Advertisement

திருமண உடைகளை வாங்கியபின், நகைக்கடைக்கு சென்று தாலிக் கொடி வாங்கினர். பத்மஜா அதை தன் செலவென்று கூறினார். திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க, அவரது ஜி.பி.ஃஎப் (GPF) பணத்தை எடுத்திருந்தார். பத்து பவுனில் தாலி சங்கிலி வாங்க, அது பார்க்க பெரிதாய் இருந்தது.

“இதை பாரு மா. இது நல்லா பார்க்க பளிச்சுன்னு இருக்குதுல?” யக்ஞாவிடம் அவர் அந்த சங்கிலியை காட்ட, 

“ரொம்ப நல்லா இருக்குது அத்தை. ஆனால் கண்ணை உறுத்துற மாதிரி இருக்குது. இது தினம் போட்டுட்டு இருக்கிறது சேஃப்ட்டி கிடையாது. வெளிய போகும் போதெல்லம் பயந்துட்டே இருக்கனும். கொஞ்சம் மெலிசா இருக்கிற மாதிரி வேற டிசைன் எடுக்கலாமே?”

யக்ஞா கூறியதும் பத்மஜாவின் முகம் விழுந்துவிட்டது. சுசித்ராவுக்கும் அவர் தான் தாலி சங்கிலி செய்தார். பத்து பவுனில் உருட்டி விட்டார் போல் பெரிதாய் இருந்த அந்த சங்கிலியை பார்த்து மனம் ஒப்பாவிட்டலும் அமைதியாய் அதை வாங்கி கொண்டாள் சுசித்ரா. தர்மனும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசினானில்லை. பெரிதாய் சங்கிலி போட்டால் தான் அது மற்றவர்கள் பார்வைக்கு புலப்படும், மருமகளுக்கு மாமியார் எவ்வளவு செய்திருக்கார் என்று ஊரார் பேசுவர், அந்த வீண் பெருமைக்காகவே பத்மஜா இதை செய்வது. 

அன்று சுசித்ராவிடம் ஜம்பமாய் கூறியது போல் இன்று யக்ஞாவிடம் கூற முடியவில்லை. தர்மன் என்றால் எதிர்த்து பேச மாட்டான், ஆனால் தன் செல்லபிள்ளை அர்ஜுன் கோபப்பட்டு விட்டால்?? ஓரளவுக்கு மேல் அவனிடம் தன் அதிகாரத்தை காட்ட முடியாது. காட்டினால் அவன் எகிறி விடுவான்.  

முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார் பத்மஜா. யக்ஞா தனக்கான மற்ற நகைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள். பத்மாஜாவை மட்டுமல்ல மற்ற உறவினர்களை கூட அவளது விருப்பத்தில் தலையிட அவள் விடவில்லை. ஒரேடியாக மறுக்கவிடாலும் நாசுக்காய் அதே நேரத்தில் அழுத்தமாய் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி தன் மனதுக்கு பிடித்ததையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் கவனித்த பத்மஜா அர்ஜுனை போலவே இவளிடமும் தன் அதிகாரத்தை முழுமையாய் செலுத்த முடியாதென்பதை உணர்ந்தார். தன் எரிச்சலை வேறுவிதமாக வெளியிட்டார். 

“எங்க சுச்சி கல்யாணத்தப்போ அவங்க வீட்லேர்ந்து தர்மனுக்கு பதினைஞ்சு பவுன் போட்டாங்க” சாதாரணமாக சொல்வது போல் அவர் யக்ஞாவின் சித்தியிடம் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடம் அர்ஜுனுக்கு ப்ரேஸ்லட், சங்கிலி, மோதிரம் என்று வாங்கி விட்டார் யக்ஞாவின் தந்தை. 

அர்ஜுன் பத்மஜாவை முறைத்தான். 

“என்னடா?”

“ஏன் மம்மி இப்படி மானத்தை வாங்குறீங்க?”

“டேய்! செய்ய வேண்டியது அவங்க கடமை. இதுல என்ன இருக்குது?”

“அசிங்கமா இருக்குது மம்மி”

“ஏன் கார் வேணும்னு கேட்டியே அப்போ அசிங்கமா இல்லையா. நான் கேட்டா உனக்கு அசிங்கமா ஆயிடுமா?”

“ம்ச்….அதுவும் தான். தெரியாம கேட்டுட்டேன். நான் இப்போவே போய் எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்ல போறேன்”

“அறிவுகெட்டதனமா பேசாத அர்ஜுன். இப்போ நீ போய் சொன்னா தான் அது ஒரு மாதிரி இருக்கும். அவங்க தப்பா எடுத்துப்பாங்க. சொன்னா முதல்லையே சொல்லியிருக்கணும்”

தர்மனும் சுசித்ராவும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்துக் கொண்டனர்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது! சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ளாது! மனிதர்கள் மட்டும் நிமிடத்தில் தன் குணத்தை மாற்றிக் கொள்வார்களா என்ன? ஆயிரம் கொரோனா வந்தாலும் மாறாத மனிதர்கள் இவ்வயத்தில் உண்டு!!! பத்மஜாவும் அதில் ஒருவரே!!! 

——————————————————————————————————————————————

காப்பர் சல்ஃபேட் நிறத்தில் புடவையணிந்து, நீலக் கல் பதித்த ஹாரம் சூட்டி, முகம் கொள்ளா புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் யக்ஞா! அவளுக்கு நேரெதிர் இருக்கையில் அர்ஜுன் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்க, யக்ஞாவின் கண்களும் அவனை தொட்டு தொட்டு மீண்டன.

யக்ஞாவின் சித்தி அவள் காதருகே வந்து, “ஏன்டி? இப்போ எதுக்கு அவத்துல மாப்பிளையை பார்த்து சிரிச்சிட்டே இருக்க? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? கொஞ்சமாச்சும் கல்யாண பொண்ணு மாதிரி தலை குனிஞ்சு நில்லுடி”

முடிந்தளவு தன் சித்தியை முறைத்துவிட்டு, தலையை குனிந்து கொண்டாள் யக்ஞா. அர்ஜுன் கள்ள சிரிப்புடன், பார்த்தும் பார்க்காமலும் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். 

கொரோனா அச்சுறுத்தல் காரணாமாக அர்ஜுன் யக்ஞா நிச்சயதார்த்த விழா யக்ஞா வீட்டிலேயே நெருங்கிய சொந்தங்களுடன் நடத்த முடிவு செய்திருந்தனர். நிச்சயத்துக்கு எம்.எல்.ஏ வர முடியாவிட்டாலும் அவர் மனைவியும், மகனையும் அழைக்க வேண்டுமென பத்மஜா கூறினார்.

“அவரு பிஸியா இருப்பார்னு தெரியும் டா. அந்தம்மாவை கூப்பிடுவோம். நல்ல கருத்தா பேசுவாங்க. அந்த புள்ளையும் நல்ல மரியாதை தெரிஞ்ச புள்ளை டா. ரெண்டாவது புள்ளை தான் கொஞ்சம் ஒரு மாதிரி. கண்டிப்பா அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடனும். அவங்க வந்தா தான் நம்ம அந்தஸ்த்து என்னனு பொண்ணு வீட்டுக்கு தெரியும்”

அர்ஜுன் கண்களை மூடி திறந்தான். “அவங்க வர மாட்டாங்க”

“ஏன்டா? ஊர்ல இல்லையா என்ன?”

“நான் கூப்பிடல. கூப்பிட மாட்டேன். நீங்களும் கூப்பிடக் கூடாது”

“என்னடா பேசுற அர்ஜுன்? தர்மா! இந்த அறிவுகெட்டவனுக்கு மூளை கீளை மழுங்கி போச்சா?”

“இதை பத்தி உங்க கிட்ட விளக்கி சொன்னாலும் உங்களால புரிஞ்சிக்க முடியாது. அவங்களை பத்தி இந்த வீட்ல இனிமே யாரும் பேசக் கூடாது”

எழுந்து சென்றவன் மனதில் அன்று எம்.எல்.ஏ வீட்டில் நடந்த நிகழ்வுகள் வலம் வந்தன. அந்த நிகழ்வுகள் அவனை புரட்டி போட்டிருந்தன. அதை நினைக்க நினைக்க அவன் மனம் கொழுந்து விட்டு எரிந்தது. யக்ஞா வீட்டிற்கு வரும் வரை நிதம் அந்த எரிச்சல் மறையவில்லை. யக்ஞாவின் முகம் அவன் எரிச்சலுக்கு மருந்தானது

சம்பிரதாயங்கள் முடிந்து, தாம்பூலம் மாற்றி, கல்யாண நாள் குறிக்கப்பட இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். சாயுங்காலம் பெண் வீட்டாரின் குலதெய்வ கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க, மதிய சாப்பாட்டை முடித்துவிட்டபின், பூஜைக்கு நேரம் இருக்கவே அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அர்ஜுன் யக்ஞாவின் தாய்மாமாவை தவிர்ப்பதற்காக வீட்டினுள்ளும் வெளியும் போனும் கையுமாய் உலாத்திக் கொண்டிருந்தான்.

“அர்ஜுன்! கொஞ்ச நேரம் யக்ஞாவை கூட்டிடுட்டு வெளிய போயிட்டு வாடா” பத்மஜா பெரியமனதுடன் கூறிவிட்டு யக்ஞாவின் தாயிடம், “நம்ம காலம் மாதிரியாங்க இப்போ?! காலத்துக்கு தகுந்தாப்ல நாமளும் அப்கிரேட் ஆகிக்கனும். என்ன சொல்றீங்க? சேர்ந்து வெளிய போயிட்டு வரட்டும்”

பட்டும் படாமல் அவர் தலையை ஆட்ட, நிச்சய புடவையை மாற்றிவிட்டு இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் வந்தவள் அர்ஜுனுடன் கிளம்பினாள்.

அர்ஜுன் தன் புல்லட்டை நோக்கிச் செல்ல, யக்ஞா அவனை தடுத்தாள்.

“இதுல வேண்டாம். நாம ஆட்டோல போகலாம். இங்க பக்கத்துல ஐஞ்சு ரூபா டீ கடைன்னு ஒன்னு இருக்குது. டீ சூப்பரா இருக்கும். அப்படியே பக்கதுதுல சேலம் தட்டு வடை செட் சாப்பிட்டுட்டு டீ குடிச்சிட்டு வரலாம்”

அவள் கண்கள் ஜுவலிக்க அடுக்கிக் கொண்டே போக, அர்ஜுன் அவளை பார்த்த பார்வையில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.

“அப்போ நீ என் கூட பைக்ல ஏற மாட்ட?”

“ப்ச். இல்லை எம்.பி எல்லாரும் இங்க இருக்காங்க. நம்மளை நம்பி அனுப்பியிருக்காங்க. வண்டியில போனா அவ்வளவா நல்லா இருக்காது”

இது உண்மையான காரணம் இல்லையென்று அவனுக்கு தெரியும்! 

எதுவும் பேசாமல் இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்து அவள் சொன்ன இடத்துக்கு வந்தனர். கொரோனாவின் கோர பிடியில் தப்பித்து சில கடைகள் மட்டுமே திறந்திருக்க, யக்ஞா சொன்ன அந்தகடை இல்லை.

“ச்சே! தட்டு வடை சாப்பிடலாம்னு ஆசையா வந்தேன்”

‘இதுக்கு தான் பைக்ல வரணும். வேற கடை தேடி பார்த்திருந்திருக்கலாம்’ அர்ஜுன் முனுமுனுக்க, அதை கண்டுகொள்ளாது, “சரி டீ மட்டும் குடிப்போம் வாங்க” என்றபடியே டீ கடைக்குள் நுழைந்தாள். அர்ஜுனின் மௌனம் தொடர்ந்தது.

“கோபமா?”

“——–“

“என்னபா? என்னனு சொன்னா தானே தெரியும்?”

“என்னனு உனக்கு தெரியும். தெரியாத மாதிரி நடிக்காத”

“நிஜாமாவே உங்க மேல கோபத்துல நான் பைக்ல வராம இருக்கல. என்னவோ முதல் தடவை நீங்க ஏத்தாம போனீங்க. அப்புறமும் அப்படி அப்படி போய்டுச்சு. ஏதோ தட்டி போற மாதிரி ஒரு ஃபீலிங்க். எனக்கு பைக் ரைட் ரொம்ப பிடிக்கும். மனசு ரொம்ப லேசா காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். எனக்கு பிடிச்ச அந்த விஷயம் ரொம்ப அழகா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம இயல்பா நடக்கணும்னு நினைக்கிறன்”

அவளின் சமாதானம் அவனை எட்டவில்லை.

“என்ன எம்.பி? கல்யாணத்துக்கப்புறம் வராம இருக்க போறேனா என்ன?”

“கல்யாணத்துக்கு பின்னாடி போறதுல என்ன இருக்குது?! இப்போ போனா தான் அது ஒரு தனி ஃபீல். ப்ச்…..இந்த விஷயத்தை இத்தோட விடு” அவன் ஆவலையும், ஆசையையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது

“இப்படி மூஞ்சை தூக்கி வச்சிட்டு சொன்னா எனக்கு நைட் தூக்கமே வராது. சரி, கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்குதுல, நடுவுல ஒரு நாள் நீங்க வாங்க. உங்க பைக்ல என்னை எங்கேயாவது கடத்திட்டு போங்க. ஒகே?”

அவன் முகம் புன்னகை பூத்தது, “தேங்க்ஸ். என் கூட வரேன்னு சொன்னதுக்கு இல்லை, என்னை நம்பினதுக்கு”

“ஹலோ, உங்க மேல நம்பிக்கை இல்லேனா நாம இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்கவே மாட்டோம். எனக்கு உங்களை பத்தி தெரியும்” அவள் கண்களில் அளவில்லா பெருமிதமும், நம்பிக்கையும் ஒளிர்ந்தது. அதில் அவன் விழுந்து எழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்து ஆட்டோவிற்காய் காத்திருக்கும் நேரத்தில் அவனின் கைகளை அவள் பற்றியிருந்தாள்.

அவன் கிண்டலாய், “யாரோ நம்பிக்கை தும்பிக்கைனு டயலாக் எல்லாம் பேசினாங்க”

“ஆமா இப்பவும் நம்பிக்கை தான். உங்க மேல நம்பிக்கை” எனவும் ஆதுரமாய் அவளை பார்த்து, அவள் கைகளை தன்னுள் இன்னுமாய் புதைத்துக் கொண்டான்.

பிரியவேண்டுமே என்ற ஆற்றாமையில் இருவரும் வீட்டிற்கு திரும்ப, வீட்டில் ஒரு பேரதிர்ச்சி அவர்களுக்காக காத்திருந்தது.

குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு அனைவரும் தயாராய் இருப்பார்கள் என்று நினைத்து இருவரும் உள்ளே நுழைய, கிளம்பாமல் அனைவரும் அமைதியாய் அமர்ந்திருந்தனர். அந்த அமைதி முரணாய் பட்டது.

காரணம் புரியாமல் அனைவர் கண்களிலும் விடை தேடி தோற்ற யக்ஞா, தன் தந்தை இடிந்து அமர்ந்திருப்பதையும், தாயின் கண்கள் கண்ணீரில் நனைந்திருப்பதையும் கண்டு அதிர்ந்து போனாள்………. 

Advertisement