Advertisement

“அப்பா! மம்மி! ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் நம்மளை தான் பார்கிறாங்க”

“அதை அந்தாளு கிட்ட சொல்லு”

“அவ கிட்ட சொல்லு. நான் என்னாச்சுனு தானே கேட்டேன்? அவ தான் ஓவரா பேசுறா. தூக்கி அடிச்சிடுவேன்” 

“என்னாச்சுங்க? ஏதாச்சும் பிரச்சனையா?” வெகு நேரமாக இவர்கள் ஐவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் தந்தை குரலில் தீவிர கலவரம். 

“அதெல்லாம் ஒன்னுமில்லேங்க. சும்மா அப்படியே பேசிட்டு இருந்தோம். எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்குது. மேற்கொண்டு பேசலாங்க. என்ன பத்து, நான் சொல்றது கரெக்ட்டு தானே”

“ஆங்! ஆமாங்க! அடுத்து என்னனு பேசலாங்களே”

“ரொம்ப சந்தோஷம்ங்க. எங்களுக்கு என்ன தோனுதுனா, கொரோனா ஜாஸ்த்தி ஆகுதுங்கிறாங்க. போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் லாக்டவுன் போட வாய்பிருக்குங்கிறாங்க. அதுக்கு முன்ன கல்யாணத்தை முடிச்சிடுவோம். என்ன சொல்றீங்க?”

“நீங்க சொல்றபடியே சீக்கிரம் செஞ்சுடுவோம்” மலயனாதன் ஒப்புதல் கொடுக்க, பத்மஜா அவரை ஒரு தீ பார்வை பார்த்தபடி பெண்ணின் தந்தையிடம்,

“அது எப்படிங்க? சீக்கிரமே பண்ணனும்னா ஏற்பாடெல்லாம் பண்ணனுமே? எங்க வீட்ல இது கடைசி கல்யாணம். ரொம்ப கிராண்டா பண்ண யோசிச்சிருக்கோம். அவசர அவசரமா செஞ்சுட்டு பின்னாடி வருத்தப்பட கூடாதுங்களே?”

“எங்களுக்கும்  எங்க பொண்ணு கல்யாணம் நல்ல பெருசா பண்ணனும்னு ஆசைதாங்க. தடபுடலா பண்ணலாம் தான். ஆனா சூழ்நிலையும் பார்க்க வேண்டியிருக்குதுங்களே? முடிஞ்ச அளவு அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணத்தை வச்சுகிட்டா நல்லதுன்னு தோணுது. கிராண்டா பண்ணுறதை பத்தி பிரச்சனையே இல்லை. அது ஜமாய்ச்சுடலாம்”

பத்மஜாவும், மலயனாதனும் ஒரே சமயத்தில் பதில் கூற முன் வர, அர்ஜுன் அவர்களை முந்தினான்.

“இல்லங்க! அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கல்யாணம் மூணு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம். அடுத்த மாசம் எலெக்ஷன் வருது. எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது. எலெக்ஷன் முடியட்டும் பார்த்துக்கலாம்”

பெண்ணின் தந்தை தன் மனையாளை ஒரு சங்கட பார்வையுடன் எதிர்கொள்ள, அவர் தலையசைத்து தன் ஒப்புதலை வழங்கினார்.

“சரிங்க மாப்பிளை! நீங்க சொன்ன மாதிரியே மூணு மாசம் கழிச்சே கல்யாணத்தை வச்சிகலாம். கல்யாணத்துக்கு முந்தின நாள் நிச்சயம் வச்சிக்கலாம்”

அடுத்தடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகளை பற்றி கலந்தாலோசித்தபின் தாம்பாளம் மாற்றிக் கொள்ளப்பட, மலையனாதன் குடும்பத்தார் கிளம்பினார்

“அர்ஜுன்! பொண்ணு கிட்ட சொல்லிட்டு வாடா”

இரும்பு கதவை பிடித்தபடி அர்ஜுனை பார்த்துக் கொண்டிருந்த யக்ஞாவின் பக்கத்தில் வந்தான் அர்ஜுன்.

“நான் வரேன்”

“ஏன் அப்படி சொன்னீங்க?”

“ஹ்ம்ம்….எப்படி சொன்னேன்?”

“இல்லை, கல்யாணம் மூணு மாசம் கழிச்சுனு சொன்னீங்களே அதான் கேட்டேன்”

அவளை ஒரு வெட்டும் பார்வை பார்த்தவன், “அடுத்த மாசம் எலெக்ஷன் வருது”

“நீங்க எலெக்க்ஷன்ல நிக்க போறீங்களா?”

“ஆங்…என்னது? ப்ச்! லூஸ்…..அதெப்படி நான் நிக்க முடியும்?! எம்.எல்.ஏ அண்ணன் எனக்கு தெரியும்னு சொன்னேனே, அவரு கூட சேர்ந்து கொஞ்சம் வேலை இருக்கும். அதான் எலெக்ஷன் முடிஞ்சப்புறம் வச்சிக்கலாம்னு…”

“அப்படி இருந்தாலும் அடுத்த மாசம் எலெக்ஷன் முடிஞ்சிடுமே? எதுக்கு மூ….னு…..மா….ச…..ம்……”

“உப்ப்…..இப்போ என்ன உன் பிரச்சனை? ஏன் மூணு மாசம் கழிச்சினா என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? அப்படி உனக்கு கஷ்டம்னா இந்த கல்யாணம் வேண்டாம்னு உங்க வீட்ல சொல்லிடு”

”தேங்க்ஸ்”

“என்னது?”

“என்னை வா போனு கூப்பிட்டு பேசினதுக்கு தேங்க்ஸ். மூணு மாசம் கழிச்சும் ஒகே தான்”

“சரி, நான் வரேன்”

“ஒரு நிமிஷம்! உங்க போன் நம்பர் அப்புறம் உங்க ரிங் நம்பர்?”

“கம் அகேயின்! போன் நம்பர் சரி, அதென்ன ரிங் நம்பர்?”

“ரிங் நம்பர் அதாவது உங்க மோதிர அளவு என்ன? ஏன்னு மட்டும் கேட்டுடாதீங்க. நான் ஒரு ஓட்ட வாய். சஸ்பென்ஸ் மெய்ண்டெயின் பண்ண தெரியாது. ஏதாவது உளறிடுவேன்”

“என் போன் நம்பர் 9xxxxxxxxxx. ரிங் நம்பரெல்லாம் எனக்கு தெரியாது. இந்தா என் மோதிரம் நீயே வச்சிக்கோ”

மோதிரத்தை கழற்றி அவள் கைகளில் திணித்தவன் திரும்பி பார்க்காமல் வண்டியில் ஏற, அவனை பார்த்தபடியே மோதிரத்தை தன் விரல்களில் மாட்டிய யக்ஞாவின் இதழ்கிடையில் ஒரு புன்னகை சிக்கி சின்னாபின்னமானது!

“ஏன் கண்ணு? பொண்ணு கிட்ட பேசினியா?”

“ஆமா மம்மி”

“இல்லை, ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தியே அதான் கேட்டேன்”

“சும்மா பேசினேன் மம்மி”

“இல்லை கண்ணு! போயிட்டு வரேன்னு பேச இவ்ளோ நேரமா? வேற எதுவும் கேட்டுச்சா? போன் நம்பர் வாங்கினியா?”

அர்ஜுன் தலையை அழுந்த தேய்த்து விட, தர்மன் தாயின் காதில் மெல்ல, “மம்மி! விடுங்க மம்மி! அவங்க பேசுறது அவங்க பெர்சனல்”

“என்னடா? அவன் பெர்சனல்ல நான் தேவையில்லாம மூக்கை நுழைக்கிறேனு சொல்றியா? அந்தளவுக்கு மேனர்ஸ் தெரியாதவளா நான்? என் படிப்பென்ன, பதவியென்ன? ஒரு எஞ்சினியரிங் டிகிரி முடிச்சிட்டு ஏ.ஈ.ஈ இருக்கிற எனக்கு இது தெரியாது?! அவ்ளோ கூறு கெட்டவளா நான்? என் கிட்ட நீ பேசுற லட்சணம் இது தானா? என்ன மரியாதை கத்து வச்சிருக்கிற நீ?”

தர்மனின் மறுபக்கத்தில் அமர்ந்திருந்த சுசித்ரா தர்மனின் கைகளை மறைவாய் பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள். அவள் கண்களும், கைகளும் ஆயிரம் செய்திகளை தர்மனுக்கு கடத்தியது.

“மம்மி! ப்ளீஸ் மம்மி ஆரம்பிச்சுடாதீங்க. எரிச்சலா வருது. இதுக்கு தான் இந்த பொண்ணு பார்க்கிறது, புடலங்காய் பார்க்கிறது எதுவும் வேண்டாம்னு சொன்னேன். என்னை இழுத்துட்டு வந்திட்டு சும்மா நொய் நொய்னுட்டு” அர்ஜுன் எரிந்து விழ, பத்மஜா பதறினார், “சரி கண்ணு! நீ டென்ஷன் ஆகாத”

“ஏன்பா கொஞ்சம் அவளை வாயை மூடிட்டு சும்மா இருக்க சொல்லுப்பா தர்மா! அவனே இருந்து இருந்து இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கான். இவளே கெடுத்து விட்டுறுவா போல”

“யாரு? நான் அவன் வாழ்க்கையை கெடுக்கிறேனா? பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு கொஞ்ச கூட கூசாம பழிய என் மேல தூக்கி போட்டா கேட்டுட்டு இருக்க நான் என்ன கேணச்சியா?”

“அப்பா! மம்மி! இப்போ அமைதியா வரீங்களா? இல்லை நான் இப்படியே இறங்கி போகவா?”

அர்ஜுனின் கோபம் அவர்கள் சண்டைக்கு முற்றுகை போட, அதற்கு மேல் மௌனமே வென்றது.

வீட்டிற்கு சென்றடைந்தபின் தன் எண்ணிற்கு புதிதாய் ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்திருப்பதை பார்த்து அதை திறந்து பார்த்தான், 

“அழகான ஆரம்பம்….காத்திருக்கிறேன்…….

மீண்டுமொரு சந்திப்புக்கு……” 

தலையிலடித்துக் கொண்டான் அர்ஜுன். யக்ஞாவின் எண்ணை இம்சை என்று  பதிந்து வைத்தான். மறுநிமிடம் இம்சை ஸ்டேடஸ் போட்டுள்ளதாக அறிவிப்பு காட்ட அதை திறந்து பார்த்தான்.

அதில் ஒரு புகைப்படம், யக்ஞாவின் வீட்டிற்கு வெளியே அவளும், அர்ஜுனும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டதை போல இருக்க, அதற்கு பின்னணி சேர்க்க, ஒரு பாட்டு

“தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது

கர்வம் அதை ரசித்தேன்

உன்னை போல ஆண் இல்லையே

நீயும் போனால் நான் இல்லையே

நீர் அடிப்பதாலே மீன் நழுவதில்லையே

ஆம் நமக்குள் ஊடலில்லை”

தன் கண்கள் கடத்தியத்தை நம்ப முடியாமல் தன் அலைபேசியை பார்த்தவண்ணம் நின்றுவிட்டான் அர்ஜுன்.

“மச்சி! என்ன மச்சி ஏதோ பார்த்து ஷாக் ஆகி நிக்குற மாதிரி இருக்குது”

“நமக்கே தெரியாம நம்மளை யாரவது செல்ஃபி எடுக்க முடியுமா டா?”

“இம்பாசிபிள் மச்சி! போட்டோ வேணா எடுக்கலாம். செல்ஃபி எப்படி மச்சி?”

“இங்க பாரேன்”

“டேய் மாப்பிள்ளை! பார்டா புடிக்கலை புடிக்கலைனு சொல்லிட்டு அதுக்குள்ள ரெண்டு பேரும் சூப்பரா போஸ் கொடுத்து போட்டோ எடுத்துருக்கீங்க”

“இந்த போட்டோ எடுத்ததே எனக்கு தெரியாது மச்சி”

“ரைட்டு! கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. உனக்கெல்லாம் இப்படி இருந்தா தான் சரி வரும். அப்போ தான் நீ அடங்குவ”

தான் நினைத்தது போல் யக்ஞாவை கையாண்டு விட முடியாது, எந்நேரமும் காதருகே ரீங்காரமிடும் சிறு வண்டாய் அவள் இருக்கக் கூடும் என்ற உண்மை அர்ஜுன் மனதில் விடிகாலை பனி போல மெல்லிய படலமாய் தோன்றியது! 

 

Advertisement