Advertisement

அர்ஜுனும் யக்ஞாவும் தங்களை ஒரு அழகான வாழ்வியலுக்கு உட்படுத்த, ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தனர்.   ஏற்கனவே இரு பெண்களின் வாழ்க்கை கூண்டு கிளியாய் மாறிவிட்ட காரணத்தாலோ என்னவோ கடவுள் அந்த வீட்டுக்கு மற்றுமொரு பெண் மகவை கொண்டு வரவில்லை. தான் மனதார வணங்கும் மூகாம்பிகையே தனக்கு மகளாய் பிறக்க பத்மஜா தவமிருக்க, அவருக்கு பிறந்ததோ இரு ஆண் பிள்ளைகள். தர்மனாவது அந்த வீட்டுக்கு எப்படியும் ஒரு பெண் மகவை கொண்டு வந்து விடுவான் என்று எதிர்பார்த்திருக்க, அவனுக்கும் இரு ஆண் பிள்ளைகள்.

அர்ஜுன் விஷயத்தில் தாய் பகை, குட்டி உறவு என்று அர்ஜுன், யக்ஞாவை ஏற்றுக்கொள்ளாது, ஆனால் யக்ஞா பெற போகும் பெண் பிள்ளைக்காய் அவர் ஏங்கியிருக்க, அந்தோ பரிதாபம் அவர்களுக்கும் ஆண் பிள்ளையே பிறந்தது.

இந்த இரண்டு வருடத்தில் பத்மஜாவை தவிர மாறாதது ஏதுமில்லை. அர்ஜுனுக்கு எம்.எல்.ஏவின் சுயரூபம் தெரிந்த பின்பு அவன் அரசியல் விட்டே விலகி விடுவான் என்று தர்மன் நிம்மதியுற்றிக்க, பிடித்த பிடியை விடாமல் இருக்கும் உடம்பன் அவனோ தான் நினைத்தை வேறு வழியில் அடைய முற்பட்டிருந்தான். அவன் இப்பொழுது கை கோர்த்திருந்தது தருமபுரி எம்.பியுடன்.

ஏற்கனவே எம்.பிக்கும், எம்.எல்.ஏவுக்கும் இருக்கும் மனக்கிலேசங்களை அர்ஜுன் சரியாய் பயன்படுத்தி காய்களை நகற்றி, பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு, தர்மபரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பொறுபேற்றிந்தான். கட்சியில் பலர் வெளிப்படையாய் இதற்கு அதிருப்தியை வெளிபடுத்தினாலும் அர்ஜுன் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை. தன் வழியில் உறுதியாய் முன்னேறிக்கொண்டே இருந்தான். முன்பு எம்.எல்.யுவடனான அனுபவம் அவனுக்கு ஒரு சிறந்த பாடம். ஆதலால் அவன் எம்.பி உட்பட யார் மீதும் பெரிதும் நம்பிக்கை வைக்காமல் தனித்து செயல்பட்டான். அவ்வபொழுது சென்னை சென்று அங்கு முக்கிய கட்சி பிரமுகர்கள் சிலர் நட்பை பெற்றிருந்தான். அவனிடம் உள்ள ஒரு ஈர்ப்பு விசையின் காரணமோ அல்லது அவன் காய்களை நகற்றிய விதம் அப்படியோ, தருமபுரி மாவட்டத்தையும் தாண்டி அவன் அறிமுகம் முக்கிய இலாக்கா அமைச்சர்கள் வரை எட்டியது.

பத்மஜா அர்ஜுனிடம் முதலில் சில காலம் பேசாது இருந்து பார்த்தார். பின்பு கோபப்பட்டு கத்தினார். பின்பு யக்ஞா மூலம் தன் வன்மத்தை தீர்க்க எண்ணினார். எல்லாவற்றிற்கும் சேர்த்து அர்ஜுனின் எதிர்வினை ஒரு அலட்சிய பார்வை மட்டுமே. யக்ஞாவும் அர்ஜுன் போலவே பத்மஜவையும் அவர் செயல்களையும் கருத்தில்  கொள்ளாது இருக்க பழகிக் கொண்டாள். அகப்பட்டது என்னவோ சுசித்ரா தான். அர்ஜுனிடமும், யக்ஞாவிடமும் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி இவர்கள் மீது காட்ட எப்பொழுதும் போல மௌனமாய் நின்று அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர் தர்மனும், சுசித்ராவும்!

பத்மஜாவின் ஆசைப்படியே தனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டு அவர் கைகாட்டிய வேலையில் சேர்ந்து, பெங்களூரில் இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு, பிள்ளைகளை தருமபுரி பள்ளியில் சேர்த்து, தனக்கான அத்தைனையும் தன் அன்னைக்காய் மாற்றி அமைத்திருந்தான். அதில் அவனுக்கு பெரிதும் வருத்தமில்லை. அவனுக்கு பழகிய ஒன்று தான். அவன் வருத்தமே. எதிர் கருத்தேதும் சொல்லாமல் தனக்காக மட்டும் இது எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் தன் சுசித்ராவை பற்றி மட்டுமே!!

இன்றும் தினம் தினம் பத்மஜாவிடம் அவன் பழிச்சொல் வாங்கிக்கொண்டிருந்த போதிலும் ஒருபோதும் அவன் தன் நிலை மாறவில்லை. தன் தாயை எந்த இடத்திலும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை., தாய்க்காக விட்டுக்கொடுத்தான் ஆனால் அவன் மனதில் ஒரு பெரும் வைராக்கியம் இருந்தது. அந்த வைராக்கியத்தை பற்றுக்கோலாய் கொண்டே அவன் செயல்பாடுகள் அனைத்தும் இருந்தது. அவன் மனதிலுள்ள வைராக்கியத்தை யாரிடமும் அவன் பகிர்ந்தானில்லை. ஏன் சுசித்ராவிடம் கூட அவன் பகிரவில்லை.

அடுத்த ஒருவருடத்தில் பத்மஜா பதவி ஓய்வு பெற்றார். அவரது ஓய்வு நாளை ஊரிலுள்ள பெரிய மண்டபத்தில் கறிவிருந்து, ஆட்டம் பாட்டம் என ஏற்பாடு செய்திருந்தான் அர்ஜுன்!!!

பத்மஜாவுக்கு ஒரு பக்கம் உச்சி குளிர்ந்தாலும் மற்றொரு பக்கம் அர்ஜுன் காரண காரியம் இல்லாமல் இப்படி ஒரு விருந்து ஏற்பாடு செய்ய மாட்டான் என்ற சந்தேகமும் அரித்துக் கொண்டிருந்தது

அவர் சந்தேகம் சரியென்பது விருந்து நாளன்று தெளிந்தது. பத்மஜாவின் அலுவலக நண்பர்கள் தவிர வந்திருந்த அத்தனை நபர்களும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். பத்மஜாவின், பத்மஜாவுகான விழாவை தனக்கானதாக்கி கொண்டான் அர்ஜுன். தன் படாடோபத்தை காட்டவும், தன் பக்கம் கவனத்தை ஈர்க்கவும் ஏற்பாடு செய்திருந்த விழா அது. அதுவும் விழா நாளில் முக்கிய அமைச்சர் தருமபுரி வருகை தந்திருந்தார். அவரை  விழாவுக்கு அழைக்க நேரில் சென்றிருந்தான்.

அமைச்சருடன் நின்றிருந்த எம்.எல்.ஏ ‘யாரடா நீ சுண்டைக்காய் பய. நீ கூப்பிட்டா அவரு வந்துடுவாரா?’ என்றபடி அவனை ஒரு அலட்சிய பார்வை பார்க்க, அமைச்சரோ அர்ஜுன் அழைத்தவுடன ”வந்துட்டா போச்சு” என்றபடி கிளம்பி நிற்க, எம்.எல்.ஏ மட்டுமல்ல அங்கிருந்த அத்துணை பேரும் வயிறெரிந்தனர். மாவட்ட ஒருங்கினைபாளராக உயர்வு பெற்றதற்கான பாராட்டு விழா போன்றே அந்த விழா காட்சியளிக்க, பத்மஜா ஒன்றவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் தத்தளித்தார். அர்ஜூனால் ஏற்பட்ட அவமானங்களின் பட்டியலில் இதுவும் சேர்த்தி.

அவரின் முகபாவனை வைத்தே அவரின் மன ஓட்டத்தை படித்த தர்மன் அவரிடம் வந்து பேசினான்.

“மம்மி! ஏன் மம்மி டல்லா இருக்குறீங்க. தலை ஏதாவது வலிக்குதா?”

“இல்லை”

“டையர்டா இருக்குதா. கொஞ்ச நேரம் அப்படி வந்து உட்காருங்க”

“வேணாம்”

“ஏன் மம்மி? என்ன பிரச்சனை?”

“பிரச்சனையே நீ தான். சும்மா நொய் நொய்னு. ஏன்டா நீயெல்லாம் என்ன மனுஷன்? நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்க விட மாட்டியா? ச்சே!”

அவர் அப்பட்டமாக தர்மனிடம் காட்டத்தை காட்ட, தர்மன் வாடிய முகத்துடன் அங்கிருந்து சென்றான்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுசித்ராவுக்கு மனது கனத்தது. இதற்கொரு முடிவு தான் என்ன? மனசாட்சி படி நல்லவனாய் பிறருக்காக வாழ்பவனுக்கு தான் எத்துனை சோதனைகள்? மற்றவர்களை பற்றி துளியும் யோசிக்காது தன் நிலையை மட்டும் யோசிப்பவர்கள் எல்லா ஆசிகளுடனும்,  நலன்களுடனும் இறுதி வரை பிறரை பற்றிய கவலையின்றி வாழ்வது ஏன்? இதை கேட்டால் இம்மையில் அவர்கள் செய்த நன்மைகளுக்கு பலனாய் மறுமை வாழ்வில் அவன் ஆசிர்வதிக்கபடுவான் என்பார்கள். இருக்கும் காலத்தில் பரிபூரணத்தை அனுபவிக்காமல், நம்மால் உணர முடியாத மறுமை காலத்தில் அதை அனுபவித்து என்ன பயன்?

தன் எண்ணம் போகும் போக்கு சுசித்ராவுக்கே புரியாவிடுலும், காலம் அவளின் கேள்விக்கான பதில்களை தன்னகத்தே ஒளித்து வைத்திருந்தது!!!!

பத்மஜா பணி ஓய்வு பெற்ற பின் முன்பை விட அவர் நடவடிக்கைகள் முற்றிலும் நலிவடைந்தது. ஓய்வு பெற்றதினால் வரும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலை அவரை உருக்குலைத்தது. எங்கே தன் கடைசி காலத்தில் பிள்ளைகளை சார்ந்தே இருக்க வேண்டி வருமோ என்ற பயம் அவரை வெகுவாய் ஆட்டி படைத்தது. அதிலும் தர்மனை மனதில் கொண்டு அவர் அதிக பயம் கொண்டார். எங்கே தான் செய்த செயல்களை, பேசிய வார்த்தைகளை மனதில் கொண்டு தர்மன் தன்னை கைவிட்டு விடுவானோ என்று அஞ்சினார். அன்றும் இன்றும் என்றுமே அவர் தர்மனை பற்றி அறிந்துக் கொண்டது அவ்வளவு தான்.

அர்ஜுனும் கட்டாயம் தன்னை கண்டுகொள்ளவே மாட்டான் என்று பத்மஜா உறுதியாக நம்பினார். அவரின் நம்பிக்கையை உறுதி செய்வது போல் தானும் யக்ஞாவும் சென்னைக்கு சென்று ஒரு தனி வீடு பார்த்து குடியிருக்க போவதாக அறிவித்தான்.

“என்ன பேசுற அர்ஜுனா? இப்போ எதுக்கு திடீருன்னு சென்னைக்கு?”

“என்னோட எதிர்காலம் அங்க தான் மம்மி. நான் அமைச்சர் பக்கத்துல இருந்தா தான் சீக்கிரம் நான் நினைச்ச இடத்தை அடைய முடியும். இங்க இருந்து குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்ட முடியாது”

“டேய்! அப்புறம் இந்த வீட்டை, என்னை, அப்பாவை யார்டா பார்த்துப்பா?”

“அதுக்காக என் வாழ்க்கையை நான் பார்க்க வேண்டாமா?”

“அர்ஜுன்” அவரின் அதிர்ந்த பார்வையை பார்த்து சலித்துக் கொண்ட அர்ஜுன், “இப்போ எதுக்கு என்னமோ நான் உங்களை கொடுமை படுத்தின மாதிரி இவ்ளோ ஷாக் ரியாக்ஷன் கொடுத்து நடிக்கிறீங்க?”

“என்னது நடிக்கிறேனா? உன்னை பத்து மாசம்……”

“ஐயோ! கஷ்டப்பட்டு பத்து மாசம் சுமந்து பெத்தீங்க. அது தானே? இதே சென்டிமன்ட் டயலாக் சொல்லி சொல்லி எவ்ளோ நாள் எங்களை கட்டி போடுவீங்க?” இங்க பாருங்க மம்மி. வீடெல்லாம் பார்த்தாச்சு. கூடிய சீக்கிரம் அங்க போக போறோம். உங்களையும் அப்பாவையும் நான் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லவே இல்லை. நீங்க ரெண்டு பேரும் கிளம்பி என் கூட வாங்க. ராணி மாதிரி வச்சு பார்த்துக்குறேன். இந்த வீட்டை வாடகைக்கு விட்டுடலாம். அண்ணனை பிடிச்சு வச்சிருந்தது போதும் அவர் பெங்களூர் போய் அவருக்கு பிடிச்ச வேலையை, அவர் வாழ்க்கையை பார்க்கட்டும்” சொல்லிவிட்டு திரும்பக் கூட பாராமல் அவன் சென்றுவிட, நடந்ததை கேள்விப்பட்ட தர்மன் அர்ஜுன் முன் ரௌத்திரமாய் வந்து நின்றான்.

Advertisement