Advertisement

விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுதில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முன்பு நின்று நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அவன் கண்கள் நொடிக்கொருமுறை கைக்கடிகாரத்தையும், காலேஜ் வாசலையும் தீண்டிக் கொண்டிருந்தது. அதீத படபடப்பில் அவன் கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

அவன் அலைபேசி அதிர்ந்து ‘இம்சை’ என ஒளிர்ந்தது. அவன் வாய் எப்பொழுதும் உதிர்க்கும் ஒரு உச்சு, இப்பொழுதும்!

“ஹேய்! நான் தான் போன் பண்ணாதேனு சொன்னேன்ல?”

“ஒரே ஒரு செகண்ட் பேசிட்டு வச்சிடுறேன்”

“சொல்லு”

“நீங்க ரொம்ப டென்ஷனா இருப்பீங்கனு தெரியும். கவலையேப்படாதீங்க. நீங்க தான் ஜெயிப்பீங்க”

“எது நான் ஜெயிப்பேனா?”

“ஐ மீன், உங்க எம்.எல்.ஏ அண்ணன் தான் மறுபடியும் உங்க தொகுதில ஜெயிப்பார்னு சொன்னேன்”

“அது எனக்கே தெரியும்”

“அப்புறம் ஏன் டென்ஷனா நகத்தோட சேர்ந்து விரலையும் கடிச்சு துப்பிட்டு இருக்கீங்க, உங்க கால் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ ஷோவுக்கு ரெடி ஆகுற மாதிரி டேன்ஸ் ஆடுது”

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?”

“ஆங்….அது பொதுவா எல்லாரும் டென்ஷனா இருந்தா இதை தானே பண்ணுவாங்க”

“ஓ”

அவள் சிரிக்க அர்ஜுன் கடுகடுத்தான்.

“இங்க பாரு இப்போ உன் கூட கடலை வறுக்கிற நிலைமைல நான் இல்லை. அப்புறமா பேசுறேன்”

“ம்ம்கும் வறுத்துட்டாலும். சரி! நான் வைக்கிறேன். ஆல் தி பெஸ்ட் எம்.பி”

தூரத்தில் எம்.எல்.ஏ கார் வருவதை பார்த்தும் அலைபேசியை அணைத்து விட்டு அவனுடைய பிதாமகரை வரவேற்க தயாராகினான்.

“அண்ணன்! வாங்கண்ணன்”

“என்ன அர்ஜுன் எம்.பி? டென்ஷனா? ரிலாக்ஸா இருப்பா! இந்த தடவையும் நாம தான் பா. தர்மபுரியில மட்டுமில்லை, மொத்த ஆட்சியையும் நம்மளது தான். ஆட்சி மாற்றம் இந்த தடவை உறுதி. நான் இருநூறு சதவிகிதம் அடிச்சு சொல்றேன். அதனால ஜாலியா என்ஜாய் பண்ணு. வீட்ல ஒரு பெரிய விருந்தே தயாராகிட்டு இருக்குது. என்ன இந்த தடவை எந்த கொண்டாட்டமும் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எழவெடுத்த கொரோனா உசுரை வாங்குது. அது சரி! நம்ம வீட்டுக்குள்ள கொண்டாடுறதை அவங்க என்ன வந்து பார்த்துட்டா இருக்க போறாங்க? உள்ளே போகலாமா?”

“கிருமி நாசினி அடிச்சிட்டு இருக்காங்க அண்ணன். முடிஞ்சதும் போலாம்”

“இது வேறயா. அந்த ஸ்மெல்லே நமக்கு ஒத்துக்க மாட்டிக்குது பா”

“நீங்க வேற, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கவுண்டிங் நிறுத்திட்டு மருந்தை அடிக்க போறாங்களாம்”

“கொரோனா செத்து போகுதோ இல்லையோ நாம போய் சேர்ந்துடுவோம் போலேயே?! சுத்தி பாரு, கவுண்டிங் நாள் மாதிரியா இருக்குது?! ஒவ்வொரு எலெக்ஷன்கும் நம்ம பயலுக சுத்தி நின்னு எவ்ளோ ஜகஜோதியா இருக்கும். யாரும் வரக்கூடாதுன்னுடானுங்க. உனக்கும் மூத்தவனுக்கும் மட்டும் தான் ஐ.டி வாங்க முடிஞ்சது”

“என்ன செய்யுறது ண்ணன். கொரோனா பிச்சிகிட்டு போகுது. நேத்து மட்டுமே தர்மபுரில முப்பது பேர் அவுட். ஆனால் கவர்ன்மன்ட் கணக்கு காமிச்சது ஜீரோ”

“என்ன எம்.பி என்னை விட வேகமா தகவல் உன் கிட்ட வந்து சேருதே? அது எப்படி பா?”

“அய்யோ அண்ணன் அப்படியெல்லாம் இல்லை. ஜி.ஹெச்ல டேட்டா என்ட்ரி வேலை பார்க்கிறவர் நமக்கு தெரிஞ்சவர், அவரு தான் கொரோனா டேட்டா என்ட்ரி போடுறது எல்லாம். அவரு மூலமா தான் தெரிய வந்துச்சு”

“சரி! முதல கவுண்டிங்கை முடிச்சு ஆட்சியை நிலைநிறுத்துவோம். அதுக்கப்புறம் கொரோனா கரோனா பத்தியெல்லாம் யோசிப்போம். என்ன நான் சொல்றது?”

எம்.எல்.ஏ, அவரது மூத்த மகன், அர்ஜுன் மூவரும் தங்கள் தலையெழுத்தை தீர்மானிக்க போகும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றனர்.

—————————————————————————————————————————————— 

நெற்றி பொட்டில் குட்டி குறுகுறுப்பு, தூக்கம் கலைந்து கண் திறந்தாள் முப்பத்து ஒன்று வயது நிறைவு பெற்ற சுசித்ரா!

“ஹேப்பி பர்த்டேடி ஜெல்லி மிட்டாய்! லவ் யு சோ மச்!” மீண்டும் நெற்றி பொட்டில் தர்மன் முத்தம் வைக்க, சிரித்தபடியே எழுந்து அமர்ந்தாள் சுசித்ரா.

“ஹலோ! இதென்னது வெறும் முத்தம். இதெல்லாம் செல்லாது செல்லாது! எனக்கு என் கிஃப்டு வேணும்?”

“ஓ! முத்தம் பத்தாதா? வேற பெரிய கிஃப்டு கொடுக்க நான் ரெடி தான். ஆனால் புள்ளைங்க எழுந்திரிக்கிற டைம் ஆச்சே. இன்னைக்கு நைட் வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோடி”

“அடச்சி! எப்ப பாரு இதே நினைப்பு தான். தள்ளி போங்க எப்படியும் நீங்க எனக்கு ஒரு கிப்ட்டும் வாங்கியிருக்க மாட்டீங்கனு தெரியும்”

“ஏ! கிஃப்டு கொடுத்தா தான் லவ்வுன்னு இல்லைடி. லவ்வு ஒரு ஆர்ட் அது ஹார்ட்லேர்ந்து வரணும். கிஃப்டுலேர்ந்து வரக் கூடாது”

“இப்படி சொல்லியே சமாளிக்க வேண்டியது. சரி! சரி! இன்னைக்கு அரைமணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்கிட்டேன். நான் போறேன் தள்ளுங்க. வேலை கிடக்குது”

“ஏ! இன்னைக்கு ஒரு நாள் சமைக்காதடி. வெளிய வாங்கிக்கலாம். என்ஜாய் யுவர் டே டுடே”

“இல்லபா அதெல்லாம் சரிபட்டு வராது. நான் சமைச்சுடுறேன்”

“என்ன சரிபட்டு வராது?”

“என்னனு உங்களுக்கே தெரியும். விடுங்க பா. சமைக்கிறதெல்லாம் ஒரு வேலையா? நான் பார்த்துகிறேன்”

சுசித்ராவின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து பேசினாள்.

“அம்மா!”

“ஹாப்பி ப்ர்தேடே பாப்பா”

“தேங்க்ஸ் மா”

“மாப்பிளைக்கு இப்போ எப்படி இருக்குது?”

“ஹ்ம்ம்…நல்லா தான் இருக்கிறார்”

“சரி! நான் ஆர்டர் பண்ணின டிரெஸ் வந்திடுச்சுல. உனக்கு புடிச்சிருக்குது தானே?”

“இவ்ளோ வருஷமா எனக்கு நீ எடுத்து தரது தான் ரொம்ப புடிக்குமே. இதுவும் ரொம்ப புடிச்சிருக்குது. போட்டுட்டு போட்டோ எடுத்து அனுப்புறேன்”

“இரு அப்பா பேசுறாங்க”

“ஹேப்பி ப்ர்த்டே பாப்பா”

“தேங்க்ஸ் பா”

“மாப்பிளைக்கு தலைவலி பரவயில்லையா?”

“ஆங்……நீங்களே உங்க மாப்பிளை கிட்ட பேசிக்கோங்க. இந்தாங்க”

சுசித்ரா குளித்து முடித்து வரும்வரை மாமானரும் மருமகனும் பேசிக்கொண்டே இருக்க, வாயை பொத்தி நக்கலாய் சிரித்தாள் சுசித்ரா.

“என்னபா? திருக்குறள், திருமூலர் திருமந்திரம், தமிழோட அருமை பெருமை  எல்லாம் பேசி எங்க அப்பா மொக்கை போட்டிருப்பாங்களே?”

“அவருக்கு பிடிச்சதை அவரு பேசுறார். அதுக்காக அவர் நம்ம மேல அதை திணிக்கலையே. உங்க அப்பா, அம்மா மாதிரி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்”

“கொடுத்து வச்சிருக்கேன் தான், ஆனா கூட வச்சிக்க முடியலையே”

தர்மனின் முகம் வெளுத்தது.

“ஹேய்! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் பா”

“சாரி மா! நீ உங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணு. அவங்க அங்க தனியா இருக்காங்க. ஆனால் அவங்களை கூட்டிட்டு வந்து பாத்துகிற நிலைமைல நாம இல்லை. எல்லாம் என்னால தானே?”

“அடக் கடவுளே! எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாய்ண்டை புடிச்சு புலம்ப ஆரம்பிச்சுடுறது. பீன் பேக் இன்னைக்கு எனக்கு பர்த்டே. நீங்க எனக்கு கொடுக்கிற பரிசே உங்க சந்தோஷம் தான். சோ ப்ளீஸ் சந்தோஷமா இருங்க”

“ம்ம்”

“அது என்ன மாத்தி மாத்தி ரெண்டு பேரும் மாப்பிளை நல்லா இருக்காரா? மாப்பிளை எப்படி இருக்காருனே விசாரிச்சுட்டு இருக்காங்க. சும்மா பேருக்கு எனக்கு விஷ் பண்ண வேண்டியது. என்ன விட நீங்க தான் முக்கியமா போய்டீங்க இல்லை? இருக்கட்டும் வச்சிக்கிறேன்”

“பின்ன என்னடி? இப்படி ஒரு அழகான, அன்பான, அருமையான, அட்டகாசமான மாப்பிளைனா சும்மாவா?”

“டாட் டாட் டாட். நோ கமெண்ட்ஸ். நல்ல நாள் அதுவுமா கெட்ட வார்த்தை எதுவு பேச வச்சிடாதீங்க”

தன்னை பிடிக்க வந்த தர்மனிடமிருந்து தப்பி அறையை விட்டு வெளியே வந்த சுசித்ரா நேரே பத்மஜா, மலயனாதன் கால்களில் தனித்தனியாய் விழுந்து ஆசி பெற்றாள்?!

“நல்ல தீர்காயுசா இருமா. டேய்! தர்மா! அதை எடுத்துட்டு வாடா”

தர்மன் ஒரு கவரை எடுத்து வந்து தாயிடம் கொடுத்தான்.

“இந்தா மா உன் பரத்டேக்கு ஒரு டிரஸ் எடுத்தேன். உனக்கு புடிச்சிருக்கா பாரு?”

அவளுக்கு மிக மிக பிடிக்காத (!!!) இளமஞ்சள் நிறத்தில் மேல் பகுதி வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு கால் வரை நீண்டு விரிந்து பளபளத்தது. அதன் பளபளப்பே அதன் விலைச் சீட்டானது!!

“இதென்ன டிரெஸ் போட்டிருக்க? டல்லா இருக்குது, போய் இதை மாத்திட்டு வா”

“சரிங்கத்தை”

தன் தாய் கொடுத்த உடையை கழற்றி வேறு உடை மாற்றும்போது எழுந்த வெறுமையை போக்க தர்மனை மனதுக்குள் நிரப்பிக் கொண்டாள்.

வெளியே வந்த அவளை பார்த்த பத்மஜா, “ம்ம். நல்லா இருக்குது. பார்த்தியா தர்மா! டிரெஸ் அழகா இருக்குதுல. என்ன இருந்தாலும் விலைக்கு தகுந்தாப்ல தான் இருக்குது இல்லை?! மூவாயிரம் ரூபாய்க்கு ஏத்த மாதிரி சும்மா ஜொலிக்குது பாரு”

“ம்ம் ஆமா மம்மி!” அவன் வாய் மட்டுமே பேச, கண்கள் சுசித்ராவுக்கு ஆறுதல் உரைத்தது.

“அந்த செயினை கொடு டா”

தர்மன் அவளிடம் சிகப்பு கல்லில் முன் முகப்பு வைத்த அழகிய தங்கசங்கிலியை கொடுத்தான்.

“இந்த கிஃப்டு அவன் தான் மா உனக்கு வாங்கி தரான். எட்டு பவுனு”

“டேய்! நீ கொடுத்தா என்ன நான் கொடுத்தா என்னடா? நான் இருக்கும் போது நீ எதுக்கு செலவு பண்ணிட்டு. நானே வாங்குறேன். நீ உன் கார்டை உள்ள வை” சங்கிலி வாங்கும்போது பேசிய பத்மஜாவின் குரல் தர்மனின் காதில் ரீங்காரமிட, அவன் உதடுகளில் ஒரு வெற்று புன்னகை தவழ்ந்தது. 

“நல்லா இருக்குதுங்கத்தை”

“ம்ம்ம்….உனக்கு புடிச்ச குலாப்ஜாமுன் செஞ்சு வச்சிருக்கேன். அவனுக்கும் புள்ளைங்களுக்கும் எடுத்து கொடு. நீயும் சாப்பிடு”

“ஹாப்பி பர்த்டே அண்ணி”

ஆர்பாட்டமாய் உள்ளே நுழைந்தான் மித்ரன், அர்ஜுனின் மித்ரன்!

“தேங்க்ஸ் மித்ரா”

“வாங்க அண்ணி கேக் வெட்டலாம்”

“எதுக்கு மித்ரா கேக் எல்லாம்?”

“அட வாங்கண்ணி! வருஷத்துல நமக்கே நமக்குன்னு ஒரு நாள். ஆமா நம்ம அர்ஜுன் சார் விஷ் பண்ணினாரா இல்லையா?”

“காலையிலேயே கவுண்டிங்க்கு கிளம்பிட்டாப்ல. போன் எதுவும் பண்ணலை”

“ஆமா பின்ன சும்மாவா அவன் எவ்ளோ பிஸி. அதுலையும் இன்னைக்கு அவனுக்கு ஒரு முக்கியமான நாள். அவனை பத்தி எனக்கு தெரியும். விஷ் பண்ணாட்டியும் மனசுல நினைச்சிருப்பான்” பத்மஜா அர்ஜுனுக்கு பரிந்து பேச, அர்ஜுனின் நினைவலைகளில் ஒரு துளி மழையாய் கூட வீட்டு நினைவில்லை என்ற உண்மை பத்மஜாவை தவிர மற்ற மூவருக்கும் நன்றாக தெரியும்!!!

“எனக்கு என்னவோ நாம ஜெயிப்போம்னு நம்பிக்கையே குறைஞ்சுட்டு வருது அர்ஜுன்”

”அண்ணன்! ஏன் இப்படி நம்பிக்கை இல்லாம பேசுறீங்க?”

“அப்பா! நாம தான் பா கண்டிப்பா ஜெயிப்போம்”

இல்ல தம்பி! போன எலெக்ஷன்ல முதல் சுற்றுலேர்ந்து நாம தான் லீடிங்ல இருந்தோம். ஆனா இப்போ அந்த பன்…….ம்ம்ச்….அவன் தானே லீடிங்ல இருக்கான்”

“அண்ணன்! கிராமத்து  சைடு ஓட்டு அவருக்கு கிடைக்க தான் வாய்ப்பிருக்குது. அது உங்களுக்கே தெரியும் தானே ண்ணன்”

“தெரியும் பா. எல்லாம் அந்த ஜாதி பயலுக தானே. அவனுக்கு தான் போடுவாங்க”

“ஆனா தருமபுரி மெயின்ல நீங்க தான் ண்ணன். இன்னும் அந்த வோட்ஸ் கவுன்ட் பண்ணினா நீங்க லீடிங் போய்டுவீங்க அண்ணன்”

“என்னமோ நீ சொல்ற பார்ப்போம், முதல இருந்த நம்பிக்கையே போய்டுச்சு”

“அண்ணன் ஒரு சுற்று தான் முடிஞ்சிருக்குது ண்ணன்”

“ஹ்ம்ம்”

சிறிது நேரத்தில் இரண்டாம் சுற்று முடிவுகள் வர எம்.எல்.ஏ முன்னிலை பெற்றார். ஆசுவாச மூச்செடுத்தார் எம்.எல்.ஏ! 

“நான் தான் சொன்னேன்ல அண்ணன். இனிமே தொடர்ந்து நீங்க தான் லீடிங்ல இருப்பீங்க பாருங்க”

அவனின் கூற்றை பொய்யாக்கி அடுத்த சுற்றில் எதிர்கட்சியை சேர்ந்த அந்த (பன்) நபர் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் அவரே முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ சோர்ந்து விட்டார். 

“தம்பி! செலவளிச்ச காசெல்லாம் கரியாகிடும் போலேயே பா. ஒன்னு ரெண்டு இல்லபா பத்து எல் செலவளிச்சிருக்கோமே பா”

எம்.எல்.ஏவின் மூத்த மகன் அவர் கைகளை பற்றினான்.

ஆறாம் சுற்று முடிவு வெளி வந்தது……..

—————————————————————————————————————————————–

சுசித்ரா தன் அலைபேசி திரையில் தெரிந்த எண்ணை பார்த்து அதிசயித்தாள்.

“ஏன்பா? யக்ஞாவுக்கு இன்னைக்கு என் பர்த்டேனு தெரியுமா என்ன?”

“யாரு யக்ஞா? உன் ஃப்ரெண்டா?”

“அப்ப்பாபா……அர்ஜுனுக்கு பார்த்த பொண்ணு பா”

“அட ஆமால…..அவங்களா கூப்பிடுறது? உன் நம்பர் எப்படி அவங்களுக்கு தெரியும்? 

“நான் அன்னைக்கு அர்ஜுன் கிட்ட வாங்கி மெசேஜ் பண்ணினேன்”

“ஒருவேளை உன் பர்த்டேனு அர்ஜுன் சொல்லியிருப்பானோ?”

“ம்ம்கும் சார்க்கே முதல என் பர்த்டே நியாபகம் இருக்கானு தெரியல” அழைப்பை ஏற்று காதில் ஒற்றினாள்.

“அக்கா”

“நல்லா இருக்கீங்களா?”

“அய்யோ அக்கா, நான் உங்களை விட ரொம்ப சின்ன பொண்ணு. என்னை வாங்க போங்கனு கூப்பிட்டு என் வயசை ஏத்தி விட்டுருவீங்க போலேயே”

“சரி மா. நல்லா இருக்கியா?”

“நான் எப்படி இருக்கேன்னு உங்க வீட்டு…..சாரி நம்ம வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தீங்கனா தெரியும்”

“ஹ்ம்ம் என்…என்னது?”

அழைப்பை துண்டித்துவிட்டு சுசித்ரா விழுந்தடித்து வாசலுக்கு விரைய, தர்மன் அவளை பின் தொடர்ந்தான்.

Advertisement