Advertisement

“அதானே பார்த்தேன். நீங்க ரீல் விடுறீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு ஓரத்துல ஒருவேளை உண்மையா இருக்குமோனு ஒரு சின்ன ஆசை எட்டி பார்த்துச்சு. எப்படி எப்படி? நாம மட்டும் சின்ன டூர், அதுவும் வர பதினைஞ்சாம் தேதி போறோம். ஏன்பா இப்படி கடுப்பை கிளப்புறீங்க?”

“ஏய்! நிஜமா தான்டி சொல்றேன்”

“அப்போ பதினைஞ்சாம் தேதி எம்.எல்.ஏ வீட்டில நடக்க போற பங்ஷன்க்கு நாம போகலை??”

“கண்டிப்பா போக போறதில்லை. அங்க போகக் கூடாதுன்னு தான் இந்த நாளே நான் முடிவு பண்ணினேன்”

“இதை நீங்க நம்ம வீட்டு மேலிடத்துகிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டீங்களா?”

“மம்மி, அப்பா, அர்ஜுன் யார் என்ன சொன்னாலும் சரி. இந்த ஒரு தடவை, ஒரு நாள், நான் எனக்காக, என் இஷ்டத்துக்காக, என் ஜெல்லி மிட்டாயோட விருப்பத்துக்காக வாழ போறேன். என்ன பிரச்சனை வந்தாலும் சரி என் முடிவை நான் மாத்திக்க போறதில்லை. நாம பதினைஞ்சாம் தேதி டூர் போறோம். அவ்ளோ தான்”

“வெரி குட். இதே மாதிரி பாசிடிவா பேசிட்டே இருங்க. அதுவே உங்க மனசுக்கு நல்லது. கூடிய சீக்கிரம், இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துக்குள்ள ஏதாவது ஒரு பதினைஞ்சாம் தேதில நாம டூர் போய்டலாம். ஒகே”

“ஹா ஹா ஹா, நீ கிண்டல் பண்ணிட்டே இரு. பார்க்க தானே போற இந்த தர்மனோட ஆட்டத்தை”

“சரி சரி பூஸ்ட் பேபி. பூஸ்ட் முழுசா குடிச்சு காலி பண்ணுங்கடி செல்ல பட்டுகுட்டி”

“அடியேய் வேண்டாம்”

“பின்ன எருமைமாடு வயசுல பூஸ்ட் குடிச்சா கிண்டல் பண்ணாம என்ன செய்வாங்களாம்”

சரியாக அந்த சமயம் உள்ளே நுழைந்தார் பத்மஜா!

“மம்மி! ஆபிஸ் லீவ் கிடைக்கும்போதாவது ரெஸ்ட் எடுக்கலாம்ல? எங்க போயிட்டு வரீங்க”

“எங்க சாமி? நமக்கேது ரெஸ்ட்? உங்களுக்காக தான் இந்த ஓட்டமெல்லாம். இந்த இன்னொரு ஒரு லேண்ட் ஒன்னு, சேலம் பக்கத்துல நல்ல ரோட் பாயிண்ட்ல சேல்க்கு வருதாம். எங்க எஸ்.ஈ சொன்னாரு. அதான் இப்போ கடை வாடகைக்கு விட்டா நல்ல வாடகை வரும்ல. ஏற்கனவே டவர் வாடகை வந்திட்டு இருக்குது. அதை வச்சு வாங்குன கடனை அடைச்சிடோம்னா. மீதி இருக்கிற பணத்தை போட்டு இந்த லேண்ட் வாங்கி வச்சோம்னு வை பின் நாள்ல யூஸ் ஆகும். அது விஷயமா தான் எஸ்.ஈ பார்க்க போயிருந்தேன்”

“மம்மி! ஏன் மம்மி? ஏற்கனவே கடை பிரச்சனையே எக்கச்சக்கம் ரவுண்ட் கட்டி நிக்குது? இதுல இன்னொரு ப்ராபெர்ட்டி இப்போ உடனே தேவையா?”

“கிடைக்கிறப்போ வாங்கி போட்டுடனும் தர்மா. அப்புறமா தேடுனாலும் கிடைக்காது. எல்லாம் உங்களுக்குத் தானே?!!”

“நான் கேட்கவே இல்லையே மம்மி”

“நீ கேக்கேலேனா நான் செய்யாம இருந்துட முடியுமா? இதெல்லாம் எங்க கடமை. சும்மா ஏதாவது உளறிட்டு இருக்காத. அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வந்துடும் பார்த்துக்கோ”

“சரி மம்மி”

“அப்புறம் பொண்ணு வீட்ல எல்லா விஷயமும் தெளிவா பேசிட்டேன். அவங்க கிட்டேர்ந்து எந்த ரிப்ளையும் வரல. ஒரு ரெண்டு நாள் பார்போம். எதுவுமே பேசலேனா இதை அப்படியே விட்டுடுவோம். என்ன ஊர் உலகத்துல பொண்ணா இல்லை?! அப்படி ஒன்னும் இல்லாதது பொல்லாததை நாம கேட்டுடலையே?!! ரெண்டு நாள் டைம். இல்லேனா விட்டு தள்ளுவோம்”

“இந்த விஷயம் எல்லாம் அர்ஜுனுக்கு தெரியுமா மம்மி?”

“யாரடா இவன்? அவன் சொல்லி தான் நான் பேசுனேன். நீ சும்மா இரு. அவன் தெளிவா தான் இருக்கான். அவனையும் சேர்த்து கெடுத்துடாத”

“ஓ” தர்மனின் ஓங்காரத்தில் கவலை ஓங்கி ஒலித்தது.

“ஆங் மம்மி! மோட்டார் ரிப்பேரா இருக்குது. அப்பா சரி பார்த்துட்டு இருக்காங்க. தண்ணி கொஞ்சம் பார்த்து யூஸ் பண்ண சொன்னாங்க”

“இந்த மனுஷனுக்கு இதே வேலையா போச்சு டா. என்னடா பண்ணி தொலைச்சார்? எப்ப பாரு எதையாவது நொண்டி வைக்கிறது. வீட்டை நாசாமாக்குறது. ஏண்டா இந்த வீடு நல்லா இருந்தாலே அந்த மனுஷனுக்கு புடிக்க மாட்டிக்குது? அந்த மோட்டார் நல்லா இருந்துச்சு, அதுல தண்ணி நிரம்புனா அலாரம் அடிக்க ஏற்பாடு பன்றேன்,  ஆட்டோமேட்டிக் ஆஃப் ஏற்பாடு பன்றேனு பண்ணி கெடுத்து வச்சிருக்காரு”

“அதுக்கும் இப்போ ரிப்பேர் ஆனதுக்கும் சம்மந்தம் இல்லை மம்மி”

“ஆமா அவருக்கு சப்போர்ட் பண்றதுக்கு ஓடி வந்துடிவியே. சரி! பூஸ்ட் குடிச்சியா கண்ணு?”

பக்கத்தில் நின்றிருந்த சுசித்ரா பொங்கி வந்த சிரிப்பை மென்று தின்றுக்கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு வெட்டும் பார்வையை வீசிய பத்மஜா,  அவர் அறைக்குள் சென்று, படீரென்று கதவை சாற்றிக் கொண்டார்.

——————————————————————————————————————————————–

மூன்றாவது முறையாக ஒலித்த அலைபேசியை கோபத்துடன் எடுத்து காதில் ஒற்றினான் அர்ஜுன்

“ஒரு தடவை போனை எடுக்கலேனா அவங்க ஏதோ வேலையா இருப்பாங்க அப்புறம் கூப்பிடனுமங்கிறது தான் மேனர்ஸ். திரும்ப திரும்ப கூப்பிட்டா என்ன அர்த்தம்?”

“எனக்கு மேனர்ஸ் தெரியாது தான். உங்களுக்கு ரொம்ப மேனர்ஸ் இருந்ததால தான் அன்னைக்கு என்னை நடு ரோட்டுல விட்டுட்டு போனீங்களா?”

“இப்போ என்ன? அதை கேட்டு சண்டை போட தான் கூப்பிட்டியா?”

“இல்லை நான் அதை பத்தி கேட்க போறதே இல்லை. எனக்கென்னனு விட்டுட்டு போனவங்களை நினைச்சு கவலைப்பட்டு, சண்டை போட்டு என் எனெர்ஜி நான் வேஸ்ட் பண்ண விரும்பலை”

“ரொம்ப சந்தோஷம். அப்போ எதுக்கு கூப்பிட்ட?”

“எங்க அப்பா கிட்ட கார் வாங்கி கொடுத்தா தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீங்க சொன்னீங்களா?”

“இல்லை”

“இல்லையா!!!!! தேங்க் காட்! நானும் உண்மைனு நினைச்சு இவ்ளோ நேரம்…….”

“ஹலோ ஹலோ ஹலோ……..நீ சொன்னதுல ஒரு சின்ன கரெக்ஷன். மஹிந்திரா தார் மாடல் கார் வாங்கி கொடுத்தா மேலே பேசலாம். இல்லேனா இத்தோட முடிச்சிக்கலாம்னு சொல்ல சொன்னேன்”

“———-“

“இங்க பாரு யக்ஞா. நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு. இப்போ கூட நீ வேண்டாம்னு சொல்லு நிறுத்திடலாம். உங்க அப்பா கொடுக்கிற கார், பணம், நகை வச்சு தான் நான் பொழைப்பை ஓட்டணும்னு இல்லை. ஆனா சொசைட்டில எனக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்குது. என் மாமானார் வீட்ல இவ்ளோ செஞ்சாங்கனு சொல்லும் போது தான் எனக்கு ஒரு கெத்து. அது கூட நாங்க தந்தே ஆகணும்னு உங்களை போர்ஸ் பண்ணலை. உங்களால முடியாதுனா தெளிவா சொல்லிடலாம். எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்”

“மஹிந்திரா தார் என்னோட நீண்ட நாள் கனவு. ஏதோ ஒரு கார் உங்களுக்கு புடிச்ச மாதிரி வாங்கி தரதுல என்ன யூஸ் இருக்குது?! அதான் எந்த கார் வேணும்னு சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு?!! அதுவுமில்லாம நகை உங்க இஷ்டத்துக்கு எவ்ளோ போடணுமோ போடுங்கனு தான் மம்மி சொல்லியிருக்காங்க. பின்ன என்ன?”

“எம்.பி நான் காதல், அன்பு, பரஸ்பர  நம்பிக்கை பத்தி பேசுறேன், நீங்க பணம், நகை, அந்தஸ்த்துனு பேசுறீங்க”

“ஹ்ம்ம்…..காதல்….அதோட ஆரம்பபுள்ளியே அந்தஸ்த்து தான். ஏன் உங்க வீடே எடுத்துகோயேன். ஏன் என்னை மாப்பிளையா தேர்ந்தெடுத்தீங்க? நாங்க உங்க அளவுக்கு ஸ்டேடஸ் உள்ளவங்க, எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் சமூகத்தில நல்ல பதிவியில இருக்கிறவங்க. மொத்தமா எங்க அந்தஸ்த்து அது தானே நீங்க என்னை மாப்பிள்ளையா தேர்ந்தெடுக்க காரணம். இதுவே ஒரு கவர்மன்ட் வேலையில உள்ள லோயர் மிடில் கிளாஸ்ல உள்ள ஒருத்தனை மாப்பிளையா உங்க அப்பா ஏத்துக்குவாரா? இது தான் நிதர்சனம்”

“எனக்கு பிடிச்சிருந்தா எங்க அப்பா ஏத்துக்க தான் செய்வாங்க. பணம், பதவி, அந்தஸ்த்து இதுக்கெல்லாம் அப்பாற்பட்டது காதலும் அன்பும் மட்டும் தான். அது தான் என்னைக்குமே நிலைக்கும்”

“நீ ரொம்ப டீ.வி பார்ப்பியோ?”

“இல்லை! எனக்கு அவ்வளவா டீ.வி பார்க்க பிடிக்காது. நான் கதை புக் மட்டும் தான் படிப்பேன்”

“அது போதுமே! அதான் இப்படியெல்லாம் டிரமாடிக்கா பேசுற. முக்கால்வாசி கதைகள் சும்மா காதல் நேசம்னு டிரமாட்டிசைஸ் பண்ணும். எந்த கதையும் எதார்த்தத்தை பேசாது. அதையே படிச்சு படிச்சு நீயும் அது தான் உலகம்னு நம்பிட்டு இருக்க. பீ ப்ராக்டிகல் யக்ஞா”

“நான் டிராமாட்டிகலாவே இருந்துட்டு போறேன். ஐ டோன்ட் வான்ட் டு பி ப்ராக்டிகல்”

“உப்ப்ப்……சரி நீ இப்போ என்ன தான் சொல்ல வர? எல்லாம் முடிச்சிக்கலாம்னா இப்பவே அதை போய் உங்க வீட்ல சொல்லிடு. நானும் எங்க வீட்ல சொல்லிடுறேன். எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடுவோம்”

“அது உங்களுக்கு அவ்ளோ ஈஸியா எம்.பி?!!”

“இங்க பாரு! கொஞ்ச நாள் உனக்கு கஷ்டமா தெரியும். அப்புறம் நீ லைஃப் போற போக்குல போக ஆரம்பிச்சுடுவ, அப்படியே என்னை மறந்தே போய்டுவ. என்ன சொல்ற?”

“எனக்கு யோசிக்க டைம் வேணும்”

“தாராளமா யோசி. பொறுமையா யோசி. பை”

கடமை முடிந்த பாவனையில் அலைபேசியை அணைத்துவிட்டு அவன் செல்ல, காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவன் குரலை உணர்ந்தபடியே அலைபேசியை பொறுத்தியவாறே அவள்!!!!

–—————————————————————————————————————————————–

“என்னைக்கு டா சொன்னே?”

“பதினைஞ்சாம் தேதி டா”

“ஓ”

“என்னடா ஓ? வந்துடுவ தானே?”

“டேய்! நம்ம தங்கச்சி கல்யாணத்துக்கு நான் வராம எப்படி டா? கண்டிப்பா வருவேன் டா”

“உன்னை நம்பி தான் டா இருக்கேன். கொரோணா அதனால சொந்தக்காரங்க யாரும் ஊர்லேர்ந்து வரப்போறதில்லை. நம்ம பசங்க மட்டும் தான். நீ பக்கத்துல இருந்தா தான் எனக்கு பலமே”

“ஓடி போய்டு நாயே! இவ்ளோ சொல்லனுமா. வரெண்டா. கல்யாணம் வீட்ல தானே?”

“ஆமாடா! நல்லவேளை கடைசி நேரத்துல அந்த மண்டபக்காரன் அட்வான்ஸ் திரும்ப குடுத்துட்டான். மாப்பிளை வீட்ல கூட சிம்பிளா வீட்லயே கல்யாணத்தை செஞ்சா போதும்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா எல்லா ஏற்பாடும் முடிஞ்சிது”

“ஆமாடா மச்சி! அன்னைக்கு நீ அந்த மண்டபக்காரன் பிரச்சனை பண்றதா சொன்னேலே? இந்த எலெக்ஷன் பிஸில நானும் அவன் கிட்ட பேச மறந்தே போய்ட்டேன் டா. சாரி மச்சி”

“விடுறா அதான் பிரச்சனை சால்வ் ஆயிடுச்சுல. அசிங்கமா சாரி கேட்டுகிட்டு. லூசு பயலே. அப்புறம் சிஸ்டர் என்ன சொல்றாப்ல?”

“ம்ம்ச்ச்”

“என்னடா எப்ப பார்த்தாலும் சலிச்சுக்கிற?”

“அது ஒன்னும் வொர்கவுட் ஆகுற மாதிரி தெரியல. அவ்ளோ தான்னு நினைக்கிறன். எல்லாத்தையும் முடிச்சிக்க வேண்டியது தான்”

அர்ஜுன் சொன்னதை கேட்டு, தன் நண்பனை நினைத்து கவலையில் ஆழ்ந்தான் அர்ஜுனின் மித்ரன்!

Advertisement