Advertisement

பத்மஜா தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அவர்  முன்  ஒரு திருமண பத்திரிக்கையை  வீசினான்  அர்ஜுன்.

“என்ன கண்ணு இது?”

“என்னோட கல்யாண பத்திரிக்கை”

“அர்ஜுன்!!!!!”

பத்மஜாவின் அதிர்ச்சி குரல் அலுவலகத்தில் இருந்தவர்களை திரும்பிப்பார்க்க வைத்தது.

“என்ன பேசுற நீ?”

“வர வெள்ளிக்கிழமை எனக்கும் யக்ஞாவுக்கும் நம்ம குலதெய்வ கோயில்ல வச்சு கல்யாணம். நீங்க வந்தா வாங்க வராட்டி போங்க”

“டேய் ! என்னடா பேச்சு பேசுற? சும்மா விளையாடாத அர்ஜுன்”அவர் குரலின் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் உச்சத்தை அடைந்தது.

“நான் விளையாடலை. நீங்க தான் விளையாடுறீங்க,என் வாழ்க்கைல. நீங்க என்ன செஞ்சாலும் அதை பார்த்துட்டு பொறுமையா போக நான் உங்க புள்ளை தர்மன் இல்லை. நான் அர்ஜுன் எம்.பி. நீங்க கல்யாணத்துக்கு வந்தாலும், வராட்டி போனாலும், எங்களை ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்காம போனாலும் என் வாழ்க்கையை நான் நம்ம்ம வீட்ல சந்தோசமா வாழ தான் போறேன்”

“இதுக்கு அந்த நாய் வீட்ல ஒத்துகிட்டா தானே?!”

“மம்மி!!!!”

அர்ஜுனின் கத்தலில் இதுவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த அலுவலக ஊழியர்கள் அவர்கள் இருவரையும் நெருங்கி விசாரிக்க ஆரம்பிக்கவும் பத்மஜாவின் முகம் கன்றி சிவந்தது. அலுவலகத்தில் இதுவரை அவர் கட்டமைத்திருந்த ஜம்பம் என்னும் பிம்ப இன்ம் சுக்கு நூறாய் உடைய காரணமாய் அவர் செல்ல பிள்ளையே இருந்ததை அவர் மனம் தாங்கிக் கொள்ளவே இல்லை.

“இங்க பாருங்க. இப்பவே தெளிவா நான் ஒன்னு சொல்லிடுறேன். யக்ஞா என் மனைவி. அவளை தப்பா பேசறதை  நான் ஒருநாளும் ஒத்துக்கவே மாட்டேன் இதை எப்பவும் மனசுல வச்சுக்கோங்க. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். சும்மா இந்த வீட்டை விட்டு ஓடி போறேன், தற்கொலை பண்ணிக்கிறேன் இதெல்லாம் செய்ய நினைச்சா தாராளம் செஞ்சிக்கோங்க. அதுக்காக எல்லாம் என் கல்யாணத்தை நிறுத்த போறதில்லை”

அவரை தூக்கி எறிந்து பேசிவிட்டு அர்ஜுன் செல்ல, அவன் தூக்கி எறிந்த பத்திரிக்கை அவர் முன் பறந்து அவரை பார்த்து எகத்தாளமாய் சிரித்தது!!!

வீட்டில் மலையனாதனிடமும் இந்த விஷயத்தை சென்று சொல்ல, அவரின் எதிர்வினை முற்றிலும் வேறாய் இருந்தது!

“அர்ஜுன்! நல்ல காரியம் பண்ணின பா. இப்போ தான் உங்க மம்மிக்கு அறிவு வரும். என்னம்மா ஆட்டம் ஆடினா அவ! இது அவளுக்கு சரியான தண்டனை. அவ பணம், பகட்டை கட்டிட்டு அழட்டும். நீ துணிஞ்சு எல்லாத்தையும் பாரு. நான் உனக்கு முழு ஆதரவு தரேன்”

“உங்களுக்கு இப்போ சந்தோஷம் தானே பா?”

“ஆமா அர்ஜுன். என் புள்ளைக்கு கல்யாணம் நடக்கும் போது எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன?”

“அதுக்காக நீங்க சந்தோஷப்படலை பா. மம்மி நினைச்சது நடக்க போறதில்லை. அவங்களை நான் எதிர்த்துட்டேன். அதனால நீங்க ஜெயிச்சுடீங்க. அதனால சந்தோஷப்படுறீங்க.  நான் எக்கேடு கெட்டு போனாலும் உங்களுக்கு அதை பத்தி உங்களுக்கு கவலை இல்லை.அப்படி தானே பா? சை! நல்ல குடும்பம் போ”

தலையிலடித்துக் கொண்டு அர்ஜூன் நகர, மலயனாதன் அமைதி காத்தார்.

“அண்ணா!” தயங்கியபடியே தர்மன் முன் நின்றான் அர்ஜூன். ஏனோ தந்தை, தாயிடம் காட்டிய உதாசீனத்தை தனயனிடம் காட்ட முடியவில்லை.

“சொல்லு அர்ஜூன். என்ன விஷயம்?”

“வந்து ண்ணா……..”

“எப்போ கல்யாணம்?”

“அண்ணா!!!!”

“கல்யாணம் முடிஞ்சதும் சொல்லாம முன்னால சொன்னதே பெரிய விஷயம் இல்லை?!! சந்தோஷம் அர்ஜூன்”

ஏமாற்றதின் வலி சுமந்து செல்லும் தன் தனயனின் கண்களை கடக்க முடியாமல் குறுகியவனுக்கு இப்படிபட்ட திருமணம் தேவையா என்று ஒரு நொடி தோன்றினாலும் தான் தாயின் குணம் நன்கறிந்தவனுக்கு, இப்படி நடந்தால் மட்டுமே தன் திருமணம் யக்ஞாவுடன் நடக்கும் இல்லையென்றால் அது தன் தாயின் சாசனபடியே நடக்கும் என்பதால் தன் முடிவில் உறுதி காத்தான்.

“அண்ணி!”

“கல்யாணம் தானே அர்ஜூன்? எப்போ?”

அண்ணி! சாரி அண்ணி!”

“சாரியெல்லாம் எதுக்கு கேட்குற? இது உன் வாழ்க்கை. நீ தானே முடிவெடுக்கணும்?”

“இல்லை அண்ணா கோபமா…..”

“ஆமா பின்ன?! கோபமே வராம இருக்க அவர் என்ன புத்தபிரானா? அட்லீஸ்ட் உன் மேல மட்டுமாவது அவரோட கோபதாபங்களை வெளிபடுத்துற உரிமையை நீ கொடு. அந்த சுதந்திரத்தை தட்டி பறிச்சுடாத. எதுவா இருந்தாலும் உன் வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா எங்க ரெண்டு பேருக்கும் அது சந்தோஷம் தான்”

தர்மன், சுசித்ராவின் அச்சமெல்லாம் பத்மஜாவை பற்றியது தான். எந்நேரம் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்திலேயே நிம்மதி தொலைத்தனர். ஓய்வு ஒழிசல் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியை போல அவர்களது எண்ணமும் செயலும் பத்மஜாவை சுற்றி வந்தது.

இவர்களது எதிர்பார்பிற்கு முற்றிலும் மாறாய் இருந்தது பத்மஜாவின் நடவடிக்கைகள். அவரிடம் காணப்பட்ட பேரமைதி இவர்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.

அர்ஜூன் திருமண வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருக்க, மலயனாதன் அவனுக்கு செய்ய முற்பட்ட உதவிகளை அவன் முற்றிலுமாய் புறக்கணித்தான். அதே சமயம் தன் தனயனின் ஆதரவை பெரிதும் வேண்டி நின்றான். சுசித்ரா தான் தர்மனுக்குமாய் சேர்த்து அர்ஜுனுக்கு ஆதரவு கரம் நீட்டினாள்.

பத்மஜாவின் அமைதியின் காரணம் அடுத்தடுத்து வந்த வாரங்களில் புலப்பட ஆரம்பித்தது. யக்ஞாவின் தந்தை அர்ஜுனை அழைத்திருந்தார். பத்மஜா தன்னிடம் பேசியதாகவும், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் இப்படி பெண்ணை கட்டி கொடுப்பது நியாயமா என்று கோபமாய் பேசியதாய் கூறினார். அவர் நாசூக்காய் கூறினாலும் பத்மஜா அவரை வார்த்தைகளால் குதறி எடுத்திருப்பார் என்பது அர்ஜுனுக்கு தெரியாதா என்ன?!! தன்னால் முடிந்தளவு யக்ஞாவின் தந்தைக்கு நிலைமையை எடுத்துக் கூறி அவரை அமைதிபடுத்த முயன்றான்.

அர்ஜுனின் திருமண ஏற்பாடுகள் அவன் நிச்சயத்திலேயே நிறைவு பெற்றதை, யக்ஞா முன்பு ஒருவரை காதலித்ததாகவும் அதை கேள்விப்பட்டு திருமணம் தடைபட்டதாகவும் ஊர் முழுவதும் பரப்பி விட்டார் பத்மஜா!!

ஆட்டத்தில் அடுத்த காயை குறி வைத்தவர் யக்ஞாவின் சித்திக்கு அழைத்து பேசினார். பட்டென்று பேசிவிடும் குணம் உள்ள யக்ஞாவின் சித்தி முன்பே ஏற்பட்ட தகராரும் சேர்த்து, பத்மஜா ஒன்று பேச, இவர் ஒரு மறுமொழி கூறவென சண்டை பெரிதாகி கோபத்தில் அலைபேசியை சுக்கு நூறாய் கீழே போட்டு உடைத்தார் பத்மஜா!

சித்தியை சமாதானபடுத்துவது அர்ஜுனுக்கு பெரும் பாடாய் இருந்தது. யக்ஞாவின் தந்தை தான் அதற்கு பெரிதும் உதவினார். தான் குறி வைத்த காய்கள் அனைத்தும் வெட்டுப்படாமல் தப்பிப்பதை பத்மஜாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தர்மத்தால் அல்லாது சூதால் வெற்றியை தழுவ முனைந்தார். அதற்கு அவர் எடுத்த முன்னெடுப்புகளை அறிய வந்த அர்ஜூன் ஆடி போனான். அந்த முன்னெடுப்புகளை அவன் முன் கொண்டு வந்ததே அவன் உற்ற நண்பன் மித்ரன் தான்!

“மச்சி! உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேச வந்தேன் டா”

“என்ன நான் செஞ்சிட்டு இருக்கிறது தப்பு. மம்மி சம்மதம் இல்லாம நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. அது எனக்கு நல்லதில்லை. அதானே சொல்ல வந்த?”

“இல்லடா. கண்டிப்பா இந்த கல்யாணத்தை நீ செஞ்சே ஆகணும் டா”

அர்ஜூன் விழி விரித்து ஆச்சரியமாய் தன் நண்பனை பார்க்கவும், மித்ரன் தொடர்ந்தான்.”ஆமா டா. நேத்து வரைக்கும் நீ செஞ்சிட்டு இருக்கிறது தப்புனு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு நான் கேள்விபட்ட விஷயம், நீ செய்யுறது தான் சரினு என்னை நினைக்க வச்சிடுச்சு”

“ஏண்டா அப்படி என்ன கேள்விப்பட்ட இப்படி ஒரு திடீர் ஞானோதயம் வர?”

“என் காலேஜ் ஃப்ரெண்டு அந்த நந்தகுமார் தெரியும்ல. அதான் டா அந்த சிவகாமி ஸ்டோர்க்கு பக்கத்து வீடு. மாவு மில் வச்சிருக்காங்களே?”

“ஆமா”

“அவன் காலேஜ் படிக்கும் போதே கொஞ்சம் ஆள் ஒரு மாதிரி. சின்ன சின்ன கோல்மால் வேலையெல்லாம் செஞ்சிட்டு இருந்தான். அப்புறம் அப்படியே டிவலப் ஆகி ஹக்கிங் அது இதுனு அவன் ரூட் மாறிடுச்சு. அவன் இன்னைக்கு என்னை பார்க்க வந்தான். அவனுக்கு வந்திருக்கிற ஒரு அசைமண்ட் பத்தி சொன்னான். அது……ஒரு பொண்ணு……அந்த பொண்ணை பத்தி சோசியல் மீடியால தப்பா…..அதாவது அந்த பொண்ணு தப்பான பொண்ணுகிற மாதிரி போடணும்னு அந்த பொண்ணோட போட்டோ, ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்துட்டு போனாங்களாம். அந்த பொண்ணு….”

“யக்ஞா தானே……அப்படி செய்ய சொன்னது எங்க அம்மா தானே?” விழிகளை மூடி வலிகளை அடக்கி கேட்ட அர்ஜூனின் குரல் வழி வலி வழிந்தோடியது!

மித்ரன் பதிலேதும் கூறாமல் வேதனையுடன் நண்பனை நோக்கினான்.

“அம்மா இந்த அளவுக்கு இறங்கி போவாங்கனு நான் நினைக்கவே இல்லடா. ரொம்ப கஷ்டமா இருக்குது. அந்த நாயி டபுள் சைட் கோல் அடிக்கலாம்னு பார்த்தான். அவனுக்கு உங்க அம்மாவை தெரிஞ்சிருக்கு. உங்க குடும்ப விவகாரம் எல்லாம் கொஞ்சம் தெரிஞ்சி வச்சிருப்பான் போல. என் மூலமா உன் கிட்ட இந்த விஷயத்தை கொண்டு வந்து உன் கிட்டயும் பணம் கரக்கலாம்னு பிளான் பண்ணி வந்தான். அவன் வண்டவாளம் எல்லாம் எனக்கு தெரியும். அதை வச்சு அவனை மிரட்டி போட்டோ வாங்கி வச்சுட்டு ஒரு காட்டு காட்டி தான் விட்டுருக்கேன். கண்டிப்பா என்னை மீறி எதுவும் அவனால பண்ண முடியாது. ஆனா விஷயம் இத்தோட முடிய போறதில்லை. இது இல்லேனா இன்னொரு பிரச்சனைனு அம்மா கொண்டு வந்துட்டே தான் இருப்பாங்க. உன் கல்யாணம் நடந்தா தான் இதுக்கு ஒரு முடிவு வரும்னு எனக்கு தோணுது”

“ஹ்ம்…..அப்போ மட்டும் சும்மா இருந்திடுவாங்களா என்ன?”

“முதல சிஸ்டரை எப்படியாவது வீட்டுக்குள்ள கொண்டு வந்துடு. அதுக்கப்புறம் நடக்கிறது இந்த நாலு சுவத்துக்கு தானே தெரியும். பார்க்கலாம் என்ன பண்றாங்கனு”

மித்ரன் கொண்டு வந்த செய்திக்குபின் இன்னும் முனைப்போடு அவன் திருமணத்தை எந்த தடையுமில்லாமல் நடத்த  நினைத்தான். தப்பி தவறி கூட வீட்டில் நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் யக்ஞா காதுகளை எட்ட அவன் விடவில்லை.

பத்மஜாவின் முன்னெடுப்புகளை கேள்விபட்ட தர்மன் அர்ஜுனை நினைத்து அளவில்லாத பயம் கொண்டான்.

Advertisement