Advertisement

கீ கொடுத்த பொம்மையை போல் வந்து ஏறியவன் பத்மஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அதற்கு காரணம் யக்ஞா! ‘நான் உங்களை நம்பினேன் எம்.பி’ என்பதை தவிர அவள் எதுவும் பேசாததே அவனை பொம்மை போல் ஆட்டி வைத்தது. அவளே எதுவும் பேசாத போது, பத்மஜாவிடம் மல்லுக்கு நின்று என்ன நடந்துவிட போகிறது??

வீட்டுக்கு வந்ததும் பத்மஜா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார். மலயனாதனை அவர் அடிக்க மட்டும் தான் செய்யவில்லை. ஊரே அதிரும்படி அவர் கத்திக் கொண்டிருக்க, அக்கம் பக்கம் உள்ளவர்கள் தெருவில் சென்றவர்கள் நின்று பார்த்துவிட்டு சென்றனர். மலயனாதனும் பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். 

எங்கே பத்மஜாவின் மனநலம் கெட்டு மீண்டும் அவர் ஏதாவது செய்து விடுவாரோ என்று தர்மனுக்கு பயம் நெஞ்சை கவ்வியது. தன்னால் முடிந்தளவு சண்டையை அவன் தடுக்க செல்ல, பத்மஜா அவனையும் வெளுத்து வாங்க மறக்கவில்லை.

“டேய்! உனக்கென்னடா கவலை இருக்க போகுது? நின்னு போனது அவன் கல்யாணம் தானே? உண்மையிலேயே உனக்கு உன் தம்பி மேல பாசம் இருந்திருந்தா அங்க வச்சு நீ வாயை திறந்து பேசியிருக்கனும்? ஜடமாட்டம் நின்னுட்டு வந்திருக்கக் கூடாது”  

“அவனை எதுக்கு திட்டுற? ஆமா, நான் தான் உண்மையை உளறிட்டேன். அப்புறம் என்ன பண்ணியிருக்கணும்? ஏதோ நடந்தது நடந்துடுச்சு, இப்போ அந்த பொண்ணு கூட டச் இல்லை, அப்படி இப்படினு அவங்க கிட்ட சமாதானமா பேசி அவங்களை சம்மதிக்க வைக்கிறதை விட்டுட்டு உன் வீணா போன வாயை வச்சி இந்த சமந்தத்தை விட்டுட்டு வந்து நிக்குற!”

“என்ன பேசுறோம்னு நேப்போட (நினைப்பு) தான் பேசுறியா? அதுக்காக அவங்க கால்ல போய் விழ சொல்றியா? சீ! வெட்கமாயில்லை உனக்கு? உன் பையனை நீயே குறைச்சு பேசுற, அறிவில்லை உனக்கு? ஏன் வேற பொண்ணே இந்த உலகத்துல கிடையாதா?”

“எப்படி கிடைக்கும்? உங்களுக்கு கார் வாங்கி கொடுக்கிற, தாராளமா செலவு செய்யுற குடும்பம் வேணும். இதோ இந்த மாப்பிளை சார் பொண்ணு கிட்ட எது பேசினாலும் அந்த பொண்ணு பொறுத்து போகணும், பழைய கதையை அவங்களாவே தெரிஞ்சிக்கிட்டாலும் பெருந்தன்மையா அதை கண்டுக்க கூடாது. இந்த கண்டிஷனுக்கெல்லாம் எந்த இளிச்சவாயன் ஒத்துப்பான்?”

தர்மன் நடுவில் வர முயன்று தோற்றான்!

“யோவ்! என்ன மனுஷன்யா நீ? மூணாவது மனுஷன் நம்ம புள்ளைங்களை பத்தி தப்பா பேசினாலும், நாம அவனுக்கு சப்போர்ட் பண்ணுறதை விட்டுட்டு இப்படி சொந்த வீட்லயே சூனியம் வச்சிட்டு திரியுறியே? இந்த புள்ளைங்களை வளர்க்க நான் எவ்ளோ கஷ்ட்டபட்டிருப்பேன்? ஒத்த பைசா நீ செலவு பண்ணியிருப்பியா? இவன் லவ் பண்ணுறேன்னு வந்து நின்னப்போ பக்குன்னு இருந்துச்சு. அதுவும் அது ஒரு பஞ்ச பரதேசி குடும்பம். அதுல பொண்ணு எடுத்துட்டு காலம் பூரா அந்த சுமையை என் புள்ளை தூக்கி சுமக்கனுமா? அதுக்காக என்னவெல்லாமோ யோசிச்சு, ஜாதகத்துல தோஷம், கட்டுனா பையன் உசுரு நிலைக்காதுன்னு ஒரு பொய் சொல்லி, அதை எல்லாரையும் நம்ப வச்சு, கல்யாணம் பண்ண விடாம தடுத்து, உடைஞ்சு போய் வந்த புள்ளையை தேத்தி மறுபடியும் படிக்க வச்சு, இப்போ நல்ல குடும்பமா இருக்குதே, இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்திடனும்னு பார்த்தா அதையும் கெடுத்துட்டு வந்து நீயே நம்ம புள்ளையை மட்டமா பேசுற?”

கோபம் என்னும் பெருந்தொற்று அவரை ஆட்கொண்டு என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் அவர் பேசிக்கொண்டே இருக்க, அர்ஜுன் மூன்றாவது முறையாக உறைந்து நின்றான். அவர் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நம்பிக்கை துரோகம்! தன் தாயே தனக்கு செய்த துரோகம்! இன்று இந்த நிமிடம் ரேஷ்மாவின் ஒரு நினைவு கீற்று கூட அவன் மனதில் இல்லை தான். சிறிது காலம் முன்பு ரேஷ்மாவுக்கு நல்லபடியாக திருமணம் முடிந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்ட போது அவனுக்கிருந்த குற்றவுணர்ச்சியும் அழிப்பான் கொண்டு அழிக்கப்பட, வெள்ளை காகிதமானது அவன் மனது.

இன்று தன் தாய் என்ன கூறுகிறார்? தங்கள் காதலை பிரிக்க பொய் ஜாதகம் உருவாக்கினாரா? இதனால் அவன் அன்று அனுபவித்த மன உளைச்சல் எத்துனை? ஒருவேளை ரேஷ்மாவுக்கு நல்ல வாழ்வு அமையாமல் இருந்திருந்தால்? ஒருவேளை யக்ஞா போன்ற தேவதை தன் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்? ஆனால் இப்பொழுது அவளும் தானே தன் வாழ்வில் இல்லை? அவளுக்கும் துன்பம் தானே? அதுவும் தன்னால்? 

மனம் செல்லரிக்கும் உணர்வுகள்! அன்று சென்று அறையில் அடைந்தவன் தான். சாப்பிட மட்டுமே வெளியே வந்தான். வீட்டு சாப்பாடை தவிர்த்தான். தர்மனும் சுசித்ராவும் பலவாறு கெஞ்சி பார்த்துவிட்டனர். அவன் தான் பிடிவாதக்காரன் ஆயிற்றே! பத்மஜாவுடனும், மலயனாதனுடனும் பேசுவதை அறவே தவிர்த்தான்! 

காரணமே இல்லாமல் மித்ரனையும் தவிர்த்தான். மித்ரன் விடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் அவனிடம் பேச்சு கொடுத்து ஓரளவு அவன் மனதிலுள்ளதை கிரகித்திருந்தான்.

“மனசை வேற ஏதாவது பிடித்தமான விஷயத்துல திசை திருப்புடா. எங்கேயாவது போயிட்டு வா. நானும் உன் கூட வரேன். இல்லையா, எப்பவும் பிஸியா இருக்கிற மாதிரி வேற வேலை தேடு. உனக்கு ஷட்டில் விளையாட ரொம்ப பிடிக்குமே. வா விளையாட போகலாம். இல்லேனா உங்க எம்.எல்,ஏ அண்ணன் கூட வெளிய போடா. அது தானே உனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்?

“தயவுசெஞ்சு அவரை பத்தி பேச்சை எடுக்காத”

“அங்க என்ன கரைசல் பண்ணி வச்சிருக்க?”

நடந்த நிகழ்வுகளை நன்பனிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அன்று மித்ரனிடம் பேசிவிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்கு சென்ற அர்ஜுன், நேராக அவர் மூத்த மகனிடம் வந்து நின்றான்.

“ஏன் இப்படி பண்ணுனீங்க ண்ணா?”

“நான் என்ன பண்ணினேன்?”

“அந்த பாஸ்கருக்கு பணம் கொடுத்து, வி.ஏ.ஓ உதவியால அந்த மரத்தை வெட்ட சொன்னதே நீங்க தானே?”

“ஏய் என்ன உளறுற? நான் ஏன் அப்படி பண்ணனும்?”

“அதான் நானும் கேட்குறேன். நீங்க ஏன் அப்படி பண்ணுனீங்க?”

“நான் பண்ணலைனு சொல்றேன். திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னா என்ன அர்த்தம்? நான் தான் பண்ணினேன்னு உன் கிட்ட ஆதாரம் இருக்குதா?”

“பாஸ்கர் போலீஸ் கஸ்டடியில இருந்தப்போ, அவன் போன்ல உங்க நம்பர்க்கு கால் போயிருந்ததை சொன்னாங்க. அப்போ இருந்த சூழ்நிலை, அடுத்து அதை பத்தி யோசிக்க விடாம பண்ணிடுச்சு. அப்புறம்…….உங்க குடும்பத்துல ஒருத்தரே எனக்கு போன் செஞ்சு சொன்னப்போ தான் எனக்கு எல்லாம் புரிஞ்சிது”

“யாரு?”

“உங்க தம்பி”

“ஓ, போட்டு குடுத்துட்டானா. சரி நான் தான் செஞ்சேன். இப்போ என்னங்கிற அதுக்கு? அது மட்டுமில்ல, இந்த விஷயம் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கூட தெரியும்”

இது நாள் வரை தன் பிதாமகர் மேல் அவன் வைத்ததிருந்த மிச்சம் நம்பிக்கையும் தவிடுபொடியாகியது. 

அவன் கேள்வியெல்லாம் ஒன்று மட்டுமே, “நான் என்ன பண்ணினேன் அண்ணன். எனக்கு ஏன் இப்படி பண்ணினீங்க?”

அவன் பிதாமகரே அதற்கு பதிலளித்தார், “அட விடுப்பா! அதான் இப்போ எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சே? ஏதோ பையன் உன் மேல உள்ள கோவத்துல பண்ணிட்டான். நான் உனக்கு தகவல் தொழில்நுட்ப போஸ்ட் கொடுக்கிறேனு சொன்னது அவனுக்கு பிடிக்கலை. இதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காத என்ன? இப்போ அவனை அந்த பதவியில போட்டுட்டேன். நீயும் எப்படியும் கல்யாணம் ஆனா குடும்பம் குட்டின்னு பிஸி ஆயிடுவ. எப்பவும் போல வந்து போயிட்டு இரு என்ன?” சர்வ சாதாரானமாய் அவர் சொல்லிவிட்டு செல்ல, அதற்கு மேல் அவரிடம் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. 

எதிர்பாரா நிகழ்வின் போது வார்த்தைகள் நீர்த்து போய்விடும்! நம்பிக்கை அடிபட்டு போனால் ஆதி அந்தமே ஆட்டம் கண்டு விடும்! ஏமாற்றபடுவதில் உள்ள அவமானம் ஆகப்பெரியது!

எம்.எல்.ஏ, கடை தகராறில் தலையிடாததன் அர்த்தம் புரிந்தது. அப்பொழுதும் சரி, பத்மஜாவுக்கு மருத்துவ உதவி செய்யாத போதும் சரி அவர் அதீத வேலைப்பளுவினால் தன்னை உதாசீனபடுத்துவதாக தன் மனதிற்கு சமாதானம் கூறியவனுக்கு, அவர் தன்னை ஒரு கைப்பாவையாய் ஆட்டி வைத்திருக்கிறார் என்ற உண்மை புரிய, அவனுக்கு அவன் மீதே ஒரு அருவருப்பு உண்டானது. 

சிறு வயது முதல் பத்மஜாவின் வளர்ப்பில் அவரின் தாக்கம் அதிகமாய் அர்ஜுனிடம் தென்படும். பணம், பகட்டு, அந்தஸ்த்து என நிலையில்லா பொருட்களின் மேல ஆசையை வளர்த்துக் கொண்ட அவனுக்கு, அன்பின், காதலின் அருமையை புரிய வைக்க யக்ஞாவும், பணம் மட்டுமே பிரதானம் இல்லையென்பதை புரிய வைக்க உற்ற நண்பனும், சமூக அந்தஸ்த்து மட்டுமே வாழ்வில் எதையும் பெற்று தந்துவிடாத என்பதை கற்பிக்க எம்.எல்.ஏவின் போலி முகமும் தேவைப்பட்டது!

 


 

Advertisement