Advertisement

“எங்க பொண்ணுக்கு நாங்க எண்பது பவுன் போடுறோம். மாப்பிளைக்கு இருபது பவுன். மஹிந்திரா தார் வாங்கிக் கொடுக்கிறோம். கல்யாண செலவுக்கு ஐஞ்சு லட்சம் தரோம். மேல ஏதாவது ஆச்சுனா கூட செஞ்சிடலாம். பணத்தை பற்றி எந்த கவலையும் இல்லை. கல்யாணத்தை சிறப்பா செஞ்சிடலாம். கல்யாணம் தர்மபுரியிலேயே நடத்திடலாம்” யக்ஞாவின் தந்தை மலர்ந்த முகத்துடன், நிறைந்த மனதுடன் கூறினார். 

யக்ஞாவிடம் பேசியதை அடுத்து, மேற்கொண்டு பேசுவதற்காக யக்ஞாவின் உறவினர்கள் அர்ஜுனின் வீட்டிற்கு வந்திருந்தனர். 

“ரொம்ப சந்தோஷங்க! நாங்களும் சும்மா இல்லைங்க. பொண்ணுக்கு பத்து பவுன்ல தாலி சங்கிலி வாங்கி வச்சிருக்கிறோம். எங்க மூத்த மருமகளுக்கும் நாங்க தான் தாலி சங்கிலி செஞ்சோம். அதெல்லாம் எந்த குறையும் நாங்க வைக்க மாட்டோம். உங்க பொண்ணு ராணி மாதிரி இருக்கலாம்” 

“எப்படியும் கல்யாணத்துக்கு எம்.எல்.ஏ வருவார், தருமபுரி எம்.பி வருவார், அப்புறம் ப்ரெசென்ட் கலெக்டர், பாஸ்ட் கலெக்டர் எல்லாரும் வருவாங்க. அதனால கிராண்டா பண்ணனும். கல்யாண செலவுக்கு என் மூத்த பையனுக்கு ஐஞ்சு லட்சத்துக்கு மேல போட்டு பெருசா செஞ்சோம். இப்போ விலைவாசி எல்லாம் ஏறி போச்சு. அதனால ஏழு லட்சம் கல்யாண செலவு எங்க சார்பா தரோம்”

“பஃபே சாப்பாடு, சினிமாக்காரங்க கச்சேரி, ஜண்டை மேளம், பெரிய பெரிய பேனர், வான வேடிக்கை, ரதத்துல மாப்பிளை, பொண்ணழைப்பு இதெல்லாம் குறைவே இல்லாம பண்ணிடலாம். கல்யாணத்துக்கு முந்தின நாள் நிச்சயமும், மறுநாள் ரிசப்ஷனும் செஞ்சிடலாம்”

“நல்லதுங்க! அப்படியே பண்ணிடலாம். உங்களுக்கும் எல்லாம் சரி தானுங்களே சம்மந்தி?” அமைதியாக அமர்ந்திருந்த மலயனாதனை பார்த்து யக்ஞாவின் தந்தை கேட்க,

“ஆங்…..எல்லாம் சரிதாங்க! அப்படியே பண்ணிடலாம்” தலையை ஆட்டியபடியே மீண்டும் குனிந்து கொண்டார். பத்மஜா தர்மனையும், அர்ஜுனையும் ரகசிய பார்வை பார்த்தார். 

“இன்னைக்கு எங்கக் கூட யக்ஞா வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டா. புடவை படைக்காம வர வேண்டாம்னு சொன்னதால தான் வரல”

“ஆமாங்க சம்பிராதயத்தை மீற முடியாதில்லையா?”

“அப்புறம் மாப்பிளை எலக்ஷன் முடிஞ்சிடுச்சு, ஜெயிக்கவும் செஞ்சாச்சு. கல்யாணம் எப்போ வச்சிக்கலாம்னு சொன்னீங்கனா…….மேற்கொண்டு மண்டபம் புக் பண்றதெல்லாம் பார்க்கலாம்”

“அது இன்னும்…….ஆங்……அது உங்களுக்கு எப்போ…….நீங்க பார்க்கிற எந்த நாளும் எனக்கு ஒகே தான். சீக்கிரம் வச்சிகலாம்”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிளை”

“நாங்களே எங்க ஆஸ்தான ஜோசியரை கேட்டு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்” பத்மஜா முகமெங்கும் பொங்கும் சிரிப்புடன் கூறி முடித்தார்.

கல்யாண பேச்சுகள் தொடர, அங்கிருந்து வெளியே வந்த அர்ஜுன் யக்ஞாவிற்கு அழைப்பு விடுத்தான்.

“என்ன ஒரு அதிசயம்?”

“சீக்கிரம் யோசிச்சு முடிவெடுத்துட்ட போல? என்னமோ காதல் நிரந்தரமானது, அன்பே அலாதியானதுனு டையலாக் எல்லாம் பேசுன?”

“ஆமா இப்பவும் சொல்றேன் காதல் தான் பெருசு, அதனால தான் பணம்ங்கிற ஒரு காரணத்துக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தாம இருக்கேன். உங்க பணத்தை விட என் காதல் தான் பெருசுனு ஒரு நாள் உங்களுக்கு புரிய வைப்பேன். நீங்க கேட்ட விஷயம் எல்லாம் எங்க அப்பாவுக்கு ஒரு பொருட்டே இல்லை, அதை விட அதிகமாவே செய்யுற அளவுக்கு வசதி இருக்குது. சோ எல்லாம் யோசிச்சு ஒகே சொல்லிட்டேன்”

“ஹ்ம்ம்….கல்யாணம் சீக்கிரம் வச்சிக்கலாம்னு உங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன். உனக்கு ஒகே தானே?”

“ஏன் இந்த திடீர் மாற்றம்?”

“இங்க பாரு இப்பவும் சொல்றேன். கார் வாங்கனும்னு நினைச்சா என்னாலயே வாங்க முடியும். நீங்க வாங்கி கொடுக்கிறதை வச்சு தான் நான் பொழைக்கனும்னு இல்லை, ஆனா சொசைட்டியில எனக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்குது, எங்க பேமிலிக்குனு ஒரு ஸ்டேடஸ் இருக்குது. அதுக்காக தான் இந்த கார், பணம் எல்லாம்”

“இப்போ நான் உங்களை ஒன்னும் சொல்லலையே? எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்?

“இல்லை, நான் என்னமோ கார் கிடைச்சதுக்காக தான் சீக்கிரம் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச மாதிரி நீ நினைச்சிட கூடாதுல? என்னை நீ புரிஞ்சிகிட்டனு தோனுச்சு. அதனால தான் சீக்கிரம் கல்யாணம் வச்சிகலாம்னு சொன்னேன்”

அவன் பேச்சில் அதீத தடுமாற்றம்!!! அவனின் குற்றவுணர்ச்சி அவளுக்கு தெளிந்த நீருக்கடியில் தென்படும் கூழாங்கல்லாய் தென்பட்டது! 

சிரித்தவாறே அவள், “தண்ணிக்குள்ள விழுந்தாலும் உச்சா போகலைன்னு சொன்னாங்களாம்”

“ஏய்! சீ! என்ன உளறுற?”

“எவ்ளோ நாள் தான் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு பழைய பழமொழி சொல்றது. அதான் ஒரு புதுமொழி சொன்னேன்”

“கேவலமா இருக்குது”

“ஆமாமா! அது கொஞ்சம் கேவலாமான விஷயம் தான். ஆனா கண்டிப்பா எல்லாரும் செஞ்சிருப்பாங்க”

“ஷப்பா! உன்னை வச்சிக்கிட்டு முடியலை! எப்படி உன்னால இப்போ கூட இந்த மாதிரி பேச முடியுது?”

“இதுக்கே இப்படி சொன்னா எப்படி? இன்னும் காலம் முழுக்க என்னை வச்சு சமாளிக்கனுமே?”

“கஷ்டந்தான்! சரியான சில்வண்டு!!”

“எனக்கொரு டவுட் எம்.பி? உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய லவ் பெய்லியர் இருக்குமோனு தோணுது? அதான் இந்த கல்யாணத்தை நிறுத்த என்னென்னலாமோ செய்யுறீங்களோனு தோணுது?”

“———“

“ஹலோ! என்ன பேச்சே காணோம்? அப்போ அது உண்மை தானா? நான் கேட்ட கேள்விக்கு ஆமானும் சொல்லலை, பட்டுன்னு இல்லைனும் சொல்லலை. அப்போ அது உண்மை தானோ?”

“ஏய்! போடி சில்வண்டு! இம்சை!” திடீரென்று மூண்ட எரிச்சலுடன் அவளை கடிந்தவன், அலைபேசியை அணைத்து விட்டு வீட்டினுள் சென்றான்.

உள்ளே வந்தமர்ந்த அவன் முகம் ஒரு கை கடுகை போட்டால் பொரிந்து விடும் அளவுக்கு இருக்க, அதை கவனித்த பத்மஜா வயிற்றில் பயம் புளி கரைத்தது.

சம்பிராதாய பேச்சுகள் முடிவுக்கு வர, பெண் வீட்டார் கிளம்பிச் சென்றனர்.

“கண்ணு! என்னாச்சு கண்ணு? முகமே சரியில்லை”

“அய்யோ! நீங்க வேற ஆரம்பிச்சுடாதீங்க மம்மி. ஒரு மனுஷன் சும்மா உட்காரக் கூடாதே. சும்மா நொய் நொய் நொய்னு. அப்படியே எங்கேயாவது ஓடி போயிடலாமானு இருக்குது. ச்சே!”

“சாமி! எதுக்கு கோபப்படுற சாமி? உன் முகமே சரியில்லைன்னுதானே கேட்குறேன்? கல்யாண நாள் முடிவு பண்ணதுல ஏதாவது உனக்கு முரண்பாடு இருக்குதா? இல்லை வேற ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தாலும் வெளிப்படையா சொல்லு கண்ணு. அதெல்லாம் தப்பொன்னும் கிடையாது. ஊரு உலகத்துல நடக்காததா என்ன?”

“மம்மி! தயவுசெஞ்சு கொஞ்சம் கம்முனு போறீங்களா மம்மி! எனக்கு வர கோபத்துக்கு நான் என்ன பேசுவேனே தெரியாது”

“கண்ணு! என்ன பிரச்சனை கண்ணு? மறுபடியும் பொண்ணு பிடிக்கலை, அது இதுனு சொல்ல போறியா? இல்லை மறுபடியும் பழைய கதையை பேசிட்டு அந்த பொண்ணையே இன்னும்……” மலயனாதன் தன் பங்குக்கு அர்ஜுனிடம் கேள்வி கணைகளை வீசினார்.

“அப்பா……கொஞ்சம் நிறுத்துறீங்களா?” வீடு அதிர கத்தியவன் நரசிம்ம அவதாரம் எடுத்து நின்றுக் கொண்டிருந்தான்.

“அப்பா! ப்ளீஸ் பா! பிரச்சனையே இல்லைன்னு அவன் தான் சொல்றானே?! இப்போ எதுக்கு தேவையில்லாம நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பழசெல்லாம் பேசி அவனை குழப்பி விட்டுட்டு இருக்கீங்க?”

“டேய்! அறிவுகெட்டவனே! அதை அந்தாளை பார்த்து சொல்லு டா. அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெருசுன்னு நான் பார்த்து பார்த்து பதமா அவன் கிட்ட பேசிட்டு இருக்கேன். இந்தாளு என்னடானா லூசு மாதிரி தேவையில்லாம பழசெல்லாம் இழுத்து வச்சு பேசிட்டு இருக்கார். நீயும் அவரை சொல்லாம, ரெண்டு பேரும் அமைதியா இருங்கன்னு கத்திட்டு இருக்க”

“இல்லை மம்மி!”

“என்னடா இல்ல மம்மி, நொல்லை மம்மி?? இந்தாளுக்கு அறிவுனு ஏதாவது இருக்கா, இல்லையா? அவன் இப்படி இருக்கிறதுக்கு காரணமே அவர் தான் டா”

“இங்க பாரு தர்மா, நான் ஒன்னும் சும்மா பேசலை. நானும் பார்த்துட்டே தான் இருக்கேன். அவன் ஆக்டிவிடீஸ் எதுவும் சரியில்லை. எப்ப பாரு உர்ர்னு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கான். எங்க சொந்தத்துல பார்த்த வரன்ங்கிற காரணத்துக்காகவே அம்மாவும், புள்ளையும் சேர்ந்து அதை தட்டி கழிக்க பார்க்கிறாங்க. இந்த கார் கேட்டதெல்லாம் கல்யாணத்தை நிறுத்த அவன் போட்ட பிளான்னு தோனுது. எனக்கே கேவலமா இருக்குது. என்ன நம்ம கிட்ட இல்லாத காசா? இப்படி அவங்க கிட்ட போய் பிச்சை கேட்டுட்டு இருக்க?”

“என்னது பிச்சை கேட்டோமா? என்ன பேச்சு பேசுற நீ? என்னயா பேசுற நீ? யார் கிட்டயும் போய் பிச்சை எடுக்கிற நிலமையில கடவுள் நம்ம விட்டு வைக்கலை. இந்த புள்ளைங்க சின்ன வயசுலேர்ந்து இப்போ இந்த நொடி வரைக்கும் எவ்ளோ பிரச்சனை வந்தாலும் படிப்பு, துணிமணி, விரும்பி கேட்டது கேட்காதது, ஒவ்வொன்னா பார்த்து பார்த்து, ஓடி ஒடி நான் சம்பாதிச்சு வந்து கொட்டியிருக்கேன். நீ என்ன பண்ணின? கஞ்சத்தனம் புடிச்சு, கஞ்சத்தனம் புடிச்சு, நீயும் கெட்டதில்லாம புள்ளைங்க வாழ்க்கையும் சேர்த்து கெடுக்க பார்ப்ப? என்னைக்காவது ஒரு நாள் இந்த புள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுத்திருப்பியா? ஸ்கூல், காலேஜ்னு நல்ல படிப்பை கொடுக்கணும்னு நான் எவ்ளோ அலைஞ்சேன். நீ என்ன செஞ்ச அதை கெடுக்கிறதுக்குனு, காசு செலவாயிடும்னு கவர்மன்ட் ஸ்கூல்ல சேர்க்க நினைப்ப, ஏதாவது கேடு கேட்ட காலேஜ்ல சேர்க்கலாம்னு சொல்லுவ”

“அர்ஜுன் வாழ்க்கையே போச்சுன்னு படிப்பை நிப்பாட்டிட்டு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்து நின்னப்போ நீ என்ன செஞ்ச? அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அதிலேர்ந்து வெளிய கொண்டு வரதை விட்டுட்டு எப்ப பாரு நெகட்டிவா பேசி பேசி அவனை ஸ்ட்ரெஸ் ஆக்கி, அய்யோ சாமி! எவ்ளோ கஷ்டப்பட்டேன் அதுலேர்ந்து அவனை வெளிய கொண்டு வர?”

“ஏதோ ஒருவழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானேனு நானே பதமா அவன் கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்னு போராடுறேன். இப்போ வந்து இல்லாததும் பொல்லாததும் பேசி கெடுத்து விட பார்க்கிறியே. மனுஷன் தானா நீயெல்லாம்?”

“வேண்டாம்! நிறுத்து உன் ஆட்டத்தை. மரியாதை இல்லாம பேசுறதை முதல நிறுத்து. அப்புறம் வேற மாதிரி ஆயிடும் பார்த்துக்கோ. பம்பார்ட் பண்ணி விட்டுருவேன்”

“என்னயா என்ன? என்ன பண்ணிடுவ? அடிச்சிடுவியா? அடிச்சு பாரேன் பார்ப்போம்”

“மம்மி! அப்பா! இந்த கல்யாணத்துல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்துறீங்களா?” பத்மஜாவும், மலயநாதனும் மற்போர்க்கு நிற்கும் வீரர்களாய் முட்டிக் கொண்டு நிற்க, அர்ஜுனும் தர்மனும் அவர்களை சமாதானபடுத்த முன் வந்தனர்.

“மம்மி! நீங்க உள்ள போங்க மம்மி. அப்பா! போங்க பா ப்ளீஸ்”

“இல்லடா, எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். என்ன நினைச்சுகிட்டு இருக்கான் அந்தாளு? என்ன பார்த்தா எப்படி தெரியுது? பிச்சை எடுக்கிறதா சொல்றான்?!! இது வரைக்கும் எந்த முக்கியமான விஷயத்துக்காவது ஒத்த பைசா செலவளிச்சிருப்பானா? என்ன பேச்சு பேசுறான்? நீ பார்த்துட்டு இருக்க தர்மா? அப்போ நீ எதுவுமே அந்தாளை கேட்க மாட்டல?”

“மம்மி! நீங்க டென்ஷனா இருக்கீங்க. கொஞ்சம் போய் ரெஸ்ட் எடுங்க. உங்க பிபி ஜாஸ்த்தி ஆயிடுச்சு”

“ஆகட்டும், பிபி ஜாஸ்த்தி ஆகட்டும். அப்படியே போய் சேர்ந்துடுறேன்” வேகமாக உள்ளே சென்றவர் கதவை அறைந்து சாற்றியத்தில் ஒரு அதிர்வு பரவி அடங்கியது. புயலுக்கு பின் வரும் பேரமைதி நிலவியது!!!

தலையில் அடித்தவாறு அர்ஜுன் வீட்டை விட்டு வெளியே செல்ல, அறையின் வாயிலில் இத்தனை நேரம் நடந்த நிகழ்வுகளை பார்த்து அதிர்ந்து நின்ற குழந்தைகளையும், சுசித்ராவையும் பார்த்த தர்மன், ஒருவித கையாலாகாததனத்துடன் இடிந்து அமர்ந்தான்! 

———————————————————————————————————————————————  

Advertisement