Advertisement

“அண்ணி! சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” கேட்டபடியே சமையலறைக்குள் அர்ஜுன் நுழைய, சுசித்ரா பதற்றமாய் நாக்கை கடித்தாள்.

“சாரி அர்ஜுன்! இன்னைக்கு அத்தை ஃபீல்டுக்கு போய்டாங்க. நீ எப்படியும் சாப்பிட மாட்டேன்னு நினைச்சு நான் இன்னைக்கு வெறும் தாளிச்ச பருப்பு சாதம் தான் வச்சேன். உனக்கு பருப்பு சாதம் பிடிக்காதே”

“இல்லண்ணி! நான் சாப்பிடுறேன். நீங்க வைங்க”

அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் சுசித்ரா! எண்ணற்ற பொழுதுகளில் அவனுக்கும் சேர்த்து சமைத்து வைத்தபின், அர்ஜுன் வெளியே சாப்பிடுவதாக சொல்லிவிட்டு சாதாரனமாய் சென்று விடுவான். 

ஆண்களின் பார்வையில் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அதனாலென்ன இரவு சாப்பாட்டுடன் சாப்பிட்டு விடலாமே என்று எளிதாய் ஒரு தீர்ப்பு வழங்கிவிடுவர்! ஆனால் அந்த மகா கணம் பொருந்திய கனவான்கள், இரவு சாதம் சாப்பிட்டு விட்டால் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்து விடாதா என்ன?

அர்ஜுனுக்கு வைத்த சாதம் மீதமாக, சுசித்ரா பெரும்பாலும் அந்த மீந்த சாதத்தையே சாப்பிடுவாள். அதுவும் தர்மனுக்கு பிடித்த உணவை சமைப்பதை விட அர்ஜுனுக்கு பிடித்த உணவை தான் பெரும்பாலும் சமைத்திருப்பாள். அதையும் அவன் சாப்பிடாமல் செல்லும் போது தான் அவளுக்கு வருத்தமாக இருக்கும். 

சுசித்ரா திருமணமாகி வரும் போது அர்ஜுன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அதனால் அவனை ஒரு சின்ன தம்பியாகவே அவள் எண்ணுவாள். திருமண வயதை எட்டிவிட்டாலும் ‘சின்ன பையன்’ என்ற அவளது பார்வை மாறவேயில்லை. அதனாலே அவனுக்கு பிடித்த உணவையே தேர்ந்தெடுப்பாள். தர்மன் இவளிடம் அர்ஜுனுக்கு பொறுப்பே இல்லை என்று புலம்பும் போதெல்லாம் ‘சின்ன பையன் தானே புரிஞ்சிக்குவான் விடுங்க’ என்பதே அவள் பதிலாய் இருக்கும்.

தனக்கு பிடிக்காத உணவை ஒரு வேளை கூட அனுசரித்து சாப்பிட மறுக்கும் அவன் இன்று பிடிக்காத பருப்பு சாதத்தை சாப்பிட அமரவும், அவளுக்கு ஆச்சரியமே! 

கடந்த சில நாட்களாகவே அவனின் நடவடிக்கைகளில் ஒரு ‘ஜி பூம் பா’ மாற்றம். அந்த மந்திரத்திற்கான மந்திர கோல் யக்ஞா கையில் இருந்ததென்பதை சுசித்ரா அறிவாள். 

காலங்காலமாக நம்மூரில் வழங்கப்படும் சொல்லாடல் ஒன்று உண்டு. “எல்லாம் ஒரு கால் கட்டு போட்டுட்டா சரியா போய்டும்”. இங்கு இந்த சொல்லாடல் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதே விசேஷம் (?!) அதை உண்மையென்பதை நிரூபிக்கும் வகையில் திருமணத்திற்கு முன்பே அவனிடம் மாற்றம் தெரிந்தது! 

சாப்பிட்டுவிட்டு கிளம்பியவன் நேரே மித்ரனின் வீட்டிற்குச் சென்றான். மித்ரனின் தங்கை மறுவீட்டிற்கு வந்திருந்தாள்.

“வாழ்த்துக்கள் ம்மா”

“தேங்க்ஸ் அண்ணா! ஆக்சுவெல்லா நான் உங்க மேல பயங்கற கோபத்துல இருந்தேன்” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே ‘பேசாதே’ என்று மித்ரன் அவளை பார்வையால் மிரட்டினான்.

“டேய் நாயே! என் தங்கச்சி என் கிட்ட கோபப்படுறா. உனக்கு என்னடா வந்துச்சு. மூடிட்டு போடா”

“உன் கோபம் நியாயம் தான் ம்மா. ஆனால் உன் கல்யாணத்துக்கு வர முடியாத நிலைமை. சாரி டா”

“அய்யோ அண்ணா! கோபமெல்லாம் எப்பவோ போய்டுச்சு. நீங்க பிஸினு எனக்கு தெரியும் ண்ணா. இவன் தான் வெட்டி முண்டம், வீணா போன தண்டம். நீங்க அப்படியா?” என்கவும் மித்ரன் அவள் தலையில் நறுக்கென்று கொட்டினான்.

“வலிக்குது டா பிசாசு”

அவள் கத்தவும், சமயலறையிலிருந்து மித்ரனின் தாய் குரல் கொடுத்தார்.

“மித்ரா! வந்தேனா விளக்குமாறு பிஞ்சிடும். கல்யாணம் பண்ணி கொடுத்த பிள்ளையை கை நீட்டுறியா நீயி? மாப்பிளை என்ன நினைப்பாரு?”

“அய்யயையயோ! இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சாலும் வச்சாங்க என்னாமா தாங்குறாங்க? அவளுக்கு பிடிச்சதை செஞ்சு கொடுக்கிறது என்ன? அவளுக்கு ஊட்டி விடுறது என்ன? அவளை தூக்கி வச்சு கொஞ்சுறது என்ன? முடியல!!”

“உனக்கு ஏன்டா பொறாமையா இருக்குது?! நீயும் ஒரு கல்யாணத்தை பண்ணு. மாமியார் வீட்ல உன்னை கவனிச்சுக்குவாங்க”

“எனக்கு கல்யாணம் ஆகுறது இருக்கட்டும். உன் கல்யாணம் எப்போ?”

அர்ஜுன் முகத்தில் காற்றில் பறந்து வந்து ஒரு புன்னகை உதடோடு ஒட்டிக் கொண்டது, “கூடிய சீக்கிரம்” என்ற நண்பனின் தோளில் கைபோட்டு அவனை கழுத்தை  இறுக்கினான்.

“மாப்பிளை! என்னடா வெட்கமெல்லாம் படுற? என் நண்பன் தானா இது?”

“விடுறா எருமை மாடு! மூச்சு முட்டுது”

“பேச்சை மாத்தாத. இப்போ தான் என் அர்ஜுன் முகத்துல ஒரு களை வந்திருக்குது. இதே இப்படியே மெயின்டெயின் பண்ணு. அண்ணாட்ட பேசி, நீ மறுபடியும் மரம் ஏறதுக்குள்ள உடனே உன் கல்யாணத்தை முடிக்க சொல்லணும்”

“அப்புறம் மச்சி…….உன் பணத்தை இன்னும் கொஞ்ச நாள்ல ரிடர்ன் பண்ணிடுறேன் டா. தங்கச்சிக்கு ஏதாவது பெருசா செய்யனும்னு நினைச்சிருந்தேன். இப்போ இருக்கிற நிலைமைக்கு முடியாம போச்சு. சீக்கிரம் செஞ்சிடுவேன்”

“போடா வெளிய! போடாங்கிறேன்! பணம் அது இதுனு பேசுன வை, அன்னையோட நம்ம ஃப்ரெண்ட்ஷிப் கட். போடா வெளிய!”

“ரொம்ப பொங்காத. நான் கிளம்புறேன். எம்.எல்.ஏ அண்ணன் வீட்டுக்கு போகணும்”

மித்ரன் கோபமடைந்தான், “ஏன்டா நீ உருப்புடவே மாட்டியா டா? முன்ன அவரை பத்தி எனக்கு தெளிவா தெரியாது. அதனால உன் கிட்ட மேம்போக்கா சொல்லிட்டு இருந்தேன். இப்போ அவரு எப்படிபட்ட ஆளுன்னு நல்ல தெரிஞ்சு போச்சு. மறுபடியும் எப்படிடா அவர் முன்ன போய் நிக்குற?”

“ஷப்பா! அட்வைஸ் பண்ணியே கொல்றான். ஆளு விடுறா சாமி” 

மித்ரனின் அறிவுரைகளை உதாசீனப்படுத்திவிட்டு நேரே எம்.எல்.ஏ வீட்டிற்கு வண்டியை விட்டான்…….

————————————————————————————————————————————–   

குலதெய்வ கோயிலில் கூடியிருந்தனர் மலயனாதன் குடும்பத்தினர். ஊரின் ஒதுக்குபுறமாய் அமைந்திருந்த பச்சியம்மன் தான் அவர்கள் குலதெய்வம். ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த நிலையில் கோயில்கள், மால்கள், நகை கடை, துணிக் கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

கூடிய விரைவில் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டுமென அர்ஜுன் பிடிவாதமாய் சொல்லிவிட, குடும்ப ஜோசியரை நாடினார் பத்மஜா. ஜாதக பலன்களையும், நல்ல நாட்களையும் கணக்கு போட்டவர் முகம் சுணங்கியது.

“அம்மா! இந்த மாசத்துக்குளேயே ரெண்டு மூணு நல்ல நாள் வருது. குறிச்சு கொடுக்கிறேன். முதல்ல வர நல்ல நாள்ல நிச்சயம் முடிச்சிருங்க. கல்யாணத்தை அடுத்து வர நல்ல நாள்ல பண்ணிடலாம்”

“ஏங்க ஏதாவது பிரச்சனைங்களா?”

“கொஞ்சம் அப்படி தான். நான் முன்னமே சொன்ன மாதிரி, கொஞ்சம் இழுத்து பிடிச்சு தான் கல்யாணம் பண்ணனும். நிறைய தடங்கல் வரும். ஆனால் கல்யாணம் முடிஞ்சிட்டா அப்புறம் அமோகமா இருப்பாங்க. நீங்க உங்க குலதெய்வத்துக்கு விரதம் இருந்து தினம் விளக்கேத்தி, நெய்வேத்தியம் படைச்சு கும்பிட்டுட்டு வாங்க. நல்லதே நடக்கும்” 

அவர் சொன்னபடியே விரதம் இருந்து தினம் பூஜை செய்ய, பத்திரிகை எழுதி அது அச்சாகி வந்திருந்தது. அதை அம்மன் காலில் சாற்றியப்பின், சேலம் எஸ்.கே.பி  துணிக்கடை வந்து சேர்ந்தனர். 

யக்ஞாவை சந்திக்க ஆவலாய் இறங்கிய அர்ஜுன், கடையின் முன்பு கூடியிருந்த, யக்ஞாவின் தாய், தந்தை, பெரிய அக்கா, சின்ன அக்கா, அவர்களின் கணவன்மார்கள், அவர்களின் பிள்ளைகள், யக்ஞாவின் தாய்மாமா, மாமன் மகன்கள், நண்டு, சிண்டு என ஒரு பட்டாளத்தையே பார்த்து கடுப்பானான்.

வரவேற்பு படலம் ஓடிக் கொண்டிருக்க, அர்ஜுன் யக்ஞாவுக்கு போன் போட்டு விட்டான்.

“ஏய் இம்சை! எங்கடி இருக்க? நண்டு சிண்டெல்லாம் வந்திருக்குது. நீ எங்கடி இருக்க?”

“அய்யோ! எம்.பி நான் இங்க தான் இருக்கேன்” என்று அலைபேசியில் உரைத்தபடி, எல்.கே.ஜி பிள்ளையை போல் கைகளை தூக்கிக் கொண்டு அவர்கள் குடும்ப கூட்டத்தின் நடுவிலிருந்து வெளியே வர, அவளது மாமன் மகன்கள் கிண்டலடித்து சிரிப்பது தெரிய, அவளை பார்வையாலே சுட்டெரித்தபடி நின்றான் அர்ஜுன்.

“சரி சரி, வாங்க எல்லாரும் கடைக்குள்ள போவோம். இவத்துலேயே நின்னு பேசிட்டு இருந்தா போலீஸ்காரன் தூக்கி உள்ள போட்டிருவான். மாப்பிளை வாங்க மாப்பிள்ளை! உங்க கிட்ட நிறைய பேசணும், பழகனும். இதுக்கு முன்ன உங்களை பார்த்து பேச முடியாதபடி சந்தர்ப்பம் அமைஞ்சு போச்சு”

‘உங்க கூட பேசி என்ன ஆக போகுது? உங்க கூட பழகவா இங்க வந்தேன்?’ மனதிற்குள் அந்த தாய்மாமாவை கரித்துக்கொட்டியவாறே அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான் அர்ஜுன்.  

திருமண ஆடைகளை எடுத்து முடிக்கும் வரை பேசினார் பேசினார் பேசிக் கொண்டே இருந்தார். வெறுமனே தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன். எல்லா வீட்டிலும் இப்படி ஒரு ஆள் இருப்பார், அவர் வாய் முன்னூற்றி அறுபது ஐந்து நாள், இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும். 

அர்ஜுனின் கண்கள் யக்ஞாவை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தது. 

“அதுல வந்து பார்த்தீங்கனா மாப்பிளை, எல்லாமே இந்த சைனாக்காரன் பண்ணின வேலை தான்னு சொல்றாங்க. அந்த சப்பை மூக்குக்காரன் தான் லேப்ல வச்சு இந்த கொரோனாவை வளர்த்து விட்டிருக்கான். இது ஒரு பயோ வார். என்ன சொல்றீங்க?”

யக்ஞா எழுந்து ட்ரயல் ரூம் பக்கம் செல்வதை பார்த்த அர்ஜுன் பட்டென்று எழுந்து விட்டான்.

“என்ன மாப்பிளை? எழுந்துட்டீங்க? பயோ வார் இல்லேங்கிறீங்களா?”

‘பயோ வாரா? இவரு கூட இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா என் டங்குவார் கழண்டுடும்’ ரெஸ்ட் ரூம் செல்வதாக கூறிவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்து, யக்ஞாவை ட்ரயல் ரூம் வாசலில் பிடித்து விட்டான்.

“இம்சை! சரியான இம்சைடி நீ”

“ஏன்? நான் என்ன பண்ணினேன்?”

“புடவை எடுக்கிறதுக்கு எதுக்கு இப்படி ஒரு ஊரையே கொண்டு வந்து இறக்கியிருக்க?”

“ஆமா பின்ன அவங்களுக்கும் டிரெஸ் எடுக்க வேண்டாமா. ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலைய முடியுமா?”

“உன் கூட தனியா கொஞ்ச நேரம் பேசலாம்னு பார்த்தா இப்படி எல்லா கொடுக்கையும் கூடவே கூட்டிட்டு வருவேன்னு நினைக்கவே இல்லை”

“ஹலோ! அவங்க எல்லாம் என் ரிலேடிவ்ஸ். ஒழுங்கா பேசுங்க”

அவன் பதில் சொல்வதற்குள் யக்ஞாவின் சித்தி அந்த இடத்துக்கு வந்தார்.

“பாப்பு! இங்க என்ன பண்ணிட்டு இருக்க? சுடிதாரை போட்டு பார்த்தியா இல்லையா?”

அப்பொழுது தான் அர்ஜுனை கவனித்தவர், “மாப்பிளை! என்ன மாப்பிளை நீங்களும் ட்ரயல் பார்க்க வந்தீங்களா? ஏண்டி அறிவுகெட்டவளே! மாப்பிளை ட்ரயல் பார்க்க வந்திருக்கார். அவரை இப்படி நிக்க வச்சு உன் மொக்கையை போட ஆரம்பிச்சுட்டியா? அவ எப்பவும் இப்படி தான் மாப்பிளை லொட லொடன்னு பேசிட்டே இருப்பா. நீங்க போயிட்டு வாங்க மாப்பிளை”

அர்ஜுன் முகத்தில் ஈயாடவில்லை. அவர் உண்மையில் புரியாமல் பேசினாரா அல்லது அர்ஜுனும், யக்ஞாவும் தனியாக பேசுவதை தடுக்க அப்படி பேசினாரா என்பது புரியாமல் நின்றான் அர்ஜுன். யக்ஞாவை கோபத்துடன் முறைத்து பார்க்க, அவள் சிரிப்பை அடக்கியபடி நின்றுக்கொண்டிருந்தாள்.

சற்று தூரத்திலிருந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த யக்ஞாவின் அக்காக்களும், மாமன் மகன்களும் வாயை பொத்திக் கொண்டு கிளுக்கி சிரிக்க, அர்ஜுன் கடுப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

Advertisement