Advertisement

தர்மன் அந்த மலைப்பகுதியின் வளைந்த பாதைகளில் இலக்கில்லாமல் வெறித்தனமாய் ஓடிக் கொண்டிருந்தான். எதிர்காற்று அவன் முகத்தில் ஓங்கி அறைய, அவன் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் பாதை மேல் நிலைக்குத்தியிருக்க, அவன் மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுந்தவன் கால் முட்டி பாதையில் உரசி நிற்க, யாருமற்ற அந்த இடத்தில் அவன் மனம் கொதி நிலையை தாண்டி வெடித்தது. வாய் விட்டு அழுதவனின் ஆதங்கமெல்லாம் அந்த அழுகையில் கரைந்துக் கொண்டிருந்தது.

வீட்டுக்கு திரும்பிய போது அவன் மனம் பெரிதும் சமன்பட்டிருந்தது.

அர்ஜுன், யக்ஞா திருமணத்தை நிறுத்த முடிவெடுத்து இன்றுடன் ஒரு மாதம் கடந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில் பத்மஜா தர்மனை ஆட்டி படைத்துவிட்டார். அர்ஜுன் தன்னிடம் பேசாதது, திருமணம் நின்று போனது எல்லாவற்றையும் ஒன்று திரட்டி தர்மன் மேல் விட்டெறிந்தார். அவனின் ஒவ்வொரு கணமும் ரணமாய் கழியும்படி சொல்லால், செயலால் அவனை குத்தி கிழித்தார். அவரின் உடல்நலன், மனநலன் கருதி வழக்கம் போல் அமைதியாய் அனைத்தையும் தாங்கிக் கொண்டான்.

அன்றும் அது போன்று ஒரு நிகழ்வுடன் அந்த நாளுக்கான பூசை தொடங்கியது.

“தர்மா! நான் கேம்ப் போகணும். ஆபிஸ் வண்டி இல்லை. நீ என்னை வென்னாம்பட்டில டிராப் பண்ணிடு”

“மம்மி, ஒரு முக்கியமான ப்ரொடக்ஷன் இஸ்யு போயிட்டு இருக்கு. நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்க முடியுமா மம்மி?”

பதிலே பேசாமல் அவர் கிளம்பும் போதே அவனுக்கு தெரியும், இந்த அமைதிக்கு பின்னொரு பூகம்பம் உண்டென்பதை!

இரண்டு நாள் அவனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தவரை சமாதானப்படுத்த சென்றான்.

“உனக்கு இந்த வீட்டை பத்தி ரவை கூட கவலை கிடையாது. யாரு எக்கேடு கெட்டு போனா என்னனு நீ உண்டு, உன் பொண்டாட்டி புள்ளைங்க உண்டு, உன் வேலை உண்டுன்னு இருக்க? நீயெல்லாம் என்ன மனுஷன்? உன் சொந்த தம்பி வாழ்க்கை இப்படி நடுத்தெருவுல நிக்குதே அதை சரி செய்ய நீ என்ன முயற்சி எடுத்த? என்ன புள்ளைடா நீயெல்லாம்? உனக்காக இந்த வயசுலேயும் ஓடி ஒடி சம்பாதிச்சு, படிப்பு, வேலை, வீடுன்னு எல்லாம் நானே செஞ்சேன் பார்த்தியா என்னை சொல்லணும்? நான் இல்லேனா நடுத்தெருவுல நீ நின்றிக்கணும். கொஞ்சமாவது அந்த நன்றியுணர்ச்சி உனக்கு இருக்குதா?”

தர்மன் அந்த வார்த்தைகளில் நொறுங்கி போனான். இதுவரை பலமுறை கேட்டு கேட்டு மனதை குத்தி கிழித்த சொற்கள் தான். ஆனால் எத்துனை முறை கேட்டாலும் இதயத்தின் ஆழம் வரை சென்று வதைக்கும் இச்சொற்களை அவனால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.

நடைபயிற்சி முடித்துவிட்டு வந்த அவனை சுசித்ரா கவலையுடன் எதிர்கொண்டாள். அவன் கன்னங்களை தன் கைகளில் தாங்கியவள், அவன் கண்களுக்குள் ஊடுருவி, “என்ன பீன் பேக்? கஷ்டமா இருக்கா?”

“ம்ம்ச்ச்”

“ரொம்ப கஷ்டமா இருந்தா பேசாம உங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது, உங்களை ஆபிஸ் வர சொல்லிட்டாங்கனு சொல்லிட்டு நாம பெங்களூர் போய்டலாமா?”

அவளின் கேள்வி அவனை அதிசயத்தில் ஆழ்த்தியதென்றால், மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த பத்மஜாவை கோபத்தில் ஆழ்த்தியது. மனதில் ஒரு முடிவெடுத்தவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவரின் முடிவு தர்மனுக்கு ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்த போகிறதென்பதை அறியாது சுசித்ராவை சமாதானபடுத்திக் கொண்டிருந்தான்.

சுசித்ராவின் கண்களும், முகமும் கவலையின் ஊற்றாய் இருந்தது. இந்த கவலையும், துன்பமும் தன்னால் தானே? தன்னை கரம் பிடித்து வந்த நாள் முதல் தனக்காகவே வாழ்ந்து, தனக்காகவே விட்டுக்கொடுத்து, தனக்காகவே கவலைக்கொள்ளும் அவளுக்காக தான் செய்தது என்னவென்று எவ்வளவு யோசித்தும் புலப்படவில்லை.

ஒரு மெல்லிய புன்னகையுடன் அவள் தலையை கோதி விட்டவன்,  

“பிரச்சனையை கண்டு ஓட சொல்றியா ஜெல்லி?”

“எனக்கு உங்களை இந்த பிரச்சனையை விட்டு வெளியக் கொண்டு வர வேற வழி தெரியல பா”

“சின்ன வயசுலேர்ந்து இப்போ வரைக்கும் அவங்க என்னை ஒரு ரோபோ மாதிரி தான் கமெண்ட்ஸ் கொடுத்து இயங்க வச்சிருக்காங்க. அவங்க கமண்ட்டை நான் ஏத்துக்கலேனா உடனே இந்த ரோபோவோட பிரோக்ராமே மாத்தி எழுதிடுவாங்க. எனக்கு சாப்பாடு, படிப்பு, சமூக அந்தஸ்த்து, சொத்து எல்லாமே நிறைய கொடுத்திருக்காங்க. ஆனா என் வாழ்க்கையை பிடுங்கி அவங்க கைக்குள்ள பொத்தி வச்சிக்கிட்டாங்க. எனக்கு பறக்கிறதுக்கு சிறகு கொடுத்திருக்காங்க. ஆனா ஒரு கூண்டு, அதுவும் தங்ககூண்டுல வச்சு பூட்டி வச்சிருக்காங்க”

“இதுக்கு என்ன தான் தீர்வு பா?”

“எந்தவொரு பிரச்சனைக்கும் ரியாக்ட் பண்ணக் கூடாது, ரெஸ்பான்ட் பண்ணனும். நானும் அதை தான் செய்ய போறேன். அவங்க செய்யுற எதுக்கும் நான் ரியாக்ட் செஞ்சு பேச போறதில்லை, ஆனா ரெஸ்பான்ட் பண்ணுவேன். என்னவா இருந்தாலும் அட் தி எண்ட் அவங்க என் அம்மா. அவங்களை என்னால வெறுக்க முடியாது. ஆனா என்ன செய்யனும்னு நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” தீர்க்கமாய் கூறி சென்ற அவனை புரியாமல் பார்த்தாள் சுசித்ரா.

அர்ஜுன் முற்றிலும் முடங்கி போயிருந்தான். அர்ஜுனின் நலன் கருதியே பத்மஜா அந்த பெண்ணை பிரித்ததாக கூறிய சமாதானங்களையெல்லாம் அவன் காது கொடுத்தும் கேட்கவில்லை. பத்மஜா, மலயனாதன் என்ற இருவர் இல்லாதது போலவே அவன் பாவித்து வந்தான்.

தர்மனிடமும் அவன் மனக்கிலேசங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சிறு வயது முதல் தர்மனிடம் ஒரு இடைவெளி விட்டே பழகியிருந்தான். அண்ணன், தம்பிகளுக்கிடையே உள்ள செல்ல சண்டைகள், ஊடல்கள், போட்டிகள் இவர்களுக்குள் நடந்ததில்லை. அதற்கு வயது வித்தியாசம் ஒரு காரணம் என்றால், பத்மஜா மற்றொரு காரணம்.

பத்மஜா சிறுவயதிலிருந்தே தர்மனிடம், ‘நீ அவனை விட ஆறு வயது பெரியவன். நீ தான் அவனை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லி வளர்த்ததால் விளையாட்டுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பொறுப்பாய் நடந்துக் கொண்டான். அதுவே அர்ஜுனை அவனிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது.

சுசித்ராவிடம் மட்டும் அர்ஜுன் சற்று மனம் திறந்தான்.

“நீ உண்மையிலேயே மனப்பூர்வமா ஒன்னை விரும்புறேனா, இந்த உலகமே உனக்கு எதிரா இருந்தாலும் அது உன் கைக்கு வந்து சேரும் அர்ஜுன். அது உன்னை விட்டு போகலை, கொஞ்சம் தள்ளி இருக்குது அவ்ளோ தான். ஆனா, நீ திரும்பவும் தப்பு தான் செஞ்சிட்டு இருக்க அர்ஜுன்?”

அர்ஜுன் புரியாமல் சுசித்ராவை பார்த்தான்.

“அத்தை பண்ணினது தப்பு தான். ஆனா அது கடந்து போன விஷயம். உங்க அண்ணா கூட சொல்லியிருக்கார், அந்த பொண்ணு உன்னை மாதிரி கொஞ்சம் அழுத்தம்னு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணியிருந்தா உங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போயிருக்குமானு தெரியல. ஆனா யக்ஞா அப்படியில்லை, பார்க்க விளையாட்டுத்தனமா தெரிஞ்சாலும் ரொம்பவும் பக்குவம்”

அவன் முகத்தில் ஒரு வெற்று புன்னகை வடிந்தது.

“எனக்கு தெரியும் அண்ணி. அன்னைக்கு எனக்கு வந்தது காதலே இல்லை. அதிலேர்ந்து நான் ரொம்ப சீக்கிரம் வெளிய வந்துட்டேன். சரி, ரேஷ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழ்க்கையும் சேர்ந்து பாழாகிடும். நாம அவளுக்கு நல்லது தான் செஞ்சிருக்கோம் அப்படின்னு ஒரு திருப்தி மட்டும் தான் எஞ்சியிருந்துச்சு. இப்போ மம்மி உண்மையை சொல்லும் போது கூட ச்சே, அவ கூட நாம நல்ல வாழ்ந்திருக்கலாமே. நம்ம காதலை கெடுத்துடாங்களேனு எனக்கு தோணலை. என்னோட வருத்தமெல்லாம், மம்மி இப்படி என்னை நம்ப வச்சு ஏமாத்தினது தான்”

“அது பேரு ஏமாத்துறது இல்லை அர்ஜுன். உன் நல்லதுக்காக தான்…”

“எது என் நல்லதுக்கு அண்ணி? ஒருவேளை ரேஷ்க்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்காம போயிருந்தா? ஒருவேளை யக்ஞா என் வாழ்க்கையில வராம போயிருந்தா? காசு மட்டும் இருந்தா போதுமா? நான் நல்ல வாழ்ந்துடுவேனா? அன்பு, பாசம்னு எல்லாத்தையுமே காசுங்கிற அளவுகோல் வச்சு தானே அளக்கிராங்க? நானும் அதுக்கு துணை போயிருக்கேனே? நானும் அவங்களை மாதிரி தானே வாழ்க்கையில காசுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறேன்” அவன் குரலில் ஆதங்கம் ஓங்கி ஒலித்தது.  

“ஹலோ மிஸ்டர் எம்.பி! நீ சின்ன விஷயத்தை சுத்தி சுத்தி ரொம்ப சிக்கலாக்கிக்குற. இங்க பாரு, நம்ம கலாச்சாரத்துல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தோட முதல் தகுதியே பணம் தான். மாப்பிள்ளை வீடா இருந்தாலும் சரி, பொண்ணு வீடா இருந்தாலும் சரி அவங்க அந்தஸ்த்துக்கு சரி சமமாவோ, அல்லது கொஞ்சம் மேலாவோ தான் வரன் பார்பாங்க. இது தான் நிதர்சனம். காதல் கல்யாணங்கள்ல மட்டும் தான் இது மாறுபடும். உனக்கு அந்த பொண்ணு மேல காதலே இல்லேன்னு நீயே சொல்ற. அப்போ அத்தை செஞ்சதை ஏன் பெருசா எடுத்துக்கிற? எல்லாரும் செய்யுறதை தான், என்ன அவங்க கொஞ்சம் மறைச்சு, பொய் சொல்லினு செஞ்சிருக்காங்க?”

“ஹ்ம்ம்….ஏன் அண்ணி? உங்களுக்கு கல்யாணம் ஆகி வந்த நாள்லேர்ந்து இது வரை மம்மி உங்களை நல்லபடியா நடத்துனதே கிடையாது. எந்தவொரு சந்தற்பத்திலேயும் நீங்க வாயை திறந்ததே இல்லை. இப்பவும் எப்படி அவங்களுக்கு நீங்க சாப்போர்ட் பண்ணி பேசுறீங்க?”

“அதுக்குனு ‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்னு’ நேரம் பார்த்து அவங்களை பத்தி இன்னும் போட்டு கொடுக்க நான் ஒண்ணும் சீரியல் வில்லி கிடையாது. அவங்க கிட்ட சின்ன சின்ன தப்பு இருக்கத்தான் செய்யுது. அதுக்காக அவங்களை ஒதுக்கி வச்சிட முடியுமா? என்ன நடந்தாலும் அவங்க உன் அம்மா. அதை மறந்துடாத”

சுசித்ராவின் பேச்சை அவன் கருத்தில் கொண்டு சற்றே சிந்திக்க தொடங்கினான்.

இதற்கிடையே அர்ஜுனுக்காக யக்ஞாவின் தந்தை வாங்கியிருந்த தார் கார் பதிவு செய்யப்பட்டு வர, அதை எடுத்துக் கொண்டு அர்ஜுன் யக்ஞாவின் தந்தையை பார்க்கச் சென்றான். அவனை பார்த்ததும் சிம்பா பாய்ந்து ஓடி வர, ஒருவித கலக்கத்துடன் அதை தடவி கொடுத்தான்.

“உள்ள வாங்க”

“இல்லங்க மாம்….இல்லை……பரவாயில்லை. இந்த சாவியை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். எனக்கு…..இது நினைவே இல்லை. இல்லேனா…ம்ம்ச்….என் ஃப்ரெண்டு ஆட்டோமொபைல்ல தான் இருக்கான். இது உங்களுக்கு வேண்டாம்னா, அவன் கிட்ட சொன்னா இந்த காரை ஒரிஜினல் ரேட்டுக்கு வித்து தந்துடுவான்”

“இல்லை……இது உங்க கிட்ட இருக்கட்டும்”

“அது எப்படி சரி வரும்? இந்தாங்க”

“நான் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லலை. கொஞ்ச நாள் போகட்டும். அது வரை கார் உங்க கிட்டயே இருக்கட்டும். நான் ஒரு காரணமா தான் சொல்றேன்”

சங்கடமான மௌனம் அங்கே ஆட்சி செய்தது. அர்ஜுனின் கண்கள் வீட்டு வாசலுக்கும் அவர் முகத்துக்குமாய் தடுமாறியது.

“பாப்பு! பாப்பு!” உள் நோக்கி அவர் குரல் கொடுக்க அவன் முகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

“என்னப்பா?” என்றபடியே வந்த யக்ஞா சத்தியமாக அங்கே அர்ஜுனை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் அதிர்ந்த முகத்தில் தெரிந்தது.

“இங்க பாரு சிம்பா ரொம்ப நேரமா கத்திட்டே இருக்கான். அவனுக்கு சாப்பாடு வந்து வைச்சுட்டு சீக்கிரம் உள்ள வா மா” அமைதியாய் இருந்த சிம்பாவை காட்டி (?!), அவளை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவர் உள்ளே சென்றார்.

கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டை ஓடவிட்டபடி இருவரும் நோக்கிக் கொண்டிருக்க, பொறுக்க முடியாமல் சிம்பா ஒரு குரல் கொடுத்தது. 

அவனை பார்த்ததும் அவள் முகத்தில் வந்து போன அதிர்ச்சியும், கலக்கமும் அவனுக்கு ஒரு முக்கிய தகவலை பரிமாற்றம் செய்ய, மனம் உல்லாசமாய் சீட்டியடித்தது. அவள் அவனை தாண்டி சென்று சிம்பா முன் மண்டியிட்டு அமர, 

அவன் “ஹ்ம்ம். கார் வந்திடுச்சு, அதான் அதை கொடுத்துட்டு போக வந்தேன். அப்புறம் அப்படியே சிம்பாவை கூட்டிட்டு போகலாம்ம்னு…”

இவன் என்ன லூசா என்பது போல ஒரு பார்வையை செலுத்தியவள், “சிம்பாவை எங்க கூட்டிட்டு போகணும்?”

“நம்ம….ஆங்…எங்க வீட்டுக்கு”

“எதுக்கு?”

“நான் அவனை என் கூட கூட்டிட்டு போறேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். நீ வர மாட்டேன்னு சொல்லிட்ட, அதுக்காக அவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேத்தாம இருக்க முடியுமா?”  

ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவனை முறைத்தபடி திரும்பினாள்.

“சிம்பா வரியா டா போகலாம்” அவன் அழைக்கவும் சிம்பா பாய்ந்துக் கொண்டு அவனை நோக்கி வந்தது.

விருட்டென்று எழுந்து அவள் உள்ளே செல்ல, அவள் கைகளை பிடித்து தடுத்தான்.

“தயவுசெஞ்சு கையை விடுங்க அர்ஜுன்”

“நான் உனக்கு போட்ட மோதிரத்தை திருப்பிக் கொடு. விடுறேன்”

“ஓ அப்படியா?! இப்பவே கழட்டி தரேன். அதே மாதிரி நீங்களும் நான் போட்ட ரெண்டு மோதிரத்தையும் திருப்பிக் கொடுங்க”

“நான் ஏன் கொடுக்கணும்? நீ தானே என்னை வேண்டாம்னு சொன்ன? அப்போ நீ மட்டும் தான் கொடுக்கணும்”

“ம்ம்ச்…என்னை விடுங்க நான் போறேன். நான் வேண்டாம்னு சொன்னேனாம். வந்துட்டாரு பேச…” அவள் முனுமுனுப்பை உள்வாங்கியவன் அவள் கைகளை விடாமலே, “சரி, என் கண்ணை பார்த்து, உங்களை பிடிக்கலை, நீங்க வேண்டாம்னு சொல்லு அப்புறம் உன் வாழ்க்கையில எப்பவுமே நான் உன் கண்ணுல படவே மாட்டேன். இப்படியே திரும்ப போய்டுறேன்”

கண்களை மூடி திறந்தவள், அவனை தீர்க்கமாய் பார்த்து, “நீங்க ஏன் எனக்கு இப்படி செஞ்சீங்க அர்ஜுன்? எந்தவொரு உறவுக்கும் அடிப்படை நம்பிக்கை தான். உறவை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே உங்களுக்கு என் மேல அந்த நம்பிக்கை இல்லை. அப்புறம் எப்படி இந்த உறவு நீடிச்சு நிலைக்கும்? இது சரிபட்டு வராது. வேணாம். முடிச்சிக்கலாம்”  

ஒரு சிரிப்பை உதிர்த்தவன் அவள் கையை விட்டுவிட்டு, “சரி நீ உள்ள போ” என்றபடி கிளம்பி காரில் ஏறியவன் முகமெங்கும் புன்னகை நிரம்பியிருந்தது. இதுவரை இருந்த பாரம் குறைய, கிழித்துக் கொண்டு வீசும் காற்றை போல மனது இலகுவாகியது.   

வீட்டுக்கு வந்த அவனுக்கு பத்மஜா மற்றுமொரு இடியை அவன் தலையில் இறக்க தயாராய் காத்திருந்தார்.

அர்ஜுனுக்கு மற்றொரு வரனை கொண்டு வந்திருந்தார் பத்மஜா. தன் முன் கண்கள் சிவக்க நின்ற தன் மகனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்தபடி தொடர்ந்தார்.

“கண்ணு! மம்மி எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்னு உனக்கே தெரியும். பொண்ணு அதுக்கே அவ்ளோ திமிரு இருந்து உன்னை வேண்டாம்னு சொல்லும்போது ஆம்பளை புள்ளை உனக்கென்னடா வந்துச்சு?! அதை விட நல்ல மூக்கும் முழியுமா, உன் கலருக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிட்டேன். எங்க எஸ்.ஈ சம்சாரத்தோட அண்ணன் பொண்ணு. நல்ல வசதியுள்ள இடம். நிறைக்க செய்வாங்க. நீ பொண்ணை பாரு. பார்த்தா வேண்டாம்னே உன்னால சொல்லவே முடியாது. அதுக்கப்புறம் இந்த கருவாங்கொட்டை உன் நினைவுக்கு வரவே வராது”

அவர் சொல்லி முடிக்கவும் அர்ஜுன் அங்கிருந்த கண்ணாடி மேஜை மீதிருந்த பொருட்களை ஆங்காரத்துடன் விட்டெரிய பொருட்கள் நாலாபக்கமும் சிதறி தெறித்தது. அனைவரும் உறைந்து போய் அவனை பார்க்க, யாரும் மறுவார்த்தை பேசுமுன் அவன் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தான்.

வெளியே வந்து யக்ஞாவின் தந்தைக்கு அழைத்து விட்டான். அறை மணி நேரமாய் அவருடன் பேசிவிட்டு வைத்தவன், மேலும் ஒன்றிரண்டு பேருடன் பேசி ஒரு முடிவை நோக்கி பயணித்தான்…….

  

Advertisement