Advertisement

‘பக்கி! நான் என்ன சொன்னேன்னு அப்படி சிரிச்சிட்டு போச்சு? லூசு….கடன்காரா……ராட்சசா…..உலகத்துல எத்தனையோ பசங்க இருக்கும் போது நான் ஏன் இவனை போய் லவ் பண்ணி தொலைச்சேன்? தப்பு என் மேல தான். அன்னைக்கு முதல் தடவை என்னை பார்த்தப்போ சிடுசிடுன்னு மூஞ்சியை வச்சிட்டு எனக்கு அரசியல் தான் முக்கியம்னு சொன்னப்பவே போடா போனு விட்டுருக்கனும். ஆனா அப்படி விட முடியலையே……அய்யோ! எல்லாம் இந்த அப்பாவை சொல்லணும். இவ்ளோ நடந்த பின்னாலும் அவனை போடானு வெளிய தள்ளாம கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்காரு. ஒருவேளை அவரு கொஞ்சம் சீரியல் அப்பா மாதிரி கெடுபிடியா இருந்திருந்தா எம்.பியை மறந்திருப்பேனோ?’ 

அவனை நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருக்க ‘குரங்கை நினைத்து மருந்தை குடிக்காதே’ என்றால் குரங்கே முன்னால் வருவது போல அவன் மீண்டும் அவள் முன்பு வந்து நின்று தந்தையின் சம்மதத்துடன் அவளை வெளியே அழைத்தும் வந்திருந்தான். 

தந்தையை மனதிற்குள் திட்டியவாறே, “நாம இப்போ எங்க போ?” அவளை கை நீட்டி தடுத்தவன், “நீ எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் ஒன்னு தான். அங்க போனதும் நீயே தெரிஞ்சிப்ப” என்றான்.

“இங்க பாருங்க எங்க அப்பா உங்க மேல அதிகமா நம்பிக்கை வச்சிருக்கார். அதுக்காக அந்த நம்பிக்கையை நீங்க மிஸ்யூஸ் பண்ணாதீங்க”

“அந்த நம்பிக்கையை காப்பத்தனும்னு தான் இப்போ உன்னை கூப்பிட்டுட்டு போயிட்டு இருக்கேன்”

கார் கிருஷ்ணகிரியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. கார் நிற்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாய் வந்தவள், ஒரு வீட்டின் முன்பு நிற்கவும் அவனை கேள்வியாய் நோக்கினாள்.

“இது யார் வீடு?”

“சொல்றேன் வா”

அழைப்பு மணியை அழுத்த ஒரு பெண் வந்து கதவை திறந்ததாள். அர்ஜுனை பார்த்ததில் அவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது. அவளின் முகபாவங்கள் அர்ஜுனை அவள் எதிர்பார்த்திருப்பது புரிந்தது. 

“வாடா வா! எவ்ளோ நேரம்? காலையிலேயே கிளம்பி வானு சொன்னேனா இல்லையா? வாங்க யக்ஞா! உள்ள வாங்க”

அந்த பெண்ணின் கணவரும் இருவரையும் வரவேற்க, அர்ஜுன் அவளை அறிமுகபடுத்தி வைத்தான், “யக்ஞா இது தான் ரேஷ்மா. என் காலேஜ் ஃப்ரெண்டு” என்றபடியே அவளை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.

“ரேஷ்மா! இது யக்ஞா. மை பெட்டர்ஹாஃப்”

“ஓ….ஓ…..கல்யாணமே முடியல. அதுக்குள்ள பெட்டர்ஹால்ப். ஹ்ம்ம்….ரொம்பதான்….”

“ஆமா பின்ன? எல்லாரும் உன்ன மாதிரி இருப்பாங்களா?” ரேஷ்மாவின் கணவர் சிவானந்த் ரேஷ்மாவை பார்த்துக் கேட்க,

“ஏன் நான் என்ன பண்ணினேன்?” இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள்.

“பாஸ்! கல்யாணம் முடிஞ்சதும் பாஸ், இவங்க வீட்ல இருந்தேன். மேடம் அப்படியே என்னை பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட பேச போய்ட்டாங்க. நானும் வெயிட் பண்றேன் பண்றேன் ஆளையே காணோம். இவங்க வீட்லயும் ஆளாளுக்கு ஒரு இடத்துல போய் செட்டில் ஆயிட்டாங்க. ஃப்ர்ஸ்ட் நைட் வேற ஆச்சேனு, நமக்கு நம்ம கவலை!! பார்த்தா, மேடம் அப்படியே பேசிட்டே அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட படுத்து தூங்கிட்டாங்க. ஊர் உலகத்துல எங்கேயாவது இப்படி நடக்குமா? நீங்களே சொல்லுங்க. அப்பவே தொங்கல்ல விட்டவ, இப்போ வரைக்கும் அப்படி தான்”       

“நீங்க மட்டும் என்னவாம்? எத்தனை தடவை என்னை விட்டுட்டு உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போயிருக்கீங்க”

“ஏண்டி? சினிமாவுக்கு போறதும், ஃப்ர்ஸ்ட் நைட்க்கு வராம இருக்கிறதும் ஒன்னா?”

“நான் என்ன வராமயே போயிட்டேனா என்ன? அதான் எல்லாம் நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியா நடந்துச்சுல? பின்ன என்ன?”

“ஹலோ! ஹலோ! ஹலோ! என்ன நடக்குது இங்க? நாங்களும் இங்க இருக்கோம் பா” அர்ஜுன் சிரித்தபடி கூற, ரேஷ்மா சிவானந்தை தோளில் ஒரு அடி போட்டுவிட்டு, உள்ளே சென்று அர்ஜுன், யக்ஞாவுக்கு சாப்பிட சிற்றுண்டி எடுத்து வந்தாள்.

சற்று நேரத்தில் அவர்களின் ஒரு வயது குழந்தை விழித்து அழ, குழந்தையுடன் விளையாடுவதில் சற்று நேரம் கழிந்தது. சிவானந்த் வேலை இருப்பதாக கிளம்பி விட, அர்ஜுன் அவருடன் பேசிக் கொண்டே வெளியே சென்றான். ரேஷ்மாவும், யக்ஞாவும் தனித்து விடப்பட, ரேஷ்மா யக்ஞாவின் கை பற்றி, “அர்ஜுன் ரொம்ப லக்கி யக்ஞா” எனவும் யக்ஞா ஆச்சரியமாய் பார்த்தாள்.

“நிஜமாதான் யக்ஞா! எனக்கும் சிவாவுக்கும் நல்ல புரிதல் இருக்கு தான்.  எந்த இடத்திலேயும் சிவா என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டார். பார்க்கிற எல்லாரும் எங்களை லவ்லி கப்பில்ஸ்னு சொல்றாங்க. ஆனா அதுக்காக நான் அர்ஜுனை லவ் பண்ணினதை என்னால சிவா கிட்ட வெளிப்படையா சொல்ல முடியல”

அர்ஜுனை பற்றி அவள் வெளிப்படையாக சொல்லவும், யக்ஞாவின் உடம்பில் ஒரு அதிர்வு ஓடி அடங்கியது. சங்கடமாக நெளிந்தாள்! 

ரேஷ்மா தொடர்ந்தாள், “பழங்கதை பேசினா ஏதாவது பிரச்சனை வருமோனு எனக்கு பயமா இருக்குது. பொதுவா தன் மனைவிக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதல் இருந்ததுங்கிற உண்மையை நிறைய பேரால ஜீரனிச்சிக்க முடியுறதில்ல. நிறைய மனைவிகள் கூட இதுல அடக்கம். அதனால அது எனக்குள்ள முடிஞ்சு போன ஒரு விஷயமாவே இருக்கட்டும்னு அதுக்கு நான் ஒரு என்ட் கார்ட் போட்டுட்டேன். ஆனா அர்ஜுன் உங்க கிட்ட அதை வெளிப்டையா சொல்லியும், நீங்களும் அதை பெருசு பண்ணலை. ரியலி கிரேட்”

ஒரு அசட்டு சிரிப்புடன் ரேஷ்மா தொடர்ந்தாள், “சொல்ல போனா அப்போ எனக்கு அர்ஜுன் மேல வந்தது காதலே இல்லைங்கிற உண்மை சிவா என் வாழ்க்கையில வந்தபின்னால தான் புரிஞ்சுது”

‘எம்.பி கூட இதே தானே சொன்னார்?’ யக்ஞாவின் மனது அவளுக்கு எடுத்துரைத்தது.

“எவ்ளோ சின்ன புள்ளைத்தனமா இருந்திருக்கேன்னு நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது. காலேஜ்ல எல்லாரும் அவுத்து விட்ட கழுதை தான். எல்லாருக்கும் ஒரு ஜோடி இருக்கும். ஜோடி இல்லேனா ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க, நாமளும் கெத்தா இருக்கணும்னு தோணும். அர்ஜுன் எனக்கு நல்ல ஃப்ரெண்டு. சோ அவனையே லவ் பண்ணிடலாம்னு முடிவெடுத்ததெல்லாம் வேற லெவல் பப்பி லவ் இல்ல? சோ எம்பராசிங்” 

சிவானந்தை அனுப்பி விட்டு அர்ஜுன் அங்கே வந்தான் “என்ன பெண்கள் மாநாடுல என்ன நடக்குது?”

“ஏன்டா ரெண்டு பேர் உட்கார்ந்து பேசினா உனக்கு அது மாநாடா? ஆங்…..யக்ஞா சாரி, ஒரு ப்லொவ்ல அர்ஜுனை  டா போட்டு பேசிட்டே இருக்கேன்”

அவள் கையை பிடித்து அழுத்தி, “இப்பவும் அவரு உங்க ஃப்ரெண்டு தான்” சொல்லிவிட்டு அர்ஜுனை பார்வையால் அளந்த அவளை கண் எடுக்காமல் பார்த்தான்.

“ஹலோ அர்ஜுன் சார்! உங்க ரொமான்ஸ் எல்லாம் அப்புறமா வச்சிக்கோங்க. அது சரி, எப்போ கல்யாணம்?”

யக்ஞா தடுமாற அர்ஜுன் தான் பதிலளித்தான், “இன்னும் ரெண்டு வாரத்துல. பத்திரிகையெல்லாம் அடிச்சு வந்தாச்சு. அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து உன்னை கூப்பிடுறேன்”

“ஹேய்! நோ பார்மாலிடீஸ் டா. அப்பா அம்மா வந்து தான் கூப்பிடனும்னு இல்லை. அவங்க பிஸியா இருப்பாங்க”

“இல்லை ரேஷ் அவங்க கண்டிப்பா வரணும். அப்போ தான் எல்லாம் சரி வரும்” பீடிகையுடன் சொன்னவனை ரேஷ்மா புரிந்துகொள்ளாவிட்டாலும் யக்ஞா புரிந்து கொண்டாள்.

கல்யாண கனவில் அர்ஜுன் திளைத்திருக்க, யக்ஞா விடுவதாயில்லை

“எம்.பி எந்த நம்பிக்கையில இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்னு சொன்னீங்க?”

“உன் மேல உள்ள நம்பிக்கை தான். இதோ இப்போ கூப்பிட்டியே எம்.பினு அந்த நம்பிக்கையில தான். அன்னைக்கு காரை திருப்பி தர வந்தப்போ என்னை ஏக்கமா பார்த்தியே அந்த நம்பிக்கையில தான். என்னை வேண்டாம்னு சொல்லிடு நான் போய்டுறேன்னு சொன்னப்போ, உண்மையை உன்கிட்ட சொல்லாம இருந்தது உன்னை நான் நம்பாம தான்னு கோபப்பட்டியே தவிர, என்னை சந்தேகப்படலியே அந்த நம்பிக்கை தான்”

“ரேஷ்மாவை கூட்டிட்டு வந்து காமிச்சுட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிச்சா? நான் உங்களை சந்தேகப்பட்டு வேண்டாம்னு சொன்னதா நினைக்கிறீங்களா?”

“நீ என்னை சந்தேகப்படலைனு தெரியும் இம்சை. நான் உன்னை முழுசா நம்பினேன். அதனால தான் ரேஷ்மாவை பத்தி நான் சொல்லலை. ஏன்னா அது காதலே இல்லாதப்போ, அது ஒரு விஷயமாவே நான் பொருட்படுத்தலை. அப்பா இதை வெளிய சொல்லலேனா கூட, என்னைக்காவது ஒருநாள் நீ கேட்காமயே அதை நான் உன் கிட்ட சொல்லியிருப்பேன். ரேஷ் இப்போ உன் கிட்ட சொன்னா இல்ல? சிவா கிட்ட எப்பவுமே இந்த விஷயத்தை சொல்ல முடியாதுனு. ஆனா நீ அப்படி கிடையாதுனு எனக்கு உன் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் இதை பெருசா எடுத்துக்கலை. உனக்கு என் மேல உள்ள நம்பிக்கையும் சரி, எனக்கு உன் மேல உள்ள நம்பிக்கையும் சரி, உங்க அப்பா நம்ம ரெண்டு பேர் மேல வச்ச நம்பிக்கையும் சரி எதுவுமே குறையாம அப்படியே தான் இருக்குது”

சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தான்……..      

Advertisement