Advertisement

“யக்ஞா இங்க வந்திருக்காங்க போல பா”

“என்னடி சொல்ற?”

இருவரும் வெளியே சென்று எட்டி பார்க்க, வீட்டின் எதிர்புறம் உள்ள மாமரத்தின் நிழலில் நின்றபடி கையசைத்தாள் யக்ஞா.

“வாங்க எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஏன் இங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க”

“ம்ம்கும் சரியா போச்சு போங்க. இந்த விஷயம் அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவரு ஏதோ புரியாம பேசுறார் யக்ஞா, புடவை படைக்கிற வரைக்கும் நீங்க வீட்டுக்குள்ள வரக்கூடாது. சோ சாரி. ஏன் இப்படி திடீருன்னு சொல்லாம வந்துடீங்க? உங்க வீட்ல இங்க வரதா சொன்னீங்களா?”

“இல்லை க்கா, சொன்னா விட்டுருவாங்களாக்கும். என் ஃப்ரெண்டு பார்க்க போறதா சொல்லிட்டு தான் வந்தேன்”

“அய்யோ! ஏன் இப்படி சொல்லாம எல்லாம் வந்துட்டு? எனக்கு இந்த பார்மாலிடீஸ் எல்லாம் புரியல. பட் நீங்க சொல்லாம வந்தது தப்பு. நீங்க முதல ஊருக்கு கிளம்புங்க. எதுல வந்தீங்க? நான் கொண்டு போய் விட்டுடுறேன்”

“என் ஃப்ரெண்டோட கார்ல வந்தேன். நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை, ஜஸ்ட் எம்.பியை பார்த்துட்டு போய்டுறேன். அவ்ளோ தான். வீட்ல பெரியவங்க வரைக்கும் இதை கொண்டு போக வேண்டாம். நம்ம எல்லாம் ஒரே ஜெனரேஷன். உங்களுக்கு நான் சொல்றது புரியும்னு நினைக்கிறன்”

தர்மனும், சுசித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திருமணத்துக்கு முன் பலமுறை திருட்டுத்தனமாக இருவரும் சந்தித்துக் கொண்டவர்கள் தாம், ஆனாலும் வீட்டிற்கு மூத்தவர்களாய் பொறுப்பான நிலைக்கு வந்தபின், யக்ஞாவின் கூற்றை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அக்கா! மாமா! ப்ளீஸ். இந்த ஒரு தடவை எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. அடுத்து இந்த மாதிரி செய்ய மாட்டேன். இன்னைக்கு எம்.பிக்கு ரொம்ப முக்கியமான நாள். அதான் அவரை பார்க்கலாம்னு வந்தேன். ஒரு டென் மினிட்ஸ் பேசிட்டு கிளம்பிடுவேன். ப்ளீஸ் உங்க பர்த்டேக்கு எனக்கு நீங்க தர கிஃப்டு மாதிரி நினைச்சுக்கோங்களேன்”

இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைத்த சுசித்ரா, “எப்படி எப்படி? என் பர்த்டேக்கு நானே உனக்கு கிஃப்டு தரணுமா?”

“ஆமா! எப்பவும் ஒரே மாதிரி செய்ய கூடாது. லைப் போர் அடிச்சிடும். ஏதாவது டிப்பிரண்டா செஞ்சுட்டே இருக்கனும். எத்தனை நாள் தான் நம்ம பர்த்டேக்கு நாமளே கிஃப்டு வாங்கிட்டு. பார் அ சேன்ஞ் கிஃப்டு கொடுத்து பாருங்களேன்”  

தர்மனும், சுசித்ராவும் சிரிக்கவும், “ஹப்பாடா பர்த்டே பேபி சிரிச்சுடாங்க. ஹேப்பி பர்த்டே அக்கா! அப்படியே போய் எம்.பி யை பார்க்கலாம்னு தான் நினைச்சேன். பட் உங்க பர்த்டேனு தெரிஞ்ச பின்னால நேர்ல விஷ் பண்ணாம இருக்க முடியல. நேர்ல பார்த்த பின்னால எம்.பியை பார்க்க தான் வந்தேன்னு உண்மையை சொல்லாம இருக்க முடியல. ஏன்னா நாம பொய் சொல்றது, சஸ்பென்ஸ் மெய்ண்டெயின் பண்றது இதுல எல்லாம் கொஞ்சம் வீக்கு. சரி! நான் எம்.பியை பார்க்கணும். வரட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ்”

அரைகுறை மனதுடன் யக்ஞாவை அனுப்பி வைத்தனர்!

—————————————————————————————————————————————–

செட்டிக்கரை கல்லூரிக்கு எதிரே காத்திருந்தாள் யக்ஞா! சிறு மழை துளிகள் மண்ணை முத்தமிட்டு, எழுந்த மண் வாசனை அவள் சுவாச பையை நிரப்ப, 

சுட்டெரிக்கும் கோடையில் குளிர்விக்கும் அந்த கோடை மழையை போல, தலையை கோதி விட்டபடி, முகம் கொள்ளா சிரிப்புடன் தன்னை நோக்கி வரும் அர்ஜுனை அவள் விழிகளில விழுந்து இதய பையை நிரப்பினான்!

“ஹேய்! நீ எப்படி இங்க?”

“—————-“

“ஹலோ! உன்னை தான் கேக்குறேன்”

“ஆங்….அது உங்களை பார்க்க தான் வந்தேன்”

“என்னை பார்க்கவா? சரி சரி உண்மையை சொல்லு”

“அட நிஜமா எம்.பி. உங்களை பார்க்க தான் வந்தேன். காலையிலேர்ந்து இங்கேயே தான் சுத்திட்டு இருக்கேன். நம்ம வீட்டுக்கு போய் அக்காவையும் மாமாவையும் வெளிய வச்சு பார்த்து பேசிட்டு தான் வரேன்”

“ம்ம்ச்ச்! இங்க பாரு. நான் இப்போ நல்ல மூடுல இருக்கேன். அதனால கோபப்படாம பேசிட்டு இருக்கேன். தயவுசெஞ்சு உண்மையை சொல்லு, எதுக்கு இங்க வந்த? உன் ஃப்ரெண்டு யாராவது பார்க்க வந்தியா? உங்க வீட்ல வந்திருக்காங்களா என்ன? எங்க அவங்க?”

“எம்.பி உங்க ஹைட்டுக்கு எம்பி என்னால தலையில அடிச்சு சத்தியம் செய்ய கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதனால” அவன் கையை பிடித்து இழுத்தவள், அதில் பட்டென்று அவள் கையை பதித்து, “உங்க மேல சத்தியமா உங்களை பார்க்க தான் வந்தேன்” அவன் கையை அவளிமிருந்து இழுத்து கொள்ள முயற்சிக்க, விடாமல் அதை பற்றி திருப்பி அவன் மோதிர விரலுக்குள் ஒரு மோதிரத்தை திணித்தாள்.

“ஹேய்! என்னது இது?”

“மோதிரம்! ரிங்! உங்குறு! அங்குத்தி!”

“எதுக்கு இது?”

“நீங்க எலெக்ஷன்ல, ஐ மீன் உங்க அண்ணன் எலெக்ஷன்ல ஜெயிச்சதுக்கு”

“அது எப்படி நாங்க ஜெயிப்போம்னு உனக்கு முன்னாடியே தெரியும்?”

“நம்பிக்கை அதானே எல்லாம்”

“ம்ம்ம்….அதுக்கு நீ அவருக்கு தான் ரிங் போடணும்?”

“ம்ம்கும் போடுவாங்க போடுவாங்க. அவருக்கு எதுக்கு நான் போடணும்? என்னோட இவருக்கு தான் போட முடியும்”

“சரி ஒகே நீ கிளம்பு”

“ஏங்க ‘வாவ்! நல்லா இருக்குது. நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது. ச்சே! உனக்கு எதுவும் நான் கிப்டு வாங்கி தரவே இல்லையே. ஐ லவ்வ்வ்வ் யு……’ இந்த மாதிரி எதுவுமே பேச தோணலியா?”

“இல்லை தோணலை. கிளம்புறியா?”

“கிளம்பு கிளம்புனா எப்படி கிளம்புறது? வீட்டுக்கு தெரியாம உங்களை பார்க்க வந்திருக்கேன். என் ஃப்ரெண்டோட கார்ல தான் வந்தேன். திரும்ப என்னை கொண்டு போய் விட்டுடுங்க”

“இம்சை” தொண்டை குழிக்குள் அடங்கிய முனுமுனுப்புடன் அவளை பின்வருமாறு சைகை செய்தவன், தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து அதை கிளப்பினான்.

மெல்லிய நாணம் சிறகடிக்க, குறுகுறுகும் ஆர்வம் படபடக்க அசையாது நின்றுக் கொண்டிருந்தாள் யக்ஞா!

அவன் ஏறுமாறு தலையசைக்க, ஒரு சிறு தடுமாற்றத்துடன் அவன் பக்கத்தில் வந்து நின்றாள் யக்ஞா!

————————————————————————————————————————————–

“மேடம்! கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க மேடம்”

“அதெல்லாம் முடியாதுங்க. எங்க முடிவை நாங்க சொல்லியாச்சு. நீங்க கிளம்பலாம்”

“இப்படி கட் அண்ட் ரைட்டா பேசுனா எப்படிங்க மேடம்? நாங்க தானே முன்னாடி அங்க கடை வச்சிருந்தோம். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. இப்போ திடீருன்னு கடையை வேற இடத்துக்கு மாத்துனா பிசினஸ் பாதிக்கும் மேடம்”

“ஆமா பொல்லாத பிசினஸ் போங்க?! என்னமோ பெரிய நகை கடை வச்சிருக்கிற மாதிரி பேசுறீங்க. கறிக்கடை தானே எங்க போட்டாலும் கவுச்சி வாங்கி திங்குறவன் திங்க தானே செய்வான்”

“மேடம்? என்ன மேடம்? படிச்சிருக்கீங்க, பெரிய பதவியில இருக்கீங்க, இப்படி நக்கலா பேசலாமா மேடம்? சார் நீங்களாவது மேடத்துக்கு கொஞ்சம் சொல்லலாங்களே?”

“அதான் மேடம் சொல்லிட்டாங்களே? இந்த வீட்ல அவங்க சொல்றது தான் பா எல்லாம். நீ எதுவா இருந்தாலும் அவங்க கிட்டயே பேசிக்கோ”

கேலி பேசிவிட்டு அலட்சியமாய் உள்ளே சென்ற மலயநாதன், பத்மஜாவின் கொலை கண்களுக்குள் விழுந்து எழுந்து சென்றார்.

“ஏங்க நான் தான் சொல்லிட்டு இருக்கேன்ல? ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாது? திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்கீங்க? நாங்க ஏற்கனவே வேற ஒருத்தருக்கு கடையை வாடகைக்கு விடுறதா பேசி முடிச்சிட்டோம். நீங்க இடத்தை காலி பண்ணுங்க”

“மேடம்! என்ன மேடம்? மேடம் மேடம்னு ஆயிரம் மேடம் போடுறதால நான் ரொம்ப டீசன்ட்டுனு நினைச்சுடீங்க போல? கடை பக்கம் வந்து நம்மளை பத்தி கேட்டு பாருங்க, பெரிய இடமாச்சேனு பொறுமையா பேசிட்டு இருக்கேன். இல்லேனா நான் பேசுற விதமே வேற”

“என்ன? என்னடா செஞ்சிடுவ? விட்டா ரொம்ப பேசிட்டே போற? என்ன பெரிய இவனா நீ?” அர்ஜுனை நெஞ்சை நிமிர்த்தி கறிக்கடைகாரனுடன் சண்டைக்கு நிற்க, தர்மன் அவன் கைகளை பிடித்துக் கொண்டான், “அர்ஜுன்! கொஞ்சம் பொறுமயா இரு”

“தம்பி! பால் குடிக்கிற பப்பா நீயெல்லாம் பேசக்கூடாது. அந்த எம்.எல்.ஏவோட கைப்புள்ள தானே நீ? அந்த திமிருல தானே ஆடுற? உன்னையும் ஒண்ணுமில்லாம ஆக்குவேன், அந்த எம்.எல்.ஏவையும் ஒண்ணுமில்லாம ஆக்குவேன் பாக்குறியா?”

“டேய்! லூசாடா நீ? இதை போய் வெளிய சொல்லிடாத. உள்ள புடிச்சு போட்டிருவாங்க. முதல நீ பேசும்போது அப்படியே உன்னை பொலி போட்டுறனும்னு கோபம் வந்துச்சு. இப்போ தான் புரியுது நீ ஒரு காமெடி பீசுனு. உன் கூட சண்டை போட்டா எனக்கு தான் கேவலம். மரியாதையா ஓடி போய்டு”

“என்னபா? உனக்கு நான் சப்போர்ட் பண்ணி பேசுனா நீங்க எங்களையே எதிர்த்து பேசுறியா? என்ன நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசுறீங்க பா? தப்பு ரொம்ப தப்பு பா. மெதுவா பேசுறேன்னு நினைக்காதீங்க. பம்பார்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ” மலயனாதன் மல்லுக்கு வந்தார்.

“அப்பா! அர்ஜுன்! நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. பிரச்சனை எதுவும் வேண்டாம். பாஸ்! நீங்க கிளம்புங்க ப்ளீஸ். உங்களால என்ன முடியுமோ பார்த்துக்கோங்க”

கறிக்கடைக்காரனும் அவன் நண்பனும் எழுந்து செல்லுமுன் அர்ஜுனை பார்த்த பார்வையில் ரௌத்திரம் ராட்டினம் ஆடியது.

“தம்பி! வர பதினைஞ்சாம் தேதி உங்க மேலிடத்துக்கு பிறந்தநாள் போல. எலெக்ஷன்ல ஜெயிச்சது எல்லாத்துக்கும் சேர்த்து பெரிய விருந்து ஏற்பாடாயிருக்கு தானே? குடும்பத்துக்கே அழைப்பு வந்திருக்குதுல? அப்படியே கூடி கூத்தடிப்பீங்கள்ல? அன்னைக்கு இருக்குது உனக்கு? உங்க எல்லாருக்கும் நாள் குறிச்சிட்டேன்டி!! சாவுங்க!!”

“டேய்!” அர்ஜுன் திமிறிக் கொண்டு அவனை அடிக்க போக தர்மன் அவனை தடுத்தான்.

“ஏய்! போடா! பெரிய புடலங்கா! இவன் பெரிய இவன்!!! பேச வந்துட்டான். யார் கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்க? பார்க்கிறியா எங்க பவர் என்னனு? சுண்டக்காய் பய நீ எங்க கூட மோதுறியா? அர்ஜுன் போலீசுக்கு போன் போடுறா? ஒரு கை பார்த்துடலாம் இந்த நாயை”

“மம்மி! பிரச்சனை வேண்டாம். அவன் என்னவும் பேசிட்டு போறான் விடுங்க. நாமளும் அவனை மாதிரியே கிளம்புனா அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?”

“யார்டா இவன்? சும்மா பயந்தாங்கோளியாட்டம் பேசிட்டு. நம்ம வீட்டுக்கே வந்து நம்மளை மிரட்டிட்டு போறான். அவனை அப்படியே விட சொல்றியா?”

“அண்ணன்! அப்படியெல்லாம் சும்மா விடக் கூடாதுண்ணன். நம்ம பவர் தெரியல அவனுக்கு. இருக்குது அவனுக்கு. இப்பவே எம்.எல்.ஏவுக்கு போன் போடுறேன்”

“அர்ஜுன் இது நம்ம குடும்ப பிரச்சனை. இதை நாம தான் பேசி தீர்க்கணும். எல்லாத்துக்கும் எம்.எல்.ஏ கிட்ட போய் நின்னா நல்லாவா இருக்கும்?”

“பின்ன அவன் நம்மளை தூக்கிடுவேன்னு சவால் விட்டுட்டு போறான்? போனா போகட்டும்னு விட சொல்றீங்களா?”

“இதென்ன சினிமாவா ஆள் வச்சு நம்மளை அடிச்சு போட? அவனை பார்த்தாலே தெரியுது சும்மா வாய் சவடால்னு. பேசாம விட்டு தள்ளுவோம். அதுக்கு மேலயும் ஏதாவது பிரச்சனை பண்ணினா போலீஸ் கம்ப்ளெயின்ட் பண்ணுவோம்”

தர்மனின் கூற்றை அச்சந்தப்பத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், கறிக்கடைகாரன் ஏற்படுத்தி சென்ற கறை எல்லார் மனதிலும் அப்பிக் கிடந்தது.

  

 

Advertisement