Advertisement

தன்னறையில் தன்னுள்ளே சிந்தையில் மூழ்கியிருந்தாள் யக்ஞா! நேற்று நடந்த நிகழ்வுகள் நிழற்படமாய் அவள் கண் முன் விரிந்தது.

கண்கள் மின்ன, உள்ளம் படபடக்க அர்ஜுனுடன் புல்லட்டில் ஏற அவள் காத்திருக்க, 

“அர்ஜுன்!”

“அண்ணன்! சொல்லுங்க அண்ணன்”

“எங்க கிளம்பிட்ட அர்ஜுன்? உள்ள அப்பா உன்னை தேடிட்டு இருக்கார்” எம்.எல்.ஏவின் மூத்த மகன் அர்ஜுனை அழைக்க,

“அண்ணன் கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்”

“அட அவரு வீட்டுக்கு கிளம்புறாறு பா. வெற்றியை வீட்டுக்கு கொண்டு போறோம். ஆட்சியை பிடிச்சிருக்கோம். நீ இல்லாம போக மாட்டேன்னு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார். நீ என்னடானா உன் பாட்டுக்கு எங்கேயோ கிளம்பிட்டு இருக்க”

“அய்யயோ! எனக்காக வெயிட் பண்றாரா? நான் அவரு கிளம்ப நேரகும்னு தான் வெளிய வந்தேன். இதோ வந்துட்டேன்”

புல்லட்டை அணைத்துவிட்டு இறங்கி, திரும்பியும் பார்க்காமல் அவன் ஓட, அதிர்ந்து நின்றாள் யக்ஞா!

யக்ஞா அங்கு நிற்பதை அறிந்தும் பொருட்படுத்தவில்லையா அல்லது அறிய அவன் மனம் மறந்துவிட்டதா புரியவில்லை, ஆனால் யக்ஞாவை பொறுத்தவரை அவன் செயல் ஒரு பேரிடி. அவனின் உதாசீனம் அவள் மனதை கூறுபோட்டது.

அவன் பிடிக்கவில்லை என்றதை தான் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு விட்டோமோ என்று அவள் உள் மனம் கலங்கி தவித்தது.

மீண்டும் மீண்டும் சுழலும் பிழையாகி போன ஒரு காணொளியை போல திரும்பி பார்க்காமல் ஓடிய அர்ஜுன் அவள் மனத்திரையில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.

“பாப்பு மா. உள்ள வரட்டுமா டா”

“அப்பா! வாப்பா! என்னபா நீயி எத்தனை தடவை உன் கிட்ட சொல்லியிருக்கேன், என் ரூம்குள்ள வரதுக்கு எதுக்கு பெர்மிஷன் கேட்டுட்டு வர?”

“அப்படி இல்லை, பாப்பு குட்டி தோளுக்கு மேல வளர்ந்த பின்னால பிள்ளைங்களுக்கான தனிப்பட்ட இடைவெளி கொடுக்கணும்டா. அந்த இடைவெளிகுள்ள நுழைய நினைக்கக் கூடாது. அது அவங்க மேல நாம வச்சிருக்கிற நம்பிக்கையை அழிக்கும் பாப்பு”

“என்னமோ சொல்ற பா. எனக்கு ஒன்னும் புரியல போ” சிரிக்கும் தன் மகளை ஆதுரமாய் பார்த்த அவர்,

“பாப்பு! நீ சந்தோஷமா தானே இருக்க?”

“ஏன் என்னை பார்த்தா சீரியல்ல வர அழு மூஞ்சி ஹீரோயின் மாதிரியா தெரியுது?”

“இல்ல பாப்பு நீ எப்பவும் போல தான் இருக்க. அது தான் எனக்கு இந்த டவுட்டே வந்துச்சு”

“ஓ காட்! என் இனிய அப்பாவே! மணிரத்னம் படம் மாதிரி புரியாமேயே பேசாம பட்டுன்னு போட்டு உடை”

“பொதுவா கல்யாணம் ஆன புள்ளைங்க இருவத்து நாலு மணி நேரமும் அந்த போனை தானே பேசிட்டு சுத்தும் பாப்பு. நீ அந்த மாதிரி எதுவும் பண்றதில்லையே பாப்பு? எப்பவும் போல சும்மா சுத்துற, சிம்பா கூட விளையாடுற, தூங்குற, புள்ளைங்க கூட விளையாடுற வேற ஒன்னும் பண்றதில்லையே பாப்பு”

“பார்த்தியா அப்படியே சைட் கேப்புல நான் ஒண்ணுமே பண்றதில்லை, வெட்டியா இருக்கேன்னு சொல்லிக் காட்டிட்ட”

“கழுதை பேச்ச மாத்தாத”

“அய்யோ! இப்போ என்னபா பிரச்சனை உனக்கு?”

“மாப்பிளையை முழு மனசா உனக்கு பிடிச்சிருக்குதா? இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே?”

“அப்படி பிடிக்கலைனா எப்பவோ வந்து சொல்லியிருக்க மாட்டேனா பா? அந்த சுதந்திரம் கூடவா நீங்க எனக்கு கொடுக்கலை? எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது பா”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் பாப்பு”

“அப்பா! எதுக்கு திடீருன்னு உனக்கு இந்த சந்தேகம் வந்துச்சு?”

“அது வந்து மா……அது ஒண்ணுமில்ல விடு…..”

“அப்பா! என் கிட்ட நீ எதுவும் மறைச்சதில்லை. இப்போ மாறிட்ட பார்த்தியா?”

“ஏய் சீ லூசு கழுதை! அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்னைக்கு காலையில சம்மந்தி அம்மா போன் பண்ணினாங்க”

“யாரு பா எம்.பியோட அம்மாவா?”

“ஆமா கழுதை ஒழுங்கா மரியாதையா பேசு. அதென்ன மாப்பிளையை பேர் சொல்லி கூப்பிடுற?”

“அப்பா விஷயத்தை சொல்லு பா” யக்ஞாவை பதற்றம் தொற்றிக் கொண்டது, 

ஒருவேளை நேற்று எம்.பியை சென்று பார்த்ததை சுச்சி அக்கா சொல்லியிருப்பார்களோ, ஒருவேளை எம்.பியின் தாய் கடிந்து பேசியிருப்பாரோ, ஒருவேளை எம்.பி நட்டாற்றில் விட்டவிட்டு சென்றது தெரிந்திருக்குமோ இப்படி பல ஒருவேளைகள் அவள் மனதிற்குள் வந்து சென்ற வேளை, யக்ஞாவின் தந்தை தொடர்ந்தார்,

“இங்க பாரு இப்பவே சொல்லிடுறேன். அவங்க பேசுனதுலையோ, கேட்டதுலயோ எந்த தப்பும் இல்லை. இந்த விஷயம் உனக்கும் தெரிஞ்சிருக்கணும்னு தான் உனக்கு இதை சொல்றேன்”

“அப்பா ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லு பா”

அவர் தொடர்ந்தார்…………………

—————————————————————————————————————————————

பிள்ளைகள் இருவருக்கும் பூஸ்ட்டை ஆற்றிக் கொடுத்து விட்டு, தர்மனுக்கும், அர்ஜுனுக்கும் பூஸ்ட் ஆற்றிக் கொண்டிருக்க, சமையலறைக்குள் நுழைந்த மலயனாதன் ஃப்ரிட்ஜின் மீதிருந்த ஸ்வீட் பாக்சிலிருந்து ஸ்வீட்டை பிட்டு வாயில் போட்டார்.

“மாமா!”

“அது சும்மா கொஞ்சமா வாயில போட்டேன் மா. ரொம்ப இல்லை”

“இப்படியே சொல்லி சொல்லியே ஃப்ங்ஷன் முடிஞ்சதுலேர்ந்து அந்த ஸ்வீட் பாக்ஸ் நீங்க மட்டும் தான் காலி பண்ணிட்டு இருக்கீங்க  மாமா. போன தடவையே உங்க சுகர் லெவல் ரொம்ப ஜாஸ்த்தி ஆயிடுச்சே மாமா?”

“அய்யோ நான் எங்க மா சாப்டேன். சும்மா இத்துநூண்டி பிச்சு வாய்ல போட்டேன். புள்ளைங்க தான் மிச்ச ஸ்வீட் சாப்பிட்டாங்க. அப்புறம் மா நம்ம மோட்டார் ரிப்பேர் ஆயிடுச்சு. இப்போதைக்கு டேங்க்ல தண்ணி இருக்குது. ஒரு நாளைக்கு அதுவே போதும். அதுக்குள்ள நான் சரி பண்ணிடுவேன். இருந்தாலும் கொஞ்சம் பார்த்து செலவளியுங்க”

“சரிங்க மாமா”

“அவ கிட்ட சொல்லிடு மா. வேணும்னே தேவையில்லாம தண்ணியை செலவளிச்சிட்டு இருப்பா”

“நான் சொல்லிடுறேன் மாமா. நீங்க ஏதாவது ஆள் வச்சு ரிப்பேர் பார்க்கலாமே?”

“ஏதோ சின்ன ஃபால்ட்டா தான் இருக்கும். நானே பார்த்துடுவேன். இதுக்கு தேவையில்லாம ஒருத்தனை கூப்பிட்டு அவன் ஆயிரம் மேல மொய் வச்சி ஏமாத்திட்டு போவான். எவனையும் நம்ப முடியாது. எல்லாவனும் ப்ராடு பயலுக தான். பாரு! நான் அந்த கறிக்கடைகாரனுக்கு கடையை கொடுக்கலாம்னு தான் அவன் கிட்ட வந்து பேச சொன்னேன். இப்போ என்னடானா அவன் புத்தியை காமிச்சிட்டு போறான் பார்த்தியா?! நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா இப்படி தான். ஆனா அவனை மட்டும் குத்தம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை, இங்க எல்லாம் சரியா இருந்தா அவன் இப்படி பேசுவானா? ஆரம்பத்துலேர்ந்தே நான் சொன்னதை செய்ய கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு திரியுறா அவ. அதுக்காகவே நான் பார்த்த கறிக்கடைகாரனை வாடகைக்கு வைக்கக் கூடாதுனு ஓவரா பேசி பேசி அவனை தூண்டி விட்டாச்சு. இப்போ அவன் மல்லுக்கு நிக்குறான். எல்லாம் தலையெழுத்து”

புலம்பிவிட்டு செல்லும் மாமனாரை பார்த்தவாறே பூஸ்ட்டை கொண்டு தர்மனிடம் கொடுத்தவள், 

“பூஸ்ட் பேபி, இந்தாங்க பூஸ்ட் குடிங்க”

அமைதியாய் அதை வாங்கி பருகினான் தர்மன்

“என்னபா? எப்பவும் பூஸ்ட் பேபினு கூப்பிட்டா அடிக்க வருவீங்க. இன்னைக்கு கம்முனு இருக்கீங்க”

“———“

“என்னாச்சு பா?”

“இன்னைக்கு அந்த கறிக்கடைகாரன் பேசுன பேச்சை பார்த்தியா? நாள் குறிச்சிட்டு போறான். இந்த தலைவலியெல்லாம் தேவையா சொல்லு? இந்த கடையே வாங்கியிருக்கவும் வேண்டாம். இவ்ளோ பிரச்சனை வந்திருக்கவும் வேண்டாம். கேட்டா உங்களுக்காக தான் சொத்து சேர்கிறோம்னு சொல்வாங்க”

“நேத்து நீங்க தான் எல்லாரையும் சமாதானபடுத்துனீங்க. அவனால ஒன்னும் பண்ண முடியாதுனு சொன்னீங்க. இப்போ நீங்களே எதுக்கு அதை நினைச்சு கவலைப்படுறீங்க?”

“இல்லமா மம்மியும் அர்ஜுனும் எப்படி சண்டைக்கு போனாங்க பார்த்தேல. அதான் அவங்களை சமாதானப்படுத்த அப்படி சொன்னேன். ஆனா எனக்கு பயமா இருக்குதுமா. அந்த ஆளுங்க எல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரி. அவங்க ஏரியாவே ரவுடி ஏரியா தான். என்னென்ன பிரச்சனை பண்ண போறானோ?”

“பேசாம அர்ஜுன் சொன்ன மாதிரி எம்.எல்.ஏ கிட்ட இந்த விஷயத்தை கொண்டு போனா என்ன?”

“நீயும் புரியாம பேசாத மா. யாரு அவரு? யாரு அவருங்கிறேன்? நம்ம குடும்ப விஷயத்தை எதுக்கு அவர் கிட்ட கொண்டு போகணும்? இப்படியே எல்லாத்துக்கும் அவரை சார்ந்து இருந்தா, நமக்குன்னு ஒரு சுயமே இல்லாம போய்டும். அந்த எம்.எல்.ஏவுக்கு அடிமை ஆயிடுவோம். இந்த வீட்டுக்கு ஏற்கனவே இருக்கிற ஒரு அடிமை போதும்”

“ஹ்ம்ம். பார்த்துக்கலாம் விடுங்க. எதுவா இருந்தாலும் சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம். அப்புறம் மாமா மோட்டார் ரிப்பேர்னு சொன்னாங்க, அவங்களே ரிப்பேர் பார்க்கிறாங்களாம், தண்ணி பார்த்து யூஸ் பண்ண சொன்னாங்க”

“இவரே ஆரம்பிச்சிட்டாரா?”

“இதெல்லாம் ஒரு தனி திறமை பா. எல்லாருக்கும் அது வராது. எனக்கு தெரிஞ்சு நான் கல்யாணம் ஆகி வந்ததுலேர்ந்து வீட்ல என்ன ரிப்பேர்னாலும் அவரே தான் பார்க்கிறார்”

“ரிப்பேர் பார்க்க வரவனுக்கு காசு கொடுக்கணுமேனு தான் அவரே பண்றார். அவரை பொறுத்த வரை எல்லாரும் ஏமாத்துகாரங்க. அதான் அவரே சரி பார்க்கிறார்”

“அதுக்கும் ஒரு திறமை வேணும்ல பா. சரி! உங்க ஆபிஸ் எப்படி போயிட்டிருக்குது?”

“அதே பழைய ஆணி தான்”

“டாக்டர் சொன்னது நியாபகம் இருக்குதுல. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க”

“ஹ்ம்ம் அதுக்கு தான் ஒரு சின்ன பிளான் பண்ணியிருக்கேன்”

“என்ன?”

“அன்னைக்கு நீ என் கிட்ட கேட்டியே நியாபகம் இருக்குதா? வெளிய ஒரு சின்ன டூர் மாதிரி போகணும்னு”

“ஆமா”

“போக போறோம்”

“போங்க பா. காமெடி பண்ணிக்கிட்டு”

“நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை”

“அப்படியா யாரெல்லாம் போறோம்?”

“நீ நான் மற்றும் நம்ம ரெண்டு வாலுங்க”

“ஓஹோ. எங்க?”

“சும்மா பக்கத்துல கவர் பண்ணுற மாதிரி ரெண்டு மூணு இடம் பார்த்து வச்சிருக்கேன்”

“ஓஹோஹோ! எப்போ போறோம்?”

“வர பதினைஞ்சாம் தேதி”

Advertisement