Advertisement

“அர்ஜுன்! உன் வாழ்க்கையை மட்டும் நீ முடிவெடு. என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்”

“அண்ணா! நான் உங்களுக்காக தான் பேசினேன்”

“எனக்காக யாரும் டப்பிங் கொடுக்க வேண்டாம். எனக்கு தேவையானதை பேச எனக்கு தெரியும். நீ உன் வாழ்க்கையை பாரு அர்ஜுன். நான் மம்மி, அப்பாவை பார்த்துக்குறேன்”

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி கூண்டு கிளி மாதிரி அடைபட்டு கிடப்பீங்க. இவங்க கூட இருந்தீங்கனா உங்க வாழ்க்கையை உங்களால வாழவே முடியாது”

“அதுக்காக நம்ம வாழ்க்கையிலேர்ந்து அவங்களை தூக்கி எறிஞ்சிட முடியுமா?”

“நான் அப்படி சொல்லலை. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டதீங்க. உங்க வழிக்கு அவங்களை வர வைங்கனு  சொல்றேன்”

“இந்த வீட்ல எனக்குன்னு தனி வழி கிடையாது அர்ஜுன். இது அவங்க ஏற்படுத்தி கொடுத்த வழி. இது திரும்ப முடியாத ஒரு வழி பாதை. இதுக்கு மாற்று பாதை கிடையாது”

“எனக்கு புரியல. நீங்களே ஏன் அப்படி தீர்மானிச்சுக்கிறீங்க”

கண்களை மூடி திறந்த தர்மன் அழுத்தமாய் கூறினான், “உனக்கு சில விஷயங்கள் எப்பவுமே புரியாது அர்ஜுன். நீ அவங்களை விட்டு விலகிட்ட. அதுல அவங்க ஒடைஞ்சு போய் இருக்காங்க. இப்போ நானும்…..அப்படி என்னால எப்பவுமே செய்ய முடியாது அர்ஜுன்…..எதுவா இருந்தாலும் கடைசில அவங்க என் அம்மா…..எனக்கு பிடிக்காட்டியும், எனக்கு நல்லது நடக்காட்டியும், எனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லாம போனாலும் நான் இப்படி தான் கடைசி வரை இருப்பேன்”

தர்மனின் தீர்கமான பேச்சு அர்ஜுனை கலவரபடுத்தியது. சுசித்ராவிடம் அவன் தர்மனுகாக பரிந்து பேச, சுசித்ராவோ தர்மனை ஓத்து பேசினாள்.

“இல்லை அர்ஜுன். நீ நினைக்கிறது தப்பு. உங்க மம்மியை விட்டு அவர் விலகிட்டாலோ இல்லை அவங்க சொல்றதை கேட்காம இவர் இஷ்டத்துக்கு நடந்துகிட்டலோ அது அவருக்கு எவ்வளோ பெரிய வலியை கொடுக்கும்னு எனக்கு தெரியும். அந்த வலியோட அவரால ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துட முடியாது. “நீங்க ஏன் இப்படி இருக்கீங்கனு? நீ ஒவ்வொரு தடவை கேட்கிறதே அவருக்கு எவ்ளோ கஷ்டத்தை கொடுக்கும் தெரியுமா? அதனால தான் நான் அவர் கிட்ட எதுவுமே கேட்கிறது இல்லை. அவர் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அதை பண்ணட்டும். ஏற்கனவே அவர் படுற கஷ்டம் போதும். இதுல நாமளும் நுழைஞ்சு நான் சொல்றதை கேளுங்கனு அவரை வற்புறுத்த வேண்டாம். அந்த வகையிலாவது முடிவெடுக்கிற முழு உரிமை அவர் கையில இருக்கட்டும். ஆனால் எனக்கு ஒன்னு மட்டும் தோணுது, கொஞ்ச நாளா அவர் மனசுல ஏதோ ஒரு உறுதியோட இருக்கார். முன்ன என் கிட்ட ஏதாவது புலம்புவார். இப்போ எதுவுமே சொல்றதில்லை”

“ஆமா அப்படியே உறுதியா இருந்து ஏதாவது செஞ்சிட கிஞ்சிட போறார். போங்க அண்ணி”

அர்ஜுன் சலிப்புடன் சொல்லி சென்றாலும் சுசித்ராவுக்கு மட்டுமே தெரியும், தர்மனின் ஒவ்வொரு அசைவும்!!

அர்ஜுன் சென்னையில் புது வீடு பார்த்து குடியேறி விட அடுத்த வருடத்தில் யக்ஞா இரண்டாம் முறையாய் சூல் தாங்கினாள். பத்மஜா பழைய பகை எல்லாவற்றையும் மறந்து விட்டு அர்ஜுன் வீட்டில் சென்று தங்கினார். இந்த முறை கண்டிப்பாக பெண் குழந்தை பிறக்குமென்று பேராவலுடன் காத்திருந்தார். ஆனால் அந்த கிருபையை கடவுள் எப்பொழுதும் அவருக்கு அளிக்க போவதேயில்லை என்பதுபோல இந்த முறையும் ஆண் குழந்தையே பிறந்தது.

முதல் முறையாக தான் வணக்கும் அந்த மூகாம்பிக்கை தாய்க்கு தன் மேல் கோபமோ, அவர் கருணை தன் மேல் விழவேயில்லையோ என்ற பயம் எழுந்தது. இத்தனை வருடங்கள் அவர் கட்டி காத்த பெயர், புகழ், பெருமை, பணம் எல்லாம் பொலபொலவென உதிர்வது போன்றதொரு தோற்றம் அவர் மனதில் எழுந்து அவர் உடல்நிலையை பாதித்தது.

வருடங்கள் உருண்டோட தர்மனும் சுசித்ராவும் தர்மபுரியிலிருந்து தாய் தந்தையை பார்த்து கொள்ள, தர்மனின் பிள்ளைகள் மேல் படிப்புக்கு சென்னை வந்தனர். அர்ஜுன் எம்.பி இப்பொழுது அர்ஜுன் எம்.எல்.ஏ. கூடியவிரைவில் அரசியலில் இன்னும் பல உச்சங்களை தொட்டு விடுவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தான்.

பத்மஜாவுக்கு தண்டுவடத்தில் ஒரு கட்டி எற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூற அதன்  வீரியம் அதிகமாகி அவரை படுத்த படுக்கையாய் ஆக்கியிருந்தது. தர்மனும் சுசித்ராவுமே அவரை பார்த்துக் கொண்டனர்.  அர்ஜுனும் யக்ஞாவும் அவ்வபோது வந்து பார்த்து சென்றனர்.  மலயனாதனும் அவர் வயதுக்கேற்ப உடல்நலக்குறையுடன் இருந்தாலும் நடமாடிக் கொண்டிருந்தார்.

இது நாள் வரை கெத்தாக வலம் வந்தவருக்கு, இந்த வீழ்ச்சி ஒரு பெரும் அடி. உடல் உபாதைகள் தொடங்கி தினசரி அடிப்படை தேவைகள் வரை மற்றொருவரின் உதவியை நாடியிருப்பது அவர் உடல் நிலையை மேலும் மேலும் பலகீனமாக்கியது.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் தர்மனை அழைத்தவர் அர்ஜுனை வரவழைக்க சொன்னார்.

“நான் என்னோட பதினெட்டாவது வயசுல வேலைக்கு வந்தேன். அப்போ யாரும் பெருசா கவர்மன்ட் வேலைக்கு போக மாட்டாங்க. கண்டிப்பா வந்து வேலையில சேர்த்துக்கோங்கனு வேண்டி கேட்டுபாங்க. அதுவும் பொண்ணுங்க போறதெல்லாம் நடக்கவே நடக்காத விஷயம். எங்க அப்பா நான் வேலைக்கு போகணும்னு உறுதியா இருந்தார். என் முதல் மாச சம்பளம் நூறு ரூபாய் கிட்ட தான். அப்போ ஓட ஆரம்பிச்சேன். இப்போ ஏ.ஈ ஸ்குயரா ஒரு பெரிய அதிகாரத்துல கை நிறைய சம்பளம் வாங்கி மதிப்பும் மரியாதையுமா ரிட்டையர் ஆகி பென்ஷன் வாங்கிட்டு இருக்கேன். இந்த வீட்டுக்காக உங்க அப்பா எந்தவொரு முதல் அடியும் எடுத்து வச்சதில்லை. இந்த வீடு வாங்கினது நான், உங்க ரெண்டு பேரையும் நல்ல ஸ்கூல், காலேஜ்னு படிக்க வச்சது நான். நிலம், புலம், கடைசியா அந்த காம்ப்ளக்ஸ் வரை வாங்கினது நான். இதெல்லாம் நான் ஓடி ஓடி சம்பாதிச்சது உங்களுக்காக தான். இப்போ என்னோட கடைசி காலம் வந்துடுச்சு. என் கடமையை நான் சரியா செஞ்சு முடிக்கணும்னு நினைக்கிறன். சொத்தை ரெண்டு பங்கா நான் பிரிக்கிறதுக்கு பதிலா நீங்களே ரெண்டு பேரும் பேசி யாருக்கு என்ன வேணும்னு சொன்னீங்கனா அது படி நான் எழுதி வச்சிடுவேன். உங்களுக்கும் எந்த மன வருத்தம் இல்லாம போய்டும்” மூச்சு வாங்க நிறுத்தினார் பத்மஜா!

“எனக்கு சொத்து எதுவும் வேண்டாம் மம்மி”

தர்மனின் குரல் கணீரென்று ஒலிக்க, அவன் பதிலில் அனைவரும் அதிர்ந்தனர்.

“மம்மி! எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது மம்மி. நீங்க சொன்ன மாதிரி, இவ்ளோ வருஷம் நீங்க எங்களுக்காக தான் ஓடிட்டே இருந்தீங்க. எங்களுக்கு எல்லாமே தி பெஸ்ட் கொடுக்கணும்னு ரொம்ப மெனக்கட்டீங்க. தனி ஆளா கொடுக்கவும் செஞ்சீங்க. எந்த விதத்துலயும் நீங்க எங்களுக்கு குறை வைக்கலை. எங்களை சுத்தி ரொம்ப அழகா ஒவ்வொரு இழையா பார்த்து பார்த்து கட்டி வச்ச தங்கக்கூடு இல்லை தங்கக்கூண்டு….அது எனக்கு வேண்டாம். இந்த தங்கக்கூண்டை நான் என் பிள்ளைகளுக்கு தொடர நான் விரும்பலை. அவங்க சுதந்திரமா வானத்துல பறந்து, காய்ந்த சருகு, நார் வச்சு கட்டிய ஒரு மரக்கூட்டுல தங்குனா கூட போதும். எனக்கு இது எதுவுமே வேண்டாம். உங்களுக்கு எதுவும் ஆகாது. இன்னும் பல வருஷம் நீங்க நல்லா இருப்பீங்க. நான் உங்களை பார்த்துப்பேன். இந்த தங்ககூண்டுல தான் நான் இருப்பேன். ஆனா எனக்கும் இதுக்கும் எந்த உரிமையும் கிடையாத உணர்வும் கிடையாது” அவன் மனதில் இது வரை வைராக்கியமாய் பொதிந்து வைத்திருந்த வார்த்தைகள் வடிவம் தாங்கி பிரசவித்தன. அவன் பிரசவித்த வார்த்தைகளின் பாரம் தாங்காமல் பத்மஜாவின் நெஞ்சாங்கூடு ஏறி இறங்கியது!

அர்ஜுனும் இதை எதிர்பார்க்கவில்லை.

“அண்ணா! என்ன பேசுறீங்க? அப்போ நான் ஒருத்தன் மட்டும் இந்த சொத்தை அனுபவிச்சு பழி பாவத்தை தேடிக்க சொல்றீங்களா?”

“அர்ஜுன்! எப்பவுமே நீ உனக்கு என்ன வேனும்கிறதுல தெளிவா இருந்திருக்க. உன் படிப்பு, உன் வாழ்க்கைன்னு எந்த இடத்திலையும் யாருக்காகவும் நீ விட்டு கொடுக்கலை. இப்போ கூட சொத்தை நீ மட்டும் அனுபவிச்சா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, உன்னை தப்பா யாரும் நினைச்சுட கூடாதுன்னு தான் கவலைப்படுற. இந்த ஒரு தடவை, ஒரே ஒரு தடவை மட்டும் எனக்காக யோசி.  முதலும் கடைசியுமா நான் நினைக்கிறதை நான் செய்யுறதுக்கு எனக்கு உரிமை கொடுங்க”

எதிலிருந்தோ விடுபட்டு பறப்பதை போன்று உணர்வு ஆட்கொள்ள, தன் அடுத்த கடமையை பார்க்க தர்மன் கிளம்பினான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பத்மஜா கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்துக் கொண்டிருக்க, கண்கள் எதிரிலிருந்த மூகாம்பிகை தாயை தழுவியிருக்க, தூரத்து பாட்டொன்று அவர் காதுகளில் தேய்ந்து ஒலித்தது!!!!

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி!!!!

Advertisement