Advertisement

“தெரியலையேமா! இன்னைக்கு காலையில தான் அந்த பொண்ணே முடிச்சிடலாம்னு சொன்னாங்க. அதை நம்பி நானும் போய் அர்ஜுன் கிட்ட பேசினா இப்போ வந்து வேண்டாம்னு சொல்றாங்க. உன் மாமா, பொண்ணு வீட்டுக்கு சப்போர்ட் பண்ணி ரொம்ப ஆடுறாராம். அதனால வேண்டாமாம். அச்சோ கடவுளே முடியல!”

“ஓ”

அவளின் முகம் பார்த்தவன், “சரி விடு நீ இதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணாத”

“இல்லை, பொண்ணு பார்க்க போறதுக்கு ஒரு புது சாரி பிளவுஸ்ல ஆரி வொர்க் போட்டு தைக்க கொடுத்து ரெடி பண்ணி வாங்கி வச்சிருந்தேன். இப்போ எப்படி ஆயிடுச்சே?”

“உனக்கு உன் கவலை ம்ம்ம்”

அவன் முதுகை தட்டியவள், “ஃப்ரீயா விடுங்க Mr. பீன் பேக். இதுவும் கடந்து போகும். நீங்க பார்க்காததா?”

“இப்படியே போராடி போராடியே என் காலம் முடிஞ்சிடுமோனு பயமா இருக்குதுடி”

“ஆமா இவரு எண்பது வயசு குடுகுடு கிழவன். ‘யம்மாடி நான் சாக போறேன்மா’. யாராவது எனக்கு கஞ்சி தண்ணி ஊத்துங்கனு’ பல்லில்லாத வாயில கடகடனு பேசிட்டு படுத்து கிடக்காரு. காலம் முடியறதை பத்தி பேசுற ஆளை பாரு? பாஸ்! லைஃப் பிகின்ஸ் அட் ஃபார்ட்டி! உங்களுக்கு முப்பதைஞ்சு வயசு தான் ஆகுது. நீங்க இன்னும் அங்கிள் கேட்டகிரிக்கு உள்ள போகலை, ஒகே வா? உங்க வாழ்க்கை உங்க கையில்! அதை யாராலும் எடுத்துக்க முடியாது. நீங்க கஷ்டம்னு நினைச்சா அது கஷ்டம், இஷ்டம்னு நினைச்சா அது இஷ்டம்”

“அடி போடி! எல்லாரும் ரொம்ப ஈசியா பண்ற ஒரே விஷயம் அட்வைஸ். அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும். இது கிட்டத்தட்ட என்னோட முப்பது வருஷ கஷ்டம். ஒரு வார்த்தையிலோ, வரியிலோ உனக்கு அதை புரிய வச்சிட முடியாது. இன்னும் அர்ஜுன் கல்யாணம் முடியுற வரைக்கும் என்னென்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ தெரியல” கோபமாக பேசிவிட்டு முகத்தை திருப்பிய தன் கணவனை பார்க்கையில் அவள் முகம் ஒரு நிமிடம் கசங்கி வேதனையை வெளியிட்டு, மறுநிமிடம் இயல்புக்கு திரும்பியது.

“விடுங்க பீன் பேக்! நாம எவ்வளவோ பழாப்பழ மேட்டர் எல்லாம் பார்த்துட்டோம். இதெல்லாம் வெறும் வாழைப்பழ மேட்டர். ஒரே முழுங்கு முழுங்கிடலாம்”

“அதென்னது பழாப்பழ மேட்டர், வாழைப்பழ மேட்டர்?”

“அதாவது ஒரு முழு பழாப்பழத்தை மேல் தோலை கஷ்டப்பட்டு உரிச்சா தான் உள்ள ஸ்வீட்டான பழம் கிடைக்கும். ஆனா வாழைபழம் அப்படி இல்லை. சட்டுனு உரிச்சோமா, பட்டுன்னு வாயில போட்டோமான்னு, லட்டுன்னு எனெர்ஜி கிடைச்சுச்சானு போயிட்டே இருக்கலாம்”

சிரித்தபடியே நின்ற அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளின் சிரிப்பு தொற்றிக் கொண்டது! கொரோனாவை விட வேகமாக தொற்றக் கூடியதாயிற்றே இந்த சிரிப்பு!

இருவரின் சிரிப்பொலியை கிழித்துக்கொண்டு கேட்டது படீரென்ற கதவை அடைக்கும் சத்தம். இருவரின் சிரிப்பும் நின்றது. பார்வைகள் இடம் மாறிக் கொள்ள, சுசித்ரா தலையசைத்து தர்மனை செல்லுமாறு பணிந்தாள். தர்மன் எழுந்து தன் அன்னையின் அறைக்குள் சென்றான்.     

“என்னாச்சு மம்மி?”

“வீட்ல என்ன நடந்துட்டு இருக்குது. நீ என்ன பண்ணிட்டு இருக்க? அர்ஜுன் கல்யாணம் செஞ்சுபானா இல்லையா தெரியல? காம்ப்ளக்ஸ் வாங்கி அதை வாடகை விடுறதுல ஆயிரம் பிரச்சனை, மேல பெருசா வீட்டை மட்டும் கட்டி வச்சிட்டு இன்டீரியர் வொர்க் ஒன்னும் பண்ணாம அப்படியே நிக்குது. நீ என்னடானா சிரிச்சு கூத்தடிச்சிட்டு இருக்க? உனக்கெல்லாம்…..” அதற்குமேல் அறை கதவு சாற்றிக்கொள்ள, உள்ளிருந்து வெறும் கத்தல் சத்தம் மட்டுமே கேட்டது. மேலும் எதுவும் அவள் காதுகளில் விழாததற்கு கடவுளுக்கு ஒரு நன்றி தெரிவித்துவிட்டு அவள் வேலைகளை தொடர்ந்தாள்.

அர்ஜுன் எம்.எல்.ஏவின் வீட்டு வாசல் முன் நின்றான். அவனுடன் அவன் நண்பன் மித்ரனும்!

“என்னடா?”

“ஏண்டா?”

“நான் தான் சொன்னேனே? தங்கச்சி கல்யாண வேலை தலைக்கு மேல இருக்குது. வீட்டுக்கு வானு சொன்னா, நீ என்னை இங்க வர சொல்ற? அந்த மண்டபக்காரன் ஏதோ கலாட்டா பண்றான் மச்சி. அட்வான்சும் திருப்பி தர மாட்டிகிறான். பத்திரிக்கை பிரின்ட் கொடுத்தது வாங்க போகணும், வீட்டுக்கு தேவையான ஜாமான் வேற வாங்கணும்”

“வரேன்டா! அண்ணன் ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு கூப்பிட்டாரு டா. பேசிட்டு போகலாம்”

“ஓ”

“ஆமா விஜய் மண்டபம் தானே புக் பண்ணினீங்க? மண்டபத்துல என்ன பிரச்சனையாம்?”

“கொரோனா டைம் எப்பனாலும் லாக்டவுன் போட்டிருவாங்க, அது மட்டுமில்லாம கல்யாணத்துக்கு ஐம்பது பேர் வரைக்கும் தான் கூப்பிடனும் சப்போஸ் கூட்டம் கூடிடுச்சுனா அவனுக்கு பிரச்சனை வரும்னு பார்க்கிறான். அதனால புக்கிங் கேன்சல் பண்ணிட்டான். அட்வான்ஸ் திருப்பி தருவான்னு பார்த்தா, அட்வான்ஸ் காசை ரொட்டேஷன்ல விட்டுட்டேன் கையில காசில்லைன்னு கண்ணை கசக்குறான். நம்ம நிலைமை அவனை விட கேவலமா இருக்கிறது அவனுக்கு என்ன தெரியவா போகுது? இதுவே கடன் தான். என்ன பண்றதுனு ஒன்னும் புரியல?! மாப்பிள்ளை வீட்ல வேற ரொம்ப கறாரா பேசுறாங்க”

“நான் வந்து அந்த மண்டக்காரன் கிட்ட பேசுரேன். வா உள்ள போய் அண்ணனை பார்த்துட்டு வந்துடலாம்”

“நான் வர மாட்டேன்னு தெரியும்ல. நீ போயிட்டு வா. நான் வெயிட் பண்றேன்”

“இங்கேயே இரு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“டேய்! டேய்! எனக்கு டியுட்டிக்கு டைம் ஆகுது. என்னனு சொல்லிட்டு போ”

“அந்த கொடுமையை ஏன் கேக்குற? 

“சரி கேட்கலை விடு நான் கிளம்புறேன்”

“எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க டா”

“வாவ்! அப்படி போடு மச்சான் மாட்ட போறான். அவ்ளோதான் உன் கதை முடியும் நேரமிது”

“டேய்! வாய்ல ஏதாவது வந்துரும். நானே கடுப்புல இருக்கேன்”

“மாப்பிள்ளை சார்க்கு என்ன கடுப்பு?”

தன் அலைபேசியை எடுத்து பெண்ணின் புகைப்படத்தை மித்ரனிடம் காட்டினான்.

“நீயே பார்த்து சொல்லு. இந்த பொண்ணு நல்லாவா டா இருக்குது?”

“டேய்! லூசா டா நீ?! உனக்கு வர போற வைஃப் டா. அவங்க போட்டோவை இந்த மாதிரி நீ என் கிட்ட காட்டி இப்படி கேக்குறதே தப்பு டா. தயவுசெஞ்சு வேற யார்ட்டயும் இப்படி கேட்டுடாத”

“ப்ச்! இல்லடா. மனசுல ஒரு ஃபீலும் வரலடா. அதான் யோசனையா இருக்குது”

“முதல பொண்ணை நேர்ல பார்த்து பேசி பாருடா. பேசுனா பிடிச்சாலும் பிடிக்கலாம் இல்லையா? அப்படி இல்லேனா தெளிவா பளிச்சுன்னு புடிக்கலைன்னு சொல்லிடு”

“ம்க்கும்! எங்க வீடு பத்தி தான் உனக்கு தெரியுமே? என்ன செய்யனு பாப்போம். சரி, நீ கிளம்பு. நான் அண்ணனை பார்த்துட்டு போறேன்”

பளிங்கு போன்ற வீட்டின் வரவேற்பறையில் அந்த கட்சி மேலிடத்தின் புகைப்படம், பெரிய சட்டத்திற்குள் பளிச்சென்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே எம்.எல்.ஏவின் குடும்ப புகைப்படம். வரவேற்பறைக்கு இடதுபுறம் ஒரு கண்ணாடி அறை, அதனுள் சுழல் நாற்காலியில் அமர்ந்து தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் எம்.எல்.ஏ! அவருக்கு பக்கத்தில் அவரது மூத்த மகன் நின்றுக் கொண்டிருந்தார்.

.அர்ஜுன் கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழையவும் முகம் மலர வரவேற்றார்.

“வா வா அர்ஜுன் எம்.பி”

“அண்ணன்! அந்த இன்ஷியலை விட்டுட்டு பேரை மட்டும் சொல்லுங்கண்ணன்”

“அட! நான் உன் இன்ஷியலை சொல்லலை. அரசியல்ல உன்னோட வருங்காலத்தை சொன்னேன் பா”

“போங்கண்ணன்!” 

“அட! நான் நிஜமா தான் பா சொல்றேன். எலெக்ஷன் முடியட்டும். நம்ம ஆட்சி தான். உனக்கு முதல் போஸ்டிங் தருமபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். அப்புறம் அப்படியே படிப்படியா முன்னேறிடலாம்”

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் ண்ணா” பட்டென்று அவர் காலில் விழுந்த அவனை தூக்கி நிறுத்தினார் அவர்.

“என்னப்பா நீயி? உன்னை என் மூணாவது புள்ளையா தான் நினைக்கிறன். போ போ போய் வேலையை பாரு”

“கங்கிராட்ஸ் தம்பி. அப்புறம் ட்ரீட்டு?” எம்.எல்.ஏவின் மூத்த மகன் அர்ஜுன் கை பற்றி குலுக்கினான்.

“தேங்க்ஸ் ண்ணா. தேங்க்ஸ் ண்ணா. உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா?”

“என்னையும் அண்ணானு கூப்பிடுற, எங்க அப்பாவையும் அண்ணானு கூப்பிடுற?”

“அது அப்படியே பழகிடுச்சுண்ணா”

“சரி, நீங்க பேசிட்டு இருங்க. நான் வரேன்”

அறையை விட்டு வெளிய வந்த மூத்த மகன் உள்ளே திரும்பி நின்று சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்த தன் தந்தையையும், அர்ஜுனையும் உற்று பார்த்தான். கை முட்டிகளை முறுக்கி அர்ஜுன் நின்ற இடத்தில் கதவை ஆங்காரமாய் ஒரு குத்து விட்டுச் சென்றான்!!!!

       

Advertisement