Advertisement

“என்னால முடியலைமா! என்னால ரசிக்க முடியல. சிலருக்கு அவங்க ஊர்ல கடல் இருக்காது. எப்பவாச்சும் ஒருக்க தான் கடல் பார்பாங்க. அவங்களுக்கு அந்த கடல் ஒரு பெரிய ஆச்சரியம், அதிசயம்! அவங்க கடலை ஆராதிப்பாங்க! ஆனால் கடல் இருக்கிற ஊர்ல பிறந்து வளர்ந்தவங்களுக்கு அது ஒரு பொருட்டாவே தெரியாது. அதை தூக்கிக் கொண்டாட மாட்டாங்க. அதே மாதிரி தான் எனக்கும். சின்ன வயசுலேர்ந்து இந்த வீட்டு பிரச்சனைங்கிற அலை சத்தத்தை கேட்டு கேட்டு என் காது சலிச்சு போச்சு. என்னால அதை ரசிக்க முடியல”

அவன் கண்களில் ஒரு துளி நீர் கோர்த்தது.

“ஹலோ பீன் பேக்! என்ன இது சின்ன புள்ளை தனமா? ஷேம் ஷேம் பப்பி ஷேம்! நீங்க ஒரு அன்டர்டேக்கர், அண்டர்வோர்ல்ட் டான், அந்நியனோட அக்கா பையன்னு நினைச்சா நீங்க இப்படி அம்பியா இருக்கீங்களே?”

கெத்தென்ற ஒரு சிரிப்பு கீற்று வந்தது அவனிடமிருந்து!

“ஹேய் ஜெல்லி மிட்டாய்! நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். நீ மட்டும் தான் என் வாழ்க்கையில நடந்த ஒரே நல்ல விஷயம்”

“நானும் அந்த துக்க சம்பவத்தை மறக்கணும்னு நினைச்சா, நீங்க மறுபடியும் மறுபடியும் அதையே நியாபக படுத்துறீங்களே. என்ன செய்ய?”

“அடி கழுதை. உன்னைய பேச விடுறதே தப்பு”

அவன் படுத்தபடியே அவள் கழுத்தை சுற்றி கைகளை போட்டு அவளை அவன் புறம் இழுக்க, 

“அய்யோ அத்தை வந்துட்டாங்க”

பட்டென்று எழுந்து நின்றான் தர்மன், “மம்மி!”

அறை வாசல் வரை சென்று பார்க்க அங்கே யாரும் இல்லாமல் திரும்பி சுசித்ராவை பார்த்து முறைத்தான். அவள் அரண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

“என் நிலைமை உனக்கெல்லாம் சிரிப்பா போச்சுல”

“துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லி திருவள்ளுவர் சொல்லியிருக்காரு”

“அவருக்கு இந்த மாதிரி அப்பா, அம்மா இருந்திருக்க மாட்டாங்க. அதனால அவரு ஈசியா சொல்லிட்டாரு”

“திரும்ப திரும்ப பேசுற நீ”

“என்னை பேச வைக்கிறாங்கமா. இன்னும் அடுத்து என்ன பிரச்சனை கிளம்பியிருக்கு தெரியுமா? அர்ஜுன் கல்யாண செலவு. மம்மி சொல்றாங்க ஊரே மூக்கு மேல விரல் வைக்குற மாதிரி கிராண்டா கல்யாணம் பண்ணனுமாம். அதுக்கு எப்படியும் ஒரு எட்டு, ஒன்பது லட்சம் செலவாகும். உங்க அப்பாவோட ரிட்டயர்மன்ட் காசு அப்படியே தானே இருக்குது. அதை கொஞ்சம் கொடுக்கச் சொல்லுனு இவங்க, அந்த பணத்தை பத்தி எத்தனை தடவை தான் சொல்லி சொல்லி காட்டுவாங்களோ தெரியல. அப்பா சொல்றாரு, எதுக்கு அவ்ளோ கிராண்டா கல்யாணமெல்லாம், சிம்பிளா கோவில்ல வச்சு பண்ணினா போதும்ன்னு சொல்றார். சும்மானா கூட அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு. இவங்க கிராண்டா பண்ணனும்னு சொல்லிட்டாங்கனு ஒரே காரணத்துக்காக அவரு ஓவரா இறங்கி கோயில் வரைக்கும் போய்ட்டாரு. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ?”

“அப்புறம் பேசலாம் பா. அர்ஜுன் வந்துட்டான் பாருங்க”

உள்ளே நுழைந்த அர்ஜுன் மாடியில் உள்ள தன்னறைக்கு செல்ல எத்தனிக்க, 

“அர்ஜுன்! சாப்பிட வா அர்ஜுன்”

“இல்லை அண்ணி! எம்.எல்.ஏ வீட்லேயே சாப்பிட்டுட்டேன். இன்னைக்கு அங்க மட்டன் பிரியாணி”

“ஓ! சரி அர்ஜுன்”

அவன் மேலே ஏறியபின் சுசித்ரா பெருமூசெரிந்தாள், 

“அர்ஜுன்க்கு பிடிக்குமேனு தான் மீல்மேக்கர் போட்டு பிரியாணி செஞ்சேன். ம்ம்ச்…..இன்னைக்கு அத்தைக்கு கேம்ப், வெளிய சாப்பிட்டுடுவாங்க. மாமாவும் வெளிய சாப்பிடுறதா சொன்னாங்க. நீங்களும் நானும் புள்ளைங்களும் மட்டும் தான். அர்ஜுன் சாப்பிட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா ஏதாவது சிம்பிளா செஞ்சிருப்பேன். இட்ஸ் ஆல் ரைட். அரசியல்ல இதல்லாம் சாதாரணம்பா. நான் போய் வேலையை பார்க்கிறேன். நீங்க எதையும் போட்டு குழப்பிக்காம வேலையை பாருங்க” ஒரு மின்னல் சிரிப்பை மின்னிவிட்டு தன்னை தாண்டிச் சென்றவளின் கையை பிடித்தான் தர்மன்.

“சுச் மா! உனக்கு ஏதாவது வேணுமா கேளுமா?”

“எனக்கா? ஆஹா! சுச்சி, இந்த நல்ல வாய்பை விட்டுடாதடீ. ஏதாவது பல்க்கா கேட்டுடு”

“நான் விளையாட்டுக்கு சொல்லலைமா. சீரியஸா உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு, வாங்கி தரேன்”

“ஹ்ம்ம். சொன்னதுக்கப்புறம் பேக் அடிக்கக் கூடாது”

“மாட்டேன் சொல்லு”

“நிஜமா சொல்லிடுவேன்”

“சொல்லுடிங்கிறேன். சும்மா சீன் ஓட்டிட்டு”

“ரொம்ப பெரிய ஆசையெல்லாம் இல்லை. நான் சின்ன வயசுலேர்ந்து அவ்வளவா எங்கேயுமே டூர் போனதில்லை. அப்பா வேலை வேலைன்னு இருப்பாங்க. சோ கூட்டிட்டு போக மாட்டாங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல கூட எங்கேயும் போனதில்லை. அப்புறம் நான் வேலைல ஜாயின் பண்ணிட்டேன், கல்யாணம் பண்ணினேன் அப்படியே வாழ்க்கை ரேஸ் மாதிரி ஓடி போச்சு. இதெல்லாம் உங்களுக்கே தெரியும். ரொம்ப பெருசா வேண்டாம். சும்மா இங்ஙனக்குள்ளேயே ஏதாவது ஒரு இடத்துக்கு, சும்மா ஒரு ட்ரிப் போகணும் முக்கியமான விஷயம் நீங்க, நான் புள்ளைங்க மட்டும், இது நான் உங்களை கம்பெல் பண்ணலை. நம்ம வீட்ல இது நடக்கிறது ரொம்ப கஷ்டம்னு எனக்கு தெரியும். உங்களுக்கு வேண்டாம்னு வேண்டாம். ஆஸ் யுசுவல் நான் என் வேலையை பார்த்துட்டு போய்டுவேன்”

“அதெல்லாம் முடியாது. நான் கொடுக்கிறதுல கர்ணன் மாதிரி. கண்டிப்பா நீ கேட்டதை கொடுப்பேன்” 

“சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டை சாமி. நான் தலை கீழாக தான் குதிப்பேன்ங்றீங்க. உடைய போறது உங்க மண்டை தான். யோசிச்சிக்கோங்க”

“நோ! இந்த தடவை நான் ரிஸ்க் எடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன்”

“அதையும் பார்ப்போம்”

————————————————————————————————————————————–

“பார்க்கலாம் சார். நீங்க கேட்டா உடனே பண்ணிட முடியுங்களா? அததுக்குனு ரூல்ஸ் இருக்குல?!”

“இல்லைங்கம்மா! இந்த காசுக்காகத்தேன்மா காத்து கிடக்கோம். இது கிடைச்சா தான்மா இந்த வருஷம் அறுவடை, வீட்ல ஆறு உசுரு சாப்பாடில்லாம கிடக்குது மா”

“எனக்கு புரியுது. நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க? சீனியாரிட்டி படி தானே வர முடியும். உங்க பேர் வந்ததும் வந்து உங்க நிலத்தை பார்த்துட்டு பணத்தை கொடுக்க போறோம்”

“இதே தான் மா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க. எனக்கு பின்னாடி வந்தவெனல்லாம் வாங்கிட்டானேமா. அது எப்படிங்கமா?”

“என்னையா ஒரு ஆபீசர்னு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. ஃபைல்ல என்ன இருக்கோ அந்த ஆர்டர்ல நாங்க போக முடியும். உங்களுக்கு பின்னாடி வந்தவனுக்கு நாங்க கொடுத்துட்டோம்னு நீங்க வந்து பார்த்தீங்களா? அதுக்கு உங்க கிட்ட ஃப்ரூப் இருக்கா? அப்படினா என்ன நாங்க லஞ்சம் வாங்குறோம்னு சொல்ல வரீங்களா? பேசுறதை கொஞ்சம் யோசிச்சு பேசுங்க. அப்புறம் வேற மாதிரி ஆயிடும் பார்த்துக்கோங்க”

“அய்யோ அம்மா! மன்னிச்சுடுங்க மா. ஏதோ மானியம் கிடைக்காதோனு ஒரு பயத்துல கொஞ்சம் குரலை உசத்தி பேசிட்டேன். மனசுல வச்சிக்காதிங்க மா. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மா”

“பார்க்கலாம்ங்க. இனிமே நீங்க போன் பண்ணாதீங்க. நானே பண்றேன்”

“சரிங்கம்மா”

“வந்துட்டானுங்க நம்ம கழுத்தை அறுக்கிறதுக்குன்னே” அந்த பெரியவரை முடிந்தவரை தாளித்துவிட்டு தர்மனுக்கு போன் போட்டார் பத்மஜா.

“கண்ணு! சாப்பிட்டியா கண்ணு?”

“சாப்பிட்டேன் மம்மி”

“நானும் டெய்லி காலையிலேயே கிளம்பிடுறேன். நீ சரியா சாப்பிடுறியா என்னனு கூட கவனிக்க முடியுறதில்லை. காலையில, சாயந்திரம் ரெண்டு நேரம் ஜூஸ் குடி கண்ணு. அவ சும்மா தானே இருக்கா, ஜூஸ் போட்டு தர சொல்லு. நான் வரும்போது மூணு கிலோ பழம் வாங்கிட்டு வரேன்”

“சரி மம்மி!”

“உன் மூஞ்சியே விழுந்து போய் இருக்குது கண்ணு. நல்ல சாப்பிடு. பெங்களூர்ல என்ன தான் சாப்பிட்டியோ தெரியல”

“———-“

“எக்சர்சைஸ் எல்லாம் பண்றியா இல்லையா?”

“பண்ண ஆரம்பிக்கணும் மம்மி”

“அந்த எக்சர்சைஸ் சைக்கிள் தான் ஒன்னுக்கு ரெண்டு இருக்கே, அதை ஒட்டு கண்ணு”

“ஒகே மம்மி!”

“ஹெல்த்தை பார்த்துக்கோ கண்ணு. எப்ப பாரு புள்ளைங்க புள்ளைங்கனு ஓடி ஓடி உன் உடம்பை பார்த்துக்காம விட்டுடாத”

“சரி மம்மி!”

“அடுத்த வாரம் உன் பொண்டாட்டிக்கு பர்த்டே வருதுல. மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு டிரஸ் எடுத்துட்டேன். அப்படியே அவளுக்கு சின்னதா ஒரு செயின் எடுத்துடலாம். இந்த வீக்கென்ட் வா கடைக்கு போய் எடுத்துடலாம்”

“ஹ்ம்ம். சரி மம்மி”

“பேசினியா, உங்க அப்பா கிட்ட?”

“மம்மி! வேலை கொஞ்சம் டைட்டா இருக்குது மம்மி. கல்யாணமே இன்னும் முடிவாகலையே மம்மி. இன்னும் மூணு மாசம் கழிச்சுனு தானே முடிவாயிருக்குது. அப்போ கல்யாணம் கிராண்டா பண்ணனுமா, சிம்பிளா பண்ணனுமானு பேசிக்கலாமே. இப்பவே இதை பத்தி பேசணுமா மம்மி?”

“சரிப்பா! நீ உன் பொண்டாட்டி, புள்ளைங்க, வேலைன்னு மட்டும் பார்த்துட்டு நிம்மதியா இரு. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் தான். என் மேல தான் தப்பு. நம்ம மூத்த புள்ளை எல்லாத்தையும் பார்த்துப்பான்னு நம்பினேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கணும். நீ உன் வேலையை பாருப்பா. நானே பார்த்துக்கிறேன்” 

பட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

தர்மன் திரும்ப திரும்ப தன் தாயிடம் பேச முயல, அழைப்பு துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது, அவன் வாழ்க்கையை போல…..  



 

 

Advertisement