Advertisement

இரண்டு நாளாய் தர்மனிடம் அமைதி காத்து வந்தார் பத்மஜா. இந்த அமைதி தர்மனுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியது. இதற்கு பின்னொரு பூகம்பம் உண்டென்பதை அவன் மனம் உணர்ந்தேயிருந்தது.

அன்று அந்த பூகம்பம் வெடித்தது!

அலுவலிலிருந்து திரும்பிய பத்மஜா முகம் மலர தர்மனிடம் வந்தார்.

“கண்ணு”

“மம்மி! சொல்லுங்க மம்மி”

“கண்ணு! உன் கஷ்டமெல்லாம் தீர போகுது கண்ணு. இனிமே எல்லாம் நல்லதா நடக்கும் பாரேன்”

“ஏன் என்னாச்சு மம்மி?”

“நம்ம எம்.எல்.ஏ சம்சாரத்தை போய் பார்த்தேன் டா. அவங்க மூலமா உனக்கு ஈ.பில (தமிழ்நாடு மின்சாரவாரியம்) வேலை வாங்கி தர ஏற்பாடு பண்ணிட்டேன். எக்ஸாம் அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க. அது சும்மா கண் துடைப்புக்கு தான். அது எழுதிட்டேனா உனக்கு வேலை கன்ஃபார்ம். 7எல் மட்டும் கொடுத்தா போதும். பணத்தை பத்தி நீ கவலைப்படாதே. அதெல்லாம் நான் பார்த்துகிறேன். கடவுள் புண்ணியத்துல இந்த வேலை மட்டும் கிடைச்சுட்டா போதும், நல்ல வேலை, கவர்மன்ட் பதவிங்கிற கெளரவம், பெங்களூர் போய் தனியா கஷ்ட்டப்பட வேண்டாம். இங்கேயே சந்தோஷமா இருக்கலாம். என்ன பணம் கொஞ்சம் செலவாகுது! அது பரவாயில்லை. எம்புள்ளைக்காக நான் இது கூட பண்ண மாட்டேனா?! நீ நல்லா இருக்கனும் கண்ணு. எனக்கு அது போதும்” மூச்செடுக்காமல் பேசிக் கொண்டே சென்ற அவரை மூச்சடைத்து போய் பார்த்தான் அவன்.

தனக்கு இந்த வேலை பிடிக்குமா, பிடிக்காதா? இதில் சேர விருப்பம் இருக்கிறதா இல்லையா? எது நல்லது, எதுவும் கேட்காமல் தன் போக்கில் அடுக்கிக் கொண்டே செல்லும் அவரை பார்த்து உறைந்து நின்றான்.

எந்த பள்ளியில் சேர வேண்டும், எந்த படிப்பு எடுத்து படிக்க வேண்டும், எந்த வேலையில் சேர வேண்டும், எந்த வண்டி வாங்க வேண்டும், எங்கு வீடு வாங்க வேண்டும், எந்த கார் வாங்க வேண்டுமென்று அவன் வாழ்க்கையில் எல்லா முடிவும் அவர் எடுத்தது தான். இப்பொழுதும் அவனுக்கான அவனின் முடிவை அவர் கையிலெடுத்துக் கொண்டு நின்றார்.

“மம்மி! இப்போ எதுக்கு மம்மி இதெல்லாம் திடீருன்னு? அர்ஜுன் கல்யாணமெல்லாம் முடியட்டும். அப்புறமா பார்த்துக்கலாம்”

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்? அவன் கல்யாணத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும். அந்த கருவாங்கொட்டையை கல்யாணம் பண்ணிக்க நான் விட போறதில்லை. அதை எப்படி தடுக்கணும்னு எனக்கு தெரியும். என் புள்ளை எனக்கு ஒன்னுனா தாங்க மாட்டான். அதை வச்சு அவனை நான் வழிக்கு கொண்டு வந்துடுவேன். எங்க எஸ்.ஈ கிட்ட பேசி பொண்ணு வீட்ல அவங்க அம்மாவோட பேசிட்டேன். அவங்க ஜாதகம் பார்த்துட்டு சொல்றதா சொல்லியிருக்காங்க. எல்லாம் நல்லபடியா கூடி வருது. அந்த அம்மாவோட அருளால எல்லாம் நல்லா நடக்கும் பாரு”

“மம்மி என்ன சொல்றீங்க? அர்ஜுன் சம்மதம் கேட்காம ஏன் பேசுனீங்க? அவன் இதுக்கு சம்மதிக்கவே மாட்டான்”

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன். நீ எம்.எல்.ஏ வைஃப் கிட்ட ஒரு வார்த்தை பேசி நன்றி சொல்லிடு”

“மம்மி, அர்ஜுன் எம்.எல்.ஏ குடும்பத்தோட பேசவே வேண்டாம்னு அன்னைக்கு கோபமா சொல்லிட்டு போனது உங்களுக்கு நியாபகம் இல்லையா?”

“டேய்! அது ஏதாவது சின்ன சண்டையா இருக்கும். அவரு தயவு இல்லாம நாம இருந்துட முடியுமா?”

“இல்லை மம்மி, அன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கும்போது அவரு உதவிக்கு வரவே இல்லை. அதுமட்டுமில்ல அதையும் தான்டி வேற ஏதோ பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அதான் அர்ஜுன் அவங்களோட தொடர்பை விட்டுட்டான்”

“அவன் கிடக்கிறான் கேனைப்பையன்! எந்த காலத்துக்கும் அவங்க உதவி நமக்கு தேவை. அவ்ளோ பெரிய இடத்துல இருக்கிறவங்க கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பாங்க. நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும். நீ நான் சொன்னதை செய். அவங்க கிட்ட பேசு. எக்ஸாம் எழுது. உனக்கு வேலை கிடைக்கிறது என் பொறுப்பு”

“மம்மி, அது எப்படி எனக்கு சரிபட்டு வரும் மம்மி, திடீருன்னு எனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலையை செய்ய சொன்னா எப்படி செய்ய முடியும்?”

“ஏன்டா எல்லாரும் என்ன வேலையை முன்னாடியே தெரிஞ்சு வச்சிட்டா செய்யுறாங்க? அப்படியே கத்துகிறது தான்!”

“இல்லை மம்மி, நீங்க டாக்டர் ஆகணும்னு சொன்னீங்கனு தான் டிவல்த்ல பயாலாஜி கிரூப் எடுத்தேன். மார்க் கம்மியானதால நீங்க சொன்னீங்கனு தான் காலேஜ்ல எனக்கு கொஞ்ச கூட பிடிக்காத ஈ.சி.ஈ கிரூப் எடுத்தேன். அப்புறம் ஐ.டி வேலை பார்த்தா தான் நல்ல சம்பளம், அதான் இப்போ டிரெண்டுனு சொன்னதால ரெண்டு வருஷம் வெளிய போய் கஷ்ட்டப்பட்டு வேலை தேடி இப்போ ஓரளவு நல்ல நிலமையில இருக்கேன். இப்போ எதுக்கு மம்மி திடீருன்னு இந்த வேலை?”

“ஓ அப்போ எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான் நடக்குது?! நான் தான் உன்னை ஆட்டி படைக்கிறேனு சொல்ல வர அப்படி தானே?”

“நான் அப்படி சொல்லலை மம்மி”

“பின்ன எப்படி தர்மா? உனக்காக, உன் நல்லதுக்காக ஓடி ஓடி உழைக்கிறேன் பார்த்தியா என்ன சொல்லணும்? இப்போ கூட கையில ஏழு லட்சம் இல்லை, தெரிஞ்சவங்க கிட்ட கடனா வாங்கிட்டு வந்திருக்கேன். இங்கேயே இருந்தேனா உன் எதிர்காலம் நல்லா இருக்குமேனு நான் யோசிச்சு யோசிச்சு செஞ்சா, பெத்த தாய்னு கூட பார்க்காம என்னமோ நான் உனக்கு கெடுதல் செஞ்ச மாதிரி எடுத்தெறிஞ்சு பேசுற இல்ல? உனக்கெல்லாம் இப்படி கொண்டு வந்து கொட்டுறதுனால உனக்கு அதோட மதிப்பு புரியல. ஒரொரு வீட்ல போய் பாரு புள்ளைங்க தான் அப்பா அம்மாவை உட்கார வச்சு பார்த்துகிறாங்க. நான் இந்த வயசுலேயும் மாடு மாதிரி உழைச்சு கொட்டனும்னு எனக்கென்ன தலையெழுத்தா?”

“மம்மி நான் எடுத்தெரிஞ்சும் பேசல, உங்களை வேலைக்கும் நான் போக சொல்லலை. நானும் ரெண்டு மூணு வருஷமா வி.ஆர்.எஸ் கொடுங்கனு சொல்லிட்டு தானே மம்மி இருக்கேன். என் கூட பெங்களூர்ல வந்து நல்ல ரெஸ்ட் எடுங்க மம்மி. உண்மையிலேயே எனக்கு ஈ.பி வேலை எல்லாம் சுத்தமா இண்டரஸ்ட் இல்லை மம்மி. எனக்கு ஐ.டி தான் செட் ஆகும். அதுல நான் நிறைய கத்துக்கனும். இன்னும் நிறைய உழைக்கணும். நிறைய பிளான்ஸ் வச்சிருக்கேன் மம்மி. எல்லாத்துக்கும் மேல இந்த கொரோனா எல்லாம் முடிஞ்சா எப்படியும் பிள்ளைங்க பெங்களூர்ல ஸ்கூல் போனா தான் சரி வரும். சுச்சியும் இன்னும் ஒரு வருஷத்துல மறுபடியும் வேலை தேட ஆரம்பிச்சுடுவா. எல்லாத்துக்கும் பெங்களூர் தான் சரி வரும்”

“இப்போ புரியுது டா! நீ ஏன் பெங்களூர் போகனும்ன்னு அப்படியே துடிச்சிட்டு இருக்கனு இப்போ புரியுது! எப்படியாவது உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போய் அங்கேயே வச்சிக்கணும்னு உன் பொண்டாட்டி தானே உனக்கு உருப்போட்டு வச்சிருக்கா?!”

“அவ எதுவுமே சொல்லலை மம்மி”

“சும்மா பொய் சொல்லாத டா. எல்லாம் அவ பேசுனதை நான் கேட்டேன். சும்மா நடிக்காத. ச்சே! நீயெல்லாம் என்ன மனுஷனோ?!!” 

தான் நினைத்ததை எவ்வழியில் சென்றாவது சாதிக்கும் குணமுடைய பத்மஜாவிடம், இந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழி பிதுங்கி நின்றான் தர்மன்!

——————————————————————————————————————————————தன் அருகில் அமர்ந்து காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுனை முறைத்தபடி வெளி காற்றை உள்வாங்கினாள் யக்ஞா. திருமணத்தை நிறுத்திவிட்டு, அவனுடனே இன்று அருகில் அமர்ந்து பயனிப்பதை நினைத்தும் பார்த்தாளில்லை. எல்லாம் தன் தந்தையால் வந்தது. வந்து அனுப்பி வைக்கும்படி கேட்டால் அவர் ஏன் அனுப்பி வைக்கிறார்?

யக்ஞா நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். எந்தவொரு பிரச்சனையையும் இலகுவாக தீர்வு காண்பவளால் இன்று எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

அன்பு இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்க தயங்கவே மாட்டாள். அதே சமயம் அவள் சுயத்தையும் இழக்க தயாராயிருக்க மாட்டாள். அதனாலேயே அர்ஜுன் அவளிடம் ஆரம்பத்தில் விட்டேத்தியாக நடந்துக் கொண்ட போது அவன் மீதுள்ள காதலால் அதை பொருட்படுத்தாமல் இலகு போலவே அவனிடம் பேசி வந்தாள். 

ஆனால் கொரோனாவிற்கு பின் அர்ஜுன் அவளை பார்க்க வந்த போது அவன் கண்களில் தெரிந்த காதல் அவளை மொத்தமாக வீழ்த்தியிருந்தது. அவனுக்கும் தன் மேல் காதல் இருக்கிறது என்று தெரிந்த, அவனோடு கழித்த அந்த நொடிகள் அவள் மனதில் பசுமையாய் நிறைந்தது. அந்த காதல் தந்த உரிமையில் எங்கிருந்தோ வந்து சிற்சில எதிர்பார்ப்புகள் ஒட்டிக் கொண்டன. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருப்பதே இயற்கையின் நியதி, இரண்டும் எதிரெதிர் துருவங்கள் போல ஒட்டியே இருக்கும்.

அந்த எதிர்பார்ப்வின் விளைவாலேயே அர்ஜுன் தன் பழைய காதலை மறைத்தது பெருத்த ஏமாற்றத்தை தந்தது. அவள் ஏமாற்றம் எல்லாம் அவன் வேறொரு பெண்ணை காதலித்தது அல்ல. தன்னிடம் அதை சொல்லாமல் மறைத்தது தான். ஒருவேளை ஆரம்பத்திலேயே உற்றார் உறவினர் மூலம் இந்த விஷயம் வெளிவரும் முன்பே அர்ஜுன் இதை யக்ஞாவிடம் தெரிவித்திருந்தால், கடந்து போன ஒன்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவளும் கடந்து போயிருப்பாள். ஏன் மறைக்க வேண்டும்? என் மேல் நம்பிக்கை இல்லையா? என்பது மட்டுமே அவள் கேள்வி.

அன்று அர்ஜுன் வீட்டுக்கு வந்து பேசி சென்றபின் அவனின் சிரித்த முகம் அவள் மனதை விட்டு அகல மறுத்தது.

Advertisement