Advertisement

தெரு முனையிலிருந்த பூங்கா கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்க, வெளியிலிருந்த நடை மேடையில் அமர்ந்திருந்தனர் அர்ஜுனும், யக்ஞாவும்.

முகத்தில் எந்த சலனமுமின்றி யக்ஞா அமர்ந்திருக்க, அவளருகில் அவளை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாய் அளந்தவாறு அர்ஜுன்! முன்பே யக்ஞா நெடுநெடுவென ஒல்லி தான். இப்பொழுது மேலும் மெலிந்திருந்தாள். கன்னங்கள் ஓட்டி, கண்கள் சுருங்கி சோர்ந்து தெரிந்தாள்! 

அவன் கண்கள் அவளை வருடிச் சென்றது. முதல் முறையாக இவள் தன்னவள் என்ற உணர்வும், அவள் பட்ட துன்பங்களும் அவனை நிலைக்கொள்ளாமல் இருக்கச் செய்தது. 

“ரொம்ப கஷ்டபட்டுடியா?” அவன் குரல் மென் சாமரம் வீசியது.

அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். அவள் அவனிமிருந்து எதிர்பார்ப்பது மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை. அதை இதுவரை அவன் சொல்லாதது அவளுக்குள் கோபத்தை குமிழிட செய்தது. “ஹ்ம்ம்…இல்லையில்லை. கொரோனா கூட வாழ பழகிக்கோங்கனு சொல்லிட்டு இருந்தாங்க. அதான் சரினு அது கூட வாழ்ந்து பார்த்தேன். பரவாயில்லை, உங்களை விட அது நல்லா தான் குடும்பம் நடத்துது. என்னை விட்டு போக மாட்டேன்னு ஒரே அடம்னு பார்த்துக்கோங்களேன்” வார்த்தைகள் சுட சுட வந்து விழுந்தன.

“ஏன் இப்படி மெலிஞ்சு போய்ட்ட?”

“ஆமா இதுக்கு முன்னாடி மட்டும் மைக் டைசி மாதிரியா இருந்தேன்?”

“நல்ல சத்தா சாப்பிடுறியா இல்லையா? காய்கறி, பழமெல்லாம் நல்ல சாப்பிடு. உன் உடம்புல உள்ள எல்லா சத்தும் போயிருக்கும். திரும்ப அதை ரெனியு பண்ணலைனா கஷ்டம். டெய்லி ஏதாவது ஒரு சூப் குடி. காஃபி, டீ குடிக்காத. பால்ல மிளகு, மஞ்சள் தூள் போட்டு குடி. வாரத்துக்கு மூணு நாள் கபசுர குடிநீர் குடி, பச்சை தண்ணி குடிச்சிறாத. ப்ரோடீன் நிறைய வேணும். அதனால முட்டை, பருப்பு சேர்த்துக்கோ. மீன் முடிஞ்சா தினம் சாப்பிடு. ஆங்….அப்புறம் சிட்ரஸ் கன்டென்ட் உடம்புக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும். பப்பாளி, லெமன் நிறைய சேர்த்துக்கனும். அப்புறம்…..”

“எம்.பி! நீங்க அர்ஜுன் எம்.பியா? இல்லை அர்ஜுன் எம்.பி.பி.எஸ்ஸா? பேசாம இங்கு கொரோனா சிகிச்சைக்கு பின் உடம்பை தேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டும்’ போர்ட் மாட்டிட்டு உட்கார்ந்துடுங்க”

அவனை பார்த்த நொடியிலிருந்து அவன் பெயரை உச்சரிக்காது இருந்தவள், அவன் மீதுள்ள எரிச்சலில் தன்னை மறந்து அவன் பெயரை உச்சரிக்கவும் அவன் உதடுகளில் ஒரு புன்னகை வந்து ஓட்டிக் கொண்டது. உல்லாசமாய் சிரித்த அவனை பார்த்து, “ஹலோ! என்ன சிரிப்பு?”

“நீ என்னை எம்.பி னு கூப்பிட்டுடியே?! அதான்”

“ம்ம்கும். ஊரே உங்களை அப்படி கூப்பிடுது. நான் கூப்பிடுறதுல என்னவாம்?”

“நீ கூப்பிடுறது ஸ்பெஷல் தான்”

கைகளால் காதை குடைந்த யக்ஞா, “இந்த கொரோனா வந்ததால காது சரியா கேட்க மாட்டிக்குதுன்னு நினைக்கிறேன்”

சிரிப்புடன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் காதருகே நெருங்கி, “எனக்கு நீ கூப்பிடுறது தான் ரொம்ப ஸ்பெஷல்” என்க, விழி விரிய தன்னருகே இருந்த அவன் முகத்தை கண் எடுக்காமல் பார்த்தவள், சட்டென்று தள்ளி அமர்ந்தாள். அதற்கும் அவனிடமிருந்து அட்டகாச சிரிப்பு!

“பார்த்து பார்த்து ரொம்ப தள்ளி உட்கார்ந்து கீழே விழுந்துடாத. காத்து வேற பலமா அடிக்குது. பறந்து போய்ட போற”

“ஆமா ஆமா பறந்தா வந்து புடிக்கவா போறீங்க? நல்லதா போச்சுன்னு விட்டுடுவீங்க!”

“இப்போ என்ன புடிக்கணும் அதானே?! புடிச்சிட்டா போச்சு”

மீண்டும் அவளை நெருங்கி அமர்ந்து, அவள் இடையை சுற்றி அவனுடன் சேர்த்துக் கொண்டான். அவன் அணைப்பில் ஒரு நிமிடம் நெகிழ்ந்தவள், மறுநிமிடம் பதறி அவன் கையை எடுத்துவிட்டு எழுந்து நின்றாள்.

“எம்.பி! அப்பா என்னை நம்பி அனுப்பியிருக்காங்க. அவரு நம்பிக்கையை உடைக்கக் கூடாது”

“ஏய் சில்வண்டு! இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு நம்பிக்கை தும்பிக்கைனு பேசிட்டு இருக்க? இடுப்பை தொட்டதுக்கு இவ்ளோ ரியாக்ஷனா?”

காதுகளையும் கண்களையும் மூடிக் கொண்டவள், “அய்யோ! கிரீன் கிரீனா பேசாதீங்க”

“என்னது கிரீனா பேசுறேனா? அடிப்பாவி! ஒரு இடுப்புக்கு இவ்ளோ போரா? பெரிய அக்கபோரால இருக்குது?!”

“நீங்க ரொம்ப பேட் பாய் ஆயிடீங்க. இதுக்கு நீங்க விரப்பு வீராசாமியாவே இருந்திருக்கலாம். நான் போறேன்”

அவள் கை பிடித்து இழுத்து அவளை அமர வைக்க, அவள் தடுமாறி அவன் மேல் விழுந்து நகர்ந்து அமர்ந்தாள்.

“சரி நான் கிரீனா பேசலை. எல்லோவா பேசுறேன். இங்க பாரேன்”

அவன் அலைபேசியில் சில புகைப்படங்களை காட்டினான். நாய் வளர்பதற்கான அழகழகான வீடுகள், அவற்றுக்கு தேவையான உணவு பொருட்கள், சோப்பு, ஷாம்பூ, விளையாட்டு பொருட்கள் என்று விதவிதமாய் தேடி எடுத்து வைத்திருந்தான்.

“என்ன இதெல்லாம்?”

“நம்ம சிம்பாவுக்கு தான்”

“நம்ம்ம்மம சிம்பா?”

“ஆமா நம்ம்மம சிம்பா! அங்க நம்ம வீட்டுக்கு அது வரும்போது…..ஆங்…..அவன் வரும்போது தேவைப்படும்ல. நிறைய நல்லா இருக்குது. உனக்கு பிடிச்சது பார்த்து செலக்ட் பண்ணு. ஆர்டர் போட்டுடலாம்”

“இந்த சோப்பு, ஷாம்பூ, ஃபுட் எல்லாம் ஒகே. அது என்ன வீடு? சிம்பாவுக்கு எதுக்கு வீடு? உங்க பக்கம் வராம இருக்கிறதுக்கு வீட்ல அடைச்சு வைக்க போறீங்களா? அப்படி ஒன்னும் கஷ்ட்டப்பட்டு நீங்க சிம்பாவை ஏத்துக்க வேண்டாம், அவன் இங்கேயே இருக்கட்டும்”

“ஏய்! லூசு! நான் அதுக்கு…..ம்ச்…..அவனுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்கணும்னு சொன்னேன்டி”

“சும்மா, எனக்காக உங்க இயல்பை நீங்க மாத்திக்க வேண்டாம். நீங்க அவனை அது இது நாய்னே கூப்பிடுங்க. எனக்காக அவனை சகிச்சிட்டு போகணும்னு இல்லை, அவன் இங்கேயே இருக்கட்டும்”

“உண்மையை சொல்லவா? சின்ன வயசுலேர்ந்து எனக்கு நாய்னா சுத்தமா பிடிக்காது தான். திடீருன்னு அதை மாத்திக்க முடியாது. ஆனா உனக்காக அவனை நான் எப்பவோ ஏத்துகிட்டேன். எனக்காக, என்னை, என் நடவடிக்கைகளை, என் புறக்கணிப்பை நீ சகிச்சிட்டு போறதில்லையா அது மாதிரி தான்?”

அவள் முகம் சட்டென்று கனிந்தது! இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து ஒரு மெல்லிய புன்னகை அவள் முகமெங்கும் பூத்தது! அந்த புன்னகை அவன் மனதிலிருந்த அழுத்தத்தை குறைத்து அவன் மனதை இறகு போல் இலகுவாக்கியது!!

“போகலாமா?”

“ம்ம்ம்”

நடந்துக் கொண்டே அவள் கையை அவன் பற்றியிருந்தான்! மெல்ல அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் அவனை பார்க்க, “சரி நான் பிடிக்கலை ஒகே? அப்புறம் கையை பிடிச்சதுக்கே எங்க அப்பாவோட தும்பிக்கை, கிரீனா பேசுறேன் அது இதுனு சொல்வ” கடுப்புடன் மொழிந்தவனை பார்த்து சிரிப்புடன் நடையை தொடர்ந்தாள்.

“ஆமா எங்க அம்மா எப்படி இருக்காங்கனு நீ கேட்கவே இல்லை? அதுக்கு தானே உங்க அம்மா கூட சண்டை போட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்த?”

“உங்க கிட்ட எதுக்கு கேட்கணும்? நான் எங்க அத்தைக்கே போன் பண்ணி கேட்டுக்கிறேன்”

“ஹலோ! முதல நான். நான் வந்ததால தான் உனக்கு எங்க அம்மா அத்தை ஆனாங்க. நான் இல்லேனா உனக்கு அவங்க அத்தை கிடையாது. என்னமோ ரொம்ப உரிமைப்பட்டவ மாதிரி பேசுற?” சிரித்துக் கொண்டே அவன் கிண்டலாய் கேட்க,

“ஏன் நீங்களும் தான் எங்க அப்பா கிட்ட மொட்டையா பேசுறீங்க? பட் பட்டுன்னு எடுத்தெரிஞ்சு பேசுறீங்க. எந்த உரிமைல அப்படி பேசுறீங்க? என்னோட அப்பாங்கிறதால தானே? அது மட்டும் சரியா?” 

ஆக அவன் பேச்சையும் நடவடிக்கையும் அவள் கவனித்திருக்கிறாள். நடையை நிறுத்திவிட்டு அவளை உறுத்து விழித்தவன் பின் தன் நடையை தொடர்ந்தான்.

வீடு வந்து சேரும் வரை இருவரும் மௌனத்தை கையிலெடுத்தனர்!

வீட்டு வாசலுக்கு வந்த பின் என்னவென்பது போல் அவள் கேள்வியாய் பார்க்க, அவன் சிம்பாவிடம் குனிந்து அதன் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

“என்னடா உங்க அக்கா கூட தான் நீயும் இருக்க போற. சந்தோஷம் தானே?”

சிம்பா அவனுக்கு மறுமொழி சொல்வது போல வாலை வேகமாக ஆட்ட, “டேய்! இங்க வாடா சிம்பா. புதுசா யாரை பார்த்தாலும் வாலை ஆட்டிட்டு போயிடுறதா? வாடா இங்க!”

சிம்பா அவளை கண்டுக்கொள்ளாமல் அர்ஜுனையே சுற்றி வர, அர்ஜுன் நமட்டு சிரிப்பு சிரித்தான்.

‘ச்சே! எப்படி தான் எல்லாரையும் இப்படி கைக்குள்ள போட்டிக்கிறாறோ தெரியல!!’ அவள் முனுமுனுக்க, அவனோ முகத்தில் தீவிர பாவத்துடன், “சாரி யக்ஞா! எல்லாத்துக்கும்”

இதை, இதை தானே அவள் மனம் எதிர்பார்த்து காத்திருந்தது. 

மன்னிப்பு என்ற அந்த ஒரு வார்த்தையில் என்ன இருக்கிறது? எதுவுமில்லை தான்! அதை கேட்டுவிடுவதால் நடந்து போன எதுவும் மாற போவதில்லை தான்! ஆனால் அந்த ஒரு வார்த்தை போதும். ஆயிரம் புன்னகைகளை மலர செய்யும்! ஆயிரம் ஈகோக்களை உடைத்தெறியும்! காதலில் ‘லவ் யு’ மட்டுமல்ல ‘சாரி’ கூட ஒரு மந்திர வார்த்தை!!!

கண்கள் பூ பூக்க அவனை பார்த்தபடி அவள் நிற்க, உள்ளிருந்து வந்த யக்ஞாவின் தந்தை, “உள்ள வாங்க மாப்பிளை. பாப்பு மாப்பிளையை கூப்பிடு”

“இல்லை, கொஞ்சம் வேலை இருக்குது. நான் கிளம்பனும். இன்னொரு நாள் வரேன்”

“ஏய்! இங்க வா மாப்பிளை கிளம்புறார் பாரு” அவர் தன் மனைவியை அழைக்க, யக்ஞாவின் தாய் அங்கே வந்தார்,

“உள்ள வாங்க மாப்பிளை”

“இல்ல பரவாயில்லை, நீங்க…..நல்லா பார்த்துகுவீங்கனு தெரியும். இருந்தாலும் யக்ஞாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க. ரொம்ப வீக்கா தெரியுறா”

“சரிங்க மாப்பிளை” யக்ஞாவின் தந்தை தாய் இருவர் முகமும் அகமும் மலர்ந்தது. முகம் விகசிக்க சிரித்தபடி அர்ஜுனுக்கு விடைக்கொடுத்தனர். மகளைகளை பெற்ற பெற்றவர்களுக்கு தான் தெரியும், மகளை அக்கறையாய் பார்த்து கொள்ளும் மருமகன் கிடைப்பதெல்லாம் ஒரு வரம் என்று!

‘இதே அன்பும் பாசமும் கடைசி வரைக்கும் என் மகளுக்கு நிலைக்கணும் கடவுளே!’ கடவுளிடம் கோரிக்கை வைத்தது அந்த தாயுமானவரின் உள்ளம்! 

தன் புல்லட்டில் ஏறி அமர்ந்த அதை கிளப்பிய அர்ஜுன், ஒரு நிமிடம் பொறுத்து திரும்பி அவர்களை பார்த்து, “மாமா! நான் வரேங்க மாமா! வரேங்க அத்தை!” எனவும் அவர்கள் புன்னகை மேலும் விரிந்தது.

யக்ஞாவை பார்க்க, அவள் முகம் நிறைவாய் ஜொலித்தது. கண்களாலே அவளிடம் விடைபெற்றவனுக்கு அப்பொழுது தெரியாது கண்களில் காதல் பொங்க, தன்னை இயல்பாய் ஏற்றுக்கொண்டு, எந்த இடத்திலும் தன் மேலுள்ள காதலை விட்டுக்கொடுக்காத இதே யக்ஞா தங்கள் திருமணத்தை நிறுத்த போகிறாள் என்று!!

——————————————————————————————————————————————– 

வீடு வந்து சேர்ந்தது முதல் பத்மஜா வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தார். எதற்கும் குறைபடும் அவர், மறுமொழியே பேசாமல் எல்லாவறையும் ஏற்றுக் கொண்டார். தர்மனையும், சுசித்ராவையும் அவர் கண்கள் எந்நேரமும் யோசனையுடன் அளந்தவாறே இருந்தது. மலயனாதனிடம் கூட சாதாரணமாய் பேசினார்.    

மலயனாதனும் வெகுவாய் ஆடி போயிருந்தார். இதுவரை பத்மஜாவுடன் அவர் நகமும் சதையுமாய் வாழ்ந்துவிடவில்லை தான். ஆனால் வெவ்வேறு வடிவத்தில் இருந்தாலும் எப்பொழுதும் ஒன்றிணைந்திருக்கும் விரல்களை போல தான் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

பல சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், ஏன் அடிதடி கூட நடந்திருக்கிறது. சண்டை வந்தால் பத்மஜா உக்கிரமாய் மாறி விடுவார். வார்த்தைகளால் குத்தி கிழிப்பார். மலயனாதனும் விட்டுக்கொடுத்து விட  மாட்டார், மல்லுக்கு நிற்பார். சில சமயம் அவரை அடிக்க கை ஓங்கி விடுவார். ஆனால் எத்தனை உக்கிரமான சண்டைகள் வந்த போதும் இருவரும் பிரிய வேண்டுமென்ற முடிவெடுக்கவில்லை.

அதற்கு முதல் காரணம் இருவரின் சமூக அந்தஸ்த்து. இருவரும் பிரிந்தால் அலுவலகத்தில், உடன் பணிபுரிவோர், உயர் அதிகாரிகள் மத்தியில் தங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்பதற்காகவே முட்டி மோதி வாழ்ந்துக் கொண்டிருந்தனர். அதுவே பின்பு பழக்கமாகி விட, பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து, பேர பிள்ளைகளை பெற்ற பின் விவாகரத்து என்று போய் நிற்க வெட்கினர். 

பத்மஜாவுக்கு கொரோனா வந்து அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சுசித்ரா சேலத்தில் உள்ள தன் சித்தி வீட்டில் சென்று தன் பிள்ளைகளுடன் தங்கி விட்டாள். தர்மனும் அங்கேயே தங்கி அன்னையை அவ்வபோது சென்று பார்த்து வந்தான். அர்ஜுன் சேலத்துக்கும், தர்மபுரிக்குமாய் அலைந்துக் கொண்டிருந்தான். தருமபுரி வந்தாலும் தந்தையிடம் எதுவும் பேசாமல் அவனறைக்குள் சென்று அடைந்து கொள்வான்.  

இந்த மூன்று வாரங்களாய் மலயனாதன் வீட்டில் தனியாக தான் இருந்தார். அவரின் வயதின் காரணத்தாலும், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை இருப்பதாலும் கட்டாயம் அவர் மருத்துவமனைக்கு பத்மஜாவை பார்க்க வரக்கூடாது என்று தர்மன் தெளிவாக மறுத்துவிட்டான்.

ஓரளவு சமைத்து பழக்கம் உள்ள அவர், தன் ஒருவனுக்கு மட்டுமாய் ஏதோ ஒன்றை எளிதாய் சமைத்து ஒப்பேற்றிவிட்டார். ஆனால் அந்த தனிமை???

தனிமை என்பது அதை எதிர்கொள்ளும் மனிதர்களையும், அந்த சூழ்நிலையும்  பொறுத்தது. சாதாராணமான சூழ்நிலையில் இந்த தனிமையை அவர் அனுபவித்திருப்பாரோ என்னவோ? ஆனால் அசாதாரணமான அந்த சூழலின் தனிமை அவருக்குள் பயத்தை விதைத்திருந்தது. பத்மஜா வீடு திரும்பாவிட்டால் தனக்கு இந்த தனிமை நிரந்தரமாகி விடுமே என்றெண்ணி மறுகினார். பிள்ளைகளின் மேலும் பெரிதாய் பற்று கிடையாததால் அவர் பயம் நியாயமானதே.

பத்மஜா நல்லபடியாக வீடு திரும்பியதில் பெரிதும் நிம்மதியாய் உணர்ந்தார். போனது போகட்டும்! இந்த வயதுக்கு மேல் தனக்கென இருக்கும் ஒரே துணையான பத்மஜாவிடம் அவரே கோபப்பட்டாலும் தான் பொறுமையாய் நடந்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தார். அதை செயல்படுத்த, அவ்வபோது மனைவிக்கு தேவையானதை தானே முன் நின்று செய்து கொடுத்தார். பத்மஜாவும் அமைதியாய் அதை ஏற்றுக்கொண்டார்.

பத்ம்ஜாவும் இதே எண்ணத்துடன் தான் இருந்தார். முன்பு தான் செய்த தவறுகளுக்காக வருத்தபட்டார். அதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள மனமில்லாவிட்டாலும், இனி தவறெதுவும் செய்யக் கூடாதென்ற எண்ணம் வலுப்பெற்றது. குறிப்பாய் தர்மனிடமும், சுசித்ராவிடமும் அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டுமென தன் ஆழ் மனதுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.

இதனாலேயே வீட்டில் ஒரு அமைதியான சூழல் நிலவ, பெரிதும் ஆசுவாசப்பட்டது தர்மனும், சுசித்ராவுமே! எண்ணிலடங்கா நாட்களுக்கு பின் வாய்க்கப்பெற்ற பேரமைதியை தங்கள் சுவாச பைகளில் நிரப்பி பெருமூச்செரிந்தனர். 

அர்ஜுனும் அலைபேசியும் கையுமாய், காதலும் ஊடலுமாய் சந்தோஷமாய் சுற்றிக் கொண்டிருக்க, எங்கே அவன் பழைய நினைவுகளில் கல்யாணத்தை நிறுத்தி விடுவானோ என்று பயந்த பத்மஜாவும் இப்பொழுது நிறைவாய் உணர்ந்தார்.

இந்நிலையில் மலயனாதன் ஒரு புதிய செய்தியுடன் வந்தார்.

“நம்ம கிட்ட பிரச்சனை பண்ணின அந்த பாஸ்கர் இருக்கான்ல தர்மா, அவன் செத்து போயிட்டானாம்”

“எப்படி பா?”

“கொரோனாவாம்”

“அச்சச்சோ!”

“என்ன அச்சச்சோ? நல்ல வேணும் அவனுக்கு. என்ன ஆட்டம் போட்டான் அந்த நாசமா போறவன்? அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கு தண்டனை கிடைச்சுடுச்சு” பத்மஜா புன்னகையுடன் கூறவும், ‘அப்போ உங்களுக்கு கொரோனா வந்ததும் நீங்க முன்ன செஞ்ச எல்லா தப்புக்கும் தானா?’ தர்மனின் மனம் எப்பொழுதும் போல கேள்வி எழுப்பியது.

“இப்போ அந்த கேஸை அப்படியே கிலோஸ் பண்ணிடாங்க. அந்த தலைவர் கிட்ட பேசியாச்சு. அவருக்கு வருத்தம் தான். ஆனால் கொஞ்சம் இறங்கி வந்திருக்காரு. அந்த மரம் இருந்த இடத்துல அவங்க குலதெய்வத்துக்கு நாம சின்னதா ஒரு கோயில் கட்டி கொடுக்கிறதா சொல்லியிருக்கோம். அதை செஞ்சு அங்கேயே இன்னும் ரெண்டு மரம் நட்டு வச்சிடுவோம்”

“கோயில் கட்டுறது என்ன சும்மாவா? காசுக்கு எங்க போறது? இப்போ தான் மொத்த காசையும் ஹாஸ்பிடலுக்கு அழுதுட்டு வரோம். நீங்க ஏன் சரின்னு சொன்னீங்க?”

“மம்மி! இதை தவிர இந்த வேற வழி இல்லை நமக்கு. இவ்ளோ ஈஸியா இந்த விஷயம் முடிஞ்சதே பெருசு. காசு ஒரு பிரச்சனை இல்லை. ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்”

கடவுள் விஷயம் என்பதால் பத்மஜாவும் பிடிவாதம் பிடிக்கவில்லை.

“அர்ஜுன்! பேசாம எம்.எல்.ஏ கிட்ட கேட்டு வாங்கிடு”  

“மம்மி! கம்முனு இருங்க மம்மி. ஏன் ஊரு உலகத்துல அவரை விட்டா வேற ஆளே இல்லையா? பணம் தானே? நான் ஏற்பாடு செஞ்சு தரேன் உங்களுக்கு. ஆனால் அவர் கிட்ட போய் நிற்க முடியாது”

கோபத்துடன் மொழிந்துவிட்டு எழுந்து செல்லும் அவனை மொத்த குடும்பமும் அதிசயமாய் பார்த்தது!!!

Advertisement