Advertisement

”அண்ணா! மம்மியை பத்தின உங்க கவலை வீண் ண்ணா. அவங்களை கடந்து வாங்க. இன்னும் எவ்ளோ நாள் தான் அவங்களுக்கு பயந்து பயந்து வாழ்வீங்க. அவங்களை கண்டுக்காம உங்க வேலையை பார்த்துட்டு போங்க. நான் அப்படி தான் செஞ்சிட்டு இருக்கேன்”

“அப்படியெல்லாம் கடந்து போக அவங்க நமக்கு ஏதோ ஒரு உறவு இல்லை. கடைசி மூச்சு வரைக்கும் கூட வர தொப்புள் கொடி உறவு. அவங்க இதயத்துடிப்போட எச்சம் தான் நாம ரெண்டு பேரும். அவங்க என்ன செஞ்சாலும், எப்படி நடந்துக்கிட்டாலும் அதுல மாற்றம் வராதுல. ஏதோ ஒரு சின்ன பிரச்சனை நடந்தா கூட தற்கொலைக்கு முயற்சிக்கிறவங்க இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனையிலும் அமைதியா இருக்காங்களேனு பயந்துட்டு இருந்தேன். இதோ இப்போ பூதம் வெளிய கிளம்பிடுச்சுல. இன்னும் என்னென்ன செய்ய காத்திட்டுருக்காங்களோ”

தர்மனின் பயம் அர்ஜுனை எட்டியிருந்தாலும் துணிவுடன் அவன் பத்மஜாவை எதிர்கொண்டான் ஏனென்றால் அவனுக்கு தெரியும் எதிராளியின் பயம் தான் அவரது பெரிய பலம் என்று. நேரடியாய் தன் முன் நின்று தன்னை கேள்வி கேட்கும் தன் இளைய மகனை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார் பத்மஜா!

“மம்மி! யக்ஞா போட்டோவை நந்தகுமார் கிட்ட கொடுத்தீங்களா?”

“என்னடா பேசுற நீ? நான் ஏண்டா அவ போட்டோவை அவன் கிட்ட கொடுக்கணும்? அந்தளவுக்கு உன்னை பெத்த அம்மாவை நீ கீழ்த்தரமா நினைக்கிற இல்லை?”

“நான் கேட்டதும் யாரு நந்தகுமார்னு கூட நீங்க கேட்கல. இதுலேர்ந்து தெரியல உங்க லட்சணம் என்னனு?”

“டேய்! என்னடா பேசிட்டே போற. சரி, ஏதோ ரொம்ப கோபப்படுவியே. பகுமானமா பேசி உனக்கு புரிய வைக்கலாம்னு பார்த்தா அம்மானு கூட பார்க்காம அது என்னடா அந்த பேசு பேசுற?”

“இங்க பாருங்க இந்த கத்துற வேலையெல்லாம் அண்ணன் கிட்ட வச்சிக்கோங்க. இந்த கல்யாணத்தை நிறுத்த நீங்க என்ன பிளான் போட்டாலும் சரி இந்த கல்யாணம் நடந்தே தீரும்”

“நான் இல்லாம இந்த கல்யாணத்தை நீ எப்படி நடத்துறேனு நானும் பார்க்கிறேன் டா”

“நீங்க இல்லாம தான் நடத்த போறேன். நீங்க வரலேனு யாரு அழுதா? நீங்க வர வேண்டாம். ஆனா உங்க பணம் வந்தாகனும். என் அக்கவுண்ட்க்கு ஒரு பத்து லட்சம் டெபாசிட் பண்ணிடுங்க”

“என்னது பத்து லட்சமா? எதுக்கு? நான் ஏன் தரணும்?”

“ஆமா பின்ன எனக்கு வந்து சேர வேண்டிய சொத்து உங்க கிட்ட தானே இருக்குது? அதை எனக்கு பிரிச்சு கொடுங்கனு நான் கேட்டேனா என்ன? அதுல ஒரு கால் வாசி கூட இப்போ நான் கேட்கலையே?! நீங்க நடந்துகிறதை பொறுத்து தான் நான் கேட்கிறதும் கேட்காததும் இருக்குது. இப்படியே ஏதாவது தகிடுதத்தோம் பண்ணிட்டே இருந்தீங்கனா அந்த சொத்தை பத்தி பேச வேண்டி வரும். அதுக்காக எந்த எல்லைக்கு வேணா போக வேண்டி வரும். அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம். உங்க பிரஸ்டீஜ் பிரஸர் குக்கர் எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ் …… அப்புறம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த வீட்டை விட்டு ஓடி போறது, நான் தான் காரணம்னு லெட்டர் எழுதி வச்சிட்டு ஏதாவது பண்ணிக்கிறது இப்படி எது வேணும்னாலும் நீங்க முயற்சி செஞ்சு பார்க்கலாம். அதுலேர்ந்து எப்படி வெளிய வரதன்னு எனக்கு தெரியும்”

தன் செல்ல பிள்ளையாய் நினைத்தவன் தன் சொல்லை மதிக்காது தூக்கி எரிந்து பேசுவதோடல்லாமல் தன்னையே தூக்கி எறிந்துவிட்டான் என்பதை உணர்ந்த கணம் படுயங்கரமாய் தான் தோற்றதை உணர்ந்தார், இதுவரை தான் நினைத்த எக்காரியத்திலும் தோல்வியே தழுவாத அவர்!!

துவண்டு நின்ற அவருக்கு இப்போழுதும் இரு தோள் கொடுத்தது தர்மனும், சுசித்ராவும் தான்!!!!

“நான் செத்தா கூட கவலை இல்லேனு சொல்லிட்டானேடா தர்மா! நான் அவனுக்கு அவ்ளோ தானில்லை?!” ஆதங்கம் அவர் மூச்சடைக்க, தர்மன் அவரை ஆசுவாசப்டுத்தினான்.

“கண்டிப்பா அப்படியில்லை மம்மி! அவனுக்கும் உங்க மேல பாசம் உண்டு. அப்படியெல்லாம் உங்களை விட்டுற மாட்டான். ஏதோ கோபத்துல பேசுறதை பெருசா எடுத்துக்காதீங்க”

“இல்லடா அவனுக்கு பெத்த அம்மா நான் முக்கியமில்லை. நேத்து வந்த அவ தான் முக்கியம். ரேஷ்மா விஷயத்துல கூட பாரு, அவன் உயிருக்கு ஆபத்துனு சொன்னதால தான் அவளை விட்டுட்டு வந்தான். இதே என் உயிருக்கு ஆபத்துனு சொல்லியிருந்தா எப்படியாவது அந்த பொன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பான் அப்படி தானே?”

“கவலை உங்களை ஏதேதோ தப்புதப்பா யோசிக்க வைக்குது மம்மி”

“ஏன்டா இல்லாத ஒன்னை நினைச்சு கவலைப்பட நான் என்ன லூசாடா?!  என்னை நீ பைத்தியம்னு சொல்ல வரியா?”

“அப்படியெல்லாம் நான் சொல்லலை மம்மி”

“அப்படி தான் டா சொல்ற. அவன் என்னனா நான் செத்தா கூட பரவாயில்லைனு தூக்கி எறிஞ்சிட்டு போறான். நீ என்னனா நானா தான் தேவாயில்லாம பில்ட் அப் பண்றேனு சொல்ற. ஆக மொத்தம் உங்க ரெண்டு பேருக்கும் நான் தேவையில்லாம போயிட்டேன் இல்லை?!! கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைச்சு காசை கரியாக்கி உங்க ரெண்டு பேரையும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தா என்னையே பைத்தியமாக்கிட்டீங்க இல்லை?! நல்ல பண்ணுங்க டா நல்ல பண்ணுங்க. இன்னும் எவ்ளோ காலத்துக்குனு பார்க்கிறேன். எல்லாத்தையும் மேல இருந்து அந்த அம்மா  பார்த்துட்டு தான் இருக்கா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் எதுவும் இல்லாம திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு வந்து நிப்பீங்க. அப்போ நீங்க என் கிட்ட தானே வந்து நிக்கணும்” பெற்ற பிள்ளைகளுக்கே சாபம் விட்டபடி நிற்கும் அந்த தாயை ஏதுமற்ற உணர்வுகளுடன் உறுத்து விழித்தான் தர்மன்.

காலக்கழிவு செய்யபட்ட ஒரு காணொளியை போல் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்து அர்ஜூனின் திருமண தினத்தில் வந்து இடைநிறுத்தம் கண்டது……

——————————————————————————————————————————————–

அர்ஜூன் முகம் கொள்ளா சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.. அதற்கு மாறாக யக்ஞாவின் முகத்தில் சங்கடமும் பயமும் நெளிந்தது. வாழ்விலேயே மிக முக்கியமான அந்த நாளை, மீளுருவாக்கம் செய்ய முடியாத அந்த நாளின் பரிபூரணத்தை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்.

காரணம் இருவர்!!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடிய வெறுப்புடன் முயன்று வரவழைக்கபட்ட நெகிழி புன்னகையுடன் அமர்ந்திருந்த பத்மஜா ஒருவர் என்றால் மற்றொருவர் எம்.எல்.ஏ!!!

தன்னை தலைமை தாங்கும்படி அர்ஜூன் வெகு வருந்தி பணிவன்புடன் கேட்டுக் கொண்டதால் அவன் மேல் அவர் கொண்டிருந்த கசப்பையெல்லாம் தற்காலிகமாய் மறந்து எதுக்கும் இருக்கட்டும் இப்படி ஒரு அடிமை நம் பக்கத்தில் இருந்தால் நலமே என்ற ஒரே காரணத்திற்காக திருமனதிற்கு வருகை தந்திருந்தார் எம்.எல்.ஏ. ஆனால் அர்ஜூன் எப்படிபட்டவன் என்பதை அவர் கணிக்க தவறிவிட்டார்!!

எம்.எல்.ஏ அங்கிருக்கும் பொழுதே கட்சியின் மூத்த உறுப்பினர், எம்.எல்.ஏ வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒரு பெரியவரை அழைத்தவன், “ஐயா நம்ம கட்சி ஆரம்ப காலத்திலிருந்து இருக்கிறார். கட்சிக்காக பல வகைகளில் தொண்டாற்றியிருக்கார். அப்படிபட்டவர் ஆசீர்வாதம் செஞ்சு தாலி எடுத்துக் கொடுக்கிறது தான் முறைனு நம்ம எம்.எல்.ஏ அண்ணன் நினைக்கிறார். இதிலிருந்து அவர் பெருந்தன்மயை நாம தெரிஞ்சிக்கலாம். அண்ணன்  கட்டளயை என்னால மீற முடியாது. அதனால ஐயாவே தாலி எடுத்து தரும்படி கேட்டுகிறேன்” என்றதும் அந்த பெரியவர் முகத்தில் பெருமிதமும், எம்.எல்.ஏ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

தான் சொல்லாத ஒன்றை சொன்னதாய் சொன்னதோடில்லாமல் தன் முன்னாலே கேவலம் தன் வீட்டு பணியாளுக்கு முதன் மரியாதை கிடைக்கும்படி அர்ஜூன் செய்ததை எண்ணி எண்ணி அவர் உள்ளம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. நடக்கும் யாவற்றையும் அறிந்த யக்ஞாவால் அந்த நாளை கொண்டாட முடியவில்லை. வெட்கம் குடியிருக்க வேண்டிய அந்த கணத்தில் துக்கம் துணைக்கொண்டிருந்தது.

திரும்பி பாராமலே அவள் கலக்கத்தை உள்வாங்கியவன் மாலைகளுக்கூடே இருக்கும் அவள் கையை பற்றி விரல் வழி ஆறுதலைக் கடத்தினான். அந்த ஆறுதல் சின்னதாய் ஒரு புன்னகயை அவள் முகத்தில் தருவித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்மஜாவுக்கோ உள்ளம் திகு திகுவென பற்றி எரிந்தது. எம்.எல்.ஏவிடம் அவன் உபயோகித்த அதே அஸ்திரத்தை தான் பத்மஜாவிடமும் காட்டியிருந்தான். பத்மாஜாவின் அலுவலக ஊழியர்கள், அக்கம் பக்கம், சொந்த பந்தம் அனைவரிடமும் பத்மஜா பெருந்தன்மையாய் யக்ஞாவை ஏற்றுக் கொண்டதாய் கூறி அவரே இந்த திருமண பேச்சை மறுபடியும் எடுத்ததாய் கூறி அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தான்.

“என்ன பத்மஜா மேடம்?! இன்னொருத்தரை காதலிச்ச பொண்ணுன்னு சொன்னீங்க. அதை கூட மறந்து உங்க பையனுக்கு கட்டி வைக்கிறீங்களே? உங்களுக்கு பெரிய மனுசு மேடம்”

“பத்மஜா மேடம் யாரு? அக்மார்க் பெண்ணியவாதி அவங்க. அவங்க போய் இந்த கல்யாணத்தை மறுப்பாங்களா? என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!”

தன்னை உயர்த்தி பேசுபவர்கள் முன்னிலையில் தன் ஆதங்கத்தை காட்ட இயலாது முயன்று வரவழைத்த புன்னகையுடன், தன் போலி கௌரவத்தை நிலைநாட்ட நாடகமாடிக்கொண்டிருந்தார்.

அவர்கள் வழமைப்படி மணமகனின் தாயே தாலி கயிறு மூன்றாவது முடி போட வேண்டும். தோட்டக்கார பெரியவர் மங்கல நானை எடுத்துக் கொடுக்க பத்மஜா மூன்றாவது முடி போட முன்வந்தார். அவரை கைநீட்டி தடுத்த அர்ஜுன் தானே மூன்று முடிச்சும் போட்டு முடித்தான். அவமானத்தில் அவர் முகம் கன்றி கருத்தது.

மங்கல நாண் அவள் கழுத்தில் ஏறிய அந்த தருணம் அவள் கண்கள் இரண்டு சொட்டு ஆனந்த கண்ணீரை ஹோம குண்டத்திற்கு ஆகுதி ஆக்கியது!.திருமணம் நடந்து முடிந்த சந்தோஷத்தை கடந்து, தாயை எதிர்த்து திருமணத்தை வெற்றிகரமாய் முடித்த பெருமையே அர்ஜுன் முகத்தில் அதிகமாய் மிளிர்ந்தது. அந்த சபையில் நிர்மலமாய் அகமகிழ்ந்தவர்கள் தர்மனும், சுசித்ராவுமே!

திருமணத்திற்கு வந்த அந்த நாலு பேர்(இப்படியெல்லாம் செஞ்சா நாலு பேர் நாலு விதமா பேசமாட்டாங்க!!) யக்ஞாவை பற்றி பத்து நிமிடம், பத்மஜாவை பற்றி பத்து நிமிடம், கல்யாணத்தில் சேமியா பாயசத்தில் இனிப்பு கம்மி பற்றி பத்து நிமிடம், தேங்காய் பையில் யார் தேங்காய் பெரிது யார் தேங்காய் சிறிது என்பது பற்றி பத்து நிமிடம் பேசி தீர்த்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிட, வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

நொடிகள் மணித்துளிகளாய், மணித்துளிகள் மணித்தியாலங்களாய், மணித்தியாலங்கள் நாட்களாய், நாட்கள் வருடங்களாய் உருண்டோடினாலும் தான் நின்ற இடத்தை விட்டு அகலாமல் உறைந்து நின்றார் பத்மஜா!

Advertisement