Advertisement

சேலம் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மூன்று தளங்களைக் கொண்ட வீட்டின் முன்பு கொழு கொழு லேப்ரடார் ஒன்று கூடியிருந்த சொந்தங்களை பார்த்து வெகு நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் முன்பு வந்து நின்ற மெரூன் நிற எர்ட்டிகாவிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் மாப்பிளை அர்ஜுன் எம்.பி. அவன் பின்னால் அவனின் மித்ரன் இறங்க, அவர்கள் பின்னாலேயே கழுத்து நிறைய நகைகளுடன் பத்மஜாவும், குழந்தைகளுடன் சுசித்ராவும் இறங்கினர். காரை பார்க் செய்துவிட்டு தர்மனும், மலயனாதனும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

வரவேற்பறையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் பெண்களும், நாற்காலிகளில் ஆண்களும் அமர்ந்திருக்க, தலைக்கு தலை பேச்சு ஓடியது.

இது என்னோட மூத்த மருமக சுசித்ரா.  .டில வேலை பார்த்தா. ரெண்டாவது புள்ளை பிறக்கவும், குழந்தையை பார்த்துக்க முடியலேனு வேலையை விட்டுட்டா. வேற என்ன பண்ண? காசு பணமா முக்கியம்??!! குழந்தைங்க தானே எல்லாம்?! நானும் வேலைக்கு போறதால பேர புள்ளைய பார்த்துக்க முடியல

அதுவும் சரிதாங்க. புள்ளைங்களை விட எது முக்கியம்?!”

ஆமாங்க! ஏய் சின்ன குட்டி இங்க வாங்க இங்க வாங்க, அங்க பாரு சித்தப்பா, போ போய் .உங்க சித்தப்பா கிட்ட உக்காந்துக்கோங்க. புள்ளைங்க ரெண்டுக்கும் அவங்க சித்தப்பானா உயிரு. சின்ன நைனா சின்ன நைனானு ஆசையா கூப்பிடுங்க”

ஓ அப்படிங்களா?”

நீ காப்பி எடுத்துகிட்டியா சுச்சி பாப்பா?”

எடுத்துகிட்டேங்க அத்தை”

என் மருமக சுசித்ராவும் நானும் தாயா புள்ளையா தான் பழகுறோம். ரொம்ப ஃப்ரென்ட்லி.  பின்ன இன்னும் அந்த காலம் மாதிரி நான் மாமியார்னு தோரணையா இருக்க முடியுங்களா? புள்ளைங்க கூட நல்ல பேசி வச்சு இருந்தா தானே புள்ளைங்களும் நம்ம கூட நல்ல ஓட்டும். எங்க வீட்ல என் இரண்டு புள்ளைங்க, என் மருமக மூணு பேருக்கும் நல்ல சுதந்திரம் கொடுத்திருக்கேன்”

“அப்படியா ரொம்ப சந்தோஷங்க. அப்போ எங்க பொண்ணு கொடுத்து வச்சது தான்”

பத்மஜா முகமெங்கும் பெருமையுடனும், சிரிப்புடனும் அமர்ந்திருக்க, சுசித்ரா ஒட்டவைத்த பிளாஸ்டிக் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் மிதமான ஒப்பனையுடன் அங்கு வந்து நின்றாள் யக்ஞா. ஒல்லியான உடல்வாகு, நெடுநெடு உயரம், மாநிறம், ஒப்பனையில்லா நகை பூசிய முகம்!

சபையில் இருந்த அனைவரையும் வணங்கிய யக்ஞா இருக்கையில் அமர, ஒரு கனத்த மௌனம் அங்கு நிலவியது.

“அப்புறம் மாப்பிளை, பொண்ணு கிட்ட ஏதாவது பேசுறதா இருந்தா பேசுங்க” பெருந்தன்மையாய் ஒருவர் சொல்லிவிட!!!! அனைவரும் அர்ஜுனை வைத்த கண் வாங்கமால் பார்க்க, அர்ஜுன் நெளிந்தான்.

தர்மன் அவன் தர்மசங்கடத்தை போக்க முன் வந்தான்.

“பொண்ணும், மாப்பிளையும் தனியா பேசிக்கலாங்களே?”

“அதுக்கென்ன தம்பி பேசிட்டா போச்சு”

“யக்ஞா! மாப்பிள்ளையை உள் ரூம் கூட்டிட்டு போய் பேசு மா”

அர்ஜுன் தன் நண்பன் மித்ரனை பார்க்க அவன் தலையசைத்து உள்ளே செல்லுமாறு பணிந்தான். உள்ளே பெண்ணுடன் சேர்ந்து பெண்கள் பட்டாளமே நின்றுக் கொண்டிருந்தது. அறை வாயிலில் நின்றுக் கொண்டு அர்ஜுன் அல்லாடுவதை பார்த்த அந்த தோழியர் கூட்டம் நமட்டு சிரிப்புடன் சற்று தள்ளி நின்றுக் கொள்ள அர்ஜுன் யக்ஞா பக்கத்தில் வந்தான்.

யக்ஞாவின் தாய், தமக்கை, தோழியர் அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்தும் பார்காதவாரும் நின்று பேசிக்கொண்டிருக்க, அர்ஜுன் பல்லைக்கடித்தான்.

“இது தான் உங்க வீட்ல தனியா பேச விடுறதா? இதுக்கு அங்கேயே பேசியிருக்கலாமே?”

“சாரி! நான் வேணா எல்லாரையும் போகச் சொல்லிடவா?”

“இல்ல இல்ல வேணாம். அப்புறம் முதல் நாளே மாப்பிள்ளை பந்தோபஸ்த்தை காட்டுறேன்னு எல்லாரும் சொல்லிக் காட்டுறதுக்கா? இப்படியே பேசலாம்” அர்ஜுன் அங்கிருந்த சுவற்றை பார்த்துக் கொண்டு எரிச்சலுடன் மொழிய, அவன் முகத்தை பார்த்த யக்ஞா சிரித்துவிட்டாள்.

அவள் சிரிப்பு அவன் கண்களை அவள் பால் திருப்ப, தொண்டையை கனைத்துக் கொண்டு, “முதல நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிடுறேன். அப்புறம் நீ….நீங்க உங்க முடிவை சொல்லுங்க” மீண்டும் அவன் கண்கள் சுவற்றின் புறம் திரும்பியிருந்தது

“ம்ம்”

“எனக்கு இந்த மேரேஜ்ல பெருசா ஒன்னும் இண்டரஸ்ட் இல்லை. வீட்ல ரொம்ப கம்பெல் பண்றாங்க. எனக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தருமபுரி எம்.எல்.ஏ நமக்கு ரொம்ப பழக்கம். அவர் மூலமா எப்படியாவது அரசியல்ல ஒரு நல்ல இடத்துக்கு வந்துடனும் தான் என் லட்சியமே. அதுக்கு கல்யாணம் ஒரு தடையா இருக்குமோனு தோணுது. ஏன்னா அரசியல்ல இருந்தா பொண்ணு கொடுக்க மாட்டாங்களாமே? சோ அப்படி ஏதாவது இருந்தா ஐ ஆம் சோ சாரி…நீங்க உங்க….”

“எனக்கு ஒகே”

“ஹ்ம்ம் என்னது?” சட்டென்று அவன் கண்கள் அவள் முகம் தீண்டியது.

“இல்லை, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைனு சொன்னேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்குது. இப்போ இல்லை, ஃப்ர்ஸ்ட் டைம் போட்டோ பார்க்கும் போதே, உங்களுக்கு அரசியல்ல இன்ட்ரஸ்ட் இருந்தா அது உங்க தனிப்பட்ட விருப்பம். அதுக்காக உங்களை பிடிச்சது இல்லேன்னு மாறிடாது”

அவன் கண் பார்த்து பேசியவளின் கூற்றை உள்வாங்க அவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

“ஓ” 

மீண்டும் அவன் கண்கள் சுவற்றுக்கும் அவள் முகத்துக்கும் இடையே பூமராங்கானது

“ஓ”

அவனின் இரண்டாவது “ஓ” வில் அவள் வாயை பொத்திக் கொண்டு சிரித்தாள். 

“ஹலோ! என்னங்க சிரிப்பு?”

“ம்ம்ம்….சிரிப்பு வந்துச்சு”

“சரி நான் வரேன்”

“ஒரு நிமிஷம்!”

“என் பேரு யக்ஞா. நீங்க என்னை யக்ஞா வா போ னு கூப்பிடலாம். இல்லேனா உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடுங்க. வாங்க போங்க வேண்டாம் ரொம்ப ஃபார்மலா இருக்குது”

“ஓ”

மீண்டும் அவள் வாயை பொத்த, அவன் கடுகடுத்த முகத்துடன் திரும்ப எத்தனித்தான்

“இன்னொரு நிமிஷம்”

“ப்ச்! என்ன?”

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கானு சொல்லவே இல்லையே?”

“உங்க வீட்ல எல்லாருக்கும் அரசியல்னா ஒகே வா? ஒன்னும் பிரச்சனை கிடையாதா?”

“ம்ம்ம் தெரியல. எங்க வீட்டை பொருத்தவரைக்கும் அரசியல்னா எட்டு மணி நியுஸ் மாதிரி, சும்மா அவங்கவங்க கருத்தை பேசிட்டு அடுத்து வேலையை பார்த்துட்டு போய்டுவோம். நீங்க அரசியல்ல இருக்கிறதால உங்களை வேண்டாம்னு சொல்வாங்களானு எனக்கு தெரியல, ஆனால் எனக்கு என்ன பிடிக்குமோ அது அவங்களுக்கும் பிடிக்கும், அதனால கண்டிப்பா உங்களையும் உங்க அரசியலோட சேர்த்து பிடிக்கும்னு தான் சொல்வாங்க”

“ஓ” வென ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தி அவள் முகத்தை பார்க்க, அடுத்த நொடி அங்கிருந்து வெளியேறினான். 

வெளியே வந்து மித்ரனின் அருகே அமர்ந்து விட்டான்.

“மச்சி! என்ன மச்சி?”

“என்னடா?”

“எல்லாம் ஒகே வா டா?”

“ம்ம்ச்”

“என்னடா ம்ம்ச்? புடிச்சிருக்கா புடிக்கலையா? ஓகேவா, ஒகே இல்லையா? வேணுமா வேண்டாமா?”

“தெரியல”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

“கிருஷ்ணகிரி இல்லைடா, தருமபுரி” 

பத்மஜா அவன் அருகில் வந்து அவன் காதை கடித்தார்.

“என்னடா பொண்ணு புடிச்சிருக்குது தானே?”

“தெரியல”

“டேய் தர்மா! என்னடா இவன் உளறிட்டு இருக்கான்? புடிச்சிருக்குங்கிறானா? புடிக்கலைங்கிறானா? மித்ரா என்னடா சொல்றான் இவன்?”

“மம்மி! மெதுவா பேசுங்க. எல்லாரும் நம்மளையே பார்கிறாங்க. அர்ஜுன்! எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிடு”

“அதான் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணிட்டீங்களே? இன்னும் இதுல நான் சொல்ல என்ன இருக்குது?”

“தர்மா என்னடா தர்மா சொல்ல வரான் இவன்?”

“அவனுக்கு ஒகேவாம் மம்மி”

“கருமம் அதை தெளிவா தான் சொல்லி தொலையேன் டா. உங்க அப்பனை மாதிரியே தலையும் புரியாம. வாலும் புரியாம பேசிகிட்டு, சரி! பொண்ணு கிட்ட உன் பழைய விஷயம் எதையும் சொல்லிடலையே?”

அர்ஜுன் திரும்பி தன் தாயை முறைத்தான்.

“அம்மா! மாப்பிளை சார் சரின்னு சொன்னதே பெரிய விஷயம். நீங்க வேற பேசி அதை கெடுத்துடாதீங்க” தன் நண்பனுக்கு பரிந்து பேசினான் மித்ரன்.

மலயனாதன் இடைபுகுந்தார், “என்னாச்சு பா? பொண்ணு கிட்ட நீ எல்லாத்தையும் சொல்லிட்டியா? புடிக்கலைனு சொல்லிடுச்சா?”

“அப்பா!” தர்மன், அர்ஜுனின் ஒருமித்த குரலில் ஒன்றிரண்டு தலைகள் திரும்பி பார்த்தன.

“பார்த்தியாடா தர்மா! இந்தாளுக்கு வாய்ல நல்லதே வராது. இந்தாளு இருக்கிற வரைக்கும் என் புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவே அமையாது”

“வேண்டாம் தர்மா! அவளை மூடிட்டு இருக்கச் சொல்லு. ஆளு கீளுனு மரியாதை இல்லாம பேசுனா வேற மாதிரி ஆயிடும் சொல்லிடு. அப்படியே பம்பார்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ”

“ஆமா இவரு நடந்துக்கிற லட்சணத்துக்கு மரியாதை ஒரு கேடு. பெத்த புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க துப்பில்லை, பேச வந்துட்டாரு. ரோஷம் மட்டும் அப்படியே பொத்துகிட்டு வந்துடும்”

Advertisement