Advertisement

“ம்ம்ம். சரி”

“பதிமூணு”

“என்ன பதிமூணு?”

“நீங்க பதிமூணு தடவை ம்ம் சரின்னு சொன்னீங்க”

“வேற என்ன சொல்ல?”

“நீங்க என்னை எதுவும் கேட்க மாட்டீங்களா? நான் காலையில கண்ணு முழிச்சதுலேர்ந்து இப்போ வரைக்கும் என்ன பண்ணினேன், என்ன கலர் டிரஸ் போட்டேன், என்ன சாப்பிட்டேன், எங்க வீட்டு ஆளுங்க, ஆடு மாடு, கோழி, தூசு, தும்பு எல்லாத்தையும் பத்தி விலாவரியா சொல்லிட்டேன். நீங்களும் ம்ம் சரி ம்ம் சரினு வாய் வலிக்காம சொல்லிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என் கிட்ட கேக்குறதுக்கு எதுவுமே இல்லையா?”

“நீ எப்படி இந்த மாதிரி வாய் மூடாம பேசுற? நானே கொஞ்சம் வாய் தான்னு எங்க வீட்ல சொல்வாங்க. நீ எனக்கு மேல இருக்கியே?!”

“நீங்க என்னை பாராட்ட தானே செய்யுறீங்க? இது எதுவும் வஞ்சபுகழ்ச்சி அணி இல்லையே?”

“ச்சே! ச்சே! சத்தியமா இல்லை”

“தேங்க்யு! தேங்க்யு! தேங்க்யு! எனக்கு புகழ்ச்சி பிடிக்காது, சோ இனிமே இந்த மாதிரி புகழாதீங்க”

“முடியலை”

“முடி இல்லையா? அன்னைக்கு நான் பார்க்கும் போது உங்களுக்கு நிறைய முடி இருந்துச்சே? அதுக்குள்ள எல்லாம் கொட்டிடுச்சா? அச்சச்சோ!!”

“மித்ரா! இருடா உனக்கு இருக்குது டா”

“மித்ரன்? உங்க ஃப்ரெண்டு தானே? அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ வந்திருந்தாரே? அவரை எதுக்கு திட்றீங்க?”

“ஹ்ம்ம்! நான் கல்யாணமே பண்ணக் கூடாதுன்னு இருந்தேன். என்னை அநியாத்துக்கு கன்வின்ஸ் பண்ணினது அவன் தான். அதான் அவனை திட்டினேன்”

“ஆமா ஏன் நீங்க கல்யாணமே வேண்டாம்னு இருந்தீங்க?”

“அது…..அது வந்து…..அது ஒண்ணுமில்லை….”

“எனக்கு தெரியும்”

“என்ன தெரியும்?”

“அதான் நீங்க அரசியல்ல சாதிக்கணும்னு தானே கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க”

“ஓ! அதுவா, ஹ்ம்ம் ஆமா ஆமா அது தான் ரீசன்”

“சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணின பின்னாடி தானே அரசியல்ல சாதிச்சாங்க. நீங்களும் அது மாதிரி ட்ரை பண்ணலாமே?”

“வேண்டாம் நான் காமராஜரா இருக்க தான் ஆசைப்படுறேன்”

“என்ன செய்ய? நாம ஆசைப்படுற எல்லாமே நடந்துடுமா என்ன? ஆசைப்பட்டது கிடைக்கலேனா கிடைச்சதை ஆசையா வச்சிக்கணும்”

“இந்த தத்துவம் எல்லாம் எனக்கு மட்டும் தானா? உனக்கெல்லாம் கிடையாதா?”

“எனக்கு தான் ஆசைப்பட்டது கிடைச்சுடுச்சே”

“எது?”

“நீங்க தான்”

“ம்ம்ச்ச்”

“எம்.பி சீரியஸா சொல்றேன் பா. என்னால முடியல. இதுக்கு மேல எப்படி ரொமாண்டிக்கா பேசனு எனக்கு தெரியல!? இதுக்கே என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்து, நாலைஞ்சு ஹிட் லவ் படமெல்லாம் பார்த்து ஏதோ இந்த அளவுக்காவது பேசுறேன். முப்பது நாளில் லவ் பண்ணுவது எப்படின்னு புக் மட்டும் தான் படிக்கலை. உங்க சைட் இப்படி எந்த ரெஸ்பான்ஸ் இல்லேனா இதுக்கு மேல எப்படி லவ் பண்ணணு சுத்தமா தெரியல பா. நான் அந்த சப்ஜெக்ட்ல ரொம்ப வீக்கு. ப்ளீஸ் என் மேல கொஞ்சம் கொஞ்சமே இரக்கம் காட்டுங்க”

அர்ஜுன் பக்கென்று சிரித்து விட்டான்.

“ஹப்பாடா! நம்மாளு சிரிச்சிடாரு. ஆத்தா நான் பாசாயிட்டேன். முதல சித்துக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லணும். நான் வைக்கிறேன்”

“ஹேய் ஹேய் லூசு!  இதெல்லாமா உன் ஃப்ரெண்டு கிட்ட சொல்லுவ? இனிமே நம்மளை பத்தி ஏதாவது உன் ஃப்ரெண்டு கிட்ட சொன்ன பிச்சுபுடுவேன் பார்த்துக்கோ”

“அப்போ நான் யார் கிட்ட லவ் டிப்ஸ் கேட்கிறது?”

“ஹ்ம்ம் என் கிட்ட கேளு”

“ஹை! இது நல்ல ஐடியாவா இருக்கே? உங்களை எப்படி கரெக்ட் பண்ணுறதுன்னு சொல்லுங்க எம்.பி”

“அப்படியே போனை கட் பண்ணிட்டு இழுத்து போத்திட்டு படுத்து தூங்கு, உன் மேல எக்கச்சக்க லவ்ஸ் பிச்சிகிட்டு வந்துடும்”

“ஒகே எம்.பி இப்பவே போய் தூங்குறேன்”

“சரியான இம்சை” திட்டியபடியே அலைபேசியை அணைத்தவன், உதடுகளில் முரணாய் இனிய புன்னகை

—————————————————————————————————————————————–    

“தர்மா! உங்க தலை வலியோட முக்கிய காரணமே உங்க அதிகப்படியான ஸ்டெரெஸ் தான். இப்போ எல்லாம் ஐ.டி பீல்டுல வொர்க் பண்ணுற எல்லாருக்கும் இந்த ஸ்டெரெஸ் ரொம்ப காமன் ஃபாக்டரா மாறிட்டு வருது. நான் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு மெடிசின்ஸ் தரேன். நீங்க என்ன செய்யனும்னா உங்க மைண்ட ரிலாக்ஸா வச்சிருக்கணும். நீங்க ஆபீஸ் போறீங்களா வீட்லேர்ந்து வொர்க் பண்றீங்களா?”

“இப்போ ஒரு வருஷமாவே இந்த கொரோனானால வொர்க் ஃப்ரம் ஹோம் தான்”

“வீட்ல நீங்க உட்காரும் போது உங்க சிட்டிங் பொசிஷனை பார்த்துக்கோங்க. சிட்டின் பொசிஷன் கரெக்டா இல்லாட்டி கூட இட் லீட்ஸ் டு மெனி ஹெல்த் ப்ராப்ளம்ஸ். ஹ்ம்ம் ஒன் செக்………இந்த பேம்ப்லெட் வச்சிக்கோங்க இதுல எது சரியான சிட்டிங் பொசிஷன்னு போட்டிருக்கு. ரீட் பண்ணி பாருங்க”

“செகண்ட் பாய்ன்ட் உங்களுக்கு புடிச்ச விஷயத்தில மைண்டை டைவர்ட் பண்ணுங்க. லைக் பாட்டு, சினிமா, ஸ்போர்ட்ஸ் உங்களுக்கு எது பிடிக்கும்?”

“விளையாட்டு எல்லாம் வாழ்க்கைக்கு சோறு போடுமா கண்ணு? படிக்கணும், படிக்கணும் வெறி தனமா படிக்கணும். அப்போ தான் நல்ல வேலைக்கு போய் நல்ல சம்பாத்திச்சு செட்டில் ஆக முடியும்” தர்மனின் காதுக்குள் அவன் பால்யத்தின் குரல் தேய்ந்து ஒலித்தது.

“Mr. தர்மன் உங்களை தான்”

“ஆங்…சாரி டாக்டர். அது எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இண்டரஸ்ட்”

“அப்போ டைவேர்ட் யுவர் மைன்ட் இன் டாட். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது இண்டரஸ்ட்டட் இருந்தா அவங்க கூட ஷட்டில், வாலி பால்னு விளையாடுங்க. இல்லேனா ஏதாவது ஸ்போர்ட்ஸ் அகடமி ஜாயின் பண்ண முடியுமா பாருங்க. ஸ்போர்ட்ஸ் சானல்ஸ், ஸ்போர்ட்ஸ் நியுஸ் நிறைய பாருங்க. ஸ்விம் பண்ணுங்க. எந்த ஸ்ட்ரெஸ் இல்லாம ஜஸ்ட் என்ஜாய். உங்க தலைவலி ஓடி போய்டும். வேலை பார்க்கும் போது பிடிச்ச பாட்டை கேட்டுட்டே வேலையை பாருங்க. டெய்லி வாக்கிங் போங்க. அதுவும் உங்க மைண்டையும், பாடி மசில்ஸ்யும் நல்ல ரிலாக்ஸ் பண்ணும்”

“மை சஜ்ஜஷன் இஸ், நீங்க ஒரு வாரம் மெடிக்கல் லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கிறது தான். ஒரு வாரத்துக்கு அப்புறமும் இந்த தலைவலி கண்டின்யு ஆச்சுனா, அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்”

“தேங்க்ஸ் டாக்டர்! ஒரு மெடிகல் செர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?”

“சுயர்”

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்த தர்மனின் கைகளை பத்மஜா பிடித்துக் கொண்டார். அருகில் காட்சி பிழையாய், மௌன மொழியாய் சுசித்ரா!!!

“சாமி! என்னாச்சு சாமி? டாக்டர் என்ன சொன்னாரு?”

“ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கச் சொன்னாரு மம்மி. மாத்திரை கொடுத்திருக்காரு”

“வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே சாமி?”

“இல்லை மம்மி! ஒண்ணுமில்லை, ஸ்டெரெஸ் தலைவலி தான் வேற ஒண்ணுமில்லைனு சொன்னாரு”

“அய்யோ! என் புள்ளை தலைவலியால கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்குது. நான் கவனிக்காம விட்டுட்டேனே?!! வேற ஒன்னும் பிரச்னை இல்லைல கண்ணு? இந்த மாத்திரை சாப்பிட்டா சரியா போயிடும்ல?”

“ஆமா மம்மி! ஒன்னும் பிரச்சனை இல்லை மம்மி!”

“சரிப்பா! நானும் ஒரு வாரம் ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடுறேன். உன்னை கூடவே இருந்து பார்த்துகிறேன். இல்லேனா வேற யாரு உன்னை பார்த்துகிறதுக்கு இருக்காங்க?”

“நீங்க எதுக்கு மம்மி லீவ் எல்லாம் போட்டுட்டு? அதான் சுச்சி இருக்காளே?”

“எனக்கு வாய்ல நல்ல ஏதாவது வந்துடும் கண்ணு வேண்டாம். பார்த்துகிட்டாளாம் பார்த்துகிட்டா?! நல்லா இருந்த உன்னை இந்த நிலைமைக்கு இழுத்து விட்டவளே அவ தான். சும்மா எப்ப பாரு, உன் கிட்ட ஏதாவது ஒரு குறை சொல்லி, குறை சொல்லி, என்னமோ ஊர் உலகத்துல இவ மட்டும் தான் வீட்டு வேலை பார்க்கிற மாதிரி, ஏத்தி ஏத்தி உன் கிட்ட சொல்லி கொடுத்து, புள்ளைங்களை உன் தலையில கட்டிட்டு உன் தலையில எல்லா டென்ஷனையும் ஏத்தி உன்னை நோயாளி ஆக்குனதே அவ தான்”

“மம்மி! ப்ளீஸ் மம்மி வீட்டுக்கு போய் பேசலாம் மம்மி”

“உடனே அவளுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துடுவியே?”

பத்மஜா முன்னால் செல்ல, தர்மன் சுசித்ராவிடம் கண்களாலேயே மன்னிப்பு வேண்ட, அவன் மன்னிப்புக்கு மின்னல் புன்னகையை பதிலாய் அளித்தாள்!

வீட்டு வாசலிலேயே மலயனாதன் நின்றுக்கொண்டிருந்தார், 

“என்னச்சுபா? டாக்டர் என்ன சொன்னாரு? ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பா. ஒரு வாரம் மாத்திரை கொடுத்திருக்காரு. லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கச் சொன்னாரு”

“எதனால இப்படி அடிக்கடி தலைவலி வருதாம் கேட்டியா?”

“ஸ்டெரெஸ் தானாம் பா. வேற ஒண்ணுமில்லை”

“இல்லை பா தர்மா! அப்படி பொத்தாம் பொதுவா எப்படி சொன்னாரு? ஏதாவது செக் பண்ணி பார்த்தாரா? இப்படி அடிக்கடி தலைவலி வரக் கூடாதே?!! ஸ்கேன் எதுவும் எடுக்கிறதா இருந்தா எடுத்துடலாம் பா”

“அப்பா! டாக்டரே ஒன்னும் சொல்லைலை பா. அவருக்கு தெரியாதா பா என்ன பிரச்சனைனு”

“சரிப்பா சரி, சும்மா கேட்டேன். ஏன்னா தலைவலியெல்லாம் அவ்ளோ ஈசியா எடுத்துக்கக் கூடாது. பின்னாடி ப்ரெயின் டியுமர் அப்படி இப்படி எதுவும் பிரச்சனை ஆயிட கூடாது”

“கருமம் கருமம்! ஒருநாளும் வாயில நல்லதே வராது” பத்மஜா தலையிலடித்துக் கொள்ள, அர்ஜுன், “அப்பா! தயவுசெஞ்சு கொஞ்சம் அமைதியா இருங்க பா. அண்ணா! நீங்க லீவ் போட்டுட்டு ஃபுல் ரெஸ்ட் எடுங்க. எந்த வேலையும் பார்க்காதீங்க. மம்மி! நான் எம்.எல்.ஏ வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்”

“டேய்! சாப்பிடாம கொள்ளாம அங்கேயே பழியா கிடந்தா எப்படிடா?”

“மம்மி! ப்ளீஸ் ஆரம்பிச்சுட்டாதீங்க. இன்னும் ஒரு மாசம் எலெக்ஷன் முடியுற வரைக்கும் என்னை கண்டுக்காதீங்க” 

அடுத்து வந்த ஒரு வாரம் பத்மஜா வீட்டில் இருந்து தர்மனை வேளை தவறாமல் சத்தான உணவு கொடுத்து, அவனை கண்ணுங் கருத்துமாய் பார்த்துக் கொள்ள, பக்கத்தில் சுசித்ரா காட்சி பிழையாய், மௌன மொழியாய்!

“மம்மி! இப்போ தானே மம்மி ஜூஸ் குடிச்சேன். அதுக்குள்ள இது என்னது?”

“இது முளை கட்டின பயறு கண்ணு, அவ்ளோ ப்ரோட்டீன். ஜூஸ் என்ன வெறும் தண்ணி மாதிரி தான். சாப்பிடு பேசாம”

“மதியத்துக்கு உனக்கு புடிச்ச முட்டை குழம்பு பண்றேன்பா. ஹ்ம்ம்….ஒரே ஒரு ஆட்டு கால் சூப் குடிச்சேனா சும்மா அப்படி இருக்கும். நீ தான் சொன்னா கேட்க மாட்டிங்கிற?”

“இல்லை மம்மி! நான் தான் நான்-வெஜ் விட்டு எட்டு வருஷம் ஆக போகுதே? திரும்ப என்னால சாப்பிட முடியாது மம்மி”

“ஏண்டா டேஸ்ட் புடிக்கலைனு விட்டா சரி, நீ என்னடானா மிருகங்களை கொல்றது புடிக்கலைனு விட்டுட்ட பாரு அதை தான் என்னால ஏத்துக்க முடியல”

“ஆமா என் கண்ணு முன்னாடியே ஒரு உயிரை கொல்றதை என்னால ஏத்துக்க முடியல. என் கொள்கையை என்னால மாத்திக்க முடியாது”

“பெரிய கொத்தவரங்காய் கொள்கை. நீ ஏன் நான்-வெஜ் சாப்பிட மாட்டிக்குறேனு எனக்கு மட்டும் தான் தெரியும். உன் பொண்டாட்டி சாப்பிட மாட்டான்னு தானே நீயும் கல்யாணம் ஆனதும் அதை விட்டுட்ட”

“அப்படியெல்லாம் இல்லை மம்மி!”

“டேய்! போடா வெங்காயத்தானே! எல்லாம் எனக்கு தெரியும். மூடிட்டு போ. வந்துட்டான் சப்போர்ட் பண்ணுறதுக்கு. சரி நீ சாப்பிடு, நான் அப்படியே ஆபீஸ் வரைக்கும் போயிட்டு ஒரு ஃபைல்ல கையெழுத்து போட்டுட்டு வந்துடுறேன். வரும் போது ஸ்நாக்ஸ், பழம் எல்லாம் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுறேன். நான் வந்தே முட்டை குழம்பு வைக்கிறேன். அவளை வைக்க வேண்டாம்னு சொல்லிடு”

“நீங்க எதுக்கு மம்மி ஆபிஸ்க்கும் போயிட்டு வந்து சமைக்கவும் செஞ்சு கஷ்டப்படுறீங்க?”

“என் புள்ளை தலைவலியால கஷ்டப்பட்டுட்டு இருக்குது. நான் பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும் கண்ணு? உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன் கண்ணு?! எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீ நல்லா இருந்தா அதுவே போதும் சாமி” கண்களில் கோர்த்த நீருடன் ஆபிஸ்க்கு கிளம்பினார்.

“எனக்கு பயமா இருக்குது சுச் மா”

“எனக்கும் அதே பயம் தான் பா”

“ஒவ்வொரு வீட்ல அம்மா இந்த மாதிரி அக்கறையா பார்த்துகிட்டா ஒரு சிலர் அவங்க அம்மாவை நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டு பாசமா நடந்துப்பாங்க, இன்னொரு கேட்டகிரி இருக்குது என்ன தான் அம்மா பாசமா நடந்துக்கிட்டாலும் எதையும் கண்டுக்காம அம்மாவோட கஷ்டம், நஷ்டம், பாசம் புரியாம நடந்துப்பாங்க. நான் என்னடானா இந்த மாதிரி பாசமா அவங்க நடந்துகிட்டா பயப்பட வேண்டியிருக்குது. என்னை மாதிரி ஒரு ஆள் உலகத்துல உண்டுன்னு நீ நினைக்கிற?”

“ஓ! ஏன் இல்லை? எனக்கு ஒருத்தங்களை அப்படி தெரியுமே?”

“யாரு?”

“நான் தான்”

“அது சரி. என்னோட கார்பன் காப்பி தானே நீ!”

“போன தடவை காய் வெட்டும் போது உன் விரலை வெட்டிட்டு தையல் போட்டுட்டு வந்து நின்னப்போ, உன்னை எப்படி கவனிச்சுகிட்டாங்க. நேரா நேரத்துக்கு ஜூஸ், பூஸ்ட், சூப்பு, காய்கறினு ஓடி ஒடி பார்த்தாங்களே. அதுக்கப்புறம் உனக்கு கொஞ்சம் சரியானதும் என்ன நடந்துச்சு?”

“விடுங்க பா. இப்போ எதுக்கு அதெல்லாம்?”

“இல்லமா, நடந்ததை தானே சொல்றேன். அவங்க செஞ்சதுக்கு டபுள் மடங்கு உன் கிட்டேர்ந்து எதிர்பார்த்தாங்க. எப்பவுமே அப்படி தான் அவங்க ஏதாவது நமக்கு செஞ்சா அதை விட பல மடங்கு நம்ம கிட்டேர்ந்து எதிர்பார்பாங்க. அந்த எதிர்பார்ப்பு என்னதுனே நம்மளால புரிஞ்சிக்க முடியாது. ஒருவேளை ‘நீங்க தான் என்னை பார்த்துக்கிட்டீங்க. நீங்க இல்லேனா நான் இல்லை, உங்களுக்கு நான் காலத்துக்கும் கடமை பட்டிருக்கேன்’ இந்த மாதிரி சீரியல் வசனம் பேசணும்னு நினைக்கிறாங்களா இல்லேனா செயல்ல ஏதாவது எதிர்பார்கிராங்களானு புரிஞ்சிக்கவே முடியாது. ஆனா அவங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதப்போ பூதாகரமா வெடிப்பாங்க”

“இப்போ கூட பாரு, தலைவலி வந்ததுக்கு காரணமே அவங்க தான். போன வாரம் அர்ஜுன் கல்யாணம் விஷயமா நான் அப்பா கிட்ட பேசலேன்னு கோபப்பட்டு பேசாம இருந்து என்னை எப்படியெல்லாம் கெஞ்ச விட்டாங்க. தலைவலியே அதனால தான். இப்போ வந்து உன்னால தான் எனக்கு தலைவலி வந்ததுனு சொல்றாங்க. நீ என்னமா பண்ணின?”

“ஹலோ! இந்த டைலாக் எல்லாம் நான் தான் பேசி டென்ஷன் ஆகி கத்தனும். நானே ஜாலியா தான் இருக்கேன். உங்களுக்கு இருக்கிற டென்ஷன் பத்தாதா? லெஸ் டென்ஷன் மோர் ஜாலி” தர்மனுக்கு இருக்கும் மன அழுத்ததில் ஒரு துளி கூட அதிகரிக்கக் கூடாது என்பதே தினம்தோறும் அவளின் வேண்டுதல். அதை சார்ந்தே அவளின் பேச்சுகளும்  செயல்பாடுகளும் இருக்கும். 

மனித மனமே எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழிகிறது. மற்றவர் மேல் வைக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகும் போது அங்கே நம்பிக்கை பொய்க்கிறது. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஊசற்கட்டையில் எதிரெதிரே ஆடும் இரு வேறு மனித இயல்புகளாகும். 

பத்மஜாவின் ஆதி அந்தமான குணம் இப்படியான ஒரு பூர்த்தியாகாத எதிர்பார்ப்பினால் விளைந்த அவநம்பிக்கையே ஆகும்…..அவரது எதிர்பார்ப்புகளும் தீராது…….அவநம்பிக்கையும் குறையாது…….    

  

  

Advertisement