Advertisement

“இது ரொம்ப சின்ன கடையா இருக்குதுங்களே? இதுக்கு போய் ஐயாயிரம் வாடகைனா எப்படிங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க”

தர்மன் அவருக்கு பொறுமையாக பதிலளித்தான், “இல்லைங்கண்ணா! கடை இருக்கிற இடத்தை வச்சு தானே ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும். இது சென்டரான ஏரியா. நிறைய ஆட்கள் வந்து போற இடம். நீங்க வைக்க போறது டீக்கடை. அதனால எப்படியும் ஆளுங்க வந்துட்டே தான் இருப்பாங்க. எல்லாம் யோசிச்சு தான்ண்ணா இந்த வாடகை முடிவு பண்ணினோம்”   

தர்மனின் கைபேசி அலறியது.

“சொல்லுங்க மம்மி!”

“என்ன கண்ணு? என்ன சொல்றான் அந்த ஆளு?”

“அதான் பேசிட்டு இருக்கேன் மம்மி. கடை சின்னதா தானே இருக்குது. வாடகை ஜாஸ்த்தியா இருக்கேனு நினைக்கிறாப்ல”

“என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன்? இவ்ளோ சென்ட்டரான இடத்துல இந்த வாடகையே கம்மி. ஏழாயிரத்துக்கு தான் விட்டுருக்கனும். போனா போகுதேன்னு ஐயாயிரத்துக்கு விட்டா திமிரை பார்த்தியா அந்த ஆளுக்கு?! நாம என்ன ஃப்ரீயாவா இந்த காம்பளக்சை வாங்குனோம்? நீ அவன்ட்ட என்ன சொல்றேனா ஐயாயிரத்துக்கு ஒரு பைசா கம்மியா கொடுக்க முடியாது. இல்லேனா நீங்க வேற இடம் பார்த்துக்கோங்கனு சொல்லிடு. நமக்கு என்ன வேற ஆளா கிடைக்காது?”

“சரி மம்மி சொல்லிடுறேன்”

“அப்புறம் அந்த சலூன் கடைக்காரன் கிட்ட பேசுனியா?”

“போன் போட்டேன் எடுக்கலை”

“எடுத்தான்னா, இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ள கடையை வந்து பார்த்துட்டு முடிவை சொல்லணும். இல்லேனா வேற யாருக்காவது கொடுத்துடுவோம்னு சொல்லிடு”

“சரி மம்மி”

“உங்கப்பா அந்த கறிக்கடை காரனுக்கு தான் கடையை விடனும்னு சொல்லிட்டு இருக்காரு. அதுவும் வெறும் நாலாயிரம் ரூபா வாடகைக்கு. அப்படி மட்டும் நடந்துச்சு நான் மனுஷியாவே இருக்க மாட்டேன், சொல்லிட்டேன். அந்தாளை கடை விஷயத்துல எதுவுமே தலையிட கூடாதுன்னு சொல்லி வை கண்ணு”

“——-“

“என்ன கண்ணு பேச்சே காணோம்? இப்பவே நீ அவருக்கு போன் பண்ணி கடைக்காக ஒத்த பைசா செலவு பண்ணாதவங்க யாருக்கும் அதை என்ன பண்ணனும், யாருக்கு வாடகை விடனும்னு முடிவெடுக்கிற உரிமை கிடையாது. இதுல தலையிடாதீங்கபானு சொல்லிடு. கொஞ்சம் இடம் கொடுத்த ஓவரா ஆட்டம் போடுவாரு அந்த ஆளு”

“சரி மம்மி”  

“அர்ஜுன் கிட்ட பேசுனியா?”

“இல்லை மம்மி நேத்து பேசலாம்னு போனேன். அவன் ஃப்ரெண்ட்ஸ்கூட வெளிய போய்ட்டான். இன்னைக்கு பேசணும் மம்மி”

“அவன் கிட்ட தெளிவா சொல்லிடு கண்ணு. அரசியல் பேசியே காலத்தை தள்ளிட முடியாது. கல்யாணம் பண்ணி குடும்பத்தோட வாழுறது தான் வாழ்க்கையே. அதனால அந்த சேலம் பொண்ணை ஒரு தடவை நேர்ல போய் பார்த்துட்டு என்ன முடிவா இருந்தாலும் சொல்ல சொல்லு”

“சரி மம்மி நான் பேசிட்டு உங்க கிட்ட சொல்றேன்”

“ஹ்ம்ம் சரி கண்ணு எல்லாம் நீயே பார்த்துக்கோ. நான் ஃபீல்டு இன்ஸ்பெக்க்ஷன்ல இருக்கேன். நைட் வர நேராகும். அவளை நைட் டிஃபன் செஞ்சு வைக்கச் சொல்லிடு”

“ஹ்ம்ம் சொல்லிடுறேன் மம்மி!”

கைபேசியை அணைத்தவன் வெளியிட்ட பெருமூச்சில் அவன் உள்ளத்தீ சற்றே அணைந்தது. இது அவனுக்கு காலம்காலமாக பழகிய ஒன்று தான் ஆனாலும் உள்ளுக்குள் மூண்ட சலிப்பை அவனால் புறந்தள்ள முடியவில்லை. இந்த இடைத்தரகர் வேலையை அவன் காலம் காலமாய் செய்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது தந்தைக்கு போன் போட்டால் அவர் என்ன பேசுவாரென்பது அவனுக்கு அத்துபடி

“நான் சொல்றது எதுவுமே செய்ய கூடாதுன்னு வேணும்னே பண்றீங்கன்னு தெரியுது பா. இந்த வீட்ல எனக்கு அவ்ளோ தான் மரியாதை. எனக்கு தெரியும். இதெல்லாம் அவ வீம்புக்கு பண்றானு. ஏன் அந்த கறிக் கடைக்காரனுக்கு கொடுத்தா என்னவாம்? நான் ஒருத்தனை மெனக்கெட்டு பேசி கூப்பிட்டுட்டு வந்தா அவனை வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்? அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்? கொஞ்சமாச்சும் எனக்கு மரியாதை கொடுப்பானா? பேசாம என்னை ஆளை விடுங்க. நான் ஒதுங்கிக்கிறேன். நீங்க எல்லாம் பெரிய மனுஷங்க. என்ன செய்யணும், யாருக்கு கொடுக்கணும்னு நீங்களே பார்த்து கொடுத்துடுங்க”

“இல்லபா கறி கடைனா ரொம்ப நாத்தம் அடிக்கும். இடமே கலீஜ் ஆயிடும்னு மம்மி சொல்றாங்க”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைபா. அவளுக்கு நான் எந்த முடிவும் எடுத்துட கூடாது. நான் சும்மா அப்படியே டம்மி பீசு மாதிரி இருக்கனும்”

இத்துடன் முற்றுபுள்ளி வைக்கும் பிரச்சனை இல்லை இது. பக்கத்தில் மேலும் புள்ளிகள் வைத்து தொடர்கதை ஆகும். கறிக்கடைக்காரனா, டீக்கடைக்காரனா என்று இருவரும் இறங்கி அடித்து ஆடி, கடைசியில் கறிக்கடைக்காரனும் சரி, டீக்கடைகாரனும் சரி ஓடியே விடுவர்.  

பத்மஜாவின் கட்டளைகளை வரிசையாக நிறைவேற்றிவிட்டு அர்ஜுன் முன் நின்றான் தர்மன்.

“கல்யாணத்தை பத்தி என்ன யோசிச்சிருக்க அர்ஜுன்?”

“இதுல யோசிக்க என்ன இருக்க? நான் தான் வேண்டாம்னு சொல்றேன்ல”

“இப்படி பட்டுன்னு பேசாத அர்ஜுன். மம்மி, அப்பா பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? உன் கல்யாணம் நடக்கணும் அவங்க எவ்ளோ கவலைல இருக்காங்க”

“அவங்க கவலைப்படுறாங்கனு நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

“பண்ணி தானே ஆகணும் அர்ஜுன்?! வேற என்ன செய்றதா உத்தேசம்?”

“நான் அரசியல்ல பெரிய ஆளா வரணும்”

“நீ அரசியல்ல இரு. வேணாம்னு சொல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வேணுனாலும் பண்ணிக்கோயேன்”

“அதான் அரசியல்ல இருந்தா யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்களாமே?”

“அப்போ ஒன்னு பண்ணு. அந்த சேலம் பொண்ணை போய் பாரு. இந்த மாதிரி எனக்கு அரசியல் ஈடுபாடு உண்டு. பியுச்சர்ல வேலையை விட்டுட்டு முழு நேர அரசியல் இறங்க வாய்பிருக்கு. உங்களுக்கு ஓகேனா சொல்லுங்கனு அந்த பொண்ணு கிட்ட தெளிவா பேசி பாரு. அவங்களுக்கு அதுல விருப்பம் இல்லைனா விட்ருவோம். விருப்பம் இருந்தா அடுத்து  என்ன செய்யலாம்னு யோசிப்போம். என்ன சொல்ற?”

மீசையை நீவியபடி யோசனையில் ஆழ்ந்தான் அர்ஜுன். 

“என்ன அர்ஜுன்? என்ன சொல்ற?”

“ஹ்ம்ம். நான் தெளிவா அந்த பொண்ணு கிட்ட சொல்லிடுவேன். அதுக்கு மேல அந்த பொண்ணோட இஷ்டம்”

“ஹ்ம்ம் குட். சரி அப்போ நான் மம்மி கிட்ட சொல்லிடுறேன்”

“ம்ம்”

“அர்ஜுன்”

“சொல்லுங்க”

“நீ உன் பழைய லைஃப்லேர்ந்து வெளிய வந்துட்டதா தான் நாங்க எல்லாரும் நினைச்சிட்டு இருக்கோம். வந்துட்ட தானே?”

பதில் ஏதும் உரைக்காமல் தர்மனை ஒரு வெற்று பார்வையுடன் கடந்து சென்றான் அர்ஜுன். அவனின் முடிவு மலயநாதன், பத்மஜா இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்க, உடனே தன் ஆஸ்தான ஜோதிடரை பார்த்து பெண் பார்ப்பதற்கு நாள் குறித்துக் கொண்டார் பத்மஜா.

தர்மன் காதுகளில் ஹெட்போனை ஓற்றிக்கொண்டு அலுவலக விவாதத்தில் இருந்தான். அவனறைக்குள் புயலென நுழைந்தார் பத்மஜா

“தர்மா! இந்த மனுஷன் பண்ணுறத பாருடா. அட்டகாசம் பண்றார் டா”

அழைப்பை துண்டித்துவிட்டு தாயை பார்த்து, “என்னாச்சு மம்மி? அப்பா என்ன பண்ணினாங்க?”

“அந்த பொண்ணை பார்க்க போறதுக்கு நாம ஜோசியரை பார்த்து ஒரு நாள் ஃபிக்ஸ் பண்ணினோமே, அந்த நாள்ல அவங்க பொண்ணு வீட்டுக்காரங்க வர முடியாதாம்,  உறவுமுறை வராங்களாம். அதனால புதன்கிழமை பார்க்கலாம்னு சொல்றாங்க. உடனே இவரும் சரின்னு மண்டை ஆட்டிட்டாரு”

“சரி மம்மி புதன்கிழமை தான் போவோமே? இப்போ என்ன அதனால?”

“டேய்! புதன்கிழமை அர்ஜுன்க்கு வெறுமானம். முதன் முதலா பார்க்க போறோம் ஒரு நல்ல நாள் பார்த்து போக வேண்டாம். அவரோட சொந்தம்னு ஓவரா பொண்ணு வீட்டுக்காரங்களை தலையில தூக்கி வச்சு ஆடுனாரு வச்சிக்கோ, போடா வெங்காய மச்சி, நீயும் வேண்டாம் உன் பொண்ணும் வேண்டாம்னு போய்கிட்டே இருப்பேன். என் பையனுக்கு இருக்கிற அழகுக்கு ஆயிரம் பொண்ணுங்க கியூ கட்டி நிப்பாங்க. இவங்களை புடிச்சு தொங்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா சொல்லு? அதுவும் அந்த பொண்ணு நல்லாவேயில்லை. கலர் கம்மியா, ஏதோ ரொம்ப பெரிய பொம்பளை மாதிரி இருக்குது. பேசாம வேற நல்ல கண்ணுக்கு லட்சணமான பொண்ணா அவனுக்கு புடிச்ச மாதிரி பார்த்துட வேண்டியது தான்”

“நான் அர்ஜுன் கிட்ட பேசி அந்த பொண்ணை பார்க்கிறதுக்கு சம்மதிக்க வச்சிட்டேனே?”

“அர்ஜுன்ட்ட பேசிக்கலாம் கண்ணு. ஏன்னா குடும்பம் வசதியெல்லாம் இந்த பொண்ணுக்கு ஒகே தான். கலர் கூட ஒரு பிரச்சனையில்லைனு வையேன். ஆனா உங்க அப்பா சொந்தகாரங்கங்கிற ஒரே காரணத்துக்கு ஓவரா ஆட்டம் போடுவாரு. அதனால இந்த பொண்ணு வேண்டவே வேண்டாம். நீயே அர்ஜுன் கிட்ட சொல்லிடு. உங்க அப்பாரு கிட்டயும் சொல்லிடு”

தலையில் கைவைத்து அமர்ந்திருந்த தர்மனின் தோள் தொட்டாள் சுசித்ரா.

“என்னாச்சு? இப்போ அந்த பொண்ணை பார்க்க போறோமா இல்லையா?”

Advertisement