித்ரா! நானும் அவரும் மாத்தி மாத்தி போன் போட்டு பார்த்துட்டோம். நாட் ரீச்சபிள்லையே இருக்குது”

“வீட்ல என்ன தான் பிரச்சனையை அண்ணி?”

“எப்பவும் போல தான் மித்ரா. அத்தைக்கும், மாமாவுக்கும் அர்ஜுன் விஷயமா சண்டை வந்திச்சு”

“நான் நினைச்சேன், எப்போ அந்த பொண்ணை பத்தி பேசுனாலும் பிடி கொடுக்காமையே பேசினான். ஏதாவது பேசி சொதப்பி வச்சிடானா?”

“உன் கிட்ட அர்ஜுன் எதுவுமே சொல்லலையா மித்ரா? அவன் பொண்ணு வீட்ல கார் கேட்டிருந்தானே? அது உனக்கு தெரியாதா?”

“இல்லையே அண்ணி. அவன் என் கிட்ட எதுவுமே சொல்லலை!! ஓ! அது தான் இப்போ பிரச்சனையா? பொண்ணு வீட்ல ஏதாவது சொன்னாங்களா?”

“அவங்க ஒகே சொல்லிடாங்க. ஆனா அது விஷயமா மாமா வாய்விட, அத்தை பதில் பேசனு சண்டை ஜாஸ்தி ஆயிடுச்சு. அப்போ கிளம்புனவன் தான் மதியம் சாப்பிடவும் வரல, போன் இன்னும் நாட் ரீச்சபிள். அத்தையும் அப்போ ரூம் குள்ள போனவங்க தான் இன்னும் வெளிய வரல. சாப்பிட கூப்பிடதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க”

“சரி அண்ணி! நான் எதுக்கும் ஒரு எட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துடுறேன். நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க”

“சரி மித்ரா!”

எம்.எல்.ஏ வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல தயங்கியபடி நின்றான் மித்ரன்!

பல முறை இந்த வீட்டு வாசல் முன்பு நின்று அர்ஜுன் அவனை உள்ளே அழைத்திருக்கிறான். ஆனால் மித்ரன் மறுத்துவிடுவான். ஏதோ ஒன்று அவனை தடுக்கும். ஏதோ ஒன்று அவனை எம்.எல்.ஏவிடமிருந்து தூர நிறுத்தி வைக்கும். 

இவனை பார்க்கும் போது எம்.எல்.ஏ கண்ணில் தெரியும் அலட்சியமா, எம்.எல்.ஏ மனைவியின் கண்களில் தெரியும் அலட்சியத்துக்கும் கீழ்த்தரமான பார்வையா ஏதோ ஒன்று அவனை தள்ளி நிறுத்தியது. பல தடவை அர்ஜுனிடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் எம்.எல்.ஏ மற்றும் அவர் குடும்பத்தை பற்றி சொல்லியும் அர்ஜுன் அதை கண்டுகொள்ளாதது அவனுக்கு வருத்தத்தை தந்தாலும், நண்பனின் நிழல் போல அவனுடன் நின்று அவனுக்கு எந்த இடர் வந்தாலும் (வரும் என்பதே மித்ரனின் கணிப்பு) அவனை அதிலிருந்து மீட்கத் தயாராயிருந்தான்.   

நண்பனுக்காக தன் கொள்கையை புறந்தள்ளிவிட்டு அந்த வீட்டினுள் அடியெடுத்து வைக்க, சரியாக அவன் அலைபேசி ஒலித்தது. அழைத்தது தர்மன்!

“மித்ரா!”

“அண்ணன்! சொல்லுங்கண்ணன் நான் எம்.எல்.ஏ வீட்டுக்கு முன்னாடி தான் இருக்கேன். அர்ஜுன் இங்க தான் இருப்பான். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க”

“மித்ரா” தர்மனின் குரல் நடுங்கியது.

“அண்ணன் என்னாச்சு? உங்க வாய்ஸ் ஒரு மாதிரி இருக்குது”

தர்மனின் குரல் உடைந்து அழுகையாய் ஆரம்பித்து, கதறலாய் மாறியது!!!!

“அண்ணன் எதுக்கு அழுகுறீங்க? என்னாச்சு சொல்லுங்க ண்ணன். பதற்றமா இருக்குது. ப்ளீஸ் அண்ணன் சொல்லுங்க”

தர்மன் கூறினான், மித்ரன் அதிர்ந்து நின்றான்!!!!!

Advertisement