Advertisement

“அம்மா! உன் புருஷன் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை”

“மரியாதையா பேசு”

“புள்ளைங்க மட்டும் தான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு இல்லை, பெத்தவங்களும் புள்ளைங்களுக்குள்ள மரியாதை தரனும் தானே?”

“சரி! இனிமே உன்னை வாங்க சார், போங்க சார் என்னங்க சார்னு பேச சொல்றேன்”

“மரியாதைங்கிறது வார்த்தைல மட்டுமில்லைமா. செய்யுற செயல்ல இருக்குது”

“அப்படி என்ன செயல் செஞ்சிட்டாரு அவரு?”

“எனக்கு இந்த வீட்ல என்னைக்காவது மூத்த புள்ளைங்கற மரியாதை கிடைச்சிருக்கா? என்னமோ அந்த அர்ஜுன் தான் மூத்த புள்ளை மாதிரி அவனை தலையில தூக்கி வச்சு ஆடுறார். இந்த தடவை அவனுக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் பதவி தராராம். அதுக்கு அவனுக்கு என்ன தகுதி இருக்குது? யாரு அவன்? மழை பெய்யுறப்போ வர தும்பி மாதிரி அவன்! என்னை பின்னாடி தள்ளிட்டு எல்லா விஷயத்திலும் அவனுக்கு முன்னுரிமை கொடுத்தா அப்புறம் எனக்கு என்ன மரியாதை?”

“போன வருஷம் உன்னை உட்கார வச்சு, அவரோட அரசியல் வாரிசா நீ வரதுக்கு உனக்கு விருப்பம் இருக்கானு கேட்டதுக்கு நீ என்ன சொன்ன?”

“அது அப்போ இருந்த மனநிலை அப்படி, அதுக்காக அவனை….”

“நீ என்ன சொன்னேனு கேட்டேன்?”

“எனக்கு அரசியல் செட் ஆகாது. நான் பிசினஸ் தான் பண்ண போறேன்னு சொன்னேன்”

“அதுக்கப்புறம் தானே அவரு எல்லா விஷயத்திலும் அர்ஜுனை இன்வால்வ் பண்ணினார்?”

“சரி! அப்போ தம்பியை அரசியல்ல கொண்டு வரட்டும். அந்த அர்ஜுன் யாருமா? அவன் என்ன நமக்கு ரத்த சமந்தமா?”

“அப்பா பண்ணினா அது கரெக்டா தான் இருக்கும். ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அவரு அர்ஜுனை கூடவே வச்சிருக்காரு. அவனும் சும்மா இல்லை, யாரை எங்க எப்படி புடிச்சா எப்படி காரியம் நடக்கும்னு தெரிஞ்ச பையன். நல்ல யோகக்காரன். டக்குனு எல்லாரையும் அவன் பக்கம் இழுத்துடுறான். அதுவும் கூட அவனை கூடவே வச்சிக்க ஒரு காரணமா இருக்கலாம். அதுக்காக அவன் உன்னை விட பெரியவன் ஆயிட முடியுமா? நம்ம வீட்ல பூஜை ரூம்ல இருக்கிற கப்போர்ட்டும் சரி, வெளியில இருக்கிற செருப்பு ஸ்டாண்டும் சரி உங்க அப்பா பார்த்து பார்த்து டிசைன் பண்ணினாரு. ரெண்டும் ஒரே விலை தான் ஆச்சு. அதுக்காக செருப்பு ஸ்டாண்டை தூக்கி பூஜை அறைல வச்சிட முடியுமா? அர்ஜுனோட இடம் எது, உன்னோட இடம் எதுன்னு நீ முதல தெளிவா புரிஞ்சிக்கோ”

“நீ சொல்றதெல்லாம் சரி தான் மா. ஆனா அப்பா அவனை புகழ்ந்து பேசும்போது அப்படியே நெஞ்சுல மிளகாயை அரைச்சு தடவுன மாதிரி எரியுது”

“உங்க அப்பா பரம்பரை அரசியல்வாதிடா. பேசுறது அவருக்கு சொல்லியா கொடுக்கணும்? அவரு பேசறதெல்லாம் உண்மையான அன்புனால நினைக்கிறவன் தான் அதி ஆர்ப்பாட்டமான முட்டாளா இருப்பான், அர்ஜுன் மாதிரி”

“இதுல என் அருமை தம்பி வேற அவன் கூட செட் சேர்ந்துட்டு சுத்துறான்”

“அவன் இந்த வீட்ல தப்பி பிறந்த அம்மாஞ்சி. இன்னும் அவனுக்கு நல்லது கெட்டது புரியுற வயசு வரலை. போக போக அவனே புரிஞ்சிப்பான். தேவையில்லாம இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம உன் வேலையை போய் பாரு”

எம்.எல்.ஏ வின் மனைவி தன் மூத்த மகனை சமதானப்படுத்திவிட்டு நகர்ந்த அதே சமயம், வீட்டின் வெளியே அர்ஜுனின் புல்லட் வந்து நின்றது.

“அண்ணி!”

“அட! அர்ஜுன் வாப்பா! உனக்கு நூறாயுசு. இப்போ தான் உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தேன். நீயே வந்து நிக்குற?”

“என்னை பத்தியா?”

“ஆமா! இந்த சின்ன வயசுல எவ்ளோ பொறுப்பா நடந்துக்கிற. உனக்கு இருக்கிற திறமைக்கு அரசியல்ல உனக்கு பெரிய எதிர்காலம் காத்துட்டு இருக்குனு சொல்லிட்டே இருந்தேன், நீ வந்து நிக்குற”

“அட போங்க அண்ணி, சும்மா கிண்டல் பண்ணாதீங்க”

“நிஜமாத்தான் அர்ஜுன்”

“எல்லாம் அண்ணன் தயவு தான் அண்ணி. வேற என்ன சொல்ல? அவரு தான் என்னோட பிதாமகர்”

“உன்னோட பிதாமகர் எங்கேயோ கிளம்பிட்டு இருக்காரு. சீக்கிரம் போய் அவரு முன்னாடி நில்லு. உன்னை பார்த்துட்டு போனா தான் போகுற காரியம் கைவரும்னு சொல்வாரு”

“சரி அண்ணி நான் போய் பார்க்கிறேன்”

“ஆங்! அர்ஜுன் இன்னைக்கு நம்ம வீட்ல தான் மதிய லஞ்ச். உனக்கு புடிச்ச மட்டன் பிரியாணி”

“சரி அண்ணி! ஒரு கை பார்த்துடுறேன்”

அர்ஜுன் எம்.எல்.ஏவின் அறைக்கு செல்ல, எம்.எல்.ஏ மனைவியும், அவர் மூத்த மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“அண்ணா!”

“வாங்க அர்ஜுன் எம்.பி. என்னது இது வர டைம்மா? நானே ரெடி ஆயிட்டேன் இன்னைக்கு தருமபுரி டவுன்ல கேன்வாசிங். நீ இல்லாம எப்படி?” ”

“சாரிண்ணன் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வாங்க போகலாம்”

“சாப்பிட்டுட்டு போகலாம்”

“நான் சாப்பிட்டேன் ண்ணன். நீங்க சாப்பிடுங்க”

எம்.எல்.ஏ சாப்பிட்டு கொண்டிருக்க, அர்ஜுன் அவர் பின்னால் நின்றான், அவன் அலைபேசி ஒலிக்க, அதில் இம்சை என்று ஒளிர்ந்தது

நெற்றியை தடவியபடி அலைபேசியை அணைத்து பேன்ட் பாக்கட்டில் சொருகினான்.

மறுபடியும் ஒருமுறை அலைபேசி ஒலிக்க, அர்ஜுன் உச்சுக்கொட்டினான்.

“என்னபா அர்ஜுன்? போன் அடிச்சிட்டே இருக்குது? ஏதாவது பொண்ணா?”

“அய்யோ அண்ணன் அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“சும்மா சொல்லு பா. நேத்து போய் பொண்ணு பார்த்தியே? நீயே ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தா ஒன்னும் சொல்லலை. என்ன விஷயம்?”

“ஆமா அது ஒரு விஷயம்னு உங்க கிட்ட சொல்ல வேற சொல்லனுமா? போங்க அண்ணன்”

“ஏண்டா என்ன ஆச்சு? பொண்ணு புடிக்கலையா?”

“தெரியல”

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு திரும்பி அவன் முகத்தை பார்த்தார்.

“அண்ணன்! நேத்து போய் பொண்ணு பார்த்தோம். மூணு மாசம் கழிச்சு கல்யாணம்னு முடிவு பண்ணியாச்சு. அவ்ளோ தான் வேற ஒண்ணுமில்லை”

“என்னடா இவ்ளோ பெரிய விஷயத்தை ஏதோ சாதாரணமா சொல்ற? சரி விடு! அந்த போனை எடுத்து பேசு”

அர்ஜுன் வெளியில் வந்து அலைபேசியை எடுத்து காதில் ஒற்றினான்.

“எதுக்கு இப்படி கூப்பிட்டுட்டே இருக்க?”

“இந்த ஹலோ, ஹாய், எப்படி இருக்க, சாப்பிட்டியா? இந்த மாதிரியெல்லாம் பேச தெரியாதா இல்லை வராதா?”

“இங்க பாரு. நான் இப்போ வேலையா இருக்கேன். என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு”

“ஹ்ம்ம் எங்க வீட்ல இன்னைக்கு நான் இட்லிக்கு இட்லி போடி தொட்டு சாப்பிட்டேன். அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”

“ரியலி இரிட்டேட்டிங்! நான் சொல்றது உனக்கு புரியலையா? நான் இப்போ வேலையா இருக்கேன்”

“ஒகே ஒகே கூல்! நீங்க எனக்கு இன்னைக்கு நைட் கால் பண்றேன்னு சொல்லுங்க நான் இப்போ உங்களை டிஸ்டர்ப் பண்ணாம போனை வச்சிடுறேன்”

“சரி! பண்றேன் போதுமா?”

“ஹ்ம்ம்! சீ யு! ஹேவ் அ நைஸ் டே”

அலைபேசியை அணைத்தவன் காற்றில் ஓங்கி ஒரு குத்து குத்திவிட்டு கோபத்தை சுமந்து உள்ளே சென்றான்

———————————————————————————————————————————-

தர்மன் தன் அறையில் படுத்திருக்க, சமையலறையிலிருந்து வந்த சுசித்ரா அவனை பார்த்து புருவம் சுருக்கினாள். 

“அப்பா! என்னாச்சு பா? ஆபிஸ் இல்லையா? படுத்து இருக்கீங்க? இன்னைக்கு நிறைய கால்ஸ் இருக்குதுன்னு சொன்னீங்க”

“இன்னைக்கும் தலைவலிக்குது மா. ரொம்ப டென்ஷனா இருக்குது. ஆபிஸ் வொர்க் வேற எக்கச்சக்கம் சேர்ந்து போச்சு. நேத்து அர்ஜுன்க்கு பொண்ணு பார்க்க போறதுக்கு லீவ் போட்டேன்ல. அதுக்கு சேர்த்து இன்னைக்கு எக்கச்சக்க வொர்க். மேனேஜர் காரி மட்டும் தான் துப்பலை. இதுல வேற எங்க ப்ராஜெக்ட் ஹெட், அதான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே கேரலின்னு ஒருத்தங்க. அவங்க என்னையவே டார்கட் பண்ணுறாங்க. நான் செஞ்சாலே செய்யலனு சொல்லுவாங்க, இதுல இந்த கடை வேலைக்காக அலைஞ்சது லீவ் போட்டது, அர்ஜுன் விஷயமா லீவ் போட்டது எல்லாம் வேலையை பிளாக் பண்ணிடுச்சு, அப்படியே என் மேனேஜர் கிட்ட என்னை பத்தி ஒரே கம்ப்ளையின்ட். இதெல்லாம் போதாதுனு நேத்து ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடியல”

“இவங்க என்னடானா “உங்க அப்பாவுக்கு அறிவே கிடையாது, பொண்ணோட அப்பா சீக்கிரம் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொன்னதும் சரின்னு உடனே மண்டையை ஆட்டுறாருனு” சொல்லி கத்துறாங்க. அவரு என்னடானா, “சபைல அவ்ளோ பேர் முன்னால வச்சு நான் ஒன்னு பேசுனா அவ ஒன்னு பேசுறா? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? எனக்கு என்ன மரியாதை இருக்குதுனு நினைப்பாங்களா மாட்டாங்களானு?” இவரு கத்துறாரு”

“காலைலேர்ந்து ஆபீஸ் வேலை பார்த்ததை விட இவரு சொன்னதை இவங்க கிட்ட சொல்லி, இவங்க சொன்னதை அவரு கிட்ட சொல்லினு மீடியேட்டர் வேலை தான் பார்த்துட்டு இருக்கேன். தலை பயங்கரமா வலிக்குது”

படுக்கையில் அமர்ந்து அவன் தலையை தூக்கி மடியிலிட்டு, இதமாய் பிடித்து விட்டாள்.

“பெண்டிங் வச்சிருக்கிற வேலை எல்லாம் ஒன்னொன்னா எடுத்து முடிங்க. உங்க மேனேஜர் கிட்ட முதல ஃப்ரியா பேசுங்க. உங்க டிஃபிகல்டீசை தெளிவா சொல்லிடுங்க. கொஞ்சம் டைம் கேளுங்க. நீங்க வேலையை முடிச்ச பின்னாலும் உங்க ப்ராஜெக்ட் ஹெட் உங்களை பத்தி ஏதாவது தப்பா சொன்னா, உங்க மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுங்க”

“அப்புறம் வீட்டு பிரச்சனை……..ஹ்ம்ம்…..அது கடலலை மாதிரி, ஓய்வே கிடையாது. கடல்ல கால் நனைகிறப்போ உங்க காலுக்கு கீழே இருக்கிற மண்ணு அரிச்சிட்டு போகும். அப்போ ஒரு குறுகுறுப்பு வரும். சில சமயம் உங்களால நிக்க முடியாம தடுமாற்றமா இருக்கும். அப்போ கொஞ்சம் தள்ளி நிற்போம். அதையும் மீறி அந்த குறுகுறுப்பை, அந்த அலைகளோட சத்தத்தை, அது நம்ம பாதத்துல வந்து மோதுற ஜிலுஜிலுப்பை ரசிக்கிற மாதிரி, இதையும் ஏதோ ஒரு வகையில ரசிச்சிட்டு கடந்து போய்டணும்”

Advertisement