Advertisement

அதிர்ச்சி! பேரதிர்ச்சி! ஒரு அலை ஓய்வதற்குள் கரை தொடும் அடுத்த அலையை போல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்த பேரதிர்ச்சிகள்!

அர்ஜுன் தன் அறையில் சோர்வாய் படுத்திருந்தான். 

ஒருவேளை அவள் அவனிடம் நாக்கை பிடுங்குவது போல் நாலு கேள்வி கேட்டிருக்கலாம்……

அல்லது கன்னத்தில் ஓங்கி அரைந்திருக்கலாம்……….

அன்று அலைபேசியில் பேசும்போது, உனக்கு காதல் தோல்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேனே, நீ ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்டிருக்கலாம்……..

என் காதோடு ஒட்டி, நீ எம்.பினு கூப்பிட்டா எனக்கு ஸ்பெஷல் தான் என்று சொல்லும் போது ஏன் உன் பழைய காதலை சொல்லவில்லை என்று கேட்டிருக்கலாம்…….

உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று உன் கை பிடித்த போது குற்றவுனர்ச்சியில் நீ ஏன் உன் பழைய காதலை சொல்லவில்லை என்று கேட்டிருக்கலாம்……

இப்படி பல ‘லாம்’ கள் இருந்தாலும், இவை எதையும் அவள் கேட்கவில்லை என்பது தான் அவனின் ஆதங்கம்.

அவள் கேட்ட ஒரு கேள்வி அவன் மனதின் ஆழம் வரை குடைந்துக் கொண்டிருந்தது.

“நான் உங்களை நம்பினேன் எம்.பி” இது மட்டுமே அவள் வாய் பேசிய மொழி! அவள் கண் பேசிய மொழிகள் ஆயிரம்! பரிதவிப்பு, நம்பிக்கையின்மை இப்படி பல! எப்பொழுதும் துள்ளி குதித்து உயிர்ப்புடன் இருக்கும் அந்த கண்கள், ஒளியிழந்து, நம்பிக்கையிழந்து காண முடியவில்லை அவனால்!

அவன் கண்களுக்குள் வந்து போன அந்த கண்களையும், அவன் காதில் ஒலித்த அந்த குரலையும் அவனால் கடந்து போக முடியவில்லை. 

———————————————————————————————————————————————

நிச்சயத்தன்று அர்ஜுனும் யக்ஞாவும் வெளியே சென்றதும் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மலயனாதன் யக்ஞாவின் தாய்மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தார். 

“இந்த காலத்து புள்ளைங்க பெத்தவங்களை மதிக்கிறதும் இல்லை, அவங்க எடுக்கிற எந்த முடிவையும் ஏத்துகிறதும் இல்லை”

“அப்படி பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாதுங்க. என் ரெண்டு பசங்களும் எங்க பேச்சை தட்டுறதே கிடையாது. தர்மன் ஒரு வார்த்தை மறுத்து பேச மாட்டான்”

“அது சரிதாங்க. பெரிய மாப்பிளையை பார்த்தாலே தெரியுது. ஆனா சின்னவர் அப்படி இருக்க மாட்டாரே? ஒரு புள்ளை அப்படினா இன்னொரு புள்ளை இப்படி தானே இருக்கும்” 

“ச்சே! ச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல. அர்ஜுனும் எங்க பேச்சை தட்டவே மாட்டான். அவன் லவ் பண்ணின பொண்ணையே நாங்க சொன்னோம்னு விட்டுட்டு வந்தவன் தானே?”

மலயானாதன் உளறிவிட, அந்த இடத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. செய்தியை தாய்மாமா எல்லாரிடமும் பரப்ப, அர்ஜுன் எல்லார் வாய்க்கும் அவலானான். மலயனாதனின் செயலால் பத்மஜாவுக்கு உச்சகட்ட கோபம். இதற்காக தான், இந்த திருமணம் தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று தானே அவர் மனம் கிடந்தது அடித்துக் கொண்டிருந்தது. இன்று தன் கணவனாலேயே அது தடைபட்டு நிற்கவும் பன்மடங்கு ஆத்திரம் பெருக்கெடுத்தது.

தன் செல்ல பிள்ளையை மற்றவர் முன் விட்டுக்கொடுக்க முடியாமல், “ஆமா காதலிச்சான். ஏன் ஊர் உலகத்துல யாரும் காதலிக்கிறதே இல்லையா? பொம்பளை புள்ளைனா யோசிக்கலாம். ஆம்பளை புள்ளை அப்படி தான் இருக்கும்” இது மேலும் விவாதங்களை கிளப்பி விட, யக்ஞாவின் தாய் தந்தை மகளின் நலன் கருதி அமைதி காத்து நின்றாலும், யக்ஞாவின் சித்தியும் தாய்மாமாவும் விடுவதாய் இல்லை. 

உதிர்க்கக் கூடாத சொற்களை எல்லாம் உதிர்த்த பின், அள்ள முடியாத அலங்கோலமாய் சிதறிக் கிடந்தது அர்ஜுன் யக்ஞாவின் வாழ்க்கை!

அந்த சமயம் அர்ஜுனும் யக்ஞாவும் திரும்பி வந்து நடந்தது புரியாமல் திகைத்து நிற்க, பத்மஜா சட்டென்று எழுந்து வந்து அவன் கைபிடித்து, “அர்ஜுன்! நான் சொன்னா கேட்ப தானே? இவ உனக்கு வேண்டாம். நான் உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். வாடா போகலாம். தர்மா வா போகலாம்”. 

எப்படியும் எல்லார் முன்னிலும் தன் மகன் தன்னை எதிர்த்து பேச மாட்டான் என்று ஒரு மனது நினைத்தாலும் மற்றொரு மனது பேசிவிட்டால் அவமானமாய் போய் விடாதா என்று பயம் கொண்டது. அர்ஜுனின் குணம் அவருக்கு தெரியுமல்லவா? முடிந்தவரை பதமாய் பேசி அவனை அங்கிருந்து கிளப்பிவிட முயன்றார்.

“மம்மி! என்ன நடந்துச்சுனு சொல்லுங்க?”

“ஆம்பளை புள்ளைனா அப்படி இப்படி தான் டா இருப்பாங்க. எங்க? கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணாத பசங்களை காட்டச் சொல்லு பார்க்கலாம்? அது என்னமோ பெரிய குத்தம்னு வாய்க்கு வாய் ஓவரா பேசுறாங்க”

அர்ஜுனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.

“யாரு மம்மி இதை பத்தி பேசினது?”

“வேற யாரு உங்கப்பன் தான். சும்மா கிடக்காம வாயை விட்டார். ஆனா அதுக்காக என் புள்ளையை அவங்க தப்பா பேசுவாங்களா?”

“ஆமா பின்ன உங்க பையன்….” யக்ஞாவின் சித்தி ஆரம்பிக்க யக்ஞாவின் தந்தை தடுத்தார், “யம்மாடி! நான் பேசிக்கிறேன், யாரும் பேச வேண்டாம்னு சொன்னேன்ல. என்னை மீறி யாராவது பேசினா என் பேச்சுக்கு நீங்க மரியாதை கொடுக்கலேன்னு அர்த்தம்”

“அப்பா! என்னாச்சுப்பா?”

நடந்ததை யக்நாவின் சித்தி அவளிடம் கூறினார்.

யக்ஞாவை பார்த்த அவள் தந்தை கண்களில் வேதனை தெரிந்தது. “பாப்பு! இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் உனக்கான முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன். என் பொண்ணு தப்பான முடிவெடுக்க மாட்டான்னு ஆயிரம் சதவிகித நம்பிக்கை இருக்குது. அதே நம்பிக்கைல தான் இந்த முடிவையும் உன் கையில ஒப்படைக்கிறேன். விஷயம் என்னனு மாப்பிளை கிட்ட கேளு. அவர் தான் இதுக்கான விளக்கத்தை சொல்லணும். அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு நீயே முடிவெடு”

“எம்.பி இங்க என்ன நடக்குது? எனக்கு ஒன்னும் புரியல. ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா?”

“நாம தனியா பேசலாமா யக்ஞா?”

“இல்லை எம்.பி, எல்லார் முன்னாடியும் உங்க மேல ஒரு குற்றசாட்டு வந்திருக்குது. அதனால எல்லார் முன்னாடியும் இதை பேசி சரி செஞ்சிக்கலாம்”

சற்று முன் நம்பிக்கையாய் அவன் கையை பற்றிய அவளின் கைகளின் கதகதப்பை இன்னும் தன் கைகளில் உணர்ந்தவன், ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான். 

“நான் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். வீட்ல அந்த விஷயம் தெரிஞ்சிடுச்சு. ரெண்டு பேர் வீட்லையும் ஒத்துக்கிட்டாங்க. படிப்பு முடிஞ்சு செட்டில் ஆனதும் கல்யாணம் வச்சிகலாம்னு முடிவெடுத்தோம். ஆனா…..ஜாதகம் பார்த்தப்போ ரேஷ்….அவளோட ஜாதகத்தால என் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாங்க. அதனால ரெண்டு பேர் வீட்லையும் ஒத்துக்கலை. அப்புறம்……நாங்களும் பிரிஞ்சிட்டோம்…..என்னால அங்க காலேஜ்ல இருக்க முடியலை. படிப்பை நிப்பாட்டிட்டு பாதில வந்துட்டேன். அப்புறமா அதுலேர்ந்து ரிகவர் ஆகி திரும்ப ஸ்டடீஸ் கண்டின்யு பண்ணினேன். இப்போ வரைக்கும் நான் அவளோட டச்ல இல்லை. அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு” அவள் கண்களை தவிர வேறெங்கும் பார்க்காமல் சொல்லி முடித்தான்.

அவளிடம் மறுபேச்சில்லை. அதிர்ந்த பாவம் மட்டுமே!

“ஆரம்பத்துல எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. உன்னை முதல் தடவை பார்க்கும் போதே அதை தான் நான் சொன்னேன். ஆனா அதுக்கு காரணமா அரசியலை காட்டினேன். ஏனோ என்னால என் பழைய காதலை உன் கிட்ட சொல்ல முடியல. அப்போ அதுக்கான காரணம் எனக்கு புரியல” 

“அப்புறமும் நிறைய சந்தர்பங்கள்ல என்னோட விருப்பமின்மையை என் செயல்கள் மூலமா வெளிப்படுத்தினாலும் என் பாஸ்ட்டை நான்  சொல்லலை. உனக்கு உடம்பு சரியில்லேன்னு கேள்விப்பட்டப்போ தான் அதுக்கான காரணம் என்னனு எனக்கே புரிஞ்சிது. என்னை வேண்டாம்னு சொல்லிடுவீயோனு ஒரு பயம் தான்னு சொன்னா நீ நம்புவீயானு தெரியல. ஆனா அதான் உண்மை. கல்யாணத்துக்கு பின்னாடி உன் கிட்ட இதை சொல்லலாம்னு இருந்தேன். இதுக்கு மேல முடிவு உன் கையில”

“இங்க பாரு பாப்பு. கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய விஷயத்தை மறைக்கிறவர், கல்யாணத்துக்கு பின்னாடி மறைக்க மாட்டார்னு என்ன நிச்சயம்? அதென்ன ஆம்பளைனா ஒரு நியாயம் பொண்ணுனா ஒரு நியாமா? இதே நீ முன்னாடி லவ் பண்ணிட்டு அதை மறைச்சிருந்தா அதை லேசா எடுத்துகுவாங்களாக்கும்? தப்பு அவங்க பேர்ல இருக்கும் போதே இந்தம்மா இப்படி ஆடுது, நீ ஏதாவது பண்ணியிருந்தா விட்டுருமாக்கும்? நியாயம் எல்லாருக்கும் பொது தான். இந்த வீட்டுக்கு நீ கல்யாணம் கட்டிக்கிட்டு போனீனா உன்னால சந்தோஷமா இருக்க முடியாது” யக்ஞாவின் சித்தி அவளுக்கு அறிவுரை கூற,   

“ஏய்! நீங்க என்ன என் புள்ளையை வேண்டாம்னு சொல்றது? என் புள்ளை இருக்கிற அழகுக்கும், கலருக்கும், அந்தஸ்துக்கும் ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க. உங்க பொண்ணை மாதிரி கரிக்கட்டைக்கு என் பையனை கட்டி கொடுக்கணும்னு என்ன தலையெழுத்தா? ஏதோ குடும்பம் நல்ல குடும்பமா இருக்கேன்னு பார்த்தா ரொம்ப தான் பேசுற. போடி, நீயும் உங்க வீட்டு பொண்ணும். அர்ஜுன் வாடா போகலாம். இந்த கேடு கெட்ட குடும்பத்துல பொண்ணு எடுக்கணும்னு நமக்கு என்ன இருக்குது?”

“எது? நாங்க கேடு கெட்ட குடும்பமா? அதை நீங்க……..”

“அம்மாடி! பேசாத மா. கொஞ்ச நேரம் அமைதியா இரு” யக்ஞாவின் தந்தை தன் குரலை உயர்த்த, 

“பின்ன என்ன மாமா? அவங்க பேசுற பேச்சை பார்த்தீங்கள்ல?! நாம ஏன் அமைதியா இருக்கனும்? நாம என்ன தப்பு செஞ்சோம்?” அவர் குரல் காற்றில் தேய்ந்து ஒலிக்க, அர்ஜுனை இழுத்துக் கொண்டு பத்மஜா காரில் ஏறியிருந்தார்.

Advertisement